குங்குமம், விபூதி, மஞ்சள் விற்கலாமா?

கேள்வி-பதில்: பொருளாதாரம்

குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் விற்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

பதில்

ஒரு பொருள், மார்க்கம் அனுமதித்தவற்றிக்கும் மார்க்கம் தடைசெய்தவற்றிக்கும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் அந்த பொருட்களை விற்பதில் எந்தக் குற்றமும் இல்லை. உதாரணமாக கத்தி. இது மனிதனைக் கொலை செய்வதற்கும் காய்கறி வெட்டுவதற்கும் பயன்படுகிறது. மனிதனை கொலை செய்யப்பயன்படுகிறது என்பதற்காக அதை விற்கக்கூடாது என்று நாம் கூறமாட்டோம்.

ஏனெனில் இந்த கத்தி காய்கறி வெட்ட மற்றும் பல நல்ல காரியங்களுக்கும் பயன்படுகிறது என்பதால் அதை விற்பனை செய்வதை அனுமதிக்கிறோம்.

இது போல் கடவுள் சிலைகள். இதை விற்பனை செய்யலாமா? என்றால் நாம் கூடாது என்று கூறுவோம். ஏனெனில் இந்தச் சிலைகள் வணங்குதற்குத் தவிர மார்க்கம் அனுமதித்த வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுவதில்லை. எனவே இதை விற்பனை செய்யக்கூடாது என்று கூறுகிறோம்.

இந்த விதியைக் கவனத்தில் கொண்டு குங்குமம், விபூதி, மஞ்சள் போன்றவற்றை விற்பனை செய்யலாமா? என்பதைக் காண்போம்.
குங்குமம் என்பது விர-லி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.
இது இந்துப் பெண்கள், கடவுளை வணங்கிய பின்னர் தங்கள் நெற்றியில் வைப்பதற்கு பயன்படுகிறது. இது தவிர வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுவதாகத் தெரியவில்லை.

விபூதி என்பது மாட்டின் சாணத்தை எரித்து உருவாக்கப்படுகிறது. இதுவும் இந்துக்கள் கடவுளை வணங்கிய பின்னர் நெற்றியில் வைப்பதற்கு பயன்படுகிது. இது தவிர வேறு பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.

பெண்கள் பூசிக் கொள்ளும் மஞ்சள் என்பது ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலி ருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.

இதை இந்துக்கள் மதச் சடங்களில் புனிதப் பொருட்களாக பயன்படுத்தி னாலும் மருத்துவம், உணவு போன்றவற்றிக்கும் பயன்படுத்தப்படுவதால் இதை விற்பனை செய்வதில் தவறில்லை.