04) ஆயிஷா (ரலி) அவர்கள்
3 ஆயிஷா (ரலி) அவர்கள்
இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்கிறார்கள். கதீஜா (ரலி) அவர்கள் மரணித்து மூன்றாண்டுகளுக்குப் பின் தமது ஐம்பத்தி மூன்றாம் வயதில் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்கிறார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது மாத்திரமே. அன்றைக்குப் பால்ய விவாகம் சர்வ சாதாரணமாக இருந்ததை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். பிறகு இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டு விட்டது.
ஆயிஷா (ரலி) அவர்கள் மாத்திரமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மணைவியரில் கன்னியாக இருந்தவர்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களைத் திருமணம் செய்ததற்குக் கூட காம வெறியைக் காரணமாகக் கூற முடியாத அளவுக்கு நியாயங்கள் உள்ளன.
காம வெறிக்காக திருமணம் செய்பவர்கள் அப்போதைக்கு காம உணர்வைத் தணித்துக் கொள்ள தகுதியான ஒருத்தியைத் தான் மணமுடிப்பார்கள். உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட காரியங்கள் யாவுமே அப்போதே அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தன்மை வாய்ந்தவை தான்.
ஒருவனுக்குக் காம உணர்வு மேலோங்கி பெண்களை அனுபவிக்கும் எண்ணம் வந்து விட்டால் உடனேயே அந்த உணர்வைத் தணித்துக் கொள்ளத் தக்க பெண்களைத் தான் நாடுவானேயன்றி ஐந்து வருடங்களுக்குப் பின் பருவமடையக் கூடியவளை மணக்க மாட்டான். அவ்வாறு எவரேனும் மணந்தால் அதற்குக் காம உணர்வு அல்லாத வேறு ஏதோ பின்னணி இருக்கும். எல்லா உணர்வுகளின் நிலையும் இது தான்.
இப்போது ஒருவனுக்குப் பசித்தால் இப்போதே அதற்குரிய உணவைத் தேடுவானே அன்றி, இப்போதைய பசிக்கு மூன்று நாட்கள் கழித்துப் பழுக்கக் கூடிய காய்களைத் தேட மாட்டான். முதல் மணைவியுடனும் கடைசிப் பத்தாண்டுகளாக இல்லற வாழ்வு கிடைக்காத நிலை. இரண்டாம் மணைவியும் அதற்குரிய தகுதியை இழந்துவிட்ட முதிர் விதவை.
இந்த நிலையில் பதின்மூன்று ஆண்டு காலம் இல்வாழ்வை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்த ஒருவர் – காம வெறி மேலோங்கி நிற்கும் ஒருவர் – அடுத்து தேர்ந்தெடுக்கும் மனைவி உடனே அனுபவிக்க ஏற்றவளாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நிலையை அடைந்திருந்தும் ஆயிஷா (ரலி) அவர்களை மூன்றாவதாக மண்ம் புரிந்த போது ஆயிஷா அவர்களின் வயது வெறும் ஆறு மட்டுமே! இல்லறத்துக்குத் தகுதியில்லாத அவர்களை பெயரளவுக்குத் தான் திருமணம் செய்கிறார்கள்.
இத்திருமணம் நடந்த பின் ஆயிஷா (ரலி) தனது தந்தை வீட்டில் தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா ரலி உடன் இல்லறம் நடத்தவில்லை. மக்காவை விட்டு நாடு துறந்து மதீனா சென்ற பின்பு தான் ஆயிஷா (ரலி அவர்கள் பருவ வயதை அடைந்தார்கள். அதன் பின்னர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுக்கு மனைவியாக அனுப்பப்பட்டார்கள்.
எனவே இத்திருமணத்திற்கு காம வெறியை காரணமாகக் கூற இது தடையாக நிற்கிறது.
உலகமெல்லாம் நபியவர்களைப் பொய்யர் எனக் கூறிய போது உண்மையாளர் என்று ஏற்றவர் ஆயிஷாவின் தந்தை அபூ பக்கர்( ரலி) அவர்கள்.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மக்காவில் வசிக்க முடியாத அளவுக்கு நிலைமை முற்றிய போது அவர்களைக் கொலை செய்ய திட்டம் தீட்டிய போது யாருக்கும் தெரியாமல் மதீனாவுக்கு புறப்பட்டார்கள். உயிரைப் பணயம் வைத்து செய்த இந்தப் பயணத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குத் துணையாக வந்தனர். இந்த சமுதாயத்திலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர் நேசித்த அளவுக்கு வேறு எவரும் நேசிக்க முடியாது என்ற அளவுக்கு நபியவர்களுக்கு நெருக்கமானவர்.
