5) ஓரிறைக் கொள்கை ரீதியிலானவை

நூல்கள்: மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்

கலப்பில்லாத ஓரிறைக் கொள்கை

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும் எடுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதைப் பாக்கலாம்

உயிரோடு உள்ள மனிதர்களை வணங்குகிறார்கள். இறந்தவர்களை வணங்குகிறார்கள். பொருட்களை வணங்குகிறார்கள். இப்படியெல்லாம் நடப்பதை இன்றைய உலகில் பார்க்கிறோம்.

தெளிவாகவே பல கடவுள் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மதங்களையும் நாம் பார்க்கிறோம்.

ஆக்குவதற்கு ஒரு கடவுள்!

அழிப்பதற்கு ஒரு கடவுள்!

காப்பதற்கு ஒரு கடவுள்!

துன்பத்தை நீக்க ஒரு கடவுள்!

இன்பத்தை வழங்க மற்றொரு கடவுள்!

மழைக்குத் தனி கடவுள்!

உணவு வழங்க இன்னொரு கடவுள்!

கல்விக்கு என்று ஒரு கடவுள்! என்று கணக்கின்றி கடவுள்கள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

ஒரு மனிதனை அழிக்க வேண்டுமென அழிக்கும் கடவுள் முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கும் வேளையில் காக்கும் கடவுள் அதே மனிதனைக் காக்கும் முயற்சியில் இறங்கினால் என்ன ஏற்படும்? அந்த மனிதன் அழிக்கப்படுவானா? காக்கப்படுவானா?

இரண்டில் எது நடந்தாலும் ஒரு கடவுள் தோற்று விடுகிறான். தோற்றவன் கடவுளாக இருக்க முடியுமா? தான் நினைத்ததைச் சாதிக்க இயலாதவன் கடவுள் என்ற தகுதிக்கு எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?

தமிழனுக்கும், மலையாளிக்கும் அல்லது இந்தியனுக்கும், அரபியனுக்கும் அல்லது குரைஷிக்கும் ஹபஷிக்கும் சண்டை ஏற்பட்டால் இருவரும் தத்தமது கடவுள்களை அழைத்து உதவி தேடினால் இரு கடவுள்களும் தத்தமது அடிமையைக் காக்க முன் வந்தால் என்னவாகும்? இருவரில் யார் தோற்றாலும் அங்கே கடவுளல்லவா தோற்றுப் போகிறான்?

இந்தப் பூமியையும், ஏனைய கோள்களையும், அண்ட வெளியையும், அவற்றில் வாரி இறைக்கப்பட்டுள்ள அதிசயங்களையும் நாம் காண்கிறோம். இவற்றின் இயக்கங்கள் யாவும் ஒரே சீராகவும், ஒழுங்குடனும் அமைந்துள்ளதையும் பார்க்கிறோம்.

ஆயிரம் வருடத்துக்குப் பிறகு ஒரு ஜனவரி 7ம் தேதியில் சென்னையில் எத்தனை மணிக்கு சூரியன் உதிக்கும்; அல்லது மறையும் என்பதை இப்போதே நம்மால் கணித்துச் சொல்ல முடிகிறது. கணித்துச் சொல்ல முடிகிற அளவுக்கு சூரியன் மற்றும் பூமியின் இயக்கங்கள் திட்டமிட்டபடி சீராக உள்ளன என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

எப்போதோ ஏற்படும் சூரிய, சந்திர கிரகணங்களை இன்றைக்கே கணக்கிட முடிகிறது. ‘எந்தெந்தப் பகுதியில் எவ்வளவு நேரம் கிரகணம் நீடிக்கும்; எந்தெந்தப் பகுதியில் முழுமையாக இருக்கும் என்றெல்லாம் கூட அறிவிக்க முடிகிறது.

பல கடவுள்கள் இருந்தால் ஒரே சீராக இவை இயங்கவே முடியாது. ஒருவனின் ஒரே உத்தரவின் படி இயங்குவதால் தான் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதில்லை.

இப்படி அழுத்தம் திருத்தமான கடவுள் கொள்கையை இஸ்லாம் கொண்டிருக்கின்றது.

ஒரு கடவுள் தான் என்ற கொள்கையை கடந்த காலங்களில் எத்தனையோ பேர் போதித்துள்ளனர். ஆனால் அவர்கள் பிற்காலத்தில் கடவுளர்களாக ஆக்கப்பட்டனர். ஒரு கடவுள்’ கொள்கையைச் சொன்னவர்கள் பெயராலேயே ஒரு கடவுள்’ கொள்கைக்குச் சமாதி கட்டப்பட்டது.

