07) உளூவை நீக்குபவை

நூல்கள்: தொழுகையின் சட்டங்கள்

உளூவை நீக்குபவை

உளூச் செய்த பின்னால் நம்மிடமிருந்து ஏற்படும் சில நிகழ்வுகளால் உளூ நீங்கி விடும். அவ்வாறு நீங்கி விட்டால் மீண்டும் உளூச் செய்து தான் தொழ வேண்டும் என்று திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகின்றன. அவற்றைக் காண்போம்.

மலஜலம் கழித்தல்

உளூச் செய்த பின் ஒருவர் மலம் கழித்தாலோ அல்லது சிறுநீர் கழித்தாலோ அவர் செய்த உளூ நீங்கி விடும். அவர் மீண்டும் உளூச் செய்த பின்பே தொழ வேண்டும்.

   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِىْ سَبِيْلٍ حَتّٰى تَغْتَسِلُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا‏

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.

நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:43)

   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ‌ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ‌ ؕ مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்!

நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

(அல்குர்ஆன்: 5:6)

மலம் கழித்த ஒருவர் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து தொழ வேண்டும் என்பதையும், தண்ணீர் கிடைத்தால் உளூச் செய்வது அவசியம் என்பதையும், ஏற்கனவே செய்த உளூவை மலம் கழித்தல் நீக்கி விடும் என்பதையும் இவ்விரு வசனங்கள் கூறுகின்றன.

சிறுநீர் கழிப்பது உளூவை நீக்கி விடும் என்பதைப் பின்வரும் ஹதீஸைச் சிந்திக்கும் போது அறிய முடியும்.

 عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ، قَالَ:
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنَا إِذَا كُنَّا سَفَرًا أَنْ لَا نَنْزِعَ خِفَافَنَا ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ، إِلَّا مِنْ جَنَابَةٍ، وَلَكِنْ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ

‘நாங்கள் பயணத்தில் இருந்தால் மூன்று நாட்களும் உள்ளூரில் இருந்தால் ஒரு நாளும், மலம், ஜலம், தூக்கம் போன்ற காரணங்களால் காலுறைகளைக் கழற்றத் தேவையில்லை எனவும், கடமையான குளிப்புக்காகக் காலுறைகளைக் கழற்ற வேண்டும்’ எனவும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வான் பின் அஸ்ஸால் (ரலி)
நூல்கள்: (திர்மிதீ: 96) (89), நஸயீ-127, இப்னுமாஜா-471,(அஹ்மத்: 17396)

சிறுநீர் கழித்தலும் உளூவை நீக்கி விடும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

காற்றுப் பிரிதல் உளூவை நீக்கும்

மலஜலம் கழிப்பதால் உளூ நீங்குவது போலவே காற்றுப் பிரிவதாலும் உளூ நீங்கி விடும்.

عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ» قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ: مَا الحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ؟، قَالَ: فُسَاءٌ أَوْ ضُرَاطٌ

‘ஹதஸ் ஏற்பட்டவனின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். அப்போது ஹள்ரமவ்த்’ என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் ‘அபூஹுரைராவே! ஹதஸ் என்றால் என்ன?’ என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி), ‘சப்தத்துடனோ, அல்லது சப்தமின்றியோ காற்றுப் பிரிவது தான்’ என்று விளக்கமளித்தார்கள்.

நூல்: (புகாரி: 135) , 176

காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டால்…

சிலருக்குக் காற்றுப் பிரியாவிட்டாலும் காற்றுப் பிரிந்தது போன்ற உணர்வு ஏற்படும். அல்லது சிறுநீர் ஓரிரு சொட்டுக்கள் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் ஆடையில் அதற்கான எந்த அடையாளமும் இருக்காது. இவர்கள் அதற்காக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. திட்டவட்டமாகத் தெரிந்தால் மட்டுமே உளூ நீங்கி விட்டதாக முடிவு செய்து கொள்ள வேண்டும்.

 عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، ح وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ
أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّيْءَ فِي الصَّلاَةِ؟ فَقَالَ: «لاَ يَنْفَتِلْ – أَوْ لاَ يَنْصَرِفْ – حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا»

‘தொழும் போது ஏதோ ஏற்படுவதாகத் தனக்குத் தோன்றுகிறது’ என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(காற்றுப் பிரியும்) சப்தத்தைக் கேட்காமல், அல்லது அதன் நாற்றத்தை உணராமல் தொழுகையை விட்டுச் செல்ல வேண்டாம்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)
நூல்கள்: (புகாரி: 137) ,(முஸ்லிம்: 540)

சமைத்த உணவுகளை உண்பது உளூவை நீக்குமா?

பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உண்பதால் உளூ நீங்காது என்பதில் மாறுபட்ட ஹதீஸ்கள் எதுவும் இல்லை. எனவே இவற்றை உண்பதால் உளூ நீங்காது.

சமைத்த பொருட்களை உண்பதால் உளூ நீங்குமா? என்பதில் மாறுபட்ட கருத்துக்களைத் தரும் ஹதீஸ்கள் உள்ளன.

الْوُضُوءُ مِمَّا مَسَّتِ النَّارُ

‘நெருப்பு தீண்டியவற்றின் காரணமாக (சமைக்கப்பட்ட உணவை உட்கொள்வதன் காரணமாக) உளூச் செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்போர்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 581) (528)

சமைக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வதால் உளூச் செய்ய வேண்டும் என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறினாலும் இந்தச் சட்டம் நபி (ஸல்) அவர்களால் பின்னர் ரத்து செய்யப்பட்டு விட்டது.

عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ:
«كَانَ آخِرُ الْأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرْكَ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ»

சமைத்த பொருட்களைச் சாப்பிட்ட பின் (உளூச் செய்தல், உளூச் செய்யாமல் விட்டு விடுதல் ஆகிய) இரு காரியங்களில் உளூவை விட்டு விடுவதே நபி (ஸல்) அவர்கள் இறுதியாக நடைமுறைப்படுத்தியதாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்கள்: (நஸாயீ: 185) ,(அபூதாவூத்: 164)

‘சமைக்கப்பட்ட பொருட்களை உண்பதால் உளூச் செய்ய வேண்டும்’ என்ற சட்டம் முன்னர் நடைமுறையில் இருந்ததையும், பின்னர் அது மாற்றப்பட்டு விட்டதையும் இந்த ஹதீஸ் மூலம் விளங்கலாம். எனவே சமைக்கப்பட்ட உணவை உண்பதால் உளூ நீங்காது.

ஒட்டகத்தின் இறைச்சியை உண்பது உளூவை நீக்கும்

எதைச் சாப்பிட்டாலும் உளூ நீங்காது என்றாலும் ஒட்டகத்தின் இறைச்சியைச் சாப்பிடுவது உளூவை நீக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியுள்ளனர்.

عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ
أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَأَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟ قَالَ: «إِنْ شِئْتَ فَتَوَضَّأْ، وَإِنْ شِئْتَ فَلَا تَوَضَّأْ» قَالَ أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟ قَالَ: «نَعَمْ فَتَوَضَّأْ مِنْ لُحُومِ الْإِبِلِ»

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘ஆட்டிறைச்சியை உண்பதால் உளூச் செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீ விரும்பினால் உளூச் செய்து கொள்! விரும்பினால் உளூச் செய்யாமல் இருந்து கொள்’என்று கூறினார்கள். ‘ஒட்டகத்தின் இறைச்சியை உண்பதால் நாங்கள் உளூச் செய்ய வேண்டுமா?’ என்று அவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்! ஒட்டக இறைச்சியைச் சாப்பிட்டால் உளூச் செய்’ என்று நபி (ஸல்) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 588) (539)

மதீ’ வெளியானால் உளூ நீங்கும்

ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ’ – இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் நீர் தானே தவிர இந்திரியம் அல்ல.

மலஜலம் கழித்தல், காற்றுப் பிரிதல் ஆகியவை உளூவை நீக்குவது போலவே இந்த மதீ’ எனும் இச்சை நீர் வெளிப்படுவதும் உளூவை நீக்கும்.

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ
كُنْتُ رَجُلًا مَذَّاءً فَأَمَرْتُ المِقْدَادَ بْنَ الأَسْوَدِ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ، فَقَالَ: «فِيهِ الوُضُوءُ»

அதிக அளவில் மதீ’ வெளிப்படக் கூடியவனாக நான் இருந்தேன். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு மிக்தாத் (ரலி) அவர்களிடம் நான் கூறினேன். ‘அதற்காக உளூச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: (புகாரி: 132) ,(முஸ்லிம்: 458)

تَوَضَّأْ وَاغْسِلْ ذَكَرَكَ

‘ஆணுறுப்பைக் கழுவி விட்டு உளூச் செய்து கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (புகாரி: 269) வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

வாந்தி எடுத்தால் உளூ நீங்குமா?

