பயணிகளின் கவனத்திற்கு!
மதிப்பிற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இஸ்லாம் ஒரு நிறைவான, முழுமையான மார்க்கம். இது ஏதோ பூமிக்கு கீழே உள்ளதைப்பற்றியும், வானத்திற்கு மேலே உள்ளதைப்பற்றியும் மட்டுமே பேசக் கூடிய மார்க்கம் என்று இஸ்லாமியர்களில் பலர் தவறாக நினைக்கின்றார்கள். மாறாக நமது வாழ்க்கை முறையைப்பற்றி வேறெந்த மார்க்கமோ, மதமோ, சொல்லாத அளவிற்கு முழுமையான முறையில் கற்றுத்தரக்கூடிய மார்க்கம்.
இஸ்லாம் இதைப்பற்றி பேசவில்லை, இந்த விஷயத்திற்கு இஸ்லாத்தில் தீர்வு இல்லை என்று எவரும் வாய் திறக்க முடியாத வகையில் எல்லாவற்றையும் விரிவாக பேசுகிறது. இப்படி ஒரு மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக பெற்றதற்கே நாம் இறைவனுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மனிதர்களின் வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கின்ற பயணம் பற்றியும் இஸ்லாமிய மார்க்கத்தில் வழிகாட்டுதல் இருக்கின்றது. பயணம் மேற்கொள்ளும்போது யாவரும் பேண வேண்டிய ஒழுக்கங்களை கற்றுத் தருகின்றது.
அதில் நாம் மேற்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து, அதை நீக்குவதற்காக இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் சலுகைகளையும் வழங்குகின்றது.
பயணிகள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்களை இங்கே தருகிறோம். அவைகளை அறிவதின் மூலம் வீணான சிரமங்களை தவிர்த்து, பயணத்தை நன்மையானதாக மாற்றலாம்.
பயணத்தில் இருப்பவர்கள் மார்க்க விஷயங்களில் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு காரணம், பயணம் செய்வது என்பது வேதனை தரக்கூடிய விஷயம் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இஸ்லாம் கூறும் இந்தக் கருத்தினை யாரும் யோசித்து ஏற்க வேண்டியதில்லை. பயணம் செய்யும் அனைவரும் உணர்ந்தே வைத்திருக்கின்றோம்.
ஏனெனில் நாம் வீட்டில் சுகமாக உருண்டு, புரண்டு உறங்குவதைப்போல பயணத்தின்போது உறங்க முடியாது. அதிலும் இந்த காலத்தில் இரவு பகல் பாராமல் ஏதாவது சினிமாவையோ பாடலையோ பேருந்தில் ஓடவிடுகிறார்கள்.
இந்த லட்சணத்தில் தூக்கம் எங்கிருந்து வரும்? அதிலும் இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணம் செய்ய நேர்ந்தால்… குடிகாரனிடமிருந்து வரும் மதுவின் வாடை மூக்கை துளைக்க… மற்றவர்கள் நம்மை இடிக்க… அதற்கிடையில் ஒருவர் நமது காலை அவரது பூட்ஸ் காலால் மிதிக்க… கூட்ட நெரிசலில் இடம் மாறி இறங்கி விட… இதுபோன்று நாம் பயணத்தின்போது படும் வேதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்…
பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரது உணவையும், பானத்தையும், உறக்கத்தையும் தடுத்து விடுகிறது. எனவே ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும்.
அறி : அபூஹுரைரா (ரலி)
நூல் : (புகாரி: 1804)
பயணம் என்பது எந்தளவிற்கு வேதனையானது என்பதை நபிகளாரின் மேற்கண்ட பொன்மொழியை சிந்தித்துப் பார்த்தால் நன்கு விளங்கும். எனவே தான் குறிப்பிட்ட காரியம் முடிந்தவுடன் தாமதிக்காமல் திரும்ப வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.
இந்த அளவிற்கு வேதனை மிகுந்த பயணத்தை நாம் தனியே செய்ய நேர்ந்தால் நம் கதி என்னாவது? எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவு நேரங்களில் தனியாக பயணம் செய்யக்கூடாது என்று நமக்கு அறிவுறுத்துகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனிமையில் (பயணம் செய்வதில்) உள்ள, நான் அறிந்திருக்கின்ற சிரமங்களை மக்கள் அறிந்திருந்தால் எந்தப் பயணியும் இரவில் தனியாகப் பயணம் செய்யமாட்டார்.
