தரமான கல்வி ஓர் இஸ்லாமிய பார்வை
முன்னுரை
இஸ்லாத்தின் பார்வையில், உயர்வு தாழ்வு இல்லை. எனினும், கல்வி கற்றோர் உயர்ந்தோர் என குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது.
(நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக்குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”
உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்லாஹ்விடம் உயர்ந்த படித்தரத்தை பெற்றுத்தரும் கல்வியை போதிக்கும் கல்விக்கூடங்கள் தரமான பள்ளிக்கூடங்களே ! அறிவை வளர்க்கும் இப்படிப்பட்ட தரமான பள்ளிக்கூடங்களில், அறிவை அடகு வைக்கும் விதமான வணக்க வழிபாட்டு முறைகள், அறிவிற்கு இடமளிக்காமல் வலுக்கட்டயமாக பிஞ்சு உள்ளங்களில் திணிக்கப்படும் வணக்க வழிபாட்டு முறைகள், மூட நம்பிக்கையை வளர்க்கும் வகுப்புகள், சமூகத்தில் குரோதத்தை வளர்க்கும் விதமான பாடத்திட்டங்கள் என கேடு விளைவிக்கும் அம்சங்களை எந்த பள்ளி பெற்றுயிருந்தாலும் அது தரமான பள்ளிக்கூடமாக ஆகாது.
மாறாக கல்வி என்ற பெயரால் தங்களுடைய சரக்குகளை விற்கும் தெருவோர அங்காடிகளை போன்றது தான் இப்பள்ளிக்கூடங்கள். எனவே, பள்ளிக்கூடங்களை தேர்ந்தெடுக்கும் போது அறிவை வளர்க்கும் கூடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அறிவிற்கு பொருத்தமில்லாத காரியங்களை போதிக்கும் மடமைகூடங்களை புறக்கணிக்க வேண்டும்.
ஒழுக்கம்
ஒழுக்கமில்லாத எந்த கல்வியும் அது கல்வியாகாது. நாகரீகம் அதள பாதாளத்தில் இருக்கக்கூடிய இன்றைய காலகட்டத்திலும் கூட, பெரும்பாலான நிறுவனங்களில் கல்வியுடன், ஒழுக்கம் சார்ந்த, கூட்டு முயற்சி (பங்ஹம் ரர்ழ்ந்), இன்முகத்துடன் பிறருடன் பழகுதல் (ஒய்ற்ங்ழ்ல்ங்ழ்ள்ர்ய்ஹப் நந்ண்ப்ப்ள்), பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்டல் ((கண்ள்ற்ங்ய்ண்ய்ஞ் நந்ண்ப்ப்ள்) போன்ற விஷயங்களை வேலைக்கு அமர்த்தும் போது கவனத்தில் கொள்கின்றனர்.
ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகும் கூட, பதவி மற்றும் சம்பள உயர்வு பெறுவதற்கும், ஒருவரின் வேலை தரத்தை எடைபோடுவதற்கும், இது போன்ற ஒழுக்க ரீதியான விஷயங்களை நிறுவனங்கள் கவனத்தில் கொள்கின்றனர். எனவே, ஒழுக்கத்திற்கு முக்கியம் தரக்கூடிய கல்விக்கூடத்தை தேர்ந்தெடுப்பது தான் குழந்தைகளின் எதிர்காலத்தை வளப்படுத்த உதவும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தார்கள். அப்போது (அவர்கள் “அங்கசுத்தி’ செய்வதற்காக) அவர்களுக்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் (திரும்பிவந்ததும்), “இதை வைத்தவர் யார்?” என்று கேட்டார்கள். (என்னைப் பற்றித்) தெரிவிக்கப்பட்டது. உடனே “இறைவா! இவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பாயாக!” என்று (எனக்காக) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
அறி : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : (புகாரி: 143)
சிந்தனையை தூண்டும் கல்விக்கூடங்கள்
வெறும் பாடங்களை படிக்கும் கிளிப்பிள்ளைகளை போல குழந்தைகளை உருவாக்காமல், அவர்களுடைய சிந்தனைகளை தூண்டும் விதமாக வகுப்புகளையும், அதுபோன்ற அம்சங்களையும் கொண்ட பள்ளிக்கூடங்களில் நம்முடைய குழந்தைகளை சேர்க்க வேண்டும். கல்வி மிகவும் விரிவடைந்த இக்கால கட்டத்தில், தாங்கள் படித்ததை மட்டும் வைத்து மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்து கொள்ள போவதில்லை.
