இஸ்லாமும் மருத்துவமும்
செல்வங்களிலே மிகப்பெரும் செல்வமாக மக்களால் கருதப்படுவது நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு. நிழலின் அருமை வெயிலில் அவதியுறுபவனுக்குத்தான் தெரியும் என்பார்கள். அதுபோல் நோயாளிகளிடம் கேட்டால்தான் நோயற்ற வாழ்வின் அருமை பெருமை புரியும்.
பல கோடிகளுக்கு அதிபதிகளாக இருந்தும் தங்களைப் பீடித்துள்ள நோய்களின் காரணத்தால் தாங்கள் விரும்பியதை உண்டு அனுபவிக்க முடியாத அவஸ்தையை அவர்களிடம் கேட்டால் மனம் வெதும்பி அது பற்றி விவரிப்பார்கள்.
விரும்பியதை உண்டு மகிழ முடியாது என்பது மட்டுமல்ல, நோயினால் விரும்பிய செயல்களை ஆற்றவும் இயலாது போகும்.
எனவேதான் இஸ்லாமும் நோயற்ற வாழ்வை பெரும் பாக்கியம் என்று சொல்கிறது.
نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنَ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.
1. ஆரோக்கியம்.
2. ஓய்வு.
அறி: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (புகாரி: 6412)
இன்றைக்கு நோயில்லா வாழ்க்கை என்பது பகல் கனவு என்று கருதுமளவு அரிய விஷயமாகி விட்டது.
புதிது புதிதாய் பல நோய்கள் தோன்றுகின்றன. நமது முன்னோர்கள் கண்டிராத, அறிந்திராத பல நோய்களுக்கு இன்றைய சமுதாயம் ஆளாகியிருக்கிறது. ஊரெங்கும் பெருகும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையையும் அதில் சிகிச்சை பெறுவதற்காக மொய்க்கும் கூட்டத்தையும் காணும்போது முற்காலத்தைவிட தற்காலத்தில் நோய்கள் பெருகியிருப்பதை அறியலாம்.
நோய்கள் பற்றியும் மருத்துவம் பற்றியும் இஸ்லாம் என்ன கூறுகிறது? என்பதைக் காண்போம்.
இஸ்லாமும் மருத்துவமும் என்ற தலைப்பில் பலரும் இன்னின்ன வசனங்களை ஓதினால் இன்னின்ன நோய்கள் குணமாகும் என்று பொய் புரட்டுகளை அடிப்படையாகக் கொண்டு புத்தகம் எழுதியுள்ளார்கள்.
குண்டானவர்கள் மெலிந்து போக, மெலிந்தவர்கள் குண்டாக என்று எல்லா நோய்க்கும் குர்ஆன் வசனங்களைப் பட்டியலிட்டுள்ளார்கள்.
குழந்தைப் பேறு அடைவதற்குக் கூட குர்ஆன் வசனம் உண்டாம். அந்த வசனத்தை ஓதினால் உடனே குழந்தை தரித்து விடுமாம்.
இவ்வாறெல்லாம் கதை அளக்கும் கட்டுரையல்ல இது.
நோய்களை எவ்வாறு அணுக வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறதோ அதை உள்ளபடி விவரிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
வருமுன் காப்போம் என்பதுதான் இஸ்லாத்தின் தாரக மந்திரம். எந்த ஒன்றையும் வந்தபிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற அலட்சியப் போக்கு இஸ்லாத்தில் இல்லை.
ஆகவேதான் நோய்கள் விஷயத்தில் அது வருமுன் எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறது.
பல நோய்களுக்கு அடிப்படைக் காரணம் நமது உடல் சார்ந்த தேவைகளை கருத்தில்கொள்ளாமல் உடலை வருத்திக் கொள்வதே. எந்தக் காரணத்தை முன்னிட்டும் உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. இறைவணக்கத்துக்காக கூட நமது உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் செயலை செய்யக் கூடாது. உடலுக்கு வழங்க வேண்டிய தேவைகளை சரியாய் வழங்கிட வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!
ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள்.
நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது!” அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!” என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!” என்றார்கள். “தாவூத் நபியின் நோன்பு எது?’ என்று நான் கேட்டேன். “வருடத்தில் பாதி நாட்கள்!” என்றார்கள்.
அறி: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி),
நூல்: (புகாரி: 1975)
ஒருவன் தூங்காமல் இறைவனை வணங்கி வழிபடப் போகிறான் என்றால் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமையை செய்யத் தவறி உடலை வருத்துவதால் இஸ்லாம் அவனை வன்மையாகக் கண்டிக்கின்றது.
