வெற்றியாளர்கள் யார் – 4

பயான் குறிப்புகள்: தொடர் உரைகள்

வெற்றியாளர்களின் இன்னும் பல பண்புகளை இந்த வார உரையில் காண்போம்.

 

நல்லறங்கள் செய்வோர்

முன்னரே கூறியபடி, நல்லறங்கள் இல்லாமல் மறுமை வெற்றி இல்லை என்பதை திருக்குர்ஆன் உறுதியாக அறிவுறுத்துகிறது.

 

فَاَمَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَعَسٰٓى اَنْ يَّكُوْنَ مِنَ الْمُفْلِحِيْنَ‏

திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோரே வெற்றி பெற்றோர் ஆவர்.

(அல்குர்ஆன் ; 28;67)

 

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۚ‏

நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

(அல்குர்ஆன் ; 22;77)

 பின்தொடர்வோம்

குழந்தைகள் பெற்றோர்களையும் இளைஞர்கள் சினிமா துறையினரையும் என்று ஒவ்வொருவருமே தனக்கு விருப்பத்திற்குரியவர்களை முன்மாதிரியாக எடுக்கின்றனர். அவர்களுடைய ஆடைகளையும் ஹேர் ஸ்டைலையும் அப்படியே ரோல்மாடலாக எடுத்துக்கொண்டிருப்பதை காண்கின்றோம். ஆனால் அவர்களிடத்தில் சரியான ஒழுக்கங்களோ பண்புகளோ இருப்பதில்லை. ஒருவரை நாம் பின்பற்றுவதாக இருந்தால் அவர்களிடத்தில் நல்ல விஷயங்கள் இருக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது.

 

وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன்: 9:100)

எதிரிக்கும் நன்மை செய்வோம்

நாம் செய்யக்கூடிய சில காரியங்கள் பிறருக்கு தவறாக தோன்றலாம். நம்மைப் பற்றி இவ்வாறு நினைப்பவர்களிடத்தில் வேண்டுமென்றே சிலர் மேலும் பகைமையை ஏற்படுத்துவதற்காக அநாகரிகமான முறையில் நடக்கின்றனர். இதற்கு மாற்றமாக நாம் அவருக்கு உதவிகள் செய்யும் போது நம்மைப் பற்றி அவர் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் மாறுவதற்கும் மறைவதற்கும் இது ஓர் வாய்ப்பாக அமையும். இது எல்லா மக்களிடத்திலும் அமைவதில்லை. தன்னிடத்தில் நல்ல முறையில் நடப்பவர்களுக்கே உதவிகள் செய்யாத மக்களுக்கு மத்தியில் தன்னை பகைப்போருக்கும் நல்லறங்கள் செய்யுங்கள் என்று இஸ்லாம் மனித குலத்திற்கு கட்டளையிட்டு மனிதர்களுக்கு ஓர் கலங்கரை விளக்காக திகழ்கின்றது.

 

وَلَا تَسْتَوِى الْحَسَنَةُ وَ لَا السَّيِّئَةُ ؕ اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ فَاِذَا الَّذِىْ بَيْنَكَ وَبَيْنَهٗ عَدَاوَةٌ كَاَنَّهٗ وَلِىٌّ حَمِيْمٌ‏

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.

அல்(அல்குர்ஆன்:)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட “நஜ்ரான்’ நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களுடைய சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, “முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளை யிடுங்கள்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.

(புகாரி: 5809)

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்களிடம், “(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது “அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். “கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக்கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, “உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடு வதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்லி, பிறகு, “முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார். உடனே, “(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)” என்று சொன்னேன்.

(புகாரி: 3231)

தன் விருப்பத்திற்குரிய மனைவியின் மீது அவதூறு கூறி தனக்கும் தன் மனைவிக்கும் மத்தயில் பிரிவினையை ஏற்படுத்தி ஊர் மக்களையெல்லாம் தன் மனைவியை கேவலமாக பார்க்க வைத்த அப்துல்லாஹ் இப்னு உபை என்ற நயவஞ்சகனுக்கு நபியவர்கள் தன் சட்டையை கழற்றி கொடுத்து தானே முன் நின்று அவனுக்கு தொழுகை நடத்திய நபிகளாரின் பண்பு எதிரியிடத்தில் எவ்வளவு நல்ல

முறையில் நடக்க வேண்டும் என்ற உன்னத பண்பை நமக்கு கற்றுத்தகிறார்கள்.