ஆனால் கடைசி இறைத் தூதரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு கடவுள்’ கொள்கையைச் சொன்னார்கள்.

அவர்கள் மரணித்து பதினான்கு நூற்றாண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் அவர்கள் கடவுளாக ஆக்கப்படவில்லை.

நபிகள் நாயகத்துக்கு சிலை வைக்கப்படவில்லை. நபிகள் நாயகத்தை எந்த முஸ்லிமும் வழிபடுவதில்லை.

நபிகள் நாயகத்தின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தும் அதன் எல்லையை முஸ்லிம்கள் மிகச் சரியாக விளங்கி வைத்துள்ளனர்.

மனிதர்களிலேயே நபிகள் நாயகம் மிகச் சிறந்தவர்கள் என்பது தான் அந்த எல்லை.

இதைக் கடந்து கடவுள் நிலைக்கு அவர்களை எந்த முஸ்லிமும் உயர்த்துவதில்லை.

அதனால் தான் இஸ்லாத்தில் ஓரிறைக் கொள்கை வறட்டுத் தத்துவமாக இல்லாமல் உயிரோட்டத்துடன் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.

இத்தகைய தெளிவான கடவுள் கொள்கை உலகில் எந்த மதத்திலும் காண முடியாததாகும்.

கடவுளுக்குச் சொந்த பந்தங்கள் இல்லை

அண்ணன், தம்பி, தாய், தந்தை, பாட்டன், சித்தப்பன், தங்கை என்ற உறவுகள் கடவுளுக்கு இருக்கக் கூடாது. இதை இஸ்லாம் அழுத்தமாக அறிவிக்கிறது.

‘அல்லாஹ் ஒருவன் என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

(அல்குர்ஆன்: 112:1-4)

நீங்கள் யாரைக் கடவுள் என்ற நம்புகிறீர்களோ அந்தக் கடவுள் யாருக்காவது பிறந்தான் எனில் அங்கே ஒரு பலவீனம் ஏற்படுகிறது. உங்களுடைய கடவுள் கொள்கையில் உங்களுக்கே முரண்பாடு ஏற்படுகிறது.

முரண்பாடு என்னவென்றால் கடவுள் தான் அனைத்தையும் படைத்தார் என்றும் சொல்கிறீர்கள். அந்தக் கடவுளே ஒரு காலத்தில் இல்லாமல் இருந்திருக்கிறார் என்றும் சொல்கிறீர்கள்.

கடவுள் யாருக்கோ பிறந்தார் என்றால் அவர் பிறப்பதற்கு முன்புள்ள கால கட்டத்தில் கடவுள் என்று ஒருவர் இல்லை. அதாவது கடவுளுக்கு முன்பே கடவுளுடைய பெற்றோர்கள் உலகில் இருந்திருக்கிறார்கள்.

கடவுளுக்கு முன்பே இவ்வுலகம் இருந்திருக்கிறது என்ற கருத்து இதனால் ஏற்படும்.

கடவுளுடைய தாயும், தந்தையும் கடவுளுக்கு முன்பே உலகில் இருந்தால் அவர்கள் தான் கடவுளர்களாக இருப்பதற்குத் தகுதி பெற்றவர்கள்.

இல்லாமையிலிருந்து இருவரின் உடற்சேர்க்கையினால் பிறந்தவர் எப்படிக் கடவுளாக முடியும்?

எனவே தான் நீங்கள் வணங்கும் ஒரு கடவுளான, உங்களைப் படைத்த அல்லாஹ்வுக்குச் சந்ததி கிடையாது. அவனுக்குத் தாய் தகப்பனும் கிடையாது என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

கடவுளுக்குப் பெற்றோர் இருக்க முடியாது என்பது போல் கடவுளுக்குச் சந்ததியும் இருக்க முடியாது என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

யாருக்குச் சந்ததி தேவைப்படும்? அழிவை எதிர்பார்த்து இருப்போருக்குத் தான் சந்ததி தேவைப்படும். ஒவ்வொரு மனிதனும் அழிவை எதிர்பார்த்து இருப்பதன் காரணத்தினாலேயே சந்ததிகளை விரும்புகிறான்.