இறைவணக்கத்திற்காகவே உடல் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடாது எனில் இதர தீய காரணங்களான புகைப் பிடித்தல், மது அருந்துதல் போன்றவைகளால் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை.
அது போல தக்க காரணமின்றி சாப்பிடாமல் இருப்பது, நேரம் தவறி சாப்பிடுவது, தூங்காமை போன்ற அனைத்துக்கும் இந்தச் செய்தி பொருந்தும். ஏனெனில் இன்றைய மருத்துவ உலகம் பசிக்கும் போது சாப்பிடாமை, போதுமான தூக்கம் இல்லாமை ஆகியவை தான் பல நோய்களுக்கான காரணம் என்று பட்டியலிடுகிறது. இவ்விரண்டிலும் மனிதன் கவனம் செலுத்துவது நோய்கள் அண்டாமல் வாழ வழிவகுக்கும் என்கிறது.
எனவே எக்காரணத்தைக் கொண்டும் எந்த வகையிலும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் செயலைச் செய்யக் கூடாது என்பதே இஸ்லாம் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இந்த வழிகாட்டலின் படி நடந்தால் இறைநாட்டத்தால் பெருமளவு நோய்களைத் தவிர்க்கலாம்.
சுத்தம் சோறு போடும் என்பார்கள், சோறுமட்டுமல்ல சுத்தம் சுகமும் தரும். ஆம் நமது உடல், உடை, இருப்பிடம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருப்பது நம்மை அண்டவிருக்கும் நோய்களை விட்டும் காத்து நமக்கொரு பாதுகாப்பு அரணாக விளங்கும். இஸ்லாம் கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தூய்மைக்கும் ஒரு முக்கிய பங்குண்டு.
அனைத்துவித தூய்மைகளை பற்றியும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
பல் துலக்குதல், குளித்தல், ஆடை சுத்தம், மற்றும் சுற்றுப்புறப் சூழலை மாசுபடுத்தாமல் சுத்தமாக வைத்திருத்தல் ஆகிய அனைத்தைப் பற்றியும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.
பல் துலக்கி வாய் கொப்பளிப்பதால் வாயினுள் உள்ள பல நுண்கிருமிகள், பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் காய்ச்சல், வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் வருவது தடுக்கப்படுகின்றன.
எனவே இஸ்லாம் பல் துலக்குவதற்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றது.
أَكْثَرْتُ عَلَيْكُمْ فِي السِّوَاكِ.
பல் துலக்குவது பற்றி அதிகமாக நான் உங்களை வலியுறுத்தியுள்ளேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறி: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 888)
பல் துலக்குதல் வாயைச் சுத்தப்படுத்தும்; இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தரும்’ எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
அறி: ஆயிஷா (ரலி)
நூல்: (நஸாயீ: 5) ,(அஹ்மத்: 23072)
நவீன உலகில் காலை எழுந்ததும் பல் துலக்காமல் வாயில் உள்ள கிருமிகளுடன் காபி குடிப்பதை புதிய கலாச்சாரமாகவே வைத்திருக்கின்றனர். இதற்கு பெட் காபி என்ற பெயர் வேறு? இது அருவருக்கத்தக்க செயலாகும்.
அவ்வப்போது நகம் வெட்ட வேண்டும் என்றும் இஸ்லாம் பணிக்கின்றது. காரணம் நகம் நீண்டிருந்தால் அதன் இடைவெளியில் அழுக்குகள் சேரும். உணவு சாப்பிடும் வேளையில் நக அசுத்தத்தையும் சேர்த்து உண்ண வேண்டி வரும். இதுவும் நோயை ஏற்படுத்தும் என்பதால் நகம் வெட்டுதல் அவசியம்.
நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:
“இயற்கை மரபுகள் ஐந்தாகும்’ அல்லது “ஐந்து செயல்கள் இயற்கை மரபுகளில் (இறைத் தூதர்கள் வழியில்) அடங்கும்’. (அவையாவன:) விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களை(ந்திடச் சவரக் கத்தியைப் பயன்படுத்து)வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது.
அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 429)
மக்கள் உலவும் பொது நடைபாதைகளில் மலம் கழிப்பதையும் இஸ்லாம் தடுக்கின்றது. அது இறை சாபத்திற்குரிய செயல் என்று எச்சரிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு, “மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 448)
பொதுப்பாதையில் மலம் கழிப்பதால் மக்களுக்குண்டாகும் பாதிப்புகளை விளக்கத் தேவை இல்லை. இவ்வாறு இஸ்லாம் நோய்கள் பரவாமலிருக்க பல தற்காப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து செய்ய பணிக்கின்றது.
மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ அக்கறை கொண்ட அரசு இவற்றைக் கவனத்தில் கொண்டு, கண்காணித்து சீர் செய்ய வேண்டும். இஸ்லாம் கூறும் இன்னும் ஏராளமான சுகாதார நடவடிக்கைகளை தனிமனிதனும் அரசும் கையிலெடுத்தால் நோயற்ற ஆரோக்கியமான மனித சமுதாயத்தை வார்த்தெடுக்க இயலும்.
நமது உடலை நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலும் இறைநாட்டத்தால் சில வேளை நமக்கு நோய்கள் ஏற்படத்தான் செய்யும். அப்போது குறித்த நோய்க்குரிய முறையான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.
நோய்க்கான காரணிகளைத் தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துவதுடன் நோய் ஏற்பட்டால் அதற்கான மருத்துவ சிகிச்சை செய்வது அவசியம் எனவும் அது வலியுறுத்துகின்றது.
இதை அறியாத சில மூடர்கள் நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்ய மாட்டேன் என்று கூறி முறையான மருத்துவத்தைப் புறக்கணித்து மூடத்தனமாக நடக்கின்றனர்.
இந்தத் தவறான கொள்கை கொண்டவர்கள் தங்களுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் முதலில் அவர்கள் நாடுவது தாயத்து தகடு போன்ற இணைவைப்புக் கலாச்சாரம் ஆகியவற்றைத்தான்.
அல்ஹம்து சூராவை தண்ணீரில் எழுதி அதைக் குடிப்பது போன்ற குர்ஆன் கூறாத மூட நம்பிக்கை சார்ந்த செயல்கள் சமுதாய மக்களிடையே வேரூன்றவும் இந்தத் தவறான போக்குதான் காரணம்.
இதுபோன்ற அறியா மக்களை வைத்து காசு பார்க்கும் கும்பலும் நம்மிடையே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும். மனிதனுக்கு நோய்கள் ஏற்படும்போது மருத்துவம் செய்வதை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதை பின்வரும் செய்திகளில் அறியலாம்.
அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி: உஸாமா பின் ஷரீக் (ரலி)
நூல்: (அபூதாவூத்: 3855) (3357), திர்மிதீ (1961)
எல்லா நோய்க்கும் அல்லாஹ் பூமியில் நிவாரணத்தை அருளியிருக்கிறான் என்றும், அதை நாம் தேடிப் பெற்று சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் எனவும் நபிகளார் வலியுறுத்துகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 5678)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு. நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்துவிட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்.
அறி: ஜாபிர் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 4432)
நோய்கள் ஏற்படும்போது அதற்காக மார்க்கம் கற்றுத்தந்தபடி ஓதிப்பார்த்தல், இறைவனிடம் பிரார்த்தித்தல் ஆகியவற்றை செய்வதோடு மருத்துவம் செய்வது அவசியம் என்பதனை இலகுவாக அறியலாம்.
நோய்களுக்கு மருத்துவம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு இந்தக் கட்டுரையை முடிக்க இயலாது. மருத்துவத்திற்காக செல்லும் மருத்துவமனையின் நிலை மற்றும் மருத்துவர்களின் மனித நேயத்தையும் சற்று அலச வேண்டும்.
ஒரு சராசரி மனிதன் நோய்களைக் கண்டு அஞ்சுவது அதனால் ஏற்படும் வலி மற்றும் வேதனைக்காக என்பதைக் காட்டிலும் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக ஆகும் செலவை எண்ணித்தான் அதிகம் அஞ்சுகிறான்.
சாதாரண காய்ச்சல் என்று தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றாலே சில ஆயிரம் ரூபாய்களை கறந்து விடுகிறார்கள் எனும் போது ஆபரேஷன் என்றால் இலட்சக்கணக்கில் பிடுங்கி விடுகிறார்கள்.
அதனாலே தனியார் மருத்துவமணையின் வாசலை மிதிக்கவே நடுத்தரவர்க்கத்தை சார்ந்தவன் பதறுகிறான்.
தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை நோயையும் அதற்கு ஆகும் சிகிச்சையையும் கவனித்து கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை. மருத்துவமணையின் கம்பீரமான தோற்றம், அதன் அடுக்குமாடி கட்டிடம் ஆகியவற்றைக் கவனித்தே கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட ஒரு வகை நோய்க்கு பத்து மாடி கட்டிடம் என்றால் ஒரு கட்டணம். பதினைந்து மாடி கட்டிடம் என்றால் அதே நோய்க்கு இன்னொரு கட்டணம்.
