03) ஆதம் (அலை) தவறு செய்த போது?

நூல்கள்: இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

2. ஆதம் (அலை) தவறு செய்த போது?

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்த பின்னர், “என் இறைவா! நான் செய்த தவறை முஹம்மதின் பொருட்டால் நீ மன்னித்து விடு!” என்று பிரார்த்தனை செய்தனர். அதைக் கேட்ட அல்லாஹ், “ஆதமே! நான் இன்னும் முஹம்மதைப் படைக்கவே இல்லையே! அவரைப் பற்றி நீ எப்படி அறிந்து கொண்டாய்?” என்று கேட்டான். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “என்னை நீ படைத்த உடனே என் தலையை உயர்த்தி உனது அர்ஷைக் கண்டேன். அதில் “லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று எழுதப்பட்டிருந்தது. உன் பெயருடன் இணைத்து முஹம்மதின் பெயரையும் நீ எழுதியுள்ளதால் அவர் உனக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து கொண்டேன்” என்று பதில் கூறினார்கள். உடனே அல்லாஹ், “முஹம்மதின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதால் உன்னை நான் மன்னிக்கிறேன்” என்று கூறினான்.

அடிக்கடி நாம் கேள்விப்படுகின்ற, மார்க்க அறிஞர்களால் அடிக்கடி கூறப்படுகின்ற, எழுதப்படுகின்ற ஒரு நிகழ்ச்சியைத் தான் நாம் மேலே எழுதி இருக்கிறோம்.

ஹாகிம், பைஹகீ, தப்ரானி ஆகியோர் இதனைத் தங்களின் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்து உள்ளனர்.

இது சரியானது தானா? என்று கடந்த காலத்தில் வாழ்ந்த ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஆராய்ந்து “இது திட்டமிட்டு இட்டுக்கட்டப்பட்ட ஒரு கற்பனை நிகழ்ச்சி” என்று முடிவு செய்திருக்கின்றனர். அதனை நாம் விரிவாகப் பார்ப்போம்.

அறிவிப்பாளரின் தகுதி

ஒரு ஹதீஸை அறிவிக்கக் கூடியவர் பொய் சொல்வராகவோ, தீய செயல்கள் புரிபவராகவோ, அல்லது நினைவாற்றல்குறைந்தவராகவோ இருந்தால் அதனை ஹதீஸ் என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் ஏற்பதில்லை.

அறிவிப்பாளரின் தகுதியை வைத்தே ஒரு ஹதீஸ் ஏற்கத் தக்கது என்றோ, ஏற்கத் தகாதது என்றோ முடிவுக்கு வருகின்றனர். இது நபிமொழி ஆய்வாளர்கள் அனைவரும் ஒருமித்து ஏற்றுக் கொண்ட அளவு கோளாகும்.

இந்த அளவுகோலை அடிப்படையாக வைத்து இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தகுதி எத்தகையது என்பதை நாம் பார்ப்போம்.

அப்துர் ரஹ்மான் பின் ஸைது பின் அஸ்லம்

“முஸ்தத்ரக்” என்று நூலில் ஹாகீம் அவர்களும்,

தலாயிலுன்னுபுவ்வத்” என்ற நூலில் பைஹகீ அவர்களும்,

முஃஜமுஸ் ஸகீர்’ என்ற நூலில் தப்ரானி அவர்களும்

இதனைப் பதிவு செய்துள்ளனர். மேற்கூறிய மூவருமே அப்துர் ரஹ்மான் பின் ஸைது பின் அஸ்லம் என்பவர் மூலமாகவே இதனை அறிவிக்கின்றனர்.

இதனைத் தனது நூலில் பதிவு செய்துள்ள பைஹகீ அவர்கள், “இந்த ஹதீஸ் அப்துர் ரஹ்மான் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றது. அவர் பலவீனமானவர்; ஏற்கத்தக்கவர் அல்லர்” என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்த ஹதீஸைத் தமது நூலில் பதிவு செய்து விட்டு அதன் தரத்தையும் அவர்களே நமக்குச் சொல்லி விடுகிறார்கள்.

இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்துள்ள இன்னொரு நூலாசிரியர் ஹாகிம் அவர்கள் தமது “மஃரிபதுஸ் ஸஹீஹ் மினஸ் ஸகீம்” என்ற நூலில் “அப்துர் ரஹ்மான் தன் தந்தை கூறியதாக ஏராளமாக இட்டுக் கட்டியவர்” என்று அடையாளம் காட்டி இருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தைப் பரிசீலனை செய்த தஹபீ அவர்களும், இப்னு ஹஜர் அவர்களும், முறையே தங்களின், “மீஸானுல் இஃதிதால்” “அல்லிஸான்” என்ற நூல்களில் “இந்த அப்துர் ரஹ்மான் ஏற்கத்தக்கவர் அல்லர். இந்த நிகழ்ச்சி இட்டுக்கட்டப்பட்டது” என்று குறிப்பிடுகிறார்கள். இப்னு கஸீர் அவர்கள் தமது சரித்திர நூலில் அப்துர் ரஹ்மானைப் பற்றி இப்படியே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“அப்துர் ரஹ்மான் பலவீனமானவர்” என்று ஹதீஸ் கலை வல்லுநர்கள் அனைவரும் ஏகோபித்துக் கூறியதாக இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அலி இப்னுல் மதனீ, இப்னு ஸஃது, தஹாவீ போன்ற அறிஞர்கள் “அப்துர் ரஹ்மான் மிக மிகப் பலவீனமானவர்” என்று குறிப்பிடுகிறார்கள்.

