6) நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் 2

நூல்கள்: வரு முன் உரைத்த இஸ்லாம்

11 பாரசீகம் மற்றும் ரோமப் பேரரசின் வீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு சக்திகள் உலகின் பல நாடுகளைக் கைப்பற்றி மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகத் திகழ்ந்தன.

இத்தாலியைத் தலைமையாகக் கொண்ட ரோமப் பேரரசு உலகின் பல நாடுகளைத் தனக்குக் கீழ் அடிமைப்படுத்தி மிகப் பெரும் சாம்ராஜ்யமாக விளங்கியது.

இது போல் ஈரானைத் தலைமையிடமாகக் கொண்ட பாரசீகப் பேரரசு பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தி மற்றொரு சாம்ராஜ்யமாக விளங்கியது.

ரோமப் பேரரசின் மன்னர் கைஸர் என்று அழைக்கப்பட்டார்.

பாரசீகப் பேரரசின் மன்னர் கிஸ்ரா என அழைக்கப்பட்டார்.

உலகின் இருபெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்த பாரசீகப் பேரரசு பற்றியும், ரோமப் பேரரசு பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தர்கள்.

கிஸ்ரா வீழ்ந்து விட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். கைஸர் வீழ்ந்து விட்டால் அவருக்குப் பின் கைஸர் எவரும் இருக்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

நூல் : (புகாரி: 3618) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பாரசீகம் முஸ்ம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை பாரசீகம் எனும் ஈரான் முஸ்லிம்கள் வசமே இருந்து வருகிறது. அதன் பின்னர் கிஸ்ரா எவரும் வர முடியவில்லை.

அது போல் ரோமப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பல நாடுகள் முஸ்லிம்களின் கைவசம் வந்தன. ரோமப் பேரரசு இத்தாயாகச் சுருங்கியது. இதன் பின்னர் இரண்டாவது கைஸர் யாரும் வர முடியவில்லை. இன்றளவும் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

 

12 யமன் வெற்றிகொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த ஆரம்ப காலத்தில் மகிப் பெரும் துன்பங்களை எதிர் கொண்டனர். நபிகள் நாயகத்தை நம்பி ஏற்றுக் கொண்ட மக்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

சித்திரவதை தாங்காமல் நபிகள் நாயகத்தின் தோழர்கள் முறையீடு செய்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட முன்னறிவிப்பை வெளியிட்டார்கள்.

‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப்படுத்துவான். யமனில் உள்ள ஒருவர் ‘ஹள்ரமவ்த்’என்றும் ஊரிலிருந்து ஸன்ஆ’ எனும் ஊர் வரை அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமல் பயணம் செய்வார். தனது ஆடுகள் விஷயத்தில் ஓநாய்கள் பற்றி அஞ்சுவதைத் தவிர (கொலை கொள்ளை போன்ற) அச்சம் எதுவும் அவருக்கு இருக்காது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : (புகாரி: 3612) 

உயிர் வாழ்வதே கேள்விக் குறியாக இருந்த நெருக்கடியான காலகட்டத்தில் வெற்றிக்கான எந்த அறிகுறியும் தென்படாத காலத்தில் யமன் நாடு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் பிரகடனம் செய்தது போலவே உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் யமன் நாடு முஸ்லிம்களின் கீழ் வந்தது. இஸ்லாத்தின் கடுமையான குற்றவியல் சட்டம் காரணமாக ஹள்ரமவ்த்திலிருந்து ஸன்ஆ வரை அச்சமின்றி பயணம் மேற்கொள்ளும் பொற்காலமும் வந்தது.

 

13 பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ரோமப் பேரரசின் கீழ் தான் பைத்துல் முகத்தஸ் என்ற புனிதத் தலம் இருந்தது. முஸ்லிம்களின் மூன்று புனிதப் பள்ளிவாசல்களில் ஒன்றான இப்பள்ளியிலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்துக்கு இறைவனால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

‘உலகம் அழிவதற்கு முன் ஆறு நிகழ்வுகள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்’ என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலாவதாக தமது மரணத்தைக் குறிப்பிட்டார்கள். இரண்டாவது பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படும் என்பதைக் குறிப்பிட்டார்கள்.

