தீமையை வெறுத்த சுவனத்துப் பெண் உம்மு ஸுலைம் (ரலி)

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

முன்னுரை

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே!

இன்று ஏகத்துவ வாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள், தங்கள் வாழ்க்கையில் சறுகக் கூடிய சந்தர்ப்பங்களில் ஒன்று, அவர்களுடைய திருமண விஷயத்தில் ஆகும்.

தங்களுக்கு ஆதாயம் கிடைக்கின்றதென்றால் கொள்கையைக் காற்றிலே பறக்க விட்டு விடுவார்கள். அதுவரையிலும் தவ்ஹீதைக் குறித்து வீராவேசமாகப் பேசித் தள்ளியவர்கள் எல்லாம் தங்கள் வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய விஷயத்தில் மார்க்கத்தைப் புறந்தள்ளி விட்டு மனோ இச்சைக்கு மயங்கி விடுவார்கள். தாங்கள் தேர்ந்தெடுக்கும் துணை, கொள்கை வாதியா, இல்லையா என்பதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. தமக்கு வாழ்க்கை கிடைத்தால் போதும் என்ற மனோநிலையே அவர்களிடம் குடிகொண்டிருக்கும்.

சுவனத்துப் பெண்

ஆனால், செம்மல் நபியவர்களால் ‘சுவனத்துப் பெண்’ (ஆதாரம்: முஸ்லிம்) எனச் சிலாகித்துச் சொல்லப்பட்ட உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், எந்த அளவுக்கு கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதைப் பின்வரும் சம்பவம் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

(இஸ்லாத்தை ஏற்காதவராக இருந்தபோது) அபூதல்ஹா (ரலி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை (மிகவும் விரும்பி) பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஸுலைம் (ரளி) அவர்கள், அபூதல்ஹா அவர்களே! உங்களைப் போன்றவர்கள் (பெண் கேட்டால்) மறுக்கப்படாது. (அவ்வளவு சிறந்வர்கள் நீங்கள்) ஆனால் நீங்கள் ஓரிறைக் கொள்கையை மறுப்பவராக இருக்கிறீர்கள்.

நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். உங்களைத் திருமணம் செய்வது எனக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அதுவே எனது மஹராகும். இதைத் தவிர வேறெதையும் நான் கேட்க மாட்டேன் என்று கூறினார்கள். அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அதுவே அவர்களுடைய மஹராக ஆனது.

அறி: அனஸ் (ரலி),
நூல்: (நஸாயீ: 3341) (3289)

இந்தச் சம்பவத்திலே நமக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன. உம்மு ஸுலைம் அவர்கள் ஏற்கனவே மாலிக் இப்னுந் நள்ர் என்பவருக்கு மனைவியாக இருந்து வந்தார்கள். அவர் மரணித்த பிறகு விதவையாக, அதுவும் பல குழந்தைகளுக்குத் தாயாக இருந்த சூழ்நிலையில் தான் இந்தச் சம்பவம் நடைபெறுகின்றது.

அபூ தல்ஹா அவர்கள், மதீனாவாசிகளில் மிகுந்த செல்வமும், செல்வாக்கும் பெற்றவராகத் திகழ்ந்தார். அப்படியிருந்தும் கூட ஏற்கனவே ஒருவருக்கு வாழ்க்கைப்பட்ட உம்மு ஸுலைமை விரும்பிப் பெண் கேட்க முன்வந்துள்ளார். இங்குதான் உம்மு ஸுலைம் (ரளி) அவர்களின் கொள்கை உறுதி, வியப்பின் விளிம்புக்கே நம்மை அழைத்துச் செல்கின்றது.

‘நாமோ பல குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஆதரவற்ற விதவையாக இருக்கின்றோம். இவரை விட்டு விட்டால் நமக்கு மறுவாழ்வு கிடைப்பது கஷ்டம். எனவே வலிய வந்த இந்த வரனைத் தட்டிக் கழிக்காமல் ஏற்றுக் கொள்வோம்: அவர் எந்தக் கொள்கையில் இருந்தால் தான் என்ன?’ என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை. ‘ஏகத்துவம்’ என்னும் தூய கொள்கையை ஏற்றுக் கொண்ட நமக்கு, ‘இணைவைப்பு’ என்னும் அசுத்தமான செயலைச் செய்யக்கூடிய ஒருவர் எப்படி வாழ்க்கைத் துணையாக வரமுடியும் என்ற எண்ணம் மேலோங்கிடவே, தம்முடைய எண்ணத்தை அபூ தல்ஹாவிடம் மிகத் துணிச்சலாக வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றார்கள்.