வாந்தி எடுத்தால் உளூ நீங்கும் எனக் கூறும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானது அல்ல. எனவே வாந்தி எடுத்தால் உளூ நீங்காது.

இரத்தம் வெளியேறுதல்

உளூச் செய்த பின்னர் உடலிலிருந்து இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்கும் எனக் கூறும் ஹதீஸ்கள் சில உள்ளன. அவையனைத்தும் பலவீனமானவையாகும். எனவே இரத்தம் வெளிப்பட்டால் உளூ நீங்காது என்பதே சரியானதாகும்.

பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

ஆண்கள் பெண்களைத் தொட்டாலோ, அல்லது பெண்கள் ஆண்களைத் தொட்டாலோ அவர்களின் உளூ நீங்கி விடுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

திருக்குர்ஆனின் இரண்டு வசனங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ وَلَا جُنُبًا اِلَّا عَابِرِىْ سَبِيْلٍ حَتّٰى تَغْتَسِلُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضٰۤى اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَفُوًّا غَفُوْرًا‏

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர.

நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும்,கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:43)

   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ‌ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ‌ ؕ مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்!

நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும்,தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

(அல்குர்ஆன்: 5:6)

இவ்விரு வசனங்களிலும் பெண்களைத் தீண்டினால் உளூ நீங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தீண்டுதல் என்ற சொல்லின் நேரடிப் பொருள் தொடுதல் என்பது தான். எனவே பெண்களைத் தொட்டால் உளூ நீங்கி விடும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.

தீண்டுதல் என்பதன் பொருள் தொடுவது தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆயினும் தீண்டுதல் என்ற சொல்லைப் பெண்களுடன் இணைத்துக் கூறும் போது சில நேரங்களில் தொடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும். சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுதல் என்றும் பொருள் கொள்ள முடியும்.

இந்த வசனங்களில், ‘பெண்களைத் தீண்டினால்’ என்ற சொல்லுக்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்று மற்றும் சிலர் வாதிடுகின்றனர்.

இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் வேறு சான்றுகள் இல்லாவிட்டால் முதல் சாராரின் கூற்றையே நாம் தேர்வு செய்தாக வேண்டும். ஏனெனில் அவர்கள் தான் நேரடிப் பொருளின் அடிப்படையில் தங்கள் வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

இரண்டாவது சாராரின் கருத்தை வலுப்படுத்தும் புறச்சான்றுகள் பல உள்ளதால் பெண்களைத் தீண்டினால்’ என்பதற்கு பெண்களுடன் உடலுறவு கொண்டால்’ என்று இவ்விரு வசனங்களுக்கும் பொருள் கொள்வது தான் பொருத்தமானது.

لَقَدْ رَأَيْتُنِي وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَنَا مُضْطَجِعَةٌ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ، فَإِذَا أَرَادَ أَنْ يَسْجُدَ غَمَزَ رِجْلَيَّ، فَقَبَضْتُهُمَا

‘நான் நபி (ஸல்) அவர்களுக்கும், கிப்லாவுக்கும் குறுக்கே படுத்துக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாவுக்குச் செல்லும் போது என் கால்களைக் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்கள்: (புகாரி: 519) ,(முஸ்லிம்: 796)

நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது நீங்களாகவே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? அவர்கள் காலில் விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும் என்று எழும் கேள்விக்கும் – இக்கேள்வியை யாரும் கேட்காதிருந்தும் – ஆயிஷா (ரலி) விடையளித்துள்ளார்கள்.

 وَالبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ

‘அந்தக் காலத்தில் எங்கள் வீடுகளில் விளக்குகள் கிடையாது’ என்பது தான் அந்த விடை!

பார்க்க:  (புகாரி: 382) , 513

வீடு முழுவதும் இருட்டாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யப் போவதை விரலால் குத்தினால் தான் அறிந்து கொள்ள முடியும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருக்கின்றது.

இந்த ஹதீஸைக் கவனத்தில் வைத்துக் கொண்டு மேற்கண்ட வசனங்களை நாம் ஆராய்வோம்.

பெண்களைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது அந்த வசனங்களின் பொருளாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் தமது மனைவியின் கால்களைத் தொட்டிருக்க மாட்டார்கள். தொட்டவுடன் தொடர்ந்து தொழுதிருக்கவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆனின் ஒரு வசனத்திற்கு என்ன பொருள் கொள்வது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களின் விளக்கம் தான் இதற்குத் தீர்வாக முடியும்.

