ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி
பற்பல மூடநம்பிக்கைகளை மூலதனமாக வைத்து ஒவ்வொருவரும் ஒரு தொழில் செய்து வருகின்றனர். அதில் மக்களை ஏய்க்கும் ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி போன்றவை முன்னிலை வகிக்கின்றன.
ஜோசியம், ராசிக்கல், வாஸ்து, நியூமராலஜி என்று எப்படியெல்லாம் விதவிதமாக மக்களை ஏமாற்றினாலும் மக்கள் இன்னும் திருந்தியபாடில்லை.
கடந்த மாதம் சென்னை அருகில் உள்ள திருவள்ளூரில் நடந்த இது போன்ற ஒரு கூத்தை செய்தித்தாள்களில் படித்துவிட்டு சிரிப்பதா? அழுவதா? என்று தெரியவில்லை.
அந்த பரபரப்பான செய்தி இதோ:
செல்வம் பெருக வேண்டி வாஸ்துவுக்காக இடம் மாற்றி வைத்த லாக்கரை உடைத்து 32 சவரன் திருட்டு!
திருவள்ளூர்: வாஸ்துவுக்காக இடம்மாற்றி வைத்திருந்த லாக்கரை உடைத்து 32 சவரன் நகை, ரூ 2 லட்சம் திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ஜி.கே.நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி வயது 48. இவரது மகன் ராஜேஷ் (25). இவர்,செல்வம் பெருக வழிவகை செய்ய வாஸ்து நிபுணரை கடந்த வாரம் வீட்டுக்கு வரவழைத்தார். அவர் கூறியபடி கழிவறை மற்றும் குளியலறையை இடித்து விட்டு வேறு இடத்தில் கட்டுமானப்பணி நடந்தது. அதற்காக வீட்டில் இருந்த லாக்கர் மற்றும் பொருட்களை வீட்டின் பின்புறம் உள்ள ஒரு ஷெட்டில் வைத்தனர். நேற்று முன்தினம் இரவு ஷெட்டை பூட்டிவிட்டு தாயும்,மகனும் வீட்டின் வெளியே தூங்கினர்.
நேற்று காலை ஷெட் உடைக்கப்பட்டு லாக்கரில் இருந்த 32 சவரன் நகை மற்றும், ரூ 2 லட்சம் திருட்டு போயிருந்தது. செவ்வாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மேற்கண்ட செய்தியைப் பார்த்த பிறகாவது இவற்றை உண்மை என்று நம்பும் மூடநம்பிக்கையாளர்களுக்கு புத்தி வர வேண்டும்.
வீட்டிற்குள் உள்ள லாக்கரைத் தூக்கி வெளியில் வைத்தால் பணம் கொழிக்கும் என்பதை அவர்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை போலும். பணம் கொழிக்கும் என்பது திருடனுக்குத்தான் என்பதை இப்போது சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். அல்லது வாஸ்து கூறிய வல்லுநர்களே(?) கூட லாக்கரை லாவிக்கொண்டு சென்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவர்கள் எப்போதுதான் திருந்தப்போகின்றார்களோ!