தீ மிதிக்க இன்சூரன்ஸ் தமிழக அரசு சிந்திக்குமா?
தீ மிதிக்க இன்சூரன்ஸ் :
தமிழக அரசு சிந்திக்குமா? – உணர்வலைகள்
தங்களது அறிவைப் பயன்படுத்தி சரியான சட்ட நடைமுறைகளை வகுத்து மக்களைக் காக்க வேண்டியதுதான் ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமை.
ஆனால் நம் நாட்டில் நிலைமை அவ்வாறு இல்லை. ஒரு பக்கச்சார்பாகவும், அறிவுக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போலவும்தான் சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம்தான் தமிழக அரசு போட்ட ஒரு உத்தரவு :
தீ மிதி விழா பக்தர்களுக்கு காப்பீடு : அறநிலையத்துறைக்கு அரசு உத்தரவு!
பூக்குழி இறங்குகின்றோம்; குண்டத்தில் இறங்குகின்றோம் என்ற பெயரில் தீ வளர்த்து அதில் அனைவரும் ஓடக்கூடிய ஒரு நடைமுறை தமிழகத்திலுள்ள கோவில்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
து குறித்து தமிழக அரசு ஒரு உத்தரவை சென்ற வாரம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், குண்டம் (தீ மிதி விழா) இறங்கும் பக்தர்களுக்கு, மூன்றாம் நபர் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க, அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து 421 கோவில்கள் உள்ளன. இதில், 1,000க்கும் மேற்பட்ட கோவில்களில், ஆண்டுக்கு ஒருமுறை, பிரம்மோற்சவமும் இதர உற்சவங்களில், குண்டம் திருவிழாவும் நடக்கிறது. குண்டம் திருவிழாவின்போது, பக்தர்களிடையே ஏற்படும் தள்ளுமுள்ளு, பக்தர்கள் பரவசம் ஆகியவற்றால் குண்டத்தில் விழுந்தும் காயமடைகின்றனர். குண்டம் திருவிழாவில், பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, அரசு உத்தரவிட்டு உள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அறநிலைய துறை அதிகாரிகள் கூறியதாவது:
· குண்டம் திருவிழாவின்போது, பக்தர்கள் பாதுகாப்பை மேம்படுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது.
· குண்டம் துவங்க இரு மாதம் உள்ளபோதே, அந்தந்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி., நகராட்சி, மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை, இதர துறை அதிகாரிகள், அறநிலையத்துறை சார்பில் முன்னேற்பாடு கூட்டம் நடத்த வேண்டும்.
· குண்டம் விழா நடத்தப்படும் கோவில்களில் கீற்று கொட்டகைகள், பந்தல்கள் போன்று, தீப்பிடிக்கும் பொருட்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது.
· கோவில் வளாகம், கோவில் சார் கட்டடங்களில் மின் இணைப்புகளைப் பரிசோதிக்க வேண்டும்.
· தேவைப்படும் இடங்களில், பக்தர்களுக்கான முதலுதவி சிகிச்சை நிலையங்கள் செயல்படுத்த வேண்டும்.
· தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், ஸ்ட்ரெச்சர், நாற்காலி வண்டி ஆகியவை எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
· தேவையான இடங்களில், தேவையான அளவு தீயணைப்பான்கள் நிறுவவும், தீயணைப்பானை இயக்கும் முறை குறித்தும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோருக்கு, முன்கூட்டியே பயிற்சி அளிக்க வேண்டும்
· குண்டம் இறங்கும் முன், உடைகளில் தீப்பிடிக்காதவாறும், தவறி விழாதவாறும், உடைகளை சரி செய்து கொள்ளும் படியும், பக்தர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
· கோவிலுக்கு வரும் பக்தர்களை கண்காணிக்கும் வகையில், அதிகப்படியான கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், என்.சி.சி., – என்.எஸ்.எஸ்., மாணவர்கள், சேவை தொண்டர்களையும், போலீசாரையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
· சிறுவர், சிறுமியர், முதியோர், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் குண்டம் இறங்க அனுமதிக்க கூடாது.
· தீ மிதி திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு, மூன்றாம் நபர், காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற, பாதுகாப்பு நடவடிக்கையைப் பின்பற்ற அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கண்ட உத்தரவு குறித்த பல கேள்விகள் நம்முடைய உள்ளத்தில் எழுகின்றன.