தமது மனைவியின் மேல் தற்செயலாகக் கைகள் பட்டன என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. ‘கால்களை மடக்கிக் கொள்’ என்ற செய்தியைத் தெரிவிப்பதற்காக வேண்டுமென்றே அவர்கள் தமது மனைவியைத் தொட்டிருக்கின்றார்கள் என்பது தெரிகின்றது. எனவே மேற்கண்ட வசனத்தில் பெண்களைத் தீண்டினால்’ என்பதற்கு, பெண்களைத் தொட்டால்’என்று பொருள் கொள்வது பொருத்தமாகாது.

இந்த ஹதீஸைப் பார்த்த பிறகும் சிலர் புதுமையான விளக்கத்தைக் கூறி தங்களின் கருத்தை நியாயப்படுத்த முனைகின்றனர்.

ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் நேரடியாகத் தொட்டார்கள் என்று இதற்கு அர்த்தம் இல்லை. அவர்கள் மீது ஆடை இருந்திருக்கும்; அந்த ஆடையின் மேல் நபி (ஸல்) அவர்கள் குத்தியிருக்கலாம் அல்லவா? என்பது இவர்கள் தரும் புதுமையான விளக்கம்.

யாரும் கணவருடன் படுத்திருக்கும் போது முழுமையாக உடலை மறைத்துக் கொள்வதில்லை. மேலும் கால்களையும் மூடிக் கொண்டு படுப்பதில்லை. அப்படியே படுத்திருந்தாலும் தூக்கத்தில் ஆடைகள் விலகியிருப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. மேலும் அங்கே வெளிச்சமாக இருந்திருந்தால் ஆடையால் மூடப்பட்ட இடத்தைப் பார்த்து விரலால் குத்தினார்கள் என்று கருத முடியும். விளக்குகள் இல்லாமல் இருட்டாக இருந்ததால் காலில் ஆடை கிடக்கின்றதா? இல்லையா? என்று தேடிப் பார்த்து தமது விரலால் குத்தவில்லை என்பது தெளிவாகின்றது எனவே பெண்களைத் தொட்டால் உளூ முறியாது என்பதை அறியலாம்.

தூக்கம் உளூவை நீக்குமா?

தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும் சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன.

 كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَأْمُرُنَا إِذَا كُنَّا مُسَافِرِينَ أَنْ نَمْسَحَ عَلَى خِفَافِنَا وَلَا نَنْزِعَهَا ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ غَائِطٍ وَبَوْلٍ وَنَوْمٍ إِلَّا مِنْ جَنَابَةٍ»

காலுறை அணிந்தவர்கள் மலஜலம் கழித்தாலோ, தூங்கினாலோ அவர்கள் மீண்டும் உளூச் செய்யும் போது கால்களைக் கழுவாமல் காலுறைகள் மீது மஸஹ் செய்யலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள்: (நஸாயீ: 127) ,(அஹ்மத்: 17396, 17401),(திர்மிதீ: 89, 3458, 3459), இப்னுமாஜா-471

மலஜலம் கழிப்பது எவ்வாறு உளூவை நீக்குமோ அவ்வாறே தூக்கமும் உளூவை நீக்கும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. இதற்கு மாற்றமாகப் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

 عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ
بِتُّ لَيْلَةً عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ، فَقُلْتُ لَهَا: إِذَا قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَيْقِظِينِي، ” فَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُمْتُ إِلَى جَنْبِهِ الْأَيْسَرِ، فَأَخَذَ بِيَدِي فَجَعَلَنِي مِنْ شِقِّهِ الْأَيْمَنِ، فَجَعَلْتُ إِذَا أَغْفَيْتُ يَأْخُذُ بِشَحْمَةِ أُذُنِي

எனது சிறிய தாயார் (நபிகள் நாயகத்தின் மனைவி) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவு நான் தங்கினேன். நபி (ஸல்) அவர்களின் இடது புறத்தில் நான் நின்று கொண்டேன். என் கையைப் பிடித்து தமது வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். நான் தூங்கி வழியும் போது என் காது சோனையைப் பிடிப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: (முஸ்லிம்: 1403) (1277)

இந்த இரண்டு ஹதீஸ்களையும் ஆராயும் போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நின்று கொண்டு தூங்கியது நிச்சயமாக ஆழ்ந்த தூக்கமாக இருக்காது; அரைகுறை தூக்கமாகத் தான் இருந்திருக்கும். எனவே இரண்டு ஹதீஸ்களையும் இணைக்கும் வண்ணம் ‘ஆழ்ந்த தூக்கம் உளூவை நீக்கும்; அரைகுறை தூக்கம் உளூவை நீக்காது’என்று முடிவு செய்யலாம்.

