நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா?

கேள்வி-பதில்: நம்பிக்கை தொடர்பானவை

நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா?

நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு சில அற்புதங்களைச் செய்து காட்டியதற்கு ஆதாரம் உள்ளது. இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அல்லாஹ்வின் அனுமதியுடன் சில அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது.

இப்படி யாருக்கு அல்லாஹ் அனுமதி அளித்ததாக ஆதாரம் உள்ளதோ அவர்களைத் தவிர மற்ற யாரும் அற்புதங்கள் செய்ய முடியாது.

நபித்தோழர்களோ, மற்ற நல்லடியார்களோ தாம் வாழும் காலத்தில் செய்தததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அற்புதங்கள் அனைத்தும் கட்டுக் கதைகளாகும்.

ஏனெனில் ஒருவர் அற்புதம் செய்வதாக இருந்தால் அல்லாஹ் அவரிடம் நேருக்கு நேராகப் பேசி அனுமதி அளிக்கும் போது மட்டுமே அற்புதம் செய்ய முடியும்.

இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது. ஒவ்வொரு தவணையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(அல்குர்ஆன்: 13:38)

அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை.

(அல்குர்ஆன்: 40:78)

அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’ என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

(அல்குர்ஆன்: 14:11)

அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நபிமார்கள் அற்புதம் செய்ய முடியும் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

அல்லாஹ்விடமிருந்து கட்டளை வந்தால் தான் நபிமார்கள் அற்புதம் செய்ய முடியும் என்பதையும், நபிமார்கள் தமக்கு வழங்கப்பட்ட அற்புதத்தை மற்றொரு முறை செய்வதாக இருந்தால் அதற்கும் அல்லாஹ்வின் அனுமதி வரவேண்டும் என்பதையும், தமக்கு வழங்கப்பட்ட அற்புதம் தவிர வேறு எதையும் நபிமார்களால் செய்ய முடியாது.

ஒருவர் அற்புதம் செய்வது என்றால் அவர் இறைவனின் வஹீ தொடர்பில் இருக்க வேண்டும். அல்லது வழிகெடுப்பதற்காக இன்ன மனிதன் இன்ன காரியங்களைச் செய்வான் என்று வஹீ மூலம் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துடன் வஹீ முடிந்து விட்டது. அவர்களுக்குப் பின் யாருக்கும் வஹீ வராது. யாருடனும் அல்லாஹ் பேச மாட்டான்; நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு அல்லாஹ்விடம் அனுமதி பெறும் வாய்ப்பு இல்லை என்பதால் அவர்களால் அற்புதம் செய்ய இயலாது.

மகான்கள் அற்புதம் செய்தார்கள் என்று யாரேனும் வாதிட்டால் அந்த மகான்கள் அல்லாஹ்விடம் பேசினார்களா? அவர்களுக்கு அனுமதி அளித்தானா? அப்படியானால் அவர்கள் இறைத்தூதர்களா? இனியும் நபிமார்கள் வர முடியுமா? என்பதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

இறைத்தூதர்கள் தம்மை இறைத்தூதர் என்று நிரூபிக்கும் ஆதாரத்துடன் மக்களைச் சந்திக்க வேண்டும் என்பதால் அவர்களுக்குச் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன. மற்றவர்களுக்கு இந்த அவசியம் எதுவும் இல்லை.

நபித்தோழர்களோ, நன்மக்களோ அற்புதம் செய்ததாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால் அது கட்டுக்கதை என்பதில் சந்தேகம் இல்லை. அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது பொய் என்பதில் சந்தேகம் இல்லை.

உதாரணமாக ஒரு செய்தியை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

உமர் (ரலி) அவர்கள் சாரியா என்பவரின் தலைமையில் ஒரு படையைப் போருக்கு அனுப்பினார்கள். உமர் (ரலி) அவர்கள் ஜும்ஆ தினத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் தன் உரையின் இடையே சாரியாவே அந்த மலைக்குள் செல். சாரியாவே அந்த மலைக்குள் செல் எனக் கூறினார்கள். போர் நடந்து கொண்டிருந்த இடத்துக்கும் உமர் (ரலி) அவர்கள் இருந்த இடத்துக்கும் இடையே ஒரு மாத காலம் பயணம் செய்யத் தக்க தொலைவு இருந்தது. உமர் (ரலி) அவர்கள் இங்கிருந்து எழுப்பிய சப்தத்தை படைத் தளபதி சாரியா அங்கே செவியுற்று மலைக்குள் சென்றார். இதன் பிறகு வெற்றி கிடைத்தது. இவ்வாறு மேற்கண்ட செய்தி கூறுகின்றது.