நாம் அழிந்து விடுவோம்; நம்முடைய பெயர் சொல்ல ஒருவன் வேண்டும்; நம்முடைய சொத்துக்களை அனுபவிக்க ஒருவன் வேண்டும்; நம்முடைய அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள ஒருவன் வேண்டும் என்று எண்ணுகிற காரணத்தினாலும், வயதான காலத்தில் நம்மைக் கவணித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினாலும் தான் மனிதன் சந்ததியை விரும்புகிறான்.

‘இவனுக்கு அழிவு இல்லை; முதுமை இல்லை; என்றும் பதினாறாகவே வாழ்ந்து கொண்டிருப்பான் என்று ஒருவன் வரம் வாங்கினால் அவன் ஏன் சந்ததியை எதிர்பார்க்கப் போகிறான்? அவன் எப்போதும் சந்தோஷமாக ஜாலியாக உலகத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பான்.

ஆனால் கடவுளுக்கு முதுமை இல்லை. கடவுளுக்குப் பலவீனம் இல்லை. கடவுளுக்குச் சோர்வு இல்லை. கடவுளுக்குச் சாவு இல்லை. இவையனைத்தும் இல்லாத ஒருவன் எதற்காகச் சந்ததியைத் தனக்காக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மனைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும். அல்லாஹ் தனக்கு மனைவி இல்லை என்று திருக்குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 6:101)

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ, பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

(அல்குர்ஆன்: 72:3)

மேலும் மனைவி இருப்பது வேறொரு வகையிலும் கடவுளுக்குப் பலவீனமாகும்.

கடவுளுக்கு ஆசை வந்து உணர்ச்சி மேலிட்டு மனைவியோடு இணைந்திருக்கும் நேரத்தில் கடவுளே என்று யாராவது கூப்பிட்டால் என்ன ஆகும்?

அவர் இன்பத்தில் திளைத்து இருக்கும் நேரத்தில் கடவுளிடம் கேட்டால் அவர் எப்படிக் கொடுப்பார். மேலும் கடவுளுக்கு மனைவி இருந்து இன்பம் துய்ப்பதற்காக கொஞ்ச நேரம் ஒதுக்குவாரானல் அந்த நேரத்தில் உலகத்தைக் கண்காணிப்பது யார்? ஏனெனில் கடவுள் என்பவர் 24 மணி நேரமும் உலகத்தைத் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும்.

மனிதனுக்கு எந்த நேரத்திலும் துன்பம் ஏற்படலாம். கடவுள் மனைவியுடன் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் என்னை ஒருவன் கொல்ல வரலாம். கடவுளே என்று நான் அவனிடம் அந்த நேரத்தில் பாதுகாவல் தேடப்போக அவன் போடா வெளியே என்று கூறினால் அது கடவுளுக்குரிய தகுதியாக இருக்காது.

மனைவியுடன் இன்பம் அனுபவித்துக் கொண்டே இந்த உலகத்தையும் கவனிக்கும் வகையில் கடவுள் ஏன் தன்னை ஆக்கிக் கொள்ள முடியாது? என்று சிலர் இதற்குச் சமாதானம் கூறுவார்கள்.

இந்தச் சமாதானத்தை ஒரு பேச்சுக்காக ஏற்றுக் கொண்டாலும், அவருக்கு இன்பம் தருவதற்கு இன்னொருவர் தேவைப்படுகின்றது. இன்னொருவரைச் சார்ந்தே இவரால் இன்பம் பெற முடிகின்றது என்பதை மறுக்க முடியாது. இதற்கு எந்தச் சமாதானமும் கூற முடியாது.

தனக்கே தன்னால் இன்பம் அளித்துக் கொள்ள இயலாதவர் பிறருக்கு எப்படி இன்பம் அளிப்பார்?

அதனால் தான் கடவுள் என்று நம்புவீர்களானால் அவனுக்கு மனைவி இல்லை என்றும் நம்புங்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவனுக்குச் சந்ததி இல்லை என்றும் நம்புங்கள் என்று கூறுகிறது.

ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு கடவுள் தான் உங்களை எல்லா நேரத்திலும் கண்காணிக்க முடியும்.

இறைவனுக்குச் சோர்வும் உறக்கமும் இல்லை

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.

(அல்குர்ஆன்: 2:255)

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக் களைப்பும் ஏற்படவில்லை.

