2) மனித குல ஒருமைப்பாடு
மனிதனுக்கேற்ற மார்க்கம்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
உலகில் உள்ள ஏராளமான மதங்களில் 120 கோடிக்கும் அதிகமான மக்களால் இஸ்லாம் பின்பற்றப்படுகிறது.
இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கொள்கை என்ன? இஸ்லாம் எந்த வகைகளில் ஏனைய மதங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது? என்பதை அறிந்து கொள்ள நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
இஸ்லாம் இரண்டு அடிப்படைக் கொள்கைகளை உலகத்திற்குச் சொல்கிறது:.
முதலாவது கொள்கை: வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.
இரண்டாவது கொள்கை: முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்.
இவ்விரண்டு தாம் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்.
இந்தக் கொள்கைகளை ஒருவன் நம்புகின்ற காரணத்தினால் ஏனைய மதங்களிலிருந்து விலகி வித்தியாசமான ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக மாறி விடுகின்றான்.
இந்த இரண்டு அடிப்படைக் கொள்கைகளில் அப்படியென்ன சிறப்பு இருக்கின்றது? இந்த இரண்டு கொள்கைகளை ஏற்றவுடன் ஒருவன் முஸ்லிம் என்றும், ஏற்கவில்லையென்றால் அவன் முஸ்லிம் இல்லை என்றும் கூறும் அளவுக்கு அப்படி என்ன தத்துவம் இதில் இருக்கின்றது?
இந்த இரண்டு கொள்கைகள் ஒரு மனிதனின் உள்ளத்தில் பதிந்து விடுமானால் அந்த மனிதனின் வாழ்க்கையில் ஏராளமான மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன.
மனித குல ஒருமைப்பாடு
கடவுளை மனிதர்கள் வழிபட வேண்டும் என்றால் அந்த உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் வழிபாட்டுத் தலங்களில் இந்த நிலையைக் காண முடியாதவர்கள் கடவுளையே மறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட குலத்தில் பிறந்த ஒருவன் குளித்து முழுகி புத்தாடை அணிந்து கடவுளைப் பூஜிப்பதற்காகச் செல்கிறான். இவன் கடவுளைப் பூஜை செய்யும் போது இவனைப் போன்ற இன்னொருவன் தடுத்து நிறுத்துகிறான்.
‘நாங்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டும்; நீங்கள் எங்கள் வழியாகத் தான் பூஜை செய்ய வேண்டுமே தவிர நேரடியாகச் செய்ய முடியாது என்கிறான்.
‘எனக்கு மந்திரம் தெரியும் எனக் கூறினாலும், ‘நானும் சுத்தமாகக் குளித்து விட்டுத் தான் வந்துள்ளேன் எனக் கதறினாலும் அவன் ஒரு குறிப்பிட்ட குலத்தில் பிறந்ததால் தடுக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட ஒரு கடவுள் தேவை தானா என்ற சிந்தனைக்கு அவன் ஆளாகிறான்.
மனிதனின் முயற்சியால் பெறுகின்ற கல்வி, பதவி, புகழ், போன்ற காரணங்களால் உயர்வு கற்பிக்கப்படுவதை ஏற்கலாம். மனித முயற்சியால் கிடைக்கப் பெறாத குலத்தின் பெயரால் மனிதர்கள் வேறுபடுத்தப்பட்டால், அதைக் கடவுளும் ஏற்றுக் கொள்வாரானால் அந்தக் கடவுளை மறுப்பதில் நியாயம் இருக்கத் தான் செய்கிறது.
‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று ஒருவன் சொல்லி ஒரே ஒரு கடவுள் தான் இந்த உலகத்திற்கு இருக்கின்றான் என்பதை ஒப்புக் கொள்ளும் போது மொழி, இனம், குலம், கோத்திரம், மற்றும் தேசத்தின் அடிப்படையில் மனிதன் உண்டாக்கிக் கொண்ட பிளவுகள் எல்லாமே அடிபட்டு போகிறது.
மொத்த உலகத்தையும் படைத்துப் பரிபாலித்து காத்துக் கொண்டு இருப்பவனும், அத்தனை மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு இருப்பவனும் ஒரே ஒரு இறைவன் தான் என்று சொல்லும் போது ‘நான் தமிழன்; நீ மலையாளி; அவன் கன்னடன் என்றெல்லாம் மொழியின் பெயரால் மனிதன் கூறுபட்டுப் போவதை இந்தக் கொள்கைப் பிரகடனம் தடுத்து விடுகின்றது.