அறி : இப்னு உமர் (ரலி)
நூல் : (புகாரி: 2998)
அவசியமான நேரத்தில் இரவில் தனியாக பயணம் செய்வதில் தவறில்லை. மேலும் நபி (ஸல்) அவர்கள் தனியாக பயணம் செய்வதால் சிரமம் ஏற்படும் என்று கூறினார்களேத் தவிர மார்க்கப்படி குற்றமான காரியமாக சொல்லவில்லை. நபிகளாரின் கட்டளைப்படி ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள் உளவு பார்ப்பதற்காக தனியாக பயணம் செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அகழ்ப் போரின்போது (இரவில் தனியாகச் சென்று எதிரிகளை வேவு பார்ப்பதற்கு முன்வருவது யார்?’ என்று மக்களை) அழைத்தார்கள். ஸுபைர் (பின் அவ்வாம்) அவர்கள் முன் வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் அவர்களே முன்வந்தார்கள். மீண்டும் மக்களை அழைத்தார்கள். (மீண்டும்) ஸுபைர் அவர்களே முன் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தியேகமான) உதவியாளர் ஒருவர் உண்டு; எனது (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைர் ஆவார்…” என்று கூறினார்கள்.
அறி : ஜாபிர் (ரலி)
நூல் : (புகாரி: 2997)
அகழ்ப் போரின்போது நானும் உமர் பின் அபீ சலமா (ரலி) அவர்களும் (நபி -ஸல்- அவர்களின் வீட்டுப்) பெண்களிடையே (பாதுகாப்புப்) பணியில் அமர்த்தப் பட்டோம். நான் அப்போது (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்கள் தன் குதிரையின் மீது (சவாரி செய்தபடி யூதர்களான) பனூ குறைழா குலத்தாரை நோக்கி இரண்டு …அல்லது மூன்று… முறை போய் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். நான் (இருப்பிடத்திற்குத்) திரும்பி வந்த போது, “என் தந்தையே! தாங்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டுமிருப்பதை நான் பார்த்தேன்…” என்று சொன்னேன்.
அவர்கள், “என்னை நீ பார்த்தாயா? என் அருமை மகனே!” என்று கேட்டார்கள். நான், “ஆம் (பார்த்தேன்)” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “பனூ குறைழாவிடம் சென்று (உளவறிந்து) என்னிடம் அவர்களுடைய செய்தியைக் கொண்டு வருபவர் யார்?” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் (அந்தப் பணியைச் செய்ய ஒப்புக் கொண்டு) சென்றேன். நான் (அவர்களுடைய செய்தியை உளவறிந்து கொண்டு) திரும்பி வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னை கௌரவிக்கும் வகையில்) தம் தாய் தந்தையர் இருவரையும் சேர்த்து, “என் தந்தையும் என் தாயும் உனக்கு அர்ப்பணமாகட்டும் எனக் கூறினார்கள்…” என்று சொன்னார்கள்.
அறி : அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல் : (புகாரி: 3720)
பெண்கள் சிறிய பயணமாக இருந்தாலும் சரி, தொலைதூர பயணம் மேற்கொள்வதாக இருந்தாலும் சரி, அவர்கள் தனியே செல்லக்கூடாது என்று இஸ்லாம் அவர்களுக்கு கட்டளையிடுகின்றது. தனது கணவனுடனோ அல்லது திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட (அண்ணன், தம்பி, மகன் போன்ற) ஆண் உறவினர்களுடனோ தான் பயணம் செய்ய வேண்டும். இதுவே அவர்களுக்கு பாதுகாப்பான பயணமாக அமையும்.
ஒரு குறிப்பிட்ட தூரத்தை வரையறுக்காமல் பொதுவாக பெண் எவ்வளவு தூரமானாலும் தனியே பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று ஹதீஸ் கூறுகின்றது. காலம் குறிக்கப்படாத இந்த ஹதீஸே சரியானது.
”மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மணமுடிக்கத்தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும் போதுதான் ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறி : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : (புகாரி: 1862)
ஆனால் பெண்கள் இஸ்லாம் கூறும் இந்த ஒழுக்கத்தினை பேணுவதாக தெரியவில்லை. கொழுந்தன் போன்ற மஹ்ரம் அல்லாத உறவினர்களுடன் சர்வ சாதாரணமாய் பயணம் மேற்கொள்கின்றார்கள். இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சிந்திப்பதில்லை.
அதேபோல் ஒரு நாள் பயணதூரம் பயணம் செல்வதாக இருந்தால்தான் இந்த ஒழுங்கே தவிர, அதற்கு குறைந்த தூரம் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் பெண்களுக்கு இந்த நிபந்தனை இல்லை. தனியாகவோ மற்ற பெண்களின் துணையுடனோ செல்லலாம்.
நபி (ஸல்) அவர்கள் அதிகமாக வியாழக்கிழமை பயணம் செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திற்குப் புறப்பட்டால் பெரும்பாலும் வியாழக்கிழமையன்றுதான் புறப்படுவார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)
(நூல்: (புகாரி: 2949))
…
மேலும் வியாழக்கிழமை பயணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு செய்தி தப்ரானியில் இடம் பெற்றுள்ளது. என்னுடைய சமுதாயம் அருள்வளம் வழங்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதுதான் வியாழக்கிழமை என்று தப்ரானியில் இடம் பெற்றசெய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை.
(நூல்:அல்முஃஜமுல் அவ்ஸத்-4829)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மூன்று துஆக்கள் சந்தேகமின்றி பதிலளிக்கப்படும். 1. பெற்றோருக்காக பிள்ளைகள் செய்யும் துஆ 2. பயணியின் துஆ. 3. அநீதி இழைக்கப் பட்டவனின் பிரார்த்தனை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: (அபூதாவூத்: 1536) (1313)
இந்த ஹதீஸை ஆதாரமாக கொண்டு நம்மில் பலர் பயணம் செய்பவர்களிடத்திலும், பயணத்தில் இருப்பவர்களிடத்திலும் எனக்காக துஆ செய்யுங்கள். ஏனெனில் நீங்கள் பயணி. உங்களுடைய துஆவை அல்லாஹ் நிச்சயம் ஏற்றுக்கொள்வான் என்று பிறரிடத்தில் கூறுவதை காணலாம்.
எனினும் இந்த செய்தி பலவீனமானதாகும். ஏனெனில் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஜஃபர் என்பவர் யாரென்று அறியப்படாதவராவார். ஹதீஸ்கலையின் விதிப்படி யாரென்று அறியப்படாத ஒருவர் இடம்பெற்றால் அவரது செய்தி நிராகரிக்கப்படும். எனவே இந்த செய்தி ஏற்கப்படாது. இருப்பினும் பயணிகளின் துஆவுக்கு இறைவனின் தனிகவனம் இருக்கின்றது என்பதை பின் வரும் செய்தியிலிருந்து அறியலாம்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறை நம்பிக்கையாளர் களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்.
“தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன்”(அல்குர்ஆன்: 23:51)
“நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்கள் என்றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்”. (அல்குர்ஆன்: 2:172)
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள்:
“அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற்கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி என் இறைவா!, என் இறைவா!’ என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.
நூல்: (முஸ்லிம்: 1844)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த செய்தியில் யாருடைய துஆ ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை விவரிக்கின்றார்கள். அதை சாதாரணமாக ஹராமில் உழல்பவனின் துஆ ஏற்கப்படாது என்று கூறினாலே போதுமானது. ஆனால் ஒரு பயணியின் துஆவைக் குறிப்பிட்டு அவன் ஹராமில் ஈடுபடுகிறான் என்பதினால் அவனது பிரார்த்தனை நிராகரிக்கப்படும் என்று கூறுவதிலிருந்து பயணிகளின் துஆ, இறைவனின் நெருக்கத்தை பெறுகிற, இறைக் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது என்பதை சந்தேகமற அறியலாம்.
