முன்னோர்களை, பெருங் கூட்டத்தை பின்பற்றலாமா?

பயான் குறிப்புகள்: கொள்கை
முன்னுரை

இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனையும் நபிவழியையும் விட்டுவிட்டு முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ அல்லது பெரும்பான்மை மக்கள் இவ்வாறு செய்கிறார்கள் என்பதற்காகவோ அவற்றை பின்பற்றுபவனுக்கு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் தெளிவான அறிவுரையை கூறுகிறது.

وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّبِعُوْا مَآ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَـتَّبِعُ مَآ اَلْفَيْنَا عَلَيْهِ اٰبَآءَنَا ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْقِلُوْنَ شَيْـًٔـا وَّلَا يَهْتَدُوْنَ‏

அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் ”எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும் நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன்: 2:170)

وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَاۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ قَالُوْا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ اٰبَآءَنَا‌ ؕ اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا يَعْلَمُوْنَ شَيْــًٔـا وَّلَا يَهْتَدُوْنَ‏

”அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் ”எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன்: 5:104)

மேற்கண்ட வசனங்கள் நம்முடைய முன்னோர்கள் மார்க்கம் என்ற பெயரில் தவறான காரியங்களைச் செய்திருந்தால் நாம் அவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கு தெளிவான சான்றுகளாகும். திருமறைக்குர்ஆனும், நபிவழியும் ஒன்றைப் போதிக்கும் போது அதற்கு மாற்றமாக யார் கூறினாலும் அதனைப் புறக்கணிப்பவனே உண்மையான இறைநம்பிக்கையாளனாவான்.

குர்ஆனிற்கும், நபி வழிக்கும் மாற்றமாக முன்னோர்களையும் பெரியார்களையும் பின்பற்றியவனின் மறுமை நிலை.

يَوْمَ تُقَلَّبُ وُجُوْهُهُمْ فِى النَّارِ يَقُوْلُوْنَ يٰلَيْتَـنَاۤ اَطَعْنَا اللّٰهَ وَاَطَعْنَا الرَّسُوْلَا

رَبَّنَاۤ اٰتِهِمْ ضِعْفَيْنِ مِنَ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيْرًا

”அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ”நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். ”எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள். ”எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 33:66)…68)

முன்னோர்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் மாற்றமாக இருக்கிறது, முரணாக இருக்கிறது என்பதற்காகவோ புதிய கருத்தாக இருக்கிறது என்பதற்காவோ ஒரு கருத்தை மறுக்கக் கூடாது. எந்த கருத்தாக இருந்தாலும் அது திருக்குர்ஆன் நபிமொழிக்கு ஒத்ததாக இருக்கிறதா? அல்லது முரணாக இருக்கிறதா? என்பதை பார்த்து, திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் ஒத்து இருக்கும் கருத்தை ஏற்று, முரணாக இருக்கும் கருத்தை புறக்கணிக்க வேண்டும்.

பெரும்பான்மையைப் பின்பற்ற வேண்டுமா?

மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்பவர்கள் அதற்கு ஆதாரமாக பின்வரும் ஹதீஸைக் கூறுகின்றனர்.

3950- حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عُثْمَانَ الدِّمَشْقِيُّ ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ، حَدَّثَنَا مُعَانُ بْنُ رِفَاعَةَ السَّلاَمِيُّ , حَدَّثَنِي أَبُو خَلَفٍ الأَعْمَى ، قَالَ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ، يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ ، يَقُولُ :
إِنَّ أُمَّتِي لاَ تَجْتَمِعُ عَلَى ضَلاَلَةٍ ، فَإِذَا رَأَيْتُمُ اخْتِلاَفًا فَعَلَيْكُمْ بِالسَّوَادِ الأَعْظَمِ.

”என்னுடைய சமுதாயத்தினர் வழிகேட்டில் ஒன்றுபட மாட்டார்கள். நீங்கள் கருத்து வேறுபாடுகளைக் கண்டால் பெரும் கூட்டத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)(இப்னு மாஜா: 3940)

அதாவது மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் மேற்கண்ட ஹதீஸ் மத்ஹபைப் பின்பற்றுதவற்கு ஆதரரமாகும் எனக்கூறுகின்றனர்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் அபூகலஃப் அல் அஃமா என்பவர் பலவீனமானவர். இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன் கூறுகிறார். இதே தொடரில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான வலீத் பின் முஸ்லிம் என்பவர், தனக்கு அறிவித்தவர்களில் பலவீனமான அறிவிப்பாளரை மறைத்து விட்டு அறிவிப்பவர் ஆவார்.இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

2167- حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ البَصْرِيُّ ، قَالَ : حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ ، قَالَ : حَدَّثَنَا سُلَيْمَانُ الْمَدَنِيُّ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ :
إِنَّ اللَّهَ لاَ يَجْمَعُ أُمَّتِي ، أَوْ قَالَ : أُمَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، عَلَى ضَلاَلَةٍ ، وَيَدُ اللهِ مَعَ الجَمَاعَةِ ، وَمَنْ شَذَّ شَذَّ إِلَى النَّارِ.

”என்னுடைய சமுதாயத்தை அல்லது முஹம்மது நபியின் சமுதாயத்தை அல்லாஹ் வழிகேட்டில் ஒன்று சேர்த்து விட மாட்டான். அல்லாஹ்வுடைய அருள் ஜமாஅத்துடன் தான் இருக்கிறது. யார் தனித்து இருக்கிறானோ அவன் தனித்து நரகத்தில் இருப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)(திர்மிதீ: 2093)

இந்த ஹதீஸில் இடம் பெறும் சுலைமான் அல் மதனீ என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீசும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

குர்ஆனின் கருத்து

பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன. மேலும் இது திருக்குர்ஆன் வசனத்திற்கும் முரணாக அமைந்துள்ளது.

وَاِنْ تُطِعْ اَكْثَرَ مَنْ فِى الْاَرْضِ يُضِلُّوْكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ‏

பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.(அல்குர்ஆன்: 6:116)

இந்த வசனம், பெரும்பான்மைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று அறிவிக்கின்றது. இதற்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ்களின் கருத்து அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலும் மேற்கண்ட ஹதீஸ்கள் மேலும் பலவீனம் அடைகின்றன.
மேலும் இந்த ஹதீஸ்கள் சரியானவை என்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டாலும் பெரும் கூட்டம் என்பதற்கு அளவு கோல் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.

இன்று பெரும்பான்மையானவர்கள் வரதட்சணை வாங்குகிறார்கள்; சினிமா பார்க்கிறார்கள்; பல்வேறு தீமைகளைச் செய்கிறார்கள். இவர்களைப் பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. எனவே கருத்து அடிப்படையிலும் இந்த ஹதீஸ்கள் பலவீனமடைகின்றன.

ஒரே மத்ஹபை பின்பற்றுவார்களா?

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஹதீஸ்களில் மத்ஹபுகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. காரணம், இந்த ஹதீஸ் பெரும் கூட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகின்றது. மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்கள் கூட ஒரே மத்ஹபைப் பின்பற்றுவதில்லை. நான்கு மத்ஹபுகள் என்று கூறுகின்றார்கள்.

இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்த்தால் நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றக் கூடாது; ஒரே மத்ஹபை பின்பற்ற வேண்டும் என்று தான் கூற வேண்டும். எனவே மத்ஹபுகளுக்கு இந்த ஹதீஸ் எதிரானது என்று தான் கூற வேண்டும்.

எனவே, இது போன்ற மூடத் தனத்திலிருந்து விடுபட்டு, குர்ஆன், ஹதீஸை பின்பற்றி நடந்து, மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!