“இவர் செய்திகளைத் தலை கீழாக மாற்றக் கூடியவர்” என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இப்னு தைமிய்யா அவர்களும் அப்துர் ரஹ்மானைப் பற்றி இதே கருத்தையே தெரிவிக்கின்றனர்.

ஒரு மனிதன் சொல்வதை ஏற்பதென்றால், அந்த மனிதனை, அவனது தகுதிகளை எடை போட்டுப் பார்த்தே ஏற்றுக் கொள்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒன்றை அறிவிப்பவரின் தகுதி எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

“நான் சொல்லாததை நான் சொன்னதாக எவன் கூறுகின்றானோ அவன் தனது தங்குமிடமாக நரகத்தைப் பெறுவான்” என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

(புகாரி: 106, 107, 1291), இந்த எச்சரிக்கைக்குப் பின் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது.

“கேட்டதை எல்லாம் (ஆராயாமல் அப்படியே) அறிவிப்பது, ஒரு மனிதன் பொய்யன் என்பதற்குப் போதிய சான்றாகும்”

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 6)

என்ற நபிமொழியும் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றது.

இந்தச் செய்தியை அறிவிக்கும் அப்துர்ரஹ்மானைப் பற்றி எல்லா அறிஞர்களும் பொய்யெரென்றும், இட்டுக்கட்டக் கூடியவர் என்றும், பலவீனமானவர் என்றும் ஒருமித்து கருத்துக் கூறி இருக்கும் போது அவர் வழியாக அறிவிக்கப்படுவதை எப்படி ஏற்க இயலும்?

திருக்குர்ஆனின் தீர்ப்பு

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 2:37)

இறைவனிடமிருந்து ஆதம் (அலை) அவர்கள், சில சொற்களைக் கற்றுக் கொண்டதாக இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான். ஆதம் (அலை) அவர்கள் இறைவனிடமிருந்து கற்றுக் கொண்ட அந்தச் சொற்கள் எவை? என்பதை நாம் ஆராய வேண்டும்.

திருக்குர்ஆனின் ஒரு இடத்தில், கூறப்பட்ட வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமைந்திருக்கும் என்ற அடிப்படையில் திருக்குர்ஆனை நாம் புரட்டிக்கொண்டே வரும் போது ஒரு இடத்தில்

“எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்” என்று அவ்விருவரும் (ஆதம், ஹவ்வா) கூறினர்.

(அல்குர்ஆன்: 7:23)

என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

இறைவனிடமிருந்து ஆதம் (அலை) அவர்கள் கற்றுக் கொண்ட சொற்கள் இது தான். இதைக் கூறியே அவர்கள் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள் என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறியலாம்.

“முஹம்மதின் பொருட்டால் மன்னிப்பாயாக” என்று ஆதம் (அலை) அவர்கள் கூறியதாக இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடவில்லை. மாறாகத் தங்களின் தவறை உணர்ந்து, தங்களின் இயலாமையை எடுத்துக்காட்டி இறைவனின் வல்லமையைப் பறை சாற்றி அவனிடம் மன்னிப்புக் கேட்டதாகத் தான் இந்த வசனத்திலிருந்து விளங்க முடிகின்றது. இந்த அடிப்படையிலும் அந்த நிகழ்ச்சி சரியானதல்ல என்ற முடிவுக்கு வர முடியும்.

மேலும் அதே வசனத்தில் (2:37) இறைவனிடமிருந்து சில சொற்களைக் கற்றுக் கொண்டு அதனடிப்படையில் ஆதம் (அலை) அவர்கள் மன்னிப்புக் கேட்டதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் இந்த ஆதாரமற்ற ஹதீஸில் ஆதம் (அலை) அவர்கள் தாமாகவே மன்னிப்புக் கேட்கும் முறையை அறிந்து கொண்டார்கள் என்றும் அதனால் தான் அல்லாஹ் மன்னித்தான் என்றும் கூறப்படுகிறது. இது திருக்குர்ஆனுடன் நேரடியாகவே மோதுகின்றது அல்லவா?

எனவே இந்த அடிப்படையில் நாம் ஆராய்ந்து பார்க்கையில் ஆதம் (அலை) அவர்கள் தமது மன்னிப்புக்காக 7:23 வசனத்தில் உள்ள சொற்களையே பயன்படுத்தினார்கள் என்றும், இந்தக் கதையில் கூறப்பட்டது போல் அல்ல என்றும் தெரிந்து கொள்கிறோம்.