விதையில் ஒரு சாப்ட்வேர்
விதையில் ஒரு சாப்ட்வேர்
அந்தப் புத்தகத்தின் அடுத்த பாடத்தில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
கருவாலி மரத்தின் கொட்டை ஒன்று நிலத்தில் விழுகின்றது. காற்றடித்து, பூமியின் ஏதோ ஒரு பள்ளத்தில் உருண்டு போய் விழுந்து கிடக்கும் அந்தக் கொட்டையைக் கனமான பழுப்பு நிறத்தையுடைய அதன் ஓடு பாதுகாக்கின்றது. வசந்த காலம் வந்ததும் அந்தக் கொட்டையின் மேல் ஓட்டை உடைத்துக் கொண்டு முளை விட ஆரம்பிக்கின்றது.
ஒரு முட்டைக்குள் எப்படி அந்த முட்டையின் மரபு வழிக் காரணிகள் பல அடங்கியிருக்கின்றனவோ அதே போல அந்தக் கொட்டைக்குள் இருக்கும் அதன் பருப்பு, அதன் பாரம்பரியத்தைப் பற்றிய எல்லாச் செய்திகளும் அடங்கிய மென்பொருளாக, சாப்ட்வேராக அமைந்துள்ளது. அந்தப் பருப்பின் வழியாக அது உணவு உட்கொள்ள ஆரம்பிக்கின்றது. தனது வேர்களை மண்ணுக்குள் பதிக்கின்றது. இப்போது அங்கே ஒரு சிறு கன்றும் பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு கருவாலி மரமும் உருவாகி நிற்பதை நாம் பார்க்கிறோம்.
அந்தக் கருவாலி மரக் கொட்டைக்குள்ளிருந்து வெளி வரும் முளைக்குள் பல மில்லியன் மரபு வழிக் காரணிகள் அமைந்திருக்கின்றன. அவை இலை, கிளை, பழம், கொட்டை, கொட்டையின் ஓடு அனைத்தையும் உருவாக்குகின்றன. அது உருவாக்கும் ஒவ்வொன்றும் அந்தக் கொட்டை எந்தக் கருவாலி மரத்தினுடைய கொட்டையோ அதே மரத்தின் பாகங்களுக்கு அப்படியே ஒத்திருக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலகில் தோன்றிய முதல் கருவாலி மரத்தினுடைய கொட்டையும், பழமும், இலையும், கிளையும் எப்படி இருந்தனவோ அப்படியே தான் இத்தனை மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரும் இருக்கின்றன. கொஞ்சமும் மாறுபடவில்லை.
வழிகாட்டப்படும் உயிரணுக்கள்
எந்த உயிருள்ள படைப்பில் இருக்கின்ற உயிரணுக்களாக இருந்தாலும் அவை தம்மை அந்தப் படைப்பினுடைய தசையின் ஒரு கூறாகப் புனைந்து கொள்ள வேண்டிய அவசியமுடையவையாக இருக்கின்றன. அன்றாடம் உராய்வினாலும் தேய்மானத்தினாலும் சிதைந்து கொண்டிருக்கின்ற உடலின் மேல் தோலின் ஒரு கூறாகத் தம்மைத் தியாகம் செய்து கொள்ள வேண்டிய அவசியத்திற்கு உயிரணுக்கள் ஆளாகின்றன.
பற்களுக்குப் பளபளப்பைத் தரும் இனாமல் பூச்சாகவோ, கண்களுக்குத் தெளிவையும் பளபளப்பையும் தரும் திரவமாகவோ அல்லது மூக்கு, காது போன்ற அங்கங்களை உருவாக்குவதில் பங்கேற்க வேண்டிய அவசியம் உடையவையாகவோ இருக்கின்றன.
மேலும் ஒவ்வொரு செல்லும் தன்னை அந்தந்த வடிவங்களுக்கு ஏற்பப் புனைந்து கொள்வதுடன் அதனதன் முக்கியமான பணியை நிறைவேற்றுவதற்குரிய தனித் தன்மைகள் பெற்றுத் திகழ்வதும் அவசியமாகும்.
ஆனால் எந்தெந்த உயிரணு வலது கையாக மாறக் கூடியவை, எவை இடது கையாக மாறக் கூடியவை என்பதையெல்லாம் யூகித்து அறிவது சிரமம். ஆயினும் ஏதோ ஓர் உயிரணு இடது காதின் ஒரு கூறாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் மற்றொன்று வலது காதின் கூறாக மாறிக் கொண்டிருக்கின்றது.
இநத உயிரணுக்களின் செயல்பாட்டினை ஆராயும் போது பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களிடம், மிகச் சரியான ஒன்றை மிகச் சரியான தருணத்திலும் மிகச் சரியான இடத்திலும் செய்ய வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளதைப் போல் தெரிகின்றது.