உறவுக்கு முன்பாக கணவன் பிரிந்து விட்டால் இத்தா அவசியமா?

முக்கிய குறிப்புகள்: குடும்ப வழக்குகள்

மனைவியின் புகார்

எனக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நிக்காஹ் முடிந்து சிறிது நேரத்தில் வெளியில் சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு வரதட்சணையாக கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்றவர் பிறகு வரவே இல்லை. பிறகு விசாரித்த போது அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் ஒரு வோறொரு பெண்ணோடு ஒரு ஊரில் வசித்து வருகிறார் என்பதும் தெரிய வந்தது.

ஒரு நாள் கூட அவரோடு சேர்ந்து வாழவில்லை. அன்றிலிருந்து நான் தனியாகத்தான் வசித்து வருகிறேன். இப்பொழுது மறுமணம் செய்து கொள்ள இருப்பதால் நான் குலாஃ செய்து விட்டுத்தான் மறுமணம் செய்ய வேண்டுமா? அல்லது எட்டு வருடங்கள் தொடர்பு இல்லாததால் நான் இப்போதே மறுமணம் செய்து கொள்ளலாமா? இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு வழங்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

தீர்வு:

உங்களைத் திருமணம் செய்தவர் உங்களுடன் இல்லற வாழ்க்கையைத் துவங்குவதற்கு முன்பாகவே உங்களை ஏமாற்றிச் சென்று விட்டார். இந்நிலையில் நீங்கள் சமுதாயத்தலைவரிடம் முறையிட வேண்டும். அவர் உங்களுக்கு மத்தியிலுள்ள திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுக்கும் அவருக்கும் மத்தியிலுள்ள திருமண உறவு நீங்கி விடும்.

நீங்கள் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதற்காக எவ்வித இத்தாவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. இதனை பின்வரும் வசனத்திலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا إِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنَاتِ ثُمَّ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا فَمَتِّعُوهُنَّ وَسَرِّحُوهُنَّ سَرَاحًا جَمِيلًا )الأحزاب/49(

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள். அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்! (அல்குர்ஆன்:)

மேற்கண்ட வசனத்தில் கணவன் மனைவியை விவாகரத்துச் செய்வது பற்றி கூறப்பட்டாலும் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முன்னரே பிரிந்து விட்டால் இத்தா கணக்கிடவேண்டிய அவசியமில்லை என்பதுதான் இதில் முக்கிய அம்சமாகும்.

உங்களைத் திருமணம் செய்தவர் உங்களுடன் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முன்பே உங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்ட காரணத்தாலும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முன்பாகவே நீங்கள் அவரை குலாஃ செய்து விட்ட காரணத்தினாலும் நீங்கள் அவரைப் பிரிந்ததற்காக எவ்வித இத்தாவும் கணக்கிடவேண்டியதில்லை.

உங்களுக்கும் அவருக்கும் மத்தியிலுள்ள திருமண ஒப்பந்தத்தை முறித்த உடனேயே நீங்கள் மறுமணம் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் எவ்விதத் தடையுமில்லை.