மர்மஸ்தானத்தைத் தொடுவது உளூவை நீக்குமா?

ஆண்களோ, பெண்களோ உளூச் செய்த பின்னர் தங்களின் மர்மஸ்தானத்தைத் தொட்டால் உளூ நீங்குமா என்பதில் அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

வேண்டுமென்றோ, மறதியாகவோ, நம்மை அறியாமலோ எப்படித் தொட்டாலும் உளூ நீங்கி விடும் என்று சிலர் கூறுகின்றனர்.

எப்படித் தொட்டாலும் உளூ நீங்காது என்று சிலர் கூறுகின்றனர்.

வேண்டுமென்று தொட்டால் உளூ நீங்கும்; மறதியாகத் தொட்டாலோ, நம்மை அறியாமல் மர்மஸ்தானத்தில் கை பட்டாலோ உளூ நீங்காது என்று மற்றும் சிலர் கூறுகின்றனர்.

இச்சையுடன் தொட்டால் உளூ நீங்கி விடும்; அவ்வாறில்லாமல் தொட்டால் உளூ நீங்காது என்று இன்னும் சிலர் கூறுகின்றனர்.

மர்மஸ்தானத்தை நேரடியாகத் தொட்டால் உளூ நீங்கும்; மர்மஸ்தானத்தின் மீது துணி இருக்கும் நிலையிலோ,கைகளில் உறை அணிந்துள்ள நிலையிலோ தொட்டால் உளூ நீங்காது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.

இந்தப் பிரச்சனையில் மாறுபட்ட கருத்துடைய ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளது தான் கருத்து வேறுபாட்டுக்குக் காரணமாகும்.

عَنْ بُسْرَةَ بِنْتِ صَفْوَانَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ مَسَّ ذَكَرَهُ فَلَا يُصَلِّ حَتَّى يَتَوَضَّأَ»

யாரேனும் தனது ஆணுறுப்பைத் தொட்டால் உளூச் செய்யாமல் தொழக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃப்வானின் மகள் புஸ்ரா (ரலி)
நூல்கள்: (திர்மிதீ: 82) (77), நஸயீ-163,(அபூதாவூத்: 154), இப்னுமாஜா-472,(அஹ்மத்: 26030),

இந்த ஹதீஸ் ஆண்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றது என்றாலும் இச்சட்டத்தில் ஆண்களும், பெண்களும் சமமானவர்களே என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன.

‘ஆண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும்; பெண்களில் யாரேனும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவரும் உளூச் செய்ய வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி)
நூல்கள்: (அஹ்மத்: 7076) (6779),(தாரகுத்னீ: 1)/147, பைஹகீ 1/132, அல்முன்தகா 1/18, 

ஆண்களாயினும், பெண்களாயினும் தமது மர்மஸ்தானத்தைத் தொட்டால் அவர்களின் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்து விட்டுத் தொழ வேண்டும் என்பதை இந்த நபிமொழிகள் தெளிவாக அறிவிக்கின்றன.

உங்களில் ஒருவர் திரை ஏதுமின்றி தமது உறுப்பைக் கையால் தொட்டால் அவர் உளூச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: (இப்னு ஹிப்பான்: 1118) (3/401), தப்ரானியின் அவ்ஸத்-2/237,  தப்ரானியின் ஸகீர்-1/84, 

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனாலும் இந்த ஹதீஸின் கருத்துக்கு மாற்றமான கருத்துடைய ஹதீஸ்களும் உள்ளன.

جَاءَ رَجُلٌ كَأَنَّهُ بَدَوِيٌّ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَى فِي رَجُلٍ مَسَّ ذَكَرَهُ فِي الصَّلَاةِ؟ قَالَ: «وَهَلْ هُوَ إِلَّا مُضْغَةٌ مِنْكَ أَوْ بِضْعَةٌ مِنْكَ»

‘தொழும் போது ஒருவர் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?’ என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்ற உறுப்பு தானே?’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: தல்க் இப்னு அலீ (ரலி)
நூல்கள்: (நஸாயீ: 165) ,(திர்மிதீ: 78),(அபூதாவூத்: 155), இப்னுமாஜா-476,(அஹ்மத்: 15700)

இந்தக் கருத்துடைய ஹதீஸ்(இப்னு ஹிப்பான்: 3)/403,(தாரகுத்னீ: 1)/149, தப்ரானியின் அல்கபீர் 8/330 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரப்பூர்வமான இரண்டு ஹதீஸ்கள் ஒன்றோடொன்று மோதுவது போல் தோற்றமளித்தால் அவ்விரு செய்திகளையும் முறையில் இணைத்து முடிவு செய்யலாம்.

