அல்லாஹ் தன்சாயலில் ஆதமைப் படைத்தானா?
அல்லாஹ் தன்சாயலில் ஆதமைப் படைத்தானா?
ஆம்
அல்லாஹ்வை யாரும் பார்த்ததில்லை. அப்படியானால் ஆதம் அலை அவர்களை தன் சாயலில் அல்லாஹ் படைத்தான் என்று எப்படி கூற முடியும்? ஆதம் அலை அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்திருப்பார்களே அப்படியானால் அல்லாஹ்வை யாரும் பார்த்த்தில்லை என்ற ஹதீஸ் பலவீனமானதா?
பதில்
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை தன்னுடைய தோற்றத்தில் படைத்துள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தெரிவித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதமை தன்னுடைய உருவத்தில் படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. அவர்களைப் படைத்தபோது, “நீங்கள் சென்று, அங்கு அமர்ந்துகொண்டிருக்கும் வானவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் உங்களது முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று இறைவன் சொன்னான். அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), “அஸ்ஸலாமு அலைக்கும்” (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்று (முகமன்) சொன்னார்கள். “சாந்தியும் இறைவனின் கருணையும் (உங்கள் மீது நிலவட்டும்)” என்று வானவர்கள் பதில் கூறினார்கள். அவர்கள் (தங்கள் பதில்) “இறைவனின் கருணையும்’ என்பதை அதிகப்படியாகச் சொன்னார்கள். ஆகவே, (மறுமை நாளில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்கüன் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும் அழகிலும்) குறைந்துகொண்டே வருகின்றன.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
என்னை அல்லாஹ் தன் சாயலில் படைத்தான் என்று ஆதம் அலை அவர்கள் கூறி இருந்தால் ஆதம் (அலை) அல்லாஹ்வைப் பார்த்திருப்பார்கள் என்ற கருத்து அதனுள் அடங்கி இருக்கும். இது ஆதம் அலை அவர்களின் கூற்று அல்ல. நபிகள் நாயகம் ஸல் அவர்களின் கூற்றாகத் தான் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தால் தான் இப்படி சொல்லி இருக்க முடியும் என்ற அவசியம் இல்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி அறிவித்துக் கொடுத்தால் அதனடிப்படையில் இதைச் சொல்ல முடியும்.
அல்லாஹ்வை நான் உட்பட யாரும் பார்த்ததில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) சொல்லி இருப்பதால் அல்லாஹ்வைப் பார்த்துவிட்டு இப்படி கூறினார்கள் என்று கருத முடியாது.
இதன் மூலம் அல்லாஹ்வின் தோற்றமும் ஆதம் அலை அவர்களின் தோற்றமும் நூறு சதவிகிதம் ஒன்று என புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் இறைவனை போன்று யாரும் கிடையாது, அவனுக்கு எந்த வகையிலும் ஒப்புமை இல்லை என குர்ஆன் சொல்கிறது.
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
அவனுக்கு நிகராக யாருமில்லை.