ஒருவர் தம் குழந்தைக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு திருநெல்வேலியில் உள்ள ஆஸ்பத்திரியை நாடி விசாரிக்கின்றார். அதற்கு 2 இலட்சம் வரை செலவாகும் என்று பதில். சென்னையிலுள்ள வேறொரு ஆஸ்பத்திரியை நாடினால் 5 லட்சம் வரை செலவாகும் என்று பதில் கிடைக்கின்றது.
நெல்லைக்கும் சென்னைக்கும் இருக்கும் தூரத்தை விட அவர்கள் இருவரும் கூறும் கட்டணம் அதிகமாக உள்ளது. நோய் ஒன்று. அதற்கான மருத்துவமும் ஒன்று. ஆனால் ஒவ்வொரு மருத்துவமணையிலும் ஒரு ரேட்.
ஏதோ காய்கறிக் கடைகளுக்கிடையில் விலை வித்தியாசம் ஏற்படுவதைப் போன்று உயிர் காக்கும் மருத்துவனைகளுக்கிடையில் கட்டண வித்தியாசம் ஏற்படுகின்றது.
இதற்குக் காரணம் மருத்துவம் என்பது மனித நேயம் அற்ற கொள்ளையர்களின் கூடாரமாக மாறியதுவே. மருத்துவம், சேவை என்பார்கள். இலட்சக்கணக்கில் காசு கொடுத்து மருத்துவம் படித்தமையால் சேவையாற்ற வேண்டியதில்லை. வியாபாரமாகவே பார்க்கட்டும். ஆனால் மனித நேயத்துடன் அந்த வியாபாரத்தை நடத்திட வேண்டும்.
வசதி இல்லாத ஏழை பாழைகள், நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மக்கள் ஆகியோரும் தனியார் மருத்துவமணைகளை நாடும் அளவு மனித நேயத்துடன் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஏன்? சக்தியில்லாதவர்கள் அரசு மருத்துவமனையை நாட வேண்டியது தானே என்றால் அதைத் தான் நாடுகிறார்கள். அங்கு ஓரளவு மருத்துவம் கிடைத்தாலும் மரியாதை கிடைப்பதில்லை. பிச்சைக்காரர்களைப் போன்று பெருமளவு நடத்தப்படுகின்றார்கள். இன்னும் சில அரசு மருத்துவமனைகளில் சுகாரதாரம் பேணப்படுவதில்லை. விதிவிலக்குகள் சில இருக்கலாம். ஆனால் அது அரிது. ஆகவே சிற்சில நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளைத்தான் மக்கள் அதிகம் நாடுகிறார்கள். ஆகவே மனித நேயத்துடன் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மருத்துவமனைகள்தான் இப்படி பணம் பறிக்கும் வேலையைச் செய்கிறது என்றால் மருத்துவரும் தம் பங்கிற்கு மக்களை ஒரு வழி செய்துவிடுகிறார்.
நோய்க்காக மருத்துவரை நாடிச் சென்றால் அவர் நமது நாடித்துடிப்பை பரிசோதித்தற்கே ரூ100 லிருந்து 300, 400 வரைக்கும் கட்டணமாக பறித்துக் கொள்கிறார். நோய்க்கான மருந்து மாத்திரைகளை எழுதித் தருகிறார் அல்லவா? அதற்குத்தான் அந்தப் பணம்.
அதிகமான மருத்துவர்கள் மருத்துவப் படிப்பிற்காக தாங்கள் செலவழித்த மூலதனத்தை எடுக்கும் ஒரு வியாபாரமாகவே மருத்துவத்தைப் பார்க்கிறார்கள். தாங்கள் 10 ரூபாய்க்கு பெறும் மருந்துகளை 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றார்கள். குறிப்பிட்ட உயிர்காக்கும் மருந்து மருத்துவர்களுக்கு மாத்திரம் 500க்குள் கிடைக்கின்றது. ஆனால் அவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு வழங்குவதோ 2000 ரூபாய்க்கு.
தங்கள் மருத்துவமணையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளி என்றால் அவரை அவ்வப்போது சந்திக்க ஒரு தொகை, அவருக்கு இன்னின்ன மருந்துகளை வழங்க வேண்டும் என்று ஆலோசனை கூற ஒரு தொகை, ரூமிற்கு ஒருநாள் வாடகை 500லிருந்து 1000 வரைக்கும் வசூலித்து விடுகின்றார்கள்.