நூல் : (புகாரி: 3176) 

ஜெருசலம் நகரமும், அதில் உள்ள பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி கிறித்தவர்களுக்கும் யூதர்களுக்கும் புனிதத் தலங்களாக இருந்தன. ரோமப் பேரரசின் கீழ் இருந்த நாடுகளில் ஜெருசலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்கள் கைவசம் வந்தது.
முஸ்ம்களில் எழுச்சியைக் கண்டு திகைத்த கிறித்தவ பாதிரிமார்கள் எவ்வித எதிர்ப்புமின்றி உமர் (ரலி) அவர்களிடம் ஜெரூசலத்தை ஒப்படைத்தார்கள்.

 

14 எகிப்து வெற்றி கொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு

உலகின் பழமையான நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த எகிப்து ரோமப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது.

எகிப்தை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

நூல் : (முஸ்லிம்: 4973) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து பத்து ஆண்டுகளில் உன்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர்.

நபிகள் நாயகத்தின் இந்த முன்னறிவிப்பும் நிறைவேறி அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை நிரூபித்தது.

 

15 போலி இறைத்தூதர்கள் பற்றிய எச்சரிக்கை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று தம்மை அறிமுகம் செய்தார்கள். அதற்கான சான்றுகளையும் முன் வைத்தார்கள்.

இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செல்வாக்கு அதிகரித்து மாபெரும் தலைவராக உருவெடுத்தார்கள். இதைக் கண்ட போலிகள் சிலர் தம்மையும் இறைத்தூதர்கள் என்று அறிவித்துக் கொண்டனர். இதனால் நபிகள் நாயகத்தைப் போலவே தாங்களும் தனிப் பெரும் தலைவர்களாக உருவெடுக்கலாம் என்று எண்ணத் தலைப்பட்டனர்.

இதில் முக்கியமானவன் முஸைலாமா என்பவன். யமாமா என்ற பகுதியைச் சேர்ந்த இவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மதீனா வந்து நபிகள் நாயகத்தைச் சந்தித்தான். ‘உங்களுக்குப் பின் நான் ஒரு நபி என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களை நபி என்று நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று நபிகள் நாயகத்திடம் பேரம் பேசினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவனை எச்சரித்து அனுப்பினார்கள்.

நூல் : (புகாரி: 3620) 

இவனைப் போலவே அஸ்வத் அல் அன்ஸீ’ என்பவனும் தன்னை நபியெனப் பிரகடனப்படுத்தி யமன் மக்களை வழி கெடுத்தான். இவ்விரு போ நபிகளின் பிரச்சினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியது. மக்களை வழி கெடுக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனாலும் இவர்கள் தோல்வியடைவார்கள் என்று இறைவன் அறிவித்துக் கொடுத்தான். அதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அறிவிப்புச் செய்தார்கள்.

‘நான் தூங்கிக் கொண்டிருந்த போது என் கைகளில் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை எனக்குப் பாரமாக இருந்தன. அதை ஊதி விடுவீராக’ என்று எனக்குக் கூறப்பட்டது. நான் ஊதியவுடன் அவை பறந்து விட்டன. இந்தக் கனவு அஸ்வத் மற்றும் யமாமாவின் முஸைலமா ஆகிய போலி நபிகள் பற்றியது என்று விளங்கிக் கொண்டேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : (புகாரி: 3621) , 4374, 4375, 4379

இவ்விருவரும் வெளித் தோற்றத்தில் வலிமை மிக்கவர்களாகக் காட்சி தந்தாலும் உண்மையில் அவர்களின் வாதம் அழிந்து போகும் என்று இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறே இவ்விருவரின் கதையும் முடிந்தது.

யமாமாவில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த முஸைலமாவை ஒழிக்க படை ஒன்றை அபூபக்கர் (ரலி) அவர்கள் அவர்கள் தமது ஆட்சியின் போது அனுப்பினார்கள். இப்போரில் முஸைலமா கொல்லப்பட்டான். உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷி அவர்கள் தான் அவர்கள் தான் இவனைக் கொன்றார்கள்.