தனிநபர் ஒருவர் தன்னுடைய உடலில் தீயை ஊற்றி கொளுத்திக் கொள்ள முயன்றால் அவரைக் கைது செய்து சிறையில் தள்ளுகின்றது காவல்துறை. அதே நேரத்தில் தீயில் இறங்கப்போகின்றோம் என்று அறிவிப்புச் செய்துவிட்டு தீக்குளிக்கப்போகும் நபர்கள் பக்தர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொண்டால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து, கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி தீயணைப்பு வண்டிகளோடு, ஆம்புலன்ஸ் சகிதம் சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கின்றதென்றால் இவர்களுக்கு சிந்திக்கும் திறன் என்று ஒன்று உள்ளதா என நம்முடைய உள்ளத்தில் கேள்வி எழுகின்றது.
அதே நேரத்தில் மற்றுமொரு விஷயத்தையும் இங்கு நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். அதாவது இதற்கு முன்பாக மதுரை அருகே பேரையூர் கிராமத்தில், கோவில் திருவிழாவில் அ.தி.மு.க. அமைச்சர் துரைராஜ் முன்னிலையில், குழந்தைகளை உயிருடன் புதைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதன் காரணமாகவே அந்த துரைராஜ் என்ற அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
குழந்தைகளை உயிருடன் புதைத்து நேத்திக்கடன் செலுத்தும் அந்தத் திருவிழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மனிதர்கள் தங்களது உடலை தாங்களே வருத்திக் கொண்டு தற்கொலைக்கு முயல்வது சட்டப்படி குற்றம் என்ற காரணத்தால்தான் இந்தத் தடை போடப்பட்டுள்ளது.
அப்படியிருக்கையில், மண்ணில் புதைத்து உயிரோடு எடுக்கப்படுவதைக் காட்டிலும், தீ மிதிப்பதில்தான் அதிக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதிகமதிகம் தடை செய்யப்படுவதற்கு தகுதியானது இந்த தீ மிதி நேத்திக்கடன்தான். அப்படியிருக்கையில் அதை அனுமதித்து அதற்கு அரசாங்கமே பாதுகாப்பு அளிப்பது எவ்விதத்தில் நியாயம் என்று நாம் கேட்க விரும்புகின்றோம்.
மேலும், தீக்குழி இறங்குபவர்கள் ஒவ்வொருவரும் சாமியின் அருளால் தங்களுக்கு எதுவும் காயங்கள் ஏற்படாது என்று சொல்லி அந்த நம்பிக்கையில்தான் தீக்குழி இறங்குகின்றனர். அப்படியிருக்கையில், தீக்குழி இறங்குபவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக அவர்களை தூக்கிச் செல்ல ஆம்புலன்ஸ்களும், ஸ்ட்ரெச்சர், நாற்காலி வண்டி ஆகியவைகளை தாயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வது அவர்களது மத நம்பிக்கையை புண்படுத்துவதாக ஆகாதா?
அவற்றிற்கெல்லாம் மேலாக அவர்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் செய்யலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது அவர்களது மத நம்பிக்கையை புண்படுத்துவதன் உச்சகட்டமாகத் தெரியவில்லையா?
சேது சமுத்திரத்திட்டத்தில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் கடலுக்கு அடியில் உள்ள ஒரு மணல் திட்டை சரி செய்ய மத்திய அரசு ஆயத்தப்பணிகளில் ஈடுபடுவது எங்களது மத உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. அந்த மணல் திட்டுக்களை இராமர் பாலம் என்று நாங்கள் நம்பிக்கொண்டிருக்கின்றோம். இதை இடிப்பது எங்களது மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகும் என்று சொல்லி கூச்சல் போடும் சங்பரிவாரங்கள் இந்த விஷயத்தில் வாய்மூடி மௌனியாக இருக்கக் காரணம் என்னவோ? சாமி அருளால் எங்களுக்கு எதுவும் அசம்பாவிதங்கள் நேராது என்று நாங்கள் நம்பும்போது எங்களுக்கு பாதுகாப்பும், இன்சூரன்ஸ் போடுவது எங்களது தெய்வ நம்பிக்கைகளை கேலி செய்வதாக உள்ளது என்று எந்த சங்பரிவாரத் தலைவரும் சொல்லக் காணோம்.