(அல்குர்ஆன்: 50:38)

தூங்குகிறவன் கடவுளாக இருக்க முடியாது. கடவுள் தூங்கிக் கொண்டு இருந்தால் அந்த நேரத்தில் ஜீவராசிகளின் நிலை என்னவாகும்? சூரியன் சந்திரன் பூமி இவைகளையெல்லாம் கடவுள் கண்காணிக்க வேண்டி இருக்கிறது.

அவனுடைய படைப்பினங்களில் 600 கோடி மக்கள் இருக்கிறார்கள். அதில் எத்தனையோ பேருக்கு கடவுள் தூங்கும் நேரத்தில் எத்தனையோ தேவைகள் இருக்கும். அந்த நேரத்தில் இந்த உலகத்தை நிர்வகிப்பவன் யார்? அவனுக்குப் பிரதிநிதி யாராவது உண்டா? துணைக் கடவுள் என்று ஒருவனை துணை ஜனாதிபதி போல் நியமித்துக் கொள்ள முடியுமா?

அதனால் தான் கடவுள் என்று நீங்கள் நம்புகின்ற அவனுக்கு அவனுக்கு அசதி இல்லை என்றும் அவனுக்குத் தூக்கம் இல்லை என்றும் நம்புங்கள் என இஸ்லாம் சொல்கிறது.

தான் தூங்கி விட்டாலும் உலகத்தைக் கண்காணிக்கும் வகையில் கடவுளுக்கு ஆற்றல் இருக்க முடியாதா? என்று இந்த இடத்திலும் கேள்வி எழலாம்.

ஆனால் கடவுளின் கண்கள் ஓய்வின்பால் நாட்டம் கொள்ளும் போது, நம்மைப் போல் அவரும் பலவீனமாக உள்ளார்.

தொடர்ந்து வேலை செய்வதால் நமது உறுப்புகளுக்கு ஏற்படும் சோர்வு கடவுளுக்கும் ஏற்படும் என்றால் இத்தகைய பலவீனர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? என்ற அடிப்படையை எதிர்த்து எந்தக் கேள்வியையும் எழுப்ப முடியாது.

ஆக இந்த அடிப்படையில் ஏனைய மதங்களிலிருந்து இஸ்லாம் எல்லா வகையிலும் வித்தியாசப்படுகிறது. இப்படி எந்த மதமும் கடவுளைச் சொல்லவே இல்லை.

எல்லா நேரத்திலும் அவன் காரியத்திலேயே இருந்து கொண்டு இருக்கிறான் என்று திருக்குர்ஆன் சொல்கிறது.

வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவரில் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 55:18)

கடவுள் ஒரு வினாடி கூட ஓய்வு எடுத்துக் கொள்ள மாட்டார். ஓய்வு எடுத்துக் கொண்டால் கடவுள் என்று கருதுவதற்கே தகுதியற்றவராகிறார். ஏனெனில் ஒவ்வொரு விநாடியிலும் கோடிக் கணக்கான மக்களும், மற்ற உயிரினங்களும் கடவுளின் அருட்பார்வையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். தனக்கு என்று நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கடவுள் போய்விட்டால் பின்பு எதற்கு அந்தக் கடவுள்?

இவ்வாறு சிறந்த கடவுள் கொள்கையை இஸ்லாம் உலகிற்குச் சொல்கிறது.

லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கொள்கையினால் ஏற்படும் மிகச் சிறந்த பயன் இது.

கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்

பொதுவாகக் கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் காரணமாக இருந்தது மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல் தான்.

கடவுளுக்குக் காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும், கடவுளுக்குப் பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதையும் மனிதன் நேரடியாகப் பார்க்கிறார்கள்.

‘கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களே? என்ற கோபம் ஏற்படுகிறது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் கடவுள் மறுப்புக் கொள்கை.

நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்குக் காட்டப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறாரா? அதுவுமில்லை. கடவுளுக்குப் படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். கடவுளை மறுத்துத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.

கடவுள் என்பவன் ஒரு தேவையும் இல்லாதவன் என்று நம்ப வேண்டும். கடவுள் என்பவனுக்குத் தேவை இருந்தால் அவன் என்ன கடவுள்? என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது.

கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்த வேண்டும். கடவுளுக்கு நாம் தேங்காய் உடைக்க வேண்டும். கடவுளுக்கு நாம் வேறு பூஜை பொருள் கொடுக்க வேண்டும் என்றால் அவன் நம்மிடம் வாங்குபவனாக இருக்கின்றான்.