மருத்துவர்கள் மனது வைத்தால் மருத்துவ ஆலோசனை வழங்குவதற்கு நியாயமான கட்டணம் பெறலாம். தங்களிடம் உள்ள மருந்துகளைக் குறைந்த லாபத்தில் நோயாளிகளுக்கு வழங்கலாம். ஆனால் இதற்கு அவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையோர் தயாராக இல்லை. மருத்துவத்தை சேவையாக கருதும் மிகச்சிலர் மாத்திரமே குறைந்த விலையில் மருத்துவ ஆலோசனை, மருந்து மாத்திரைகள் வழங்கி மக்களுக்கு சேவையாற்றுகின்றனர்.
மருத்துவரிடம் நோய்க்கான மருந்துச் சீட்டை வாங்கிச் சென்று வெளி மருந்துக் கடைக்கு சென்றால் அவர்கள் சொல்லும் விலையில் கூடுதல் நோயாக தலைச்சுற்றி, மயக்கம் வேறு தொற்றிக் கொள்கிறது.
அந்த அளவுக்கு மருந்துகளின் விலையேற்றம் உள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் பல மருந்துகளின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது என்று மருத்துவ ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது. அப்படியெனில் இப்போதைய விலையைச் சொல்லவேண்டியதில்லை.
சாதாரண மருந்துகளிலிருந்து உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் வரை அனைத்தும் அதிக விலையில் கொள்ளை லாபத்தில் விற்கப்படுகின்றன.
உதாரணமாக உயிர்காக்கும் மருந்தான மெரோபனம் எனும் மருந்தின் அதிகபட்ச விலை ரூ. 2300. இது மருந்தகத்துக்கும் மருத்துவருக்கும் ரூ500க்குள் கொடுக்கப்படுகின்றது. இப்படி மருந்து நிறுவனங்கள் மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.
எளிய மக்களை அச்சுறுத்தும் இந்த விலையேற்றப் பிரச்சனையை அரசு கையிலெடுக்க வேண்டும்.
உயிர் காக்கும் மருந்துகளை அரசே இலவசமாக வழங்குவதும் மருந்துகளின் அதிரடி விலையேற்றத்தை மத்திய சுகாதாரத்துறை கட்டுக்குள் கொண்டு வருவதுமே ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் தீர்வாக அமையும்.
இதுபற்றி எத்தனையோ கட்சிகள் கூக்குரலிட்டும், போரட்டங்கள் நடத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்காய் அரசு மௌனம் காக்கின்றது. அரசின் இந்த மௌனம், மெத்தனம் பல அப்பாவி உயிர்களை பலியாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை என்றைக்கு அரசு உணருமோ?
இந்த விலையேற்றத்துக்கு ஒரு வகையில் மருத்துவர்களும் காரணமாய் அமைகின்றார்கள்.
ஏனெனில் சில மருந்து நிறுவனங்கள் தங்கள் நிறுவன மருந்துகளை நோயாளிகளிடம் சிபாரிசு செய்ய மருத்துவர்களை அணுகி அவர்களுக்கு வழங்க வேண்டியதை வழங்குகிறது.
அவ்வாறு அந்த நிறுவனம் மருத்துவர்களுக்கு வழங்குவதையும் சேர்த்து மக்கள் தலையில் அதாவது மருந்தின் விலையில் அந்நிறுவனம் சுமத்தி விடுகின்றது. இந்த நேரத்தில் மருத்துவர்களிடம் நாம் அன்பாய் வேண்டிக் கொள்வது இது போன்ற தரக்குறைவான செயல்களை விட்டொழித்தாலே ஓரளவு விலை குறைய வாய்ப்புண்டு.
உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் ஒரு உண்மையை மருத்துவர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம். இந்த தினத்தை கொண்டாட மக்கள் தயாராக இல்லை என்பதே நிதர்சன உண்மை. அனைத்து மருத்துவர்களும் நியாயமான கட்டணம் பெற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. இதை மருத்துவர்கள் செய்யத் தயாரானால் ஒவ்வொரு நாளும் மருத்துவர்களை கொண்டாட மக்கள் தயாராக உள்ளனர் என்பதை உணர்ந்து மக்களுக்கு சிறிது சேவையாற்றவும் முன்வாருங்கள்.
கேட்டதின் படி நடக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக என்று பிரார்த்தித்தவனாக இந்த உரையை முடிக்கிறேன்.
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.