02) உளூவின் அவசியம்

நூல்கள்: தொழுகையின் சட்டங்கள்

உளூவின் அவசியம்

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது.

   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قُمْتُمْ اِلَى الصَّلٰوةِ فَاغْسِلُوْا وُجُوْهَكُمْ وَاَيْدِيَكُمْ اِلَى الْمَرَافِقِ وَامْسَحُوْا بِرُءُوْسِكُمْ وَاَرْجُلَكُمْ اِلَى الْـكَعْبَيْنِ‌ ؕ وَاِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوْا‌ ؕ وَاِنْ كُنْتُمْ مَّرْضَىٰۤ اَوْ عَلٰى سَفَرٍ اَوْ جَآءَ اَحَدٌ مِّنْكُمْ مِّنَ الْغَآٮِٕطِ اَوْ لٰمَسْتُمُ النِّسَآءَ فَلَمْ تَجِدُوْا مَآءً فَتَيَمَّمُوْا صَعِيْدًا طَيِّبًا فَامْسَحُوْا بِوُجُوْهِكُمْ وَاَيْدِيْكُمْ مِّنْهُ‌ ؕ مَا يُرِيْدُ اللّٰهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِّنْ حَرَجٍ وَّلٰـكِنْ يُّرِيْدُ لِيُطَهِّرَكُمْ وَ لِيُتِمَّ نِعْمَتَهٗ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக் கொள்ளுங்கள்!

குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்!

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

(அல்குர்ஆன்: 5:6)

لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ

‘உளூ நீங்கியவர் உளூச் செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: (புகாரி: 135) ,(முஸ்லிம்: 330)

தண்ணீர்

உளூச் செய்வதற்குத் தண்ணீர் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே! ஆயினும் உளூ செய்யும் தண்ணீர் குறித்து தவறான நம்பிக்கைகள் சில முஸ்லிம்களிடம் நிலவுகின்றன.

ஆறு, குளம், கண்மாய், ஏரிகள், கிணறுகள் ஆகியவற்றிலும் மழை நீர், நிலத்தடி நீர் போன்றவற்றாலும் உளூச் செய்யலாம்; குளிக்கலாம் என்பதை அனைவரும் சரியாகவே விளங்கி வைத்துள்ளனர். இவற்றுக்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை.

கடல் நீர்

கடல் நீரால் உளூச் செய்யக் கூடாது என்ற கருத்து சிலரிடம் காணப்படுகின்றது.

‘கடல் நீரில் அதிக அளவில் உப்பு கலந்திருப்பதால் அது தண்ணீரின் கணக்கில் சேராது’ என்று அவர்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கடல் நீரால் உளூச் செய்ய அனுமதியளித்துள்ளனர்.

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ مَاءِ الْبَحْرِ، فَقَالَ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ، الْحِلُّ مَيْتَتُهُ»

நபி (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அதன் தண்ணீர் தூய்மை செய்யத்தக்கது;அதில் செத்தவையும் உண்ண அனுமதிக்கப்பட்டவை’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: (இப்னு மாஜா: 388) (382)

எனவே கடல் நீரால் தாராளமாக உளூச் செய்யலாம். கடமையான குளிப்பு உட்பட அனைத்துக் குளிப்புகளையும் நிறைவேற்றலாம்.

பயன்படுத்திய தண்ணீர்

‘சிறிய பாத்திரங்களில் உளூச் செய்யும் போது தண்ணீர் அப்பாத்திரத்தில் தெறித்து விட்டால் அத்தண்ணீர் அசுத்தமாகி விடும்’ என்ற நம்பிக்கை சிலரிடம் காணப்படுகின்றது. சில மத்ஹப்களிலும் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. மேலும் சிறிய பாத்திரத்தில் கைகளை நுழைத்து தண்ணீரை எடுத்தால் அத்தண்ணீர் உளூச் செய்வதற்கான தகுதியை இழந்து விடும் எனவும் நம்புகின்றனர்.

