35 ஆயிரம் கிமீ வழிதவறாத பறவைகள்

பயான் குறிப்புகள்: அறிவியல் உண்மைகள்

ஆர்க்டிக் பிரதேசத்தில் டெர்ன் என்றழைக்கப்படும் நீள மூக்குடைய கடற்பறவை ஒன்று உள்ளது. இந்தப் பறவை, கோடை காலத்தில் ஆர்க்டிக் பிரதேசத்திலும், குளிர் காலத்தில் அண்டார்டிகா பகுதிக்கும் செல்கின்றது. இதற்காக இந்தப் பறவை பறந்து செல்லும் தூரம் 22,000 மைல்கள் (35000 km)  ஆகும்.

(முத்தாரம் 01.07.1984, பக்கம் 7)

பறவைகளுக்கு, அவை தமது இருப்பிடங்களை விட்டு எவ்வளவு தூரத்துக்குப் பறந்து சென்றாலும் மீண்டும் அவற்றின் இருப்பிடங்களுக்கே திரும்பி வந்து விடுகின்ற இயல்புணர்ச்சி உண்டு. நம் வீட்டு வாசலில் கூடு கட்டி வாழும் தொண்டைப் பகுதி புடைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு வகைச் சிட்டுக்குருவி இலையுதிர் காலத்தில் தென்திசை நோக்கி புறப்பட்டுச் செல்கின்றது. அவை எத்தனை ஆயிரம் மைல்கள் தூரம் சென்றாலும் அடுத்து வரும் வசந்த காலத்தில் தமது கூடுகளுக்குத் திரும்பி விடுகின்றன.

அதே போன்று அமெரிக்க நாட்டுப் பறவைகளில் பெரும்பாலானவை செப்டம்பர் மாதத்தில் தென் திசை நோக்கி, கூட்டம் கூட்டமாகப் பறந்து போய் விடுகின்றன. கடல் கடந்து, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவை பறந்து போய் விடுகின்றன. ஆயினும் அவை தமது இருப்பிடங்களுக்குத் திரும்பி வரும் போது வழியைத் தவற விடுவதில்லை. திரும்பி வருவதற்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.

செய்தி கொண்டு செல்லும் புறாக்கள் அவற்றுக்குப் பரிச்சயமில்லாத புதிய சப்தங்களைக் கேட்டு மிரண்டு தடுமாறிப் போனாலும், பயம் தெளிந்ததும் தமது இருப்பிடங்களை நோக்கி மறக்காமல் வந்து விடுகின்றன.

காற்று வீசும் போது மரங்களிலும், கூடுகளிலும் பட்டு வரும் வாசனைகளை வைத்துக் கொண்டு தனது கூட்டுக்குத் திரும்பி விடும் தேனீயானது, காற்று வீசாமல் சலனமற்று இருக்கும் போதும் தனது கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்து விடுகின்றது.

எவ்வளவு நெடுந்தூரம் சென்றாலும் தனது இருப்பிடத்திற்குத் திரும்பி விடும் இந்த இயல்புணர்ச்சி மனிதனுக்குள் மிகப் பலவீனமாகவே காணப்படுகின்றது. ஆயினும் அவன் திசையறி கருவி போன்ற கருவிகளால் தனது குறைவான ஆற்றலை முழுமைப்படுத்திக் கொள்கிறான். பறவைகள், பிராணிகளுக்கு இயற்கையாக அமைந்திருக்கும் அந்த இயல்புணர்ச்சியின் தேவையை மனிதன் தனது பகுத்தறிவின் மூலம் ஈடு செய்து கொள்கின்றான்.

 

வேடந்தாங்கல்

இங்கு உள்ள வேடந்தாங்கலுக்கு சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா, இலங்கை, கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள்  ஒவ்வொரு வருடமும் வந்து செல்லும் . இதில், நத்தை குத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல் நாரை, பாம்புத்தாரா, மண்வெட்டி வாயன், சிறிய நீர்காகம், கரண்டி வாயன், தட்டவாயன், வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், வக்கா ஆகியவை முக்கியமானதாகும்.

இந்த (2010) ஆண்டு வேடந்தாங்கல் ஏரிக்கு 27 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 2 ஆயிரம் அதிகமாகும். இங்குள்ள மரங்களில் கூடுகள் அமைத்து சந்தோஷமாக இருந்த பறவைகளுக்கு சோதனையாக கோடை காலம் வந்தது. ஏப்ரல் மாதம் முதல் ஏரியில் நீர் குறையத் தொடங்கியது.

இதனால், வெளிநாட்டு பறவைகள் தங்களது புதிய குடும்பத்துடன் தங்களது சொந்த நாடுகளுக்கு பறக்கத் தொடங்கின. இதுவரை வேட‌‌‌ந்தா‌ங்கலு‌க்கு வ‌ந்‌திரு‌ந்த 50 ‌விழு‌க்காடு பறவைகள் சொ‌ந்த நாடுகளு‌க்கு ‌திரு‌ம்‌பி‌வி‌ட்டன. மீதம் உள்ள பறவைகள் ஏரியில் உள்ள மரங்களிலும், மரங்களுக்கு அடியில் நிழலிலும், தண்ணீரில் நீந்தியபடியும் சுற்றித் திரிகின்றன. இவையும் சில நாட்களில் சொந்த ஊருக்கு திரும்பும்.