மாறாக, படித்தது மட்டுமின்றி தினந்தோறும் பல புதிய விஷயங்களை கற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே கிணற்று தவளைகளை போல் இல்லாமல், சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் தூண்டக்கூடிய கல்விக்கூடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியாதாவது:
“இறைநம்பிக்கையாளரின் நிலை பசுமையான ஒரு மரத்தைப் போன்றதாகும். அதன் இலை உதிர்வதில்லை; (அதன் இலைகள் ஒன்றோடொன்று) உராய்வதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்போது மக்கள், “அது இன்ன மரம்; அது இன்ன மரம்” என்று கூறினர். அது பேரீச்சமரம்தான் என்று நான் கூற நினைத்தேன். நான் இளவயதுக்காரனாக இருந்ததால் வெட்கப்பட்(டுக் கொண்டு சொல்லாமல் இருந்து விட்)டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அது பேரீச்சமரம்” என்று சொன்னார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதைப் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான் அது குறித்து என் தந்தை உமர் (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள், “நீ அதைச் சொல்லியிருந்தால் அது எனக்கு இன்ன இன்னவற்றை விட உகப்பானதாய் இருந்திருக்கும்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
நூல் : (புகாரி: 6122)
இது போன்று மாணவர்களின் புத்தியை கூர்மையாக்கும் கேள்விகளை கேட்டு அவர்கள் பதிலளிக்கும் வகையில் உருவாக்க வேண்டும்.
மொழிகளுக்கு முக்கியத்துவம்
உலக மயமாக்கல் அசுர வேகத்தில் இருக்கும் இக்கால கட்டத்தில், தான் பெற்ற படிப்புடன், மொழிகளை கற்று வைத்திருப்பது நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம். மொழிகளை அல்லாஹ்வின் அத்தாட்சிகள் என அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான். வெறும் ஆங்கிலம் மட்டுமின்றி, பிற மொழிகளுக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய பள்ளிக்கூடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّلْعٰلِمِيْنَ
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும், உங்களது மொழிகளும், நிறங்களும் வேறு பட்டிருப்பதும் அவனது அத்தாட்சிகளில் உள்ளது. அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
முன்மாதிரி ஆசியர்கள்
ஒழுக்கமுள்ள சமுதாயத்ததை உருவாக்க, முன்மாதிரியான ஆசிரியர்களால் தான் இயலும். சமூகத்தில் ஒழுகத்துடன் பணியாற்றும் ஆசிரியர்களை கொண்ட பள்ளிகளை தேர்ந்தெடுப்பது, நம்முடைய குழந்தைகளை ஒழுக்கத்துடன் கல்வி கற்க உதவுவது மட்டுமின்றி, குழந்தைகளின் கர்ப்பிற்கும் பாதுகாப்பாக அமையும் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகக் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி (ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்தி விட்டு, தம் வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்களின் வலப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் இடப் பக்கத்தில் ஒரு கிராம வாசியும் இருந்தனர்.
ஆகவே, உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராம வாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, “உங்களிடம் இருப்பதை அபூபக்ருக்கு கொடுத்து விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது வலப் பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்து விட்டு, “(முதலில்) வலப் பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப் பக்க மிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்” என்று சொன்னார்கள்.
அறி : அனஸ் (ரலி),
நூல் : (புகாரி: 2352)
நீதி நேர்மை போதிக்கும் ஆசிரியர்கள் தாங்களும் நேர்மையாகவும் பிரச்சனைகள் ஏற்படும் போது நீதத்துடன் நடந்து பள்ளிக்குழந்தைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும்.
வெறும் ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை தேர்ந்தெடுத்து அதில் நம்முடைய குழந்தைகளை சேர்த்து விடுவதுடன் பெற்றோர்களின் கடமை முடிவதில்லை. மாறாக நம்முடைய குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்கு அவ்வப்போது குழந்தைகளுடன் அவர்களுடைய படிப்பை பற்றி கலந்துரையாடுவதும், அவர்களின் ஆசிரியர்களோடு கேட்டு தெரிந்து கொள்வதும் அவசியம்.
இது மட்டுமின்றி, குழந்தைகள் மார்க்க போதனைகளை பெற முயற்சி எடுக்க வேண்டும். மார்க்கமின்றி, வெறும் உலக கல்வி மட்டும் எந்த பயனும் தராது என்பது நிதர்சன உண்மை. இதை அன்றாட நிகழ்வுகள் உணர்த்தி கொண்டே வருகின்றன. அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகள் பரவியுள்ளதால், அக்கிளைகளின் சார்பாக தினந்தோறும் நடைபெறும் மார்க்க வகுப்புகளிலும், அவ்வப்போது மாணவர்களுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சிகள், மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் வருடாந்திர கோடைக்கால பயிற்சி வகுப்புகள் போன்றவற்றில் நம்முடைய குழந்தைகளை கலந்துக்கொள்ள செய்ய வேண்டும்.
நல்ல சமுதாயம் அமைய பெற்றோர்களே சிந்திப்பீர்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
இந்த இறைவசனத்தை நெஞ்சத்தில் தாங்கி, நமது எதிர்கால சந்ததியினரை, தரமான பள்ளிகளில் சேர்த்து, இடையிடையே மார்க்கக் கல்வியையும் போதித்து, நல்லொழுக்கத்தையும் கொடுத்து, முஸ்லிமாக வாழ்ந்து, முஸ்லிமாக மரணிக்கிற நல்லடியார்களாக, அந்த ஏக இறைவன் ஆக்கி அருள்புரிவானாக!