ஒருவன் தனது மர்மஸ்தானத்தைத் தொடுவது இரண்டு வகைகளில் ஏற்படலாம்.

  • மற்ற உறுப்புகளைப் போன்ற உறுப்பாகக் கருதி தொடுவது முதல் வகை.
  • அந்த உறுப்பின் தனித் தன்மையைக் கருதி தொடுவது இரண்டாவது வகை.

முதல் வகையான தொடுதலால் உளூ நீங்காது.

இரண்டாவது வகையான தொடுதலால் உளூ நீங்கும் என்று முடிவு செய்யலாம்.

உடலில் குறிப்பிட்ட இடத்தில் எறும்பு கடித்தால் அந்த இடத்தில் நம் கையை வைத்து சொறிந்து கொள்கிறோம். இது போல மர்மஸ்தானத்தில் எறும்பு கடிப்பது போன்றோ, ஏதோ ஒன்று ஊர்வது போலவோ தோன்றும் போது அந்த இடத்தையும் சொறிந்து கொள்கிறோம். அந்த உறுப்பின் தனித்தன்மை கருதி அவ்வாறு செய்வதில்லை. மற்ற உறுப்புக்களைப் போல் கருதியே இதைச் செய்கிறோம். இவ்வாறு தொட்டால் உளூ நீங்காது.

உள்ளாடை அணியும் போது நம்மையும் அறியாமல் அவ்வுறுப்பின் மீது நமது கை பட்டு விடலாம். மற்ற உறுப்புகளில் எவ்வாறு கை படுகின்றதோ அவ்வாறு பட்டு விட்டது என்று தான் இதை எடுத்துக் கொள்வோம். இவ்வாறு பட்டாலும் உளூ நீங்காது.

இவ்வாறு இல்லாமல் இச்சையுடன் தொட்டால் மற்ற உறுப்பைப் போல் தொட்டதாகக் கருத முடியாது. அவ்வுறுப்பின் தனித்தன்மை கருதி தொட்டதாகத் தான் கருத முடியும். இப்படித் தொட்டால் உளூ நீங்கி விடும்.

‘அதுவும் உனது மற்ற உறுப்புக்களைப் போன்றது தானே’ என்று நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்திய வாசகத்திலிருந்து இந்தக் கருத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆணுறுப்பைத் தொட்டால் உளூ நீங்கும் என்பது இச்சையுடன் தொடுவதைத் தான் குறிக்கின்றது.

உளூ நீங்காது என்பது சாதாரணமாகத் தொடுவதைக் குறிக்கின்றது என்று கருதும் போது இரண்டு ஹதீஸ்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

உளூ அடிக்கடி நீங்கும் நோயாளிகள்

அடிக்கடி சிறுநீர் சொட்டுக்கள் விழுதல், அடிக்கடி காற்றுப் பிரிதல், தொடர் உதிரப் போக்கு போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு உளூவை நீக்கும் காரியங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய உபாதைகள் உடையவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு தடவை உளூச் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்த பின் அவர்களிடமிருந்து மேற்கண்ட உபாதைகளின் வெளிப்பாடு இருந்து கொண்டே இருந்தாலும் அதனால் உளூ நீங்காது. அடுத்தத் தொழுகை நேரம் வந்தவுடன் மீண்டும் உளூச் செய்ய வேண்டும்.

عَنْ عَائِشَةَ قَالَتْ
جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي» – قَالَ: وَقَالَ أَبِي: – «ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ»

தொடர் உதிரப் போக்குடைய ஃபாத்திமா என்ற பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்.’அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர் இரத்தப் போக்குடையவளாக இருக்கின்றேன். நான் தூய்மையாவதேயில்லை. எனவே தொழுகைகளை நான் விட்டு விடலாமா?’ என்று அவர் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது! அது மாதவிடாய் அல்ல! மாறாக ஒரு நோயாகும். எனவே (வழக்கமான) மாதவிடாய் நேரம் வந்ததும் தொழுகையை விட்டு விடு! அது நின்றவுடன் இரத்தத்தைக் கழுவி விட்டு ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து தொழு’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 228) 

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட உபாதைகள் உள்ளவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ள வேண்டும்.