நமக்குத் தருபவனாக கடவுள் இருக்க வேண்டும். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தான் கடவுள் தேவை. அவ்வாறில்லாமல் நாம் கொடுக்கும் பொருள் அவனுக்குத் தேவையென்றால் அவன் என்ன கடவுள்?

அதனால் தான் அல்லாஹ் எந்த விதத் தேவையுமற்றவன் என இஸ்லாம் கூறுகிறது.

கடவுளை வணங்குவதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அங்கே உண்டியல் இருக்காது. காணிக்கை கிடையாது. எந்தப் பொருளையும் வாங்கிச் செல்ல வேண்டியது இல்லை. கடவுளுக்காக எதுவுமே கொடுக்க வேண்டியது இல்லை என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.

கடவுளை நான் வணங்கப் போகிறேன்; அதற்காக 100 ரூபாயை நான் பள்ளிவாசலுக்குக் கொடுத்து விட்டு வரப் போகிறேன் என்றால் அவன் கடவுளை நம்பவில்லை. நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.

கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர படைப்புகளிடம் எதையும் எதிர்பார்ப்பவனாக இருக்கக் கூடாது என்று தெளிவாகப் பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.

(அல்குர்ஆன்: 2:263)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 2:267)

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. ‘அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என்று உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரையும், உங்களையும் வலியுறுத்தியுள்ளோம். நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவையற்றவனாகவும், புகழப்பட்டவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன்: 4:131)

உமது இறைவன் தேவையற்றவன்; இரக்கமுள்ளவன். வேறு சமுதாயத்தின் வழித் தோன்றல்களிலிருந்து உங்களை உருவாக்கியது போல் அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத்துக்குக் கொண்டு வருவான்.

(அல்குர்ஆன்: 6:133)

உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.

(அல்குர்ஆன்: 29:6)

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்; புகழுக்குரியவன்.

(அல்குர்ஆன்: 35:15)

மனிதனைப் பண்படுத்தும் மறுமை நம்பிக்கை

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புபவன் இன்னொன்றையும் நம்புதல் வேண்டும்.

இந்த உலகம் ஒரு நேரத்தில் கடவுளால் அழிக்கப்படும். மொத்த உலகத்தையும் கடவுள் ஒரே நேரத்தில் அழிப்பார். அப்படி அழித்த பிறகு திரும்பவும் இந்த மொத்த உலகத்தையும் கடவுள் உயிர் கொடுத்து எழுப்புவார். மனிதனின் செயல்கள் பற்றி விசாரணை செய்வார். நல்லவனுக்குப் பரிசு கொடுப்பார். கெட்டவனுக்குத் தண்டனை கொடுப்பார். இதை மறுமை என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுள் இருக்கின்றான் என்றால் அவன் நீதி வழங்க வேண்டும்; நியாயம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அத்தனை பேர்களுக்கும் ஒழுங்கான தீர்ப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்காத கடவுள் நமக்குத் தேவையில்லை.

கடவுள் என்று ஒருவன் இருந்தால் கடவுள் தன்னுடைய வேலையைச் செய்ய வேண்டுமா? இல்லையா? கடவுளுடைய வேலை என்ன?

எங்கெங்கே அக்கிரமம் நடக்கின்றதோ அங்கே நீதி வழங்க வேண்டும். நியாயம் வழங்க வேண்டும். ஆனால் இந்த உலகத்தில் நியாயம் கிடைப்பதை நாம் பார்க்க முடியவில்லை. ஒன்பது கொலை செய்தவன் வெளியே வந்து விடுகின்றான். இவனை யார் தண்டிப்பது?

எத்தனையோ பயங்கரவாதிகள் தங்கள் குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலே இவ்வுலகில் சொகுசாக வாழ்ந்து மரணிக்கின்றனர். சட்டத்தில் மாட்டிக் கொண்டாலும் குறுக்கு வழியில் தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்தக் கொலைகாரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த உலகத்தில் அது முடியவில்லை. ஒன்பது கெலை செய்தவனைத் தண்டித்தால் கூட ஒரு தடவை தான் அவனைக் கொலை செய்ய முடியும். ஒன்பது பேர் துன்பப்பட்ட அளவுக்கு இவனைத் தண்டிக்க முடியாது. இந்த உலகத்தில் ஒருவனுக்குப் போதுமான தண்டனை கொடுக்க முடியாது.

