13) ருகூவு செய்தல்
ருகூவு செய்தல்
நிலையில் சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி இரு கைகளையும் காதின் கீழ்ப் பகுதி வரை அல்லது தோள் புஜம் வரை உயர்த்தி ருகூவு செய்ய வேண்டும்.
ருகூவு என்பது குனிந்து இரு கைகளையும் மூட்டின் மீது வைப்பதாகும். அப்போது இரு கைகளும் விலாப்புறத்தில் படாதவாறு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தலையையும், முதுகையும் சமமாக வைக்க வேண்டும். தலையைத் தாழ்த்தியோ, உயர்த்தியோ இருக்கக் கூடாது.
‘நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவிற்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது கைகளை தோள்புஜம் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: (புகாரி: 735)
நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லும் போதும், ருகூவு செய்யும் போதும், தம் இரு கைகளையும் தமது காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 642) (589)
அபூஹுமைத் (ரலி), அபூஉஸைத் (ரலி), ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) ஆகியோர் ஒன்று கூடி நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அபூஹுமைத் (ரலி) அவர்கள், ‘நபி (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி உங்களை விட நான் நன்கு அறிந்தவன். நபி (ஸல்) அவர்கள் ருகூவு செய்யும் போது தமது இரு கைகளாலும் இரண்டு மூட்டுக் கால்களையும் பிடித்துக் கொள்வது போல் வைத்தார்கள். மேலும் தமது இரு கைகளையும் (வளைவு இன்றி) நேராக ஆக்கினார்கள். மேலும் இரு கைகளையும் விலாப்புறத்தை விட்டும் விலக்கி வைத்தார்கள்’ என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: அப்பாஸ் பின் ஸஹ்ல்,
நூல்கள்: (திர்மிதீ: 260) (241),(அபூதாவூத்: 628)
நபி (ஸல்) அவர்கள் ருகூவு செய்யும் போது தலையை உயர்த்தவும் மாட்டார்கள்; ஒரேயடியாகத் தாழ்த்தவும் மாட்டார்கள்; இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வைப்பார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 857) (768)
‘ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி)
நூல்கள்: (திர்மிதீ: 265) (245), நஸயீ 1017,(அபூதாவூத்: 729), இப்னுமாஜா 860, தாரமீ 1293.
‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ‘அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?’ என நபித்தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி),
நூல்: (அஹ்மத்: 11532) (11106), 22642
ருகூவில் ஓதவேண்டியவை
பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ, அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக்கூடாது.
சுப்ஹான ரப்பியல் அழீம் (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும்.
நூல்: (நஸாயீ: 1133) (1121)
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)
நூல்கள்: (புகாரி: 794) ,(முஸ்லிம்: 746)
ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயி(க்)க(த்)தி வர்ரூஹ் (ஜிப்ரீல் மற்றும் வானவர்களின் இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்)
நூல்: (முஸ்லிம்: 840) (752)
ருகூவு செய்யும் போதும், ஸஜ்தாச் செய்யும் போதும் குர்ஆன் வசனங்களை ஓதுவதை விட்டும் என்னை நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: (முஸ்லிம்: 827) (740)
ருகூவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பிய அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த துஆக்களை அதிகமாகவே ஓதியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் தமது ருகூவிலும், ஸஜ்தாவிலும் ‘ஸுப்ஹான(க்) கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி’ என்று அதிகமதிகம் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: (புகாரி: 817) ,(முஸ்லிம்: 746)
ருகூவிலிருந்து எழும் போது
ருகூவிலிருந்து எழும் போது ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா (புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்) என்று கூறி இரு கைகளையும் தோள்புஜம் அல்லது காது வரை உயர்த்தி, பின்னர் கைகளைக் கீழே விட்ட நிலையில் ரப்பனா லக்கல் ஹம்து என்று கூற வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். ருகூவு செய்யும் போதும் தக்பீர் கூறுவார்கள். ருகூவிலிருந்து முதுகை நிமிர்த்தும் போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறுவார்கள். பின்பு நிலைக்கு வந்து ‘ரப்பனா லக்கல் ஹம்து’ என்பார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 789)
‘நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவிற்கு தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தமது கைகளை தோள்புஜம் வரை உயர்த்தக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: (புகாரி: 735)
நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொல்லும் போதும், ருகூவு செய்யும் போதும், தம் இரு கைகளையும் தமது காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தி ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறும் போதும் அதைப் போன்றே கைகளை உயர்த்துவார்கள்.
அறிவிப்பவர்: மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 642) (589)
ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பிறகு பின்வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றைக் கூறலாம்.
ரப்பனா ல(க்)கல் ஹம்து
நூல்: (புகாரி: 789)
ரப்பனா வல(க்)கல் ஹம்து
நூல்: (புகாரி: 732)
அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து
நூல்: (புகாரி: 796)
அல்லாஹும்ம ரப்பனா வல(க்)கல் ஹம்து
(பொருள்: எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்!)
நூல்: (புகாரி: 7346)
ரப்பனா ல(க்)கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ (இறைவா! தூய்மையான அருள் நிறைந்த ஏராளமான புகழ் அனைத்தும் உனக்கே உரியது!)
நூல்: (புகாரி: 799)
ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று இமாம் கூறும் போது பின்பற்றித் தொழுபவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறத் தேவையில்லை. மேற்கூறப்பட்ட வாசகங்களில் ஏதாவது ஒன்றைக் கூறினால் போதுமானது. ஏனெனில் ‘இமாம், ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா’ என்று கூறும் போது நீங்கள் ரப்பனா ல(க்)கல் ஹம்து’ என்று கூறுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: (புகாரி: 722)
ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டலாமா?
சிலர் ருகூவிலிருந்து எழுந்தவுடன் மீண்டும் கைகளைக் கட்டிக் கொண்டு, பின்னர் ஸஜ்தாச் செய்கின்றனர். சவூதி அரேபியாவில் இருந்த அறிஞர் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள், ‘ருகூவிலிருந்து எழுந்தவுடன் கைகளைக் கட்ட வேண்டும்; இது விடுபட்ட நபி வழி’ என்று கூறினார். இதன் அடிப்படையில் சிலர் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டி வருகின்றனர். இது நபி வழிக்கு மாற்றமானதாகும். நபி (ஸல்) அவர்களின் கூற்றைக் கவனித்தால் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டக் கூடாது, கீழே விட வேண்டும் என்பதை அறியலாம்.
நபி (ஸல்) அவர்கள் (ருகூவிலிருந்து) தலையை உயர்த்தும் போது ஒவ்வொரு மூட்டும் அதனதன் இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிருவார்கள்.
நூல்: (புகாரி: 828)
நபி (ஸல்) அவர்கள் ருகூவிலிருந்து எழுந்து எப்படி நிற்பார்கள் என்பதை விளக்கும் நபித்தோழர்கள் ஒவ்வொரு மூட்டும் அதனுடைய இடத்துக்கு வரும் அளவுக்கு நிமிருவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.
ஒவ்வொரு மூட்டும் அதனதன் இடத்துக்கு வரவேண்டுமானால் கைகளைக் கீழே விட்டால் தான் சாத்தியம். கைளைக் கட்டினால் மூட்டுக்கள் அதனதன் இடத்துக்கு வராது. எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கீழே விடுவது தான் நபிவழி என்பதை அறியலாம்.