இது அபூ நுஐமின் தலாயிலுன் நுபுவ்வா, பைஹகியின் அல்இஃதிகாத், இன்னும் பல நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பலவீனமானவை ஆகும்.

இவை பலவீனமாக இருப்பதுடன் இதன் கருத்து குர்ஆனுடன் மோதும் வகையில் அமைந்துள்ளது.

மனிதப் பார்வை அடையாத வெகு தொலைவில் நடந்த நிகழ்வை உமர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என இந்தக் கதை கூறுகின்றது. இறைவனுக்கு மட்டும் உரிய மறைவான ஞானம் என்ற அம்சம் உமர் (ரலி) அவர்களிடமும் இருந்தது என்ற கருத்தை இது கொடுக்கின்றது. இது இணை வைப்பாகும்.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.

(அல்குர்ஆன்:)

இறைவன் சில நேரங்களில் சில மறைவான விஷயங்களைத் தன் தூதர்களுக்கே கற்றுக் கொடுப்பான். இவ்வாறு இறைவன் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது கூட அதை அவர்கள் மக்களுக்கு எத்தி வைக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கு இறைவன் மறைமுகமான விஷயங்களை கற்றுக் கொடுக்க மாட்டான்.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.

(அல்குர்ஆன்:)

உமர் (ரலி) இறைத்தூதர் அல்ல என்பதால் மறைவான இந்த விஷயத்தை அல்லாஹ் அவருக்குக் காட்டித் தந்திருக்க மாட்டான். அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருப்பதுடன் குர்ஆனுடன் மோதுவதால் இது கட்டுக்கதைகளின் ஒன்றாக ஆகிவிடுகிறது.

ஷியாக்கள் தங்களின் இமாம்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக பல கட்டுக்கதைகளை உருவாக்கியுள்ளனர். இது கட்டுக்கதை எனக் கூறி ஆதாரங்களைக் கொண்டு முறியடிக்க கடமைப்பட்டவர்கள் அதைச் செய்யாமல் அதற்குப் போட்டியாக எங்கள் இமாம்களுக்கும் இதுபோல் ஏற்பட்டுள்ளது எனக் கருதி கராமத் கதைகளை இட்டுக்கட்டி இருக்க வேண்டும்.

இப்போது இந்த அற்புதம் செய்யப்போகிறோம் என்ற ஞானத்துடன் நபிமார்கள் செய்வது போல் மற்ற யாரும் அற்புதம் செய்ய முடியாது. அப்படிச் சொல்லப்படும் செய்திகள் கட்டுக்கதைகளாகும்.

ஆனால் யாரிடம் அற்புதம் நிகழ்கிறதோ அவருக்கும், மற்ற எவருக்கும் தெரியாமல் யாரும் எதிர்பாராமல் ஒருவரிடம் ஒரு அற்புதம் நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டால் அது நம்பகமானவர்களால் சொல்லப்பட்டால் அதை நாம் நம்பலாம்.

இத்தகைய அற்புதம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். முஸ்லிமல்லாதவருக்கும், முஸ்லிம்களில் கெட்டவர்களுக்கும் கூட நடக்கும். உலகில் வழங்கப்படும் பாக்கியங்கள் எப்படி நல்லவன் கெட்டவன் என்று பார்த்து வழங்கப்படுவதில்லையோ அது போலவே இத்தகைய அற்புதங்கள் அமைந்துள்ளன. இப்படி ஒருவருக்கு நடந்தால் அவர் நல்லடியார் என்பதற்கு அது ஆதாரமாக ஆகாது.

நபிமார்கள் வழியாக நிகழ்த்தப்படும் அற்புதம் முஃஜிசாத் என்றும், மகான்களுக்கு நடக்கும் அற்புதங்கள் கராமத் என்றும் வகைப்படுத்தி இவ்வாறு நம்புவது தான் சுன்னத் ஜமாஅத் கொள்கை என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். இப்படி வகைப்படுத்த குர்ஆனிலும் ஆதாரம் இல்லை. நபிவழியிலும் ஆதாரம் இல்லை.

இவர்கள் கூறுகின்ற கருத்தில் கராமத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு குர்ஆனில் இருந்தோ, நபிமொழிகளில் இருந்தோ ஆதாரத்தை எடுத்துக் காட்டாமல் மனோ இச்சைப்படி பெயர் சூட்டிக் கொண்டது மார்க்கத்தில் உள்ளதாக ஆகாது.