நீதி செலுத்தும் கடவுள் இருந்தால் அவன் என்ன செய்ய வேண்டும்? இதற்கு எல்லாம் கணக்குத் தீர்க்க வேண்டும். நல்லவனுக்குச் சரியான பரிசு கொடுக்க வேண்டும். கெட்டவனுக்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

அநீதி இழைத்து விட்டு இவ்வுலகில் சொகுசாக வாழ்பவர்கள் தாங்கள் செய்த ஒவ்வொரு அக்கிரமத்துக்கும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் குளிர வேண்டும். இதற்குத் தான் கடவுள் தேவை.

இஸ்லாம் கூறுகின்ற மறுமை நம்பிக்கை இதற்குச் சரியான தெளிவைத் தருகிறது. கடவுள் நம்பிக்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது.

இவ்வுலகம் மிகவும் அற்பமானது. இது ஒரு சோதனைக் களம். இங்கே தீயவர்கள் சொகுசாக வாழ்வதைக் கண்டு விரக்தியடையாதீர்கள்! நல்லவர்கள் அடுக்கடுக்கான துன்பங்களுக்கு உள்ளாவதைக் கண்டு துவண்டு விடாதீர்கள்!

நல்லவன், கெட்டவன் அனைவரையும் கடவுள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவார். ஒவ்வொரு மனிதனின் தீய செயல்களுக்காகத் தண்டிப்பார். அந்தத் தண்டனை, தீயவனால் பாதிப்படைந்தவனின் மனதைக் குளிரச் செய்யும் அளவுக்கு இருக்கும்.

நல்லவனுக்குப் பரிசு வழங்குவார். நாம் வாழ்நாளை வீணாக்கவில்லை; பட்ட பாட்டுக்குப் பலன் கிடைத்து விட்டது என்று பெரு மகிழ்ச்சி அடையும் அளவுக்கு அந்தப் பரிசு அமையும்.

இப்படி ஒரு நம்பிக்கை மனித உள்ளத்தில் ஏற்பட்டால் கடவுள் எல்லாவற்றையும் கண்காணிக்கிறார்; பார்க்கிறார்; கேட்கிறார். அவருக்கு இயலாதது இவ்வுலகில் ஒன்றுமே இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு நம்பிக்கை கொள்ளும் போது மனிதன் தவறு செய்ய மாட்டான்.

மதவாதிகள் தவறு செய்கிறார்களே? முஸ்லிம்களும் தவறு செய்கிறார்களே? என்று கேட்கக் கூடாது. அப்படிச் செய்கிறார்கள் என்றால் அவர்கள் கடவுளை நம்பும் விதத்தில் நம்பவில்லை, அறை குறையாக நம்புகிறார்கள்.

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுள் கேட்டுக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றிற்கும் ஒரு விசாரணை மன்றம் இருக்கிறது. மிகப் பெரிய சுப்ரீம் கோர்ட் இருக்கிறது. அந்த சுப்ரீம் கோர்ட்டில் அகில உலக மக்களுக்கெல்லாம் விசாரணை இருக்கிறது என்ற நம்பிக்கை ஒருவனுக்கு வந்து விட்டால் அவன் மது அருந்த மாட்டான், விபச்சாரம் செய்ய மாட்டான். மோசடி செய்ய மாட்டான், ஏமாற்ற மாட்டான், திருட மாட்டான், கொள்ளையடிக்க மாட்டான், கொலை செய்ய மாட்டான். வட்டி வாங்க மாட்டான். இந்த மக்களின் கண்களில் மண்ணைத் தூவி நாம் தப்பித்தால் கூட இன்னொரு வாழ்க்கையில் கடவுளிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று நம்புபவன் தவறு செய்ய மாட்டான்.

அறியாமல் அவனை மீறி ஒரு சில நேரங்களில் தவறு செய்யக் கூடுமே தவிர அதையே தொழிலாக, வாடிக்கையாகக் கொள்ள மாட்டான்.

இது போன்று நல்ல பண்பட்ட சமுதாயம் உண்டாக வேண்டும் என்றால் வல்லமை மிக்க ஒரு கடவுளை நம்ப வேண்டும். அந்தக் கடவுள் எல்லோருக்கும் நியாயம் வழங்குவார் என்று நம்ப வேண்டும்.