அப்படிப்பட்ட துஆக்கூட ஹராமில் ஈடுபடுவதினால் நிராகரிக்கப்பட்டதாக ஆகிவிடுகின்றது என்று கவலையோடு தெரிவிக்கின்றார்கள். எனவே பயணத்தின்போது செய்யப்படுகின்ற துஆக்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதினால் அதிகமதிகம் பிரார்த்தனை புரிய வேண்டும்.
பயணத்தில் இருப்பவர்களுக்கு இறைவன் பலவிதமான சலுகைகளை வழங்குகின்றான். இந்த சலுகைகளை அறிந்து கொண்டால் நமது இறைவன் எந்தளவிற்கு அருளாளன், மனிதர்களின் உணர்வை, அவனது சக்தியை புரிந்து அதற்கேற்ப கட்டளை பிறப்பிப்பவன் என்பதை உணரலாம். மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்தான் என்பதை இந்த சலுகைகள் பறைசாற்றுகின்றன.
இறைவனுக்கு மிகவும் விருப்பமான, இஸ்லாத்தின் தூண் என்று போற்றப்படும் வணக்கமான தொழுகையில் கூட நமக்காக இறைவன் சலுகை வழங்கியிருக்கின்றான். இதை பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகின்றன.
யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று மைல்’ அல்லது மூன்று ஃபர்ஸக்’ தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்” என்று பதிலளித்தார்கள்.
நூல்: (முஸ்லிம்: 1230)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை சுருக்கித் தொழுவதற்கான அளவாக மூன்று மைல் என குறிப்பிட்டார்களா? அல்லது மூன்று பர்ஸக் என்று குறிப்பிட்டார்களா? என அறிவிப்பாளர் சந்தேகம் கொள்கிறார். ஒரு பேணுதலுக்காக அதிக அளவைக் கொண்ட மூன்று பர்ஸக் என்பதையே எடுத்துக் கொள்வோம். மூன்று பர்ஸக் என்றால் ஏறத்தாழ 25 கிலோ மீட்டராகும். எனவே 25 கிலோ மீட்டர் தொலைவு ஒருவன் பயணம் செய்தால் அவன் தொழுகையை சுருக்கித்தொழுவதற்கும், இரு தொழுகைகளையும் ஒரே நேரத்தில் (சுருக்கி மற்றும்) சேர்த்து தொழுவதற்கும் சலுகையை பெறுகின்றான். அவ்வாறு சுருக்கி தொழும்போது லுஹர், அஸர், இஷா ஆகிய தொழுகைகளை 4 ரக்அத்களுக்கு பதிலாக 2 ரக்அத்களாக சுருக்கி தொழ வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது இரண்டு ரக்அத்களாகக் கடமையாக்கினான். பின்னர் சொந்த ஊரில் தொழும் (லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகிய) தொழுகைகளை (நான்கு ரக்அத்களாக) முழுமைப் படுத்தினான்; பயணத் தொழுகை முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறு (இரண்டு ரக்அத்தாகவே) நீடித்தது.
நூல்: (முஸ்லிம்: 1220)
ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக (என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நான் பயணத்தில் (முன் பின் சுன்னத்களான) கூடுதல் தொழுகைகள் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்கள் (இந்தக்) கூடுதலான தொழுகைகள் தொழுவதை நான் பார்த்ததேயில்லை.
நான் (பயணத்தில்) உபரியான தொழுகைக ளைத் தொழுபவனாயிருந்தால் (கடமையான தொழுகையையே) முழுமைப்படுத்தியிருப்பேன். உயர்ந்தோன் அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ (அல்குர்ஆன்: 33:21) என்று கூறுகின்றான்” என்றார்கள்.
நூல்: (முஸ்லிம்: 1227)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். உஸ்ஃபான்’ எனும் இடத்தை அடைந்ததும் குடிநீருள்ள பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி, மக்கள் காண்பதற்காக பகல் நேரத்திலேயே அதை அருந்தி நோன்பை விட்டார்கள்.
இறுதியில் மக்காவிற்குள் நுழை(யும்வரை நோன்பு நோற்காமலேயே இரு)ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். எனவே, (நோன்பு நோற்க) விரும்புகின்றவர் நோன்பு நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் விட்டுவிடவும் செய்யலாம்.