இதிலிருந்தே இவர்களது இரட்டைவேடம் அம்பலமாகியுள்ளது.
அதுபோக இன்சூரன்ஸ் கம்பெனிகள் இதற்கு எப்படி ஒப்புக் கொள்வார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி, இந்த இடத்தில், இன்ன நேரத்தில் நான் என் வீட்டையோ, அல்லது எனது வாகனத்தையோ தீவைத்துக் கொளுத்தப் போகின்றேன் என்று அறிவிப்புச் செய்துவிட்டு ஒருவர் தீவைத்துக் கொளுத்தினால் அவருக்கு இன்சூரன்ஸ் மூலமாக இழப்பீடு வழங்குவார்களா?
அப்படியிருக்கையில் இந்த இடத்தில், இன்ன நேரத்தில், நான் தீ மிதிக்கப் போகின்றேன் என்று சொல்லி தீ மிதித்து அதில் காயம் ஏற்பட்டால் அது எப்படி இழப்பீடு பெறுவதற்கு தகுதியான இழப்பீடாக இருக்க முடியும்?
ஆக இப்படிப் பல வகைகளில் இவர்கள் தங்களது மூளையை அடகு வைத்து விட்டு சட்டங்களைப் போடுகின்றார்கள்.
இதே நேரத்தில் இதுபோன்று தீமிதித்தல், மொட்டைத்தலையில் தேங்காய் உடைத்தல், மண் சோறு சாப்பிடுதல், காவடி தூக்குதல், கால்நடை பிரயாணம் செய்து தங்கள் உடலை வருத்திக் கொள்ளுதல், உடல் முழுவதும் அலகு குத்துதல் இப்படி பல வகைகளில் தங்களுக்குத் தாங்களே தங்களது உடலை வருத்திக் கொள்வதால் கடவுளுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்பதையும், இப்படிப்பட்ட செயல்கள் அனைத்தும் மூடநம்பிக்கைகள்தான் என்பதையும் பிறமத சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் இதுபோன்ற மூடநம்பிக்கைகளுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
வெயிலில் நின்று கொண்டே இருப்பேன்; யாரிடமும் பேசமாட்டேன் என்று நேர்ச்சை செய்த ஒரு நபித்தோழரை நபிகளார் கண்டித்தார்கள் என்ற செய்தியை நாம் பார்க்கின்றோம்.
அதுபோல நடந்தே ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தவரை நீ வாகனத்தில் சென்று ஹஜ் செய் என்று நபிகளார் கட்டளையிட்ட செய்தியையும் நாம் காண்கின்றோம்.
அதுமட்டுமல்லாமல் இஸ்லாம் காட்டித்தந்த வணக்க வழிபாடுகள் கூட மிக இலகுவான முறையில் அமைந்துள்ளதை நாம் காண்கின்றோம்.
தொழுகையைக்கூட நின்று தொழ முடியாதவர் உட்கார்ந்து கொண்டு தொழட்டும் என்றும், உட்கார்ந்து கொண்டும் தொழ இயலாதவர் படுத்துக் கொண்டு தொழட்டும் என்று வணக்க வழிபாடுகளை இஸ்லாம் இலகுவாக ஆக்கியுள்ளது.
இஸ்லாம் காட்டும் வணக்க வழிபாடுகளை ஒருவர் செய்து இறைவனை வணங்கக்கூடிய ஒருவர் அந்த வணக்க வழிபாடுகளை செய்வதற்காக இன்சூரன்ஸ் செய்யத் தேவையில்லை; அதற்காக ஆம்புலன்ஸ் கொண்டு வரத்தேவையில்லை; அதற்கு தீயணைப்பு வண்டிகளும் பாதுகாப்பிற்குத் தேவையில்லை.
இந்த வகையில் மேற்கூறிய செய்திகளை ஆய்வு செய்தால் இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல்கள்தான் சரியானவை மனித குலத்திற்கு நன்மை பயக்கக்கூடியவை என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.
ஒரு முதியவர் தனது இரு மகன்கள் தாங்கிக் கொள்ள நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று விசாரித்தனர். “நடந்தே செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்” என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அந்த மனிதர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது” என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
அல்குர்-ஆன் 5 : 6