இந்தியாவிற்கு எதிராக முஸ்லிம்கள் போர் புரிவார்களா?
பிற்காலத்தில் முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்கு எதிராகப் போர் செய்வார்கள் என்றும் அந்தப் போரில் கொல்லப்பட்டால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும் என்றும் இதனைச் சிறப்பித்து ஒரு சில ஹதீஸ்கள் ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா? என்று நாம் ஆய்வு செய்தபோது இவை அனைத்தும் பலவீனமாக இருக்கின்றன என்ற உண்மையை அறிந்துகொள்ள முடிகின்றது.
இந்த ஹதீஸ்களில் ஹிந்த் என்ற அரபுச் சொல் கூறப்பட்டுள்ளது. தற்காலத்தில் இது இந்தியாவைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது.
முதல் அறிவிப்பு
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ قَالَ حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ سَيَّارٍ ح قَالَ وَأَنْبَأَنَا هُشَيْمٌ عَنْ سَيَّارٍ عَنْ جَبْرِ بْنِ عَبِيدَةَ وَقَالَ عُبَيْدُ اللَّهِ عَنْ جُبَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ وَعَدَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ الْهِنْدِ فَإِنْ أَدْرَكْتُهَا أُنْفِقْ فِيهَا نَفْسِي وَمَالِي فَإِنْ أُقْتَلْ كُنْتُ مِنْ أَفْضَلِ الشُّهَدَاءِ وَإِنْ أَرْجِعْ فَأَنَا أَبُو هُرَيْرَةَ الْمُحَرَّرُ رواه النسائي
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஹிந்து போர் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். அதை நான் அடைந்தால் அதற்காக நான் எனது உயிரையும் பொருளையும் செலவு செய்வேன். ஏனென்றால் (அதில்) நான் கொல்லப்பட்டால் சிறந்த உயிர்தியாகியாக ஆகிவிடுவேன். (கொல்லப்படாமல்) திரும்பினால் நான் (நரகத்திலிருந்து) விடுதலையான அபூஹுஷரா ஆவேன்.
நூல் : நஸாயீ (3122)
இந்தச் செய்தியில் ஜப்ர் பின் அபீதா என்ற நபர் இடம்பெற்றுள்ளார். இவரை நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இமாம் தஹபீ அவர்கள் இவர் யார் என்ற விபரம் இல்லை எனக் கூறியுள்ளார்கள்.
தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 2 பக்கம் 59)
எனவே இவருடைய நம்பகத்தன்மை நிரூபணமாகாத காரணத்தால் இவர் பலவீனமானவர் ஆவார்.
இரண்டாவது அறிவிப்பு
8467 حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا الْبَرَاءُ عَنِ الْحَسَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ حَدَّثَنِي خَلِيلِي الصَّادِقُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ يَكُونُ فِي هَذِهِ الْأُمَّةِ بَعْثٌ إِلَى السِّنْدِ وَالْهِنْدِ فَإِنْ أَنَا أَدْرَكْتُهُ فَاسْتُشْهِدْتُ فَذَلِكَ وَإِنْ أَنَا فَذَكَرَ كَلِمَةً رَجَعْتُ وَأَنَا أَبُو هُرَيْرَةَ الْمُحَرَّرُ قَدْ أَعْتَقَنِي مِنْ النَّارِ رواه أحمد
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : இந்தச் சமுதாயத்தில் ஒரு படை சன்த் மற்று ஹிந்தை நோக்கிப் புறப்படும் என என் உற்ற நண்பரும் உண்மையாளருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே நான் அந்த நேரத்தை அடைந்து ஷஹீதாகிவிட்டால் அது உயிர் தியாகமாகும். நான் திரும்பிவிட்டால் நான் விடுதலை செய்யப்பட்ட அபூஹுரைரா ஆவேன். அப்போர் என்னை நரகத்திலிருந்து விடுதலை செய்துவிடும்.
நூல் : அஹ்மது (8467)
இந்தச் செய்தியில் பராஉ பின் அப்தில்லாஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். யஹ்யா பின் மயீன் அஹ்மது பின் ஹம்பள் நஸாயீ இப்னு அதீ இப்னு ஹிப்பான் மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 1 பக்கம் 427)
எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.
இது தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் பலவீனமாக இருப்பதால் இதை நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாக ஏற்க முடியாது. தற்போது இந்தியாவில் மார்க்கத்தை கடைபிடிப்பதற்கும் அதை பிரச்சாரம் செய்வதற்கும் முஸ்லிம்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.
எனவே இந்த நல்ல நிலையை சீர்குலைக்கும் வகையில் ஜிஹாத் என்ற பெயரில் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி நம் தலையில் நாமே மண்ணை வாறிப் போட்டுக் கொள்ளக்கூடாது. சில பகுதிகளில் சிறு பாதிப்புகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டால் அதை சட்ட அடிப்படையில் எதிர்கொண்டு நீதியைப் பெற முயற்சிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்று மக்களிடம் பரப்பப்பட்ட கருத்தை நம்முடைய சிறந்த நடவடிக்கைகளால் மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.