01) முன்னுரை
இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் வரலாறுகளுக்கும், கதைகளுக்கும் பெரும் பங்கு உண்டு. முஸ்லிம் சமுதாயம் இதிலிருந்து விலக்குப் பெறவில்லை.
நல்லவர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான நிகழ்ச்சிகள், அவர்களின் ஈமானிய உறுதி, தியாகம், வீரம், இறைவனுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்ற பண்பு ஆகியவற்றை அடிக்கடி செவுயுறுகின்ற ஒரு சமுதாயம், அவர்களின் அந்த நல்ல பண்புகளைத் தானும் கடைபிடித்து ஒழுகுவதைக் காணலாம்.
இந்த அடிப்படையில் தான் பல நபிமார்களின் வாழ்க்கையில் பாடமாக அமைந்துள்ள பகுதிகளை இறைவன் திருக்குர்ஆனில் கூறுகிறான். “அவர்களின் வரலாறுகளில் அறிவுடைய மக்களுக்குப் படிப்பினை உள்ளது” (12:111) எனவும் அல்லாஹ் கூறுகிறான்.
இது போல் கற்பனைகளையும், கதைகளையும் அடிக்கடி படிக்கும் சமுதாயம் அதனால் பாதிக்கப்படுவதையும் காண முடிகின்றது. காமக் கதைகள் மலியும் போது அதை சகித்துக் கொள்ளும் சமுதாயம் அதற்குப் பலியாகிப் போய் விடுகின்றது. 20ஆம் நூற்றாண்டின் ஒழுக்கச் சீரழிவுக்கு முதற்காரணமாக அமைந்தது இந்த நூற்றாண்டில் நிலவி வரும் கதைகளே என்றால் அது மிகையாகாது.
மனிதர்களின் இந்தப் பலவீனத்தைப் புரிந்து கொண்ட ஏமாற்றுப் பேர்வழிகள் இஸ்லாத்தின் பெயராலும் கதைகளைப் புனைந்து தங்களது ஏமாற்று வேலையை நியாயப்படுத்தலானார்கள். அத்தகைய கதைகள் இந்தச் சமுதாயத்தில் ஏராளம்! அது ஏற்படுத்திய தீய விளைவுகளும் ஏராளம்!
சமாதி வழிபாட்டை நியாயப்படுத்த நல்லவர்களின் பெயரைப் பயன்படுத்தி அதற்கேற்ப ஒரு கதை!
புரோகிதத்தை நியாயப்படுத்த அதற்கு ஏற்றவாறு ஒரு கதை!
சூபிசத்தை நியாயப்படுத்த அதற்கு ஏற்றவாறு ஒரு கதை!
தனி நபர் வழிபாட்டை நியாயப்படுத்தவும் கதைகள் ஏராளம்.
சமுதாயத்தின் நம்பிக்கையைத் தகர்க்கும் பல நூறு கதைகளில் ஒரு சில கதைகளைச் சமுதாயத்திற்கு இனம் காட்டுவது அவசியம்.
போலிகளை இனம் காண உதவும் என்ற எண்ணத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு இதழ்களில் நான் எழுதிய கட்டுரைகளே நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது.
நூல் ஆசிரியர் : பீ.ஜெய்னுல் ஆபிதீன்
பொருளடக்கம்
1. மண் கேட்ட படலம்
2. ஆதம் (அலை) தவறு செய்த போது?
3. மலக்குகளை ஏமாற்றிய இத்ரீஸ் (அலை)
4. நெருப்புக் குண்டத்தில் எறியப்பட்ட போது?
5. சாகாவரம் பெற்றவர்.
6. ஒளியிலிருந்து.
7. நரகம் தீண்டாத அபூலஹபின் விரல்!
8. கஃபா இடம் பெயர்ந்ததா?