இப்படிப்பட்ட நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்கு ஊட்டிய காரணத்தினால் தான் அந்தச் சமுதாய மக்களிடம் புரையோடிக் கிடந்த எல்லாத் தீமைகளும் அகன்றன. இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிற தீமைகளை விட அந்தச் சமுதாயத்தில் தீமைகள் அதிகமாக இருந்தன.

அப்படிப்பட்ட மோசமான சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருத்தி பண்படுத்தினர். இப்படி எல்லாத் தீய செயல்களிலிருந்தும் மனிதனை விடுவித்ததற்கு அடிப்படையாகத் திகழ்ந்தது கடவுளை நம்ப வேண்டிய விதத்தில் நம்ப வைத்து சரியான முறையில் அந்த மக்களின் உள்ளத்தில் பதியச் செய்தது தான்.

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு

கடவுளை எப்படி வழிபடுவது? கடவுளுக்கு எப்படி வணக்கம் செய்வது? கடவுளிடம் எப்படிப் பிரார்த்தனை செய்வது? என்பது மட்டுமே பெரும்பாலும் மதங்களில் கூறப்பட்டிருக்கும். திருமணம், பிறப்பு, இறப்பு தொடர்பான சில சடங்குகளும் கூறப்பட்டிருக்கும்

ஆனால் இஸ்லாம் மட்டும் மனித வாழ்க்கையில் நடக்கும் அனைத்துக் காரியங்களிலும் தலையிட்டு இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறது.

உண்ணுவது, பருகுவது, வியாபாரம், விவசாயம், கொடுக்கல், வாங்கல், ஆட்சி நடத்துவது, பொருளாதாரத்தைத் திரட்டுவது, செலவு செய்வது என்று எந்தத் துறையை எடுத்தாலும் அந்தத் துறைகளில் தலையிட்டு நீ இப்படித் தான் நடக்க வேண்டும் என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம் ஒன்று தான்.

இந்த உலகத்தில் நாம் வாழும் போது நாம் எத்தனையோ பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன? எப்படி நடந்து கொண்டால் கடவுள் திருப்தியடைவார் என்று இஸ்லாம் சொல்லித் தருகிறது.

இப்படி உலகத்தில் எந்த மதத்தையும் நாம் பார்க்க முடியாது. பொருள் திரட்டுகிறாயா? நன்றாக திரட்டிக் கொள்! ஆனால் வட்டி வாங்காதே! ஏமாற்றாதே! மோசடி செய்யாதே! கலப்படம் செய்யாதே! அளவு நிறுவையில் குறை செய்யாதே! இந்த விதிகளுக்கு உட்பட்டு நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள். இப்படி இஸ்லாம் இதில் தலையிடும்.

வியாபாரம் செய்பவன் மோசடி செய்கின்றான் என்றால் அவன் சார்ந்திருக்கின்ற மதம் அவனைத் தடுக்கின்றதா? தடுக்காது. மத ரீதியான எந்தச் சான்றுகளையும் காட்டி அவனைத் தடுக்கவும் முடியாது.

வட்டி பெரிய பொருளாதாரச் சுரண்டல். இதை நேரடியாகத் தடுக்கும் மதங்கள் இருக்காது.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒவ்வொரு துறையிலும் தலையிட்டு இதற்கு இன்ன இன்ன விதிமுறைகள் எனக் கூறுகிறது.

இதனால் கடவுளுக்கு எந்த லாபமும் கிடையாது. நீங்கள் திருடினால் என்ன? திருடாவிட்டால் என்ன?

நீங்கள் திருடுவதால் உங்களைப் போன்ற இன்னொரு மனிதன் பாதிக்கப்படுகின்றான். நீங்கள் வட்டி வாங்குவதால் ஒருவன் சுரண்டப்படுகிறான். நீங்கள் கலப்படம் செய்வதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இப்படி மனிதனுடைய நன்மைகளிலும் நலன்களிலும் அக்கறை கொண்டதால் தான் அனைத்திலும் இஸ்லாம் தலையிடுகின்றது.

கடவுளுக்குச் சம்பந்தமில்லாத விஷயம் என்று நாம் நினைக்கலாம். அந்த மாதிரி விஷயங்களிலும் மனித குல நன்மைக்காக இஸ்லாம் இஸ்லாம் தலையிட்டு தீர்வு சொல்கின்றது.