فَلَمَّا تَوَضَّأَ عُثْمَانُ قَالَ: أَلاَ أُحَدِّثُكُمْ حَدِيثًا لَوْلاَ آيَةٌ مَا حَدَّثْتُكُمُوهُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَتَوَضَّأُ رَجُلٌ يُحْسِنُ وُضُوءَهُ، وَيُصَلِّي الصَّلاَةَ، إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الصَّلاَةِ حَتَّى يُصَلِّيَهَا»

உஸ்மான் (ரலி) அவர்கள் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் செய்தார்கள். தமது கைகளில் மணிக்கட்டு வரை மூன்று தடவை ஊற்றிக் கழுவினார்கள். பின்னர் தமது வலது கையை (பாத்திரத்தில்) விட்டு (தண்ணீர் எடுத்து) வாய் கொப்பளித்து மூக்கையும் சுத்தம் செய்தனர். பின்னர் முகத்தையும், மூட்டு வரை இரு கைகளையும் மூன்று தடவை கழுவினார்கள்.

பின்னர் தலைக்கு மஸஹ் செய்தார்கள். பின்னர் இரு கால்களையும் கரண்டை வரை மூன்று தடவை கழுவினார்கள். பின்னர், ‘எனது இந்த உளூவைப் போல் யார் உளூச் செய்து வேறு எண்ணத்திற்கு இடமளிக்காமல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுகின்றாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்று உஸ்மான் (ரலி) தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான்,
நூல்: (புகாரி: 160) 

உஸ்மான் (ரலி) அவர்கள் மணிக்கட்டு வரை கழுவிய பின் பாத்திரத்தில் கை விட்டு தண்ணீர் எடுத்துள்ளனர். அதன் மூலம் மற்ற உறுப்புகளைக் கழுவியுள்ளனர். இறுதியில் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்து காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதே கருத்தில் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

(நூல்: (புகாரி: 192))

நபி அவர்களின் செயல்முறை விளக்கம் மட்டுமின்றி வாய் மொழியாகவும் அவர்கள் அனுமதி அளித்ததற்குச் சான்றுகள் உள்ளன.

وَإِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ

‘உங்களில் ஒருவர் தூக்கத்திருந்து விழித்தால் உளூச் செய்யும் தண்ணீரில் கையை விடுவதற்கு முன் கையைக் கழுவிக் கொள்ளட்டும்; ஏனெனில் அவரது கை எங்கெங்கே பட்டது என்பதை அவர் அறிய மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 162) 

படக் கூடாத இடத்தில் கை பட்டிருக்கும் என்பதற்காகவே கையை நபி (ஸல்) அவர்கள் கழுவச் சொல்கின்றார்கள். இவ்வாறு கழுவி விட்டால் பாத்திரத்தில் கையை விட்டு தண்ணீர் எடுத்து உளூச் செய்யலாம் என்று தெளிவான அனுமதியை அளித்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் தெளிவான அனுமதியளித்த பின் அதை நிராகரிக்க எந்தக் காரணத்தை யார் கூறினாலும் ஏற்கத் தேவையில்லை.

மீதம் வைத்த தண்ணீர்

பெண்கள் உளூச் செய்து மீதம் வைத்த தண்ணீரில் ஆண்களும், ஆண்கள் மீதம் வைத்த தண்ணீரில் பெண்களும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையும் தவறாகும்.

«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ جَنَابَةٍ»

‘கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது நானும், நபி (ஸல்) அவர்களும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் குளித்திருக்கின்றோம்’ என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்: (புகாரி: 263) 

கடமையான குளிப்பும் உளூவைப் போலவே மார்க்க அடிப்படையிலான தூய்மைப்படுத்துதல் ஆகும். ஒரு நேரத்தில் ஒரு பாத்திரத்தில் கணவன், மனைவி இருவரும் தண்ணீர் எடுத்துக் குளிக்கும் போது இருவர் மேனியில் பட்ட தண்ணீர் துளிகள் பாத்திரத்தில் விழாமல் இருக்காது. தண்ணீரை எடுப்பதற்காகக் கையைக் கொண்டு செல்லும் போது கையிருந்து பாத்திரத்தில் தண்ணீர் விழும். அப்படியிருந்தும் அதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்தவில்லை.