பிற்காலத்தில் இது பற்றி வஹ்ஷி (ரலி) அவர்கள் கூறும் போது ‘மனிதர்களில் மிகவும் சிறந்தவரை (ஹம்ஸாவை) நான் தான் கொன்றேன். மிக மோசமான மனிதனையும் (முஸைலமாவை) நான் தான் கொன்றேன்’ என்று குறிப்பிட்டார்கள். இது போலவே யமன் நாட்டில் தன்னை நபியென வாதிட்டு மக்களை வழி கெடுத்த அஸ்வத் அல் அன்ஸியும் பைரோஸ் என்பவரால் கொல்லப்பட்டான்.

இவ்விருவராலும் போலியான இரண்டு மதங்கள் தோன்றி நிலைத்து விடுமோ என்று ஆரம்பத்தில் நபிகள் நாயகம் அஞ்சினாலும் பின்னர் இறைவனின் அறிவிப்பால் அந்த அச்சம் விலகியது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின் எந்த இறைத்தூதரும் வரமுடியாது. வருவதற்கான எந்த அவசியமும் இல்லை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

அவர்களுக்கு அருளப்பட்ட இஸ்லாம் முழுமையாக்கப்பட்டதாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் உள்ளதால் எந்தத் தூதரும் வரவேண்டிய தேவை இல்லை.

தனக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் அறிவித்துள்ளனர். திருக்குர்ஆனிலும் இதற்கு ஏரளமான சான்றுகள் உள்ளன.

ஆனாலும் இறைத்தூதர் என்று ஒருவரை மக்கள் நம்பினால் எவ்விதக் கேள்வியும் ஆதாரமும் கேட்காமல் மக்கள் அவரைப் பின்பற்றுவார்கள் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் பலர் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டார்கள். இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அறிவித்தார்கள்.

எனக்குப் பின் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை நபியெனக் கூறிக் கொள்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : (புகாரி: 7121) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது போலவே தலீஹா, முக்தார் சில ஆண்டுகளுக்கு முன் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் உள்ளிட்ட பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பொய்யர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள்.

 

16 ஸம்ஸம் கிணறு பற்றிய முன்னறிவிப்பு

மக்காவில் ஸம்ஸம் என்ற கிணறு உள்ளது. ஆண்டு முழுவதும் மக்காவாசிகளும், புனிதப் பயணம் செய்வோரும் இந்தத் தண்ணீரைத் தான் பயன்படுத்துகின்றனர்.

ஹஜ் காலத்திலும், புனித ரமளான் மாதத்திலும் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குழுமி இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கும் எடுத்துச் செல்கின்றனர்.

பாலைவனத்தில் நிலத்தடி நீர் போதுமான அளவில் இருக்காது. இத்தகைய பாலைவனத்தில் உள்ள ஒரு கிணறு பல ஆயிரம் ஆண்டுகள் வற்றாத நீரூற்றாகவும் எத்தனை இலட்சம் மக்கள் குழுமினாலும் அவர்களின் தேவையை நிறைவு செய்வதாகவும் அமைந்துள்ளது. இது எப்படிச் சத்தியம் உலகமே அதிசயிக்கும் இந்தக் கிணறு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். இக்கிணறு உருவான வரலாற்றையும் அவர்கள் விளக்குகிறார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது மனைவி ஹாஜர் அவர்களையும் குழந்தை இஸ்மாயீலையும் இப்போது மக்கா நகரம் அமைந்துள்ள இடத்தில் விட்டுச் சென்றார்கள். அப்போது யாரும் குடியிருக்காத பாலை நிலமாக அது இருந்தது. குழந்தை இஸ்மாயீல் தாகத்தால் துடித்த போது ஜிப்ரீல் எனும் வானவரை இறைவன் அனுப்பி அவர் மூலம் நீரூற்றை வெளிப்படுத்தினான். ஹாஜர் அவர்கள் அந்தத் தண்ணீரை ஓடவிடாமல் தடுப்பு ஏற்