அவர்களுடைய இத்தகைய துணிச்சலுக்குக் காரணம், இறைவனுடைய வார்த்தைகளுக்கு அவர்கள் அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். இவ்வுலக வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கையே மேலானது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள்.

படிப்பினை பெறுவீர்களா?

 وَلَا تَنْكِحُوا الْمُشْرِكٰتِ حَتّٰى يُؤْمِنَّ‌ؕ وَلَاَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكَةٍ وَّلَوْ اَعْجَبَتْكُمْ‌ۚ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِيْنَ حَتّٰى يُؤْمِنُوْا ‌ؕ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّنْ مُّشْرِكٍ وَّلَوْ اَعْجَبَكُمْؕ اُولٰٓٮِٕكَ يَدْعُوْنَ اِلَى النَّارِ  ۖۚ وَاللّٰهُ يَدْعُوْٓا اِلَى الْجَـنَّةِ وَالْمَغْفِرَةِ بِاِذْنِهٖ‌ۚ وَيُبَيِّنُ اٰيٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ ‏

இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவுதான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 2:221)

இந்த வசனம் ஏற்படுத்திய தாக்கம்தான், உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், அபூதல்ஹாவை ஏற்க மறுத்ததற்கு முக்கிய காரணம். ஆனால், ஸஹாபியப் பெண்மணிகளின் வரலாற்றை வானளாவப் புகழும் நம் சமுதாயப் பெண்மணிகள், திருமணம் என்று வந்துவிட்டால் தம்முடைய ஈமானையே அடகு வைத்து விடுகின்றனர். கன்னிப் பெண்களுக்கே வாழ்க்கைத் துணை அமைவது குதிரைக் கொம்பாக இருக்கும் இந்தக் காலத்தில் விதவைகளுக்கு மறுவாழ்வு கிடைப்பது என்பது மிகவும் அரிது என்பதால் ‘யாராக இருந்தால் என்ன? அவர் எந்தக் கொள்கை உடையவராக இருந்தால் என்ன? நமக்கு வாழ்க்கை கிடைத்தால் போதும்’ என்றே அவர்கள் தமக்குரிய வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றனர்.

ஆண்களும் இதில் விதிவிலக்கல்ல.”பெற்றோர் சொன்னார்கள்; உற்றார் சொன்னார்கள்; எனவே, அவர்கள் மனம் கோணும்படி நடக்கக் கூடாது”என சால்ஜாப்பு சொல்லி, கொள்கையைத் தூக்கி எறிந்து விடுகின்றனர்.

ஆனால், இவர்களெல்லாம் நம்மைப் படைத்த நாயன் முன்னிலையில் தம்முடைய செயலுக்கு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். ‘தமக்கு ஏற்ற கொள்கைவாதிகள் தம்மை மணம் முடிக்க முன்வரமாட்டார்களா?’ என்று தவ்ஹீதையே தம்முடைய உயிர் மூச்சாகக் கொண்டுள்ள பல கன்னியரும், விதவையரும் காத்துக் கொண்டிருக்க, இவர்கள் அந்தப் பெண்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு, கொள்கையற்ற வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்றால் வாழ்க்கைத் துணை அமையப் பெறாத அந்தப் பெண்களின் கண்ணீருக்கு இவர்கள் காரணமில்லையா? பாதிக்கப்பட்ட அவர்கள் இறைவனிடத்தில் இவர்களுக்கு எதிராகக் கையேந்தி விட்டால், இவர்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பத்தான் முடியுமா?

எனவே, வாழ்க்கைத் துணைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடிய விஷயத்தில், ஏகத்துவ வாதிகள், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களின் வார்த்தைகளைத் தம் மனக்கண் முன்னால் நிறுத்திப் பார்க்க வேண்டும்.

‘இணை வைக்கும் இழிசெயலுக்கு ஒருபோதும் துணை போக மாட்டோம்; இணை வைக்கும் பெரும் பாவத்தில் வீழ்ந்து கிடப்போரை எம் வாழ்க்கைத் துணையாக ஏற்கவே மாட்டோம்; இணை வைத்தலை நஞ்சாய் வெறுப்போம்; அணுவளவும் அதற்கு இடம் கொடோம்; அதன் சாயல் கூட எம் மீது படிய விடோம்’ என அனைவரும் சபதம் ஏற்போம்.