இந்த நேசத்துடன் நெருக்கமான சொந்தமும் ஏற்பட வேண்டும் என்ற காரணம் இருந்தால் மட்டுமே பருவமடையாத ஆயிஷாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனந்திருக்க முடியும். இதனால் தான் அபூ பக்கர்(ரலி) அவர்கள் மனமகிழ்வுடன் தம் மகளைத் திருமணம் செய்விக்கிறார்கள். மற்றவர்களை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் நான்குக்கு மேல் மணம் முடிக்க சலுகை வழங்கப்பட்டதற்கு இதைக் காரணமாக்க் கூற முடியாது என்றாலும், பிரத்தியேகமாக ஆயிஷாவைத் தேர்வு செய்ததற்கு நிச்சயமாக இதைக் காரணமாகக் கூற இயலும். நான்குக்கு மேல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்ததற்குரிய காரணத்தை நாம் பின்னர் விளக்கும் போது அது இந்தத் திருமணத்திற்கும் பொருந்தும்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இளமைக் காலத்திலும், கதீஜாவை மணந்த இறுதிக் காலத்திலும், ஸவ்தாவை மணந்த காலத்திலும் பொங்கியெழாத காம வெறி அவர்களின் ஐம்பத்தி மூன்றாம் வயதில் திடீரென பொங்கி எழ முடியுமா?
இந்தக் கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூன்று திருமணங்கள் செய்து விட்டிருந்தாலும் கதீஜா (ரலி) மரணமடைந்து விட்டதால் இரண்டு மணைவியருடன் மட்டுமே வாழ்ந்தார்கள். இந்த நிலைமை நபியவர்களின் ஐம்பத்தி ஆறாவது வயது வரை நீடித்தது.
இரண்டு மனைவியருடன் வாழ்ந்தார்கள் என்று கூறுவது கூட சரியாக இருக்காது. ஏனெனில் ஆயிஷாவுடன் மதீனா சென்ற பிறகு தான் வாழ்ந்தார்கள். மூதாட்டி ஸவ்தாவுடன் மட்டும் தான் இந்தக் கால கட்டத்தில் பெயரளவுக்கு வாழ்ந்தார்கள்.
அதாவது ஐம்பது வயது நிரம்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பத்தைந்து வயதுடைய முதிய விதவையான ஸவ்தாவுடனும், இல்வாழ்வுக்குரிய தகுதியைப் பெற்றிராத சிறுமி ஆயிஷாவுடனும் பெயரளவுக்கு இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். ஐம்பத்தி ஆறாவது வயது வரை இந்த நிலையே நீடித்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களுக்குக் காம உணர்வைக் காரணமாகக் கூறுவோர் இதை இங்கே கவனிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இருபத்தி ஐந்து வயதுடைய கட்டழகு இளைஞன் நாற்பது வயது விதவையைத் திருமணம் செய்து அவளுடனேயே தனது ஐம்பது வயது வரை – அவளுடைய அறுபத்தைந்து வயது வரை- வாழ்ந்தால் அறிவுடைய எவரேனும் இதற்குக் காம உணர்வைக் காரணமாக்க் கூற துணிய மாட்டார்.
அதே மனிதன் தனது ஐம்பதாவது வயதில், ஐம்பத்தைந்து வயது விதவையை மீண்டும் திருமணம் செய்தால் அதற்கும் காம வெறியைக் காரணமாக்க் கூற எந்த அறிவாளியும் முன்வர மாட்டார்.
ஐம்பத்தைந்து வயது பெண்ணுடன் இல்லறம் நடத்துவது சாத்தியமாகாது என்பதை அறிந்த எவறுமே இவ்வாறு கூறத் துணிய மாட்டார்.
அதுவும் திருமணம் செய்யும் நேரத்தில் தான் அந்தப் பெண் ஐம்பத்தி ஐந்து வயதில் இருக்கிறார். அந்தக் கணவர் மரணிக்கும் காலத்திலோ அப்பெண் அறுபத்தி எட்டு வயதுடையவளாக இருக்கிறார். ஐம்பத்தி ஐந்து முதல் அறுபத்தி எட்டு வயது உள்ள பெண்ணிடம் என்ன காம சுகம் அனுபவித்திட இயலும்?
இதே கட்டத்தில் அந்த மனிதர் ஆறு வயது சிறுமியைப் பெயரளவுக்கு மணமுடித்தால் அதற்கும் காம வெறியை எந்த புத்திசாலியும் காரணம் காட்ட மாட்டார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமணங்களில் இது வரை கூறப்பட்ட மூன்று திருமணங்களும் இந்த நிலையில் தான் இருக்கிறது என்பதை களங்கம் சுமத்துவோர் கவணிக்க வேண்டும். நபியவர்களின் நான்காவது திருமணத்தைக் காண்போம்.