‘நான் இந்தியன்; அவன் பாக்கிஸ்தானியன்; நீ அமெரிக்கன் என்று தேசத்தின் பெயரால் மனிதன் மனிதனைப் பிரித்துப் பார்க்கின்ற நிலையையும் இந்தக் கொள்கை மாற்றி விடுகின்றது.
அதைப் போல் ‘நான் இந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன்; நீ அந்தக் கோத்திரத்தைச் சார்ந்தவன் என்று குலத்தின் பெயரால் மனிதன் வேறுபட்டுப் போவதையும் இந்தக் கொள்கைப் பிரகடனம் துடைத்து எறிகின்றது.
‘மொத்த உலகத்திற்கும் ஒருவன் தான் படைப்பாளன்; மொத்த உலகத்தில் உள்ளவர்களும் அந்த ஒருவனால் படைக்கப்பட்டவர்கள் என்று கூறும் போது அனைவரும் அந்த ஒரே இறைவனின் அடிமைகளாகி அடிமைகள் என்ற வட்டத்திற்குள் ஒன்றுபட்டு விடுகின்றனர்.
ஏக இறைவனுக்கு நாம் அடிமைகள் தான் என்று நம்பும் போது
தமிழனும் அவனுக்கு அடிமை
மலையாளியும் அவனுக்கு அடிமை
கன்னடனும் அவனுக்கு அடிமை
அரபு நாட்டவனும் அந்த ஏக இறைவனுக்கு அடிமை
என்று எல்லோரும் ஒன்றுபட்டு விடுகின்றோம்.
அனைவரும் ஒன்றுபட்டு ‘நாங்கள் ஒரே ஒரு கடவுளுக்கு அடிமைகள் என்று கூறும் போது இன்னொருவனை விட தன்னை உயர்ந்தவன் என்று ஒரு மனிதன் கருத மாட்டான்.
என் தாய்மொழி தமிழ் என்பதால் நான் சிறந்தவன் என்று தமிழனோ, தன் தாய் மொழி மலையாளம் என்பதால் தான் உயர்ந்தவன் என்று ஒரு மலையாளியோ சொல்ல மாட்டார்கள். சொல்லவும் முடியாது. இப்படிப்பட்ட ஒற்றுமை லாயிலாஹ இல்லல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை – என்ற இந்தத் தத்துவத்தினால் ஏற்படும் பயனாகும்.
ஜாதியின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பித்து மனிதர்களில் சிலரை நாயினும் கீழாக நடத்துவதைப் பரவலாக இந்தியாவில் காண்கிறோம். தோலின் நிறத்தை வைத்து மனிதனைத் தாழ்ந்தவன் என்றும் உயர்ந்தவன் என்றும் வேறுபடுத்துவதை மேலை நாடுகளில் பார்க்கிறோம். இத்தகைய வேறுபாடுகள் ஒழிய உலகத்தில் இது வரை தீட்டப்பட்ட திட்டங்கள் பயன் தந்துள்ளனவா எனில் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்.
இத்தகைய வேறுபாடுகள் ஒழிய வேண்டுமானால் அனைவரும் கடவுளுக்கு அடிமைகள் என்பதை மனிதன் உணர வேண்டும்; ஒப்புக் கொள்ள வேண்டும். அடிமை என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் இன்னொருவனை விடச் சிறந்தவன் என்று தன்னைப் பற்றி நினைக்க மாட்டான்.
நானும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றேன்.
நான் யாரைத் தாழ்ந்தவன் என்று நினைக்கின்றேனோ அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றான்.
நான் யாரை உயர்ந்தவன் என்று கருதுகின்றானோ அவனும் கடவுளுக்கு அடிமையாக இருக்கின்றான் என்ற எண்ணம் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதிலிருந்து அனைவரையும் தடுக்கின்றது.
எல்லோரும் கடவுளுக்கு அடிமை என்று நம்பும் போது பிறப்பின் அடிப்படையில் ஒருவன் சிறந்தவன்; மற்றொருவன் கீழானவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் முற்றாகவே ஒழிந்து போகின்றன.
இதைத் தான் திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.
உங்களைப் பூமியிலிருந்து படைத்த போதும், உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக நீங்கள் இருந்த போதும் அவன் உங்களை நன்கு அறிவான். எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.