எனவே உளூச் செய்யும் போதும், கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் ஒருவர் மீதம் வைத்த தண்ணீரை மற்றவர் பயன்படுத்துவது குற்றம் இல்லை என்பதை இதிருந்து விளங்கலாம்.

வீட்டுப் பிராணிகள் வாய் வைத்த தண்ணீர்

மனிதர்களை அண்டி வாழும் கோழி, சிட்டுக் குருவி, காகம், பூனை போன்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நம்புகின்றனர். இதுவும் தவறாகும்.

عَنْ كَبْشَةَ بِنْتِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَتْ عِنْدَ ابْنِ أَبِي قَتَادَةَ،
أَنَّ أَبَا قَتَادَةَ دَخَلَ عَلَيْهَا، قَالَتْ: فَسَكَبْتُ لَهُ وَضُوءًا، قَالَتْ: فَجَاءَتْ هِرَّةٌ تَشْرَبُ، فَأَصْغَى لَهَا الإِنَاءَ حَتَّى شَرِبَتْ، قَالَتْ كَبْشَةُ: فَرَآنِي أَنْظُرُ إِلَيْهِ، فَقَالَ: أَتَعْجَبِينَ يَا بِنْتَ أَخِي؟ فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّهَا لَيْسَتْ بِنَجَسٍ، إِنَّمَا هِيَ مِنَ الطَّوَّافِينَ عَلَيْكُمْ، أَوِ الطَّوَّافَاتِ»

அபூகதாதா (ரலி) அவர்கள் உளூச் செய்வதற்காக நான் தண்ணீர் எடுத்து வைத்தேன். உடனே ஒரு பூனை வந்து அதைக் குடிக்க ஆரம்பித்தது. பூனை குடிப்பதற்கு ஏற்றவாறு பாத்திரத்தை அவர் சாய்த்தார். ‘என் சகோதரர் மகளே! இதில் ஆச்சரியப்படுகிறாயா?’ என்று கேட்டார். நான் ஆம் என்றேன். ‘இவை அசுத்தமில்லை. இவை உங்களைச் சுற்றி வரக் கூடியவையாகும்’ என்று நபி (ஸல்) கூறியதாகக் குறிப்பிட்டார்.

அறிவிப்பவர்: கப்ஷா
நூல்கள்: (திர்மிதீ: 92) (85), நஸயீ 67,(அபூதாவூத்: 68)

பூனை வாய் வைத்தால் தண்ணீர் அசுத்தமாகாது என்பதும், அத்தண்ணீரில் உளூச் செய்யலாம் என்பதும் இதிருந்து தெரிகின்றது. மேலும் ‘இவை உங்களைச் சுற்றி வரக் கூடிய பிராணிகள்’ என்ற வாக்கியம், காட்டில் வசிக்காமல் வீட்டைச் சுற்றி வரும் பிராணிகள் அனைத்துக்கும் பொருந்தும் என்பதை விளக்குகின்றது.

மனிதர்களுடன் அண்டி வாழும் பிராணிகளில் நாயைத் தவிர மற்ற பிராணிகள் வாய் வைத்த தண்ணீரில் உளூச் செய்யலாம்.

إِذَا شَرِبَ الكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا

‘நாய் வாய் வைத்து விட்டால் ஏழு தடவை பாத்திரத்தைக் கழுவ வேண்டும்’ என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்.

நூல்: (புகாரி: 172) 

சூடாக்கப்பட்ட தண்ணீர்

சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், வெந்நீரிலும் உளூச் செய்யக் கூடாது என்று சிலர் நினைக்கின்றனர்.

சூரிய வெளிச்சத்தில் சூடாக்கப்பட்ட தண்ணீரை நபி (ஸல்) தடுத்ததாகவும் அதனால் குஷ்ட நோய் வரும் என்று நபி (ஸல்) கூறியதாகவும் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.

