வானவர்களை நாம் பார்க்க முடியுமா?
சில அறிஞர்கள் பயான் செய்யும் நிகழ்ச்சிகளில் வானவர்கள் வந்து கலந்து கொள்வதாகக் கூறி ஒரு வீடியோவையும் பரப்பி வருகின்றனர். இது உண்மையா?
வானவர்களை நாம் காண முடியுமா?
வானவர்கள் பல்வேறு சபைகளுக்கு ஆஜராவதாக ஹதீஸ்கள் உள்ளன. அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதால் மறைவான விஷயம் என்ற அடிப்படையில் நாம் நம்புகிறோம். ஆனால் அந்த சபையில் நாம் இருந்தாலும் வானவர்களை நாம் காண முடிவதில்லை.
صحيح البخاري (1/ 103)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத் தெருவில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் (கூட்டுத் தொழுகை) தொழுவது, மதிப்பில் இருபத்தி ஐந்து கூடுதலாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் உளூ செய்து, அதை செம்மையாகச் செய்து, தொழும் நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்குள் வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஓர் தகுதியை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகின்றான்; ஒரு பாவத்தை அவரை விட்டு நீக்குகின்றான். தொழுகையை எதிர்பார்த்து அவர் பள்ளிவாசலில் இருக்கும் போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். மேலும் அவர் எந்த இடத்தில தொழுகின்றாரோ அந்த இடத்திலேயே இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால், சிறுதுடக்கு (காற்றுப்பிரிதல்) மூலம் அவர் பள்ளிக்குள் உபத்திரவம் செய்யாமல் இருக்க வேண்டும். அப்போது வானவர்கள், இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக! என்று பிரார்த்திக்கின்றார்கள்.
நூல்: (புகாரி: 477)
பள்ளிவாசலில் தொழுகைக்காக நாம் காத்திருக்கும் போது வானவர்கள் அந்தச் சபையில் இருந்தாலும் அவர்கள் நம் கண்களுக்குத் தென்படுவதில்லை.
صحيح البخاري (1/ 115)
” يَتَعَاقَبُونَ فِيكُمْ مَلاَئِكَةٌ بِاللَّيْلِ وَمَلاَئِكَةٌ بِالنَّهَارِ، وَيَجْتَمِعُونَ فِي صَلاَةِ الفَجْرِ وَصَلاَةِ العَصْرِ، ثُمَّ يَعْرُجُ الَّذِينَ بَاتُوا فِيكُمْ، فَيَسْأَلُهُمْ وَهُوَ أَعْلَمُ بِهِمْ: كَيْفَ تَرَكْتُمْ عِبَادِي؟ فَيَقُولُونَ: تَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ، وَأَتَيْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக உங்களிடையே வருகின்றனர். ஃபஜ்ர் தொழுகையிலும், அஸ்ர் தொழுகையிலும் ஒன்று கூடுகின்றார்கள். பிறகு, உங்களிடையே இரவு தங்கியவர்கள் மேலேறி (இறைவனிடம்) செல்கின்றனர். அப்போது மக்களைப் பற்றி மிகவும் அறிந்தவனான அல்லாஹ் அவர்களிடம், என் அடியார்களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்று கேட்பான். அதற்கு அவர்கள், உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டுவந்தோம்; அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம் என்று பதிலளிப்பார்கள்.
நூல்: (புகாரி: 555)