வங்கியல் கிளீனிங் வேலை செய்யலாமா?
? நான் துபையில் ஒரு கிளீனிங் கம்பெனியில் வேலை செய்கின்றேன். அந்தக் கம்பெனியில் எனக்கு, வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் ஆபீஸ் பாய், கிளீனிங் போன்ற வேலைகளைக் கொடுக்கின்றார்கள். அப்படிப்பட்ட வேலையைச் செய்யலாமா?
பதில்
தீமையை தடுக்க இயலாது. எனவே, செய்யக் கூடாது.
செய்யும் வேலை சரியானதாக இருந்தாலும் செய்யக் கூடிய இடம் மார்க்கத்திற்கு விரோதமான காரியங்கள் நடக்காத இடமாக இருக்க வேண்டும்.
உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஓரிடத்தில் தீமை நடப்பதைக் கண்டால் அதைத் தடுக்கும் பொறுப்பு நமக்கு உண்டு. அவ்வாறு தடுக்க இயலாவிட்டால் அதை விட்டு விலகி இருக்க வேண்டும். வங்கியில் வேலை செய்யும் போது, வட்டி என்ற பெரும்பாவத்தைத் தடுக்க முடியாது.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப் படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர் களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர் களே என்று இவ் வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான்.
இந்த வசனத்தில் இறை வசனங்கள் மறுக்கப்படும் இடத்தில் இருக்கக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான். நாம் மறுக்காவிட்டாலும் அந்தச் சபையில் இருந்தால் நாமும் அதற்குத் துணை போனதாக ஆகி விடும் என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது. எனவே இந்த அடிப் படையிலும் நாம் பணி புரியும் இடம், மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறும் இடமாக இருக்கக் கூடாது என்பதை அறிய முடியும்.
வங்கி என்பதால் இந்தக் கேள்வி எழுகின்றது. இதையே சாராயக் கடையிலோ, அல்லது விபச்சார விடுதியிலோ போய் செய்யச் சொன்னால் செய்ய முடியுமா? என்பதைச் சிந்தித்தால் வங்கியில் வேலை செய்வது எப்படிப்பட்டது என்பதை விளங்கலாம்.