படைப்பினங்களில் சிறந்தவர்கள்

 

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ اُولٰٓٮِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ؕ‏

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.

அல்(அல்குர்ஆன்: 98:7)

நல்லறங்கள் செய்பவர்களை சிறப்பித்து அல்லாஹ் படைப்பினங்களிலேயே சிறந்தவர்கள் என்று கூறுகின்றான்.

இறைவனின் அன்பை பெறும் வழி

நல்லறங்கள் செய்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்

பாசத்திற்கு கட்டுப்படாத மனிதர்கள் இல்லை எனலாம். தன்னை அனைவரும் நேசிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். மற்றவர்களிடத்தில் இருக்கின்ற சிறப்புப் பண்புகளே நம்மை அவர்களை நேசிக்க வைக்கின்றது .மனிதர்களை விட நேசிப்பதற்கு தகுதியானவன் இறைவனே! அந்த இறைவன் நம்மை நேசிக்க வேண்டும் என்றால் அதற்கு நம்மிடத்தில் நல்லறங்கள் இருக்கவேண்டும்.

 

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا‏

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான்.

அல்(அல்குர்ஆன்:)

 

وَاَنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا تُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ ۖ  ۛۚ وَاَحْسِنُوْا  ۛۚ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன்:)

 

الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌ۚ‏

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன்:)

தீமைகளை அழிக்கும் நல்லறங்கள்

 

وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَـفًا مِّنَ الَّيْلِ‌ ؕ اِنَّ الْحَسَنٰتِ يُذْهِبْنَ السَّيِّاٰتِ ‌ؕ ذٰ لِكَ ذِكْرٰى لِلذّٰكِرِيْنَ ‌ۚ‏

பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.

 

وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏

பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நன்மை செய்தோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

(அல்குர்ஆன்: 11:114),115

 

اُتْلُ مَاۤ اُوْحِىَ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ وَاَقِمِ الصَّلٰوةَ ‌ؕ اِنَّ الصَّلٰوةَ تَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ؕ وَلَذِكْرُ اللّٰهِ اَكْبَرُ ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تَصْنَعُوْنَ‏

அறிந்தோ அறியாமலோ ஒவ்வொரு மனிதனும் தீமைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். இத்தீமைகளுக்கு பரிகாரமாக நல்லறங்கள் அமைகின்றன. அது வணக்க வழிபாடுகளாகவோ அல்லது பிறருக்கு செய்யக்கூடிய உதவியாகவோ அல்லது பொது நல தொண்டாகவோ இருப்பினும் சரியே ! (முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.

(அல்குர்ஆன்:)

பாவங்களிலிருந்து மன்னிப்பு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் ஒரு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது பாதையில் முட்கிளையொன்றைக் கண்(டு அதை எடுத்து அப்புறப்படுத்திவிட்)டார். அ(தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த)து, அவரைத் (தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழவிடாமல்) தாமதப் படுத்திவிட்டது. அவரது இந்த நற்செயலை அல்லாஹ் அங்கீகரித்து அவருக்கு (அவர் செய்த பாவங்களிலிருந்து) மன்னிப்பு வழங்கினான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

(புகாரி: 652)

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“ஒரு மனிதர் ஒரு பாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையானத் தாகம் ஏற்பட்டது. அவர் (வழியில்) ஒரு கிணற்றைக் கண்டார். உடனே அதில் இறங்கித் தண்ணீர் குடித்தார். பிறகு (கிணற்றைவிட்டு) அவர் வெளியே வந்தார். அப்போது நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) நாக்கைத் தொங்கவிட்டபடி ஈரமண்ணை நக்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அந்த மனிதர் (தம் மனத்திற்குள்) “எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்’ என்று சொல்லிக்கொண்டார். உடனே (மீண்டும்) அக்கிணற்றில் இறங்கித் (தண்ணீரைத் தோலால் ஆன) தனது காலுறையில் நிரப்பிக்கொண்டு அதைத் தமது வாயால் கவ்வியபடி (மேலேறி வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் இதற்கு நன்றியாக அவரை (அவருடைய பாவங்களை) மன்னித்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைச் செவியேற்ற) மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்” என்று சொன்னார்கள்.

(புகாரி: 6009)

 
இன்னும் ஏராளமான பண்புகளை வெற்றியாளர்களின் பண்புகளாக இஸ்லாத்தை சொல்லித் தருகிறது. வெற்றியாளர்களின் மற்ற பண்புகளை அடுத்தடுத்த உரைகளில் காண்போம், இன்ஷா அல்லாஹ்!