நூல்: (முஸ்லிம்: 2043) (2033)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறைகூறாதீர்; விட்டு விட்டவரையும் குறை கூறாதீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; விட்டும் இருக்கிறார்கள்.
(நூல்: (முஸ்லிம்: 2044))
(விடுபட்ட கடமையான நோன்பை பின்னர் நோற்று விட வேண்டும். இது பற்றி விரிவாக அறிய நோன்பு என்ற புத்தகத்தை பார்வையிடவும்.
காலுறைகளின் மீது மஸஹ் செய்வதில் சலுகை
ஷுரைஹ் பின் ஹானீ அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது குறித்துக் கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள், “நீங்கள் அலீ பின் அபீதாலிப் அவர்களை அணுகிக் கேளுங்கள். அவர் தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்பவராய் இருந்தார்கள்” என்று கூறினார்கள்.
எனவே, அலீ (ரலி) அவர்களிடம் (சென்று) அதைப் பற்றிக் கேட்டோம். அப்போது அவர்கள், “பயணத்திலிருப்பவருக்கு மூன்று பகல் மூன்று இரவுகளையும், உள்ளூரில் இருப்பவருக்கு ஒரு பகல், ஓர் இரவையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்” என்று கூறினார்கள்.
நூல்: (முஸ்லிம்: 465)
பயணம் என்பது வாகனத்தில் சென்று கொண்டிருப்பதை மட்டும் தான் குறிக்கும் என்று தவறாக விளங்கி கொள்ளக் கூடாது. வெளியூர் பயணம் செய்தவர்கள் வெளியூரில் தங்கியிருக்கும் வரை பயணத்தில் இருப்பவர்களாகவே இஸ்லாத்தின் பார்வையில் கருதப்படுவார்கள். அவர்களுக்குரிய சலுகைகளை தங்கியிருக்கும் வரையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்கா வெற்றிப் போருக்காக (மக்கா நோக்கி)ப் புறப்பட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். ‘கதீத்’ எனும் இடத்தை – உஸ்ஃபானுக்கும் குதைதுக்கும் இடையே உள்ள நீர்ப்பகுதியை – அடைந்ததும் நோன்பைவிட்டுவிட்டார்கள். அந்த மாதம் கழியும் வரையிலும் கூட அவர்கள் நோன்பு நோற்கவில்லை
நூல்: (புகாரி: 4275) , 4276
பயணிகள் வாகனத்தில் இருந்த நிலையில் தொழுபவர்களாக இருந்தால் கிப்லாவை முன்னோக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இதுபோன்ற நிலையில் வாகனம் நின்ற பிறகு கிப்லாவை முன்னோக்கி தொழலாம் என்று தாமதிக்க தேவையில்லை. வாகனம் எந்த திசையை நோக்கி சென்றாலும் உட்கார்ந்த நிலையிலேயே தொழுது கொள்ளலாம். இது விஷயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் இறைவன் ஒவ்வொருவரையும் அவரது சக்திக்கு மீறிய காரியத்தில் தண்டிப்பதில்லை.
”எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை”.
பயணம் மேற்கொள்ளும் போது நமக்கு அதிகளவில் ஓய்வு நேரங்கள் கிடைக்கின்றன. ஏனெனில் அந்நேரங்களில் நாம் எந்த ஒரு வேலையும் செய்வதில்லை. எனவே நமக்கு கிடைக்கும் அந்நேரங்களை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். பயனில்லாத சினிமா பத்திரிக்கை படிப்பது, செல்போனில் பாட்டு கேட்பது போன்ற வீணான காரியங்களில் ஈடுபட்டு நேரங்களை பாழ்ப்படுத்தி விடக்கூடாது. இறைவன் நமக்கு வழங்கியிருக்கும் அருட்கொடைகளில் ஓய்வு நேரங்களும் ஒன்று. நம்மால் முடியும்பட்சத்தில் நன்மையான காரியங்களில் அவைகளை செலவிட வேண்டும். ஏனெனில் அதைப்பற்றியும் நாம் இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கன் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு.