காலித் பின் இஸ்மாயீல், வஹப் பின் வஹப், ஹைஸம் பின் அதீ போன்றோர் தான் இது பற்றிய ஹதீஸ்களை அறிவிக்கின்றனர். இவர்கள் பெரும் பொய்யர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்களுமாவர்.

(பார்க்க: (தாரகுத்னீ: 86))

எனவே சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும், நெருப்பால் சூடாக்கப்பட்ட தண்ணீரிலும் உளூச் செய்ய எந்தத் தடையும் இல்லை.

வீட்டில் உளூச் செய்தல்

வீட்டில் உளூச் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டில் உளூச் செய்து விட்டுப் புறப்படுவதே சிறந்ததாகும். ஒருவர் உளூச் செய்த நிலையில் பள்ளிவாசலுக்குச் சென்றால் அவர் நடந்து செல்வது கூட வணக்கமாகக் கருதப்படும்.

« صَلاَةُ الجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ، خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ، وَأَتَى المَسْجِدَ، لاَ يُرِيدُ إِلَّا الصَّلاَةَ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ المَسْجِدَ، وَإِذَا دَخَلَ المَسْجِدَ، كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي – يَعْنِي عَلَيْهِ المَلاَئِكَةُ – مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ »

‘ஒருவர் தமது வீட்டிலும், கடை வீதியிலும் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகின்ற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்கு ஒரு படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகின்றான். ஒரு பாவத்தை அவரை விட்டும் நீக்குகின்றான்.

தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும் போது அவர் தொழுபவராகவே கருதப்படுவார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்குத் தொல்லை அளிக்காத வரையில் இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!’ என்று வானவர்கள் கூறுகின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: (புகாரி: 477) ,(முஸ்லிம்: 1059)

பள்ளிவாசலில் உளூச் செய்ய ஏற்பாடு செய்தல்

வீட்டில் உளூச் செய்ய வசதியுள்ளவர்கள் வீட்டிலேயே உளூச் செய்வது தான் சிறப்பு என்றாலும் அத்தகைய வசதி வாய்ப்பு இல்லாதவர்களுக்காக, பள்ளிவாசலின் சார்பில் ஏற்பாடு செய்வது குற்றமில்லை.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
حَضَرَتِ الصَّلاَةُ فَقَامَ مَنْ كَانَ قَرِيبَ الدَّارِ مِنَ المَسْجِدِ يَتَوَضَّأُ، وَبَقِيَ قَوْمٌ، فَأُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِخْضَبٍ مِنْ حِجَارَةٍ فِيهِ مَاءٌ، «فَوَضَعَ كَفَّهُ، فَصَغُرَ المِخْضَبُ أَنْ يَبْسُطَ فِيهِ كَفَّهُ، فَضَمَّ أَصَابِعَهُ فَوَضَعَهَا فِي المِخْضَبِ فَتَوَضَّأَ القَوْمُ كُلُّهُمْ جَمِيعًا» قُلْتُ: كَمْ كَانُوا؟ قَالَ: ثَمَانُونَ رَجُلًا

தொழுகை நேரம் வந்தது. பள்ளிவாசலுக்கு அருகில் யாருடைய இல்லங்கள் அமைந்திருந்தனவோ அவர்கள் உளூச் செய்ய (வீட்டிற்குச்) சென்றனர். சிலர் எஞ்சினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் கல் பாத்திரம் ஒன்று தண்ணீருடன் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தமது கையை வைத்தனர். நபி (ஸல்) அவர்களால் அதனுள் தமது கையை விரிக்க இயவில்லை.

எனவே தமது விரல்களை இணைத்து அப்பாத்திரத்தில் வைத்தனர். எஞ்சிய அனைவரும் உளூச் செய்தனர்’ என்று அனஸ் (ரலி) கூறினார்கள். ‘(அப்போது) எத்தனை பேர்கள் இருந்தனர்?’ என்று அவர்களிடம் நான் கேட்டேன். ‘எண்பது பேர்கள்’ என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹுமைத்
நூல்: (புகாரி: 3575)