நூல் : (புகாரி: 6412)
அலீ பின் அப்தில்லாஹ் அல்அஸ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு (பின்வரும் பிரார்த்தனையை)க் கற்றுத் தந்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் புறப்பட்டால், தமது ஒட்டகத்தில் ஏறி அமர்ந்தவுடன் மூன்றுமுறை தக்பீர் (அல்லாஹு அக்பர்’) கூறுவார்கள்.
பிறகு “சுப்ஹானல்லதீ சக்கர லனா ஹாதா, வ மா குன்னா லஹு முக்ரினீன, வ இன்னா இலா ரப்பினா ல முன்கலிபூன். அல்லாஹும்ம, இன்னா நஸ்அலுக ஃபீ சஃபரினா ஹாதல்பிர்ர வத்தக்வா, வ மினல் அமலி மா தர்ளா. அல்லாஹும்ம, ஹவ்வின் அலைனா சஃபரனா ஹாதா. வத்வி அன்னா புஃதஹ். அல்லாஹும்ம அன்த்தஸ் ஸாஹிபு ஃபிஸ்ஸஃபரி, வல்ஃகலீஃபத்து ஃபில்அஹ்ல். அல்லாஹும்ம, இன்னீ அஊது பிக்க மிவ் வஃஸாயிஸ் ஸஃபரி, வகஆபத்தில் மன்ழரி, வ சூயில் முன்கலபி ஃபில்மாலி வல்அஹ்ல்” என்று கூறுவார்கள்.
(பொருள்: நாங்கள் இ(ந்த வாகனத்)தைக் கையாளும் திறன் பெற்றிராத நிலையில், எங்களுக்கு இதைப் பணியவைத்த (இறை)வன் தூயவன். நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லக்கூடியவர்களாய் உள்ளோம். இறைவா, இப்பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ திருப்தியடையக்கூடிய (நற்)செயல்களையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா, இப்பயணத்தை எங்களுக்கு எளிதாக்குவாயாக! இப்பயணத்தின் தூரத்தைச் சுருக்குவாயாக!
இறைவா, நீயே என் பயணத் தோழனாகவும் என் குடும்பத்தின் பிரதிநிதியாகவும் இருப்பாயாக! இறைவா, பயணத்தின் சிரமங்களிலிருந்தும், நிலைகுலையச் செய்யும் துயரக் காட்சியிலிருந்தும், செல்வத்திலும் குடும்பத்திலும் நிகழ்ந்துவிடும் தீய மாற்றங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
திரும்பி வரும்போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள். ஆனால், அவற்றுடன் பின்வரும் வரிகளையும் கூடுதலாக ஓதுவார்கள்: “ஆயிபூன, தாயிபூன, ஆபிதூன லி ரப்பினா ஹாமிதூன்” (பாவமன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், எங்கள் இறைவனை வழிபட்டவர்களாகவும் அவனையே போற்றிப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகிறோம்).
நூல் : (முஸ்லிம்: 2612)
இஸ்லாமியர்களில் பலர் பொருளாதார தேவைக்காக வெளிநாடு சென்று, அங்கேயே பல ஆண்டுகளாக தங்கி வேலை செய்பவர்களாக இருக்கின்றார்கள். இஸ்லாத்தின் பார்வையில் இதுபோன்ற பயணம் கூடுமா? என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இஸ்லாத்தில் பொருளாதாரத்தை அதிகளவில் திரட்டுவது தவறோ, பாவகாரியமோ அல்ல. ஆனால் அதை மட்டும் காரணம் காட்டி மற்ற கடமைகளை புறக்கணிப்பது, உதாசீனப்படுத்துவது மிகவும் தவறாகும்.
இஸ்லாத்தில் இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை காரணம் காட்டி கூட நம் பெற்றோர்களுக்கு, மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை புறக்கணித்து விடமுடியாது. அவ்வாறு ஒருவர் செய்வாரானால் அவர் இறைவனிடத்தில் இறை நேசராக கருதப்படமாட்டார். மாறாக குற்றவாளியாகவே கருதப்படுவார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல் வேறு சமயங்களில் தெளிவு பட உணர்த்தியிருக்கின்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் “ஆம்! அல்லாஹ்வின் தூதரே!” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்!
ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்றபத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!” என்று கூறினார்கள்.
நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! “அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!” என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!” என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது?’ என்று நான் கேட்டேன். “வருடத்தில் பாதி நாட்கள்!” என்றார்கள். “அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!” என அபூசலமா அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: (புகாரி: 1975)
அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் சல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத்தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது?’ என்று அவரிடம் சல்மான் கேட்டார்.
அதற்கு உம்முத்தர்தா (ரலி) அவர்கள், உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை’ என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள், அபுத்தர்தாவிடம், உண்பீராக!’ என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, நான் நோன்பு நோற்றிருக்கிறேன்…’ என்றார். சல்மான், “நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்” என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார்.
இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள். அப்போது சல்மான் (ரலி) அவர்கள், உறங்குவீராக!’ என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், உறங்குவீராக!’ என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், இப்போது எழுவீராக!’ என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர்.
பிறகு அபுத்தர்தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள், “நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!” என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சல்மான் உண்மையையே கூறினார்!” என்றார்கள்.
நூல்: (புகாரி: 1968)
இந்த செய்திகளும் இதுபோன்ற பல செய்திகளும் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை காரணம் காட்டி, மனைவிக்கு செய்ய வேண்டிய தாம்பத்தியம் எனும் கடமையை புறக்கணிப்பதையோ, பெற்றோரை பராமரித்தல் எனும் கடமையை நிறைவேற்றத் தவறுவதையோ மிகவும் வன்மையாக கண்டிப்பதை காணலாம். இந்த அடிப்படையை தெளிவாக புரிந்துக்கொண்டு வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேளை செய்பவர்களின் நிலையை காண்போம்.
இன்று வெளிநாடுகளில் தங்கி வேளை பார்ப்பவர்களில் பலர் திருமணம் முடித்தவர்களாக, பிள்ளைகளை பெற்றவர்களாக, வயதான பெற்றோரை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மிகவும் சாதாரணமாக புறக்கணிக்கின்றார்கள். தொழுகையை காரணம் காட்டியே மற்ற கடமைகளை புறக்கணிக்கக் கூடாது எனும்போது, பொருளாதாரத்தை காரணம் காட்டி இதர கடமைகளை புறக்கணிப்பது இறைவனிடத்திலும், இறைத்தூதரிடத்திலும் எவ்வளவு பாரதூரமான பாவகாரியம் என்பதை இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கித்தவிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.
ஒரு பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமையை முழுமையான முறையில் வெளிநாட்டில் இருந்து கொண்டு எப்படி நிறைவேற்ற முடியும்? வாரந்தோறும் போன் செய்து விசாரிப்பதின் மூலமோ, மாதாமாதம் பணம் அனுப்பி வைப்பதினாலோ தங்களது கடமை நிறைவேறிவிட்டது என்று தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது. இதையும் தாண்டி இங்கிருந்து கொண்டு நிறைவேற்ற முடியாத பல கடமைகள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.
நமது பிள்ளைகளையும், பெற்றோரையும் வேண்டுமானால் மற்றவர்கள் பார்த்துக் கொள்ள முடியும் என்று வைத்துக் கொள்வோம். மனைவியின் தேவையை கணவரைத் தவிர வேறு யாரால் நிறைவேற்ற முடியும்? மணிக்கணக்கில் போனில் பேசி குடும்பம் நடத்தவா திருமணம் செய்தோம்.? குடும்பத்துடன் வெளிநாட்டில் இருப்பதற்கான எல்லா வசதிகளும் ஒருவருக்கு கிடைத்தால் அதை மார்க்க அடிப்படையில் குற்றம் கூற முடியாது.
ஆனால் அந்த நிலை பெரும்பாலோனோருக்கு அமைவதில்லை. எனவே இதுபோன்ற தவறை செய்பவர்கள் இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்ய வேண்டும். வாழ்நாளில் பெரும் பகுதிகளை வெளிநாட்டிலேயே கழிப்பவர்கள் முக்கியமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இது போன்ற அனைத்து பயண சட்டங்களையும் பேணி பயணம் மேற்கொள்ளும் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!
அப்படி ஒரு வாய்ப்பினை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.! வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
பயணிகளின் கவனத்திற்கு! அப்துல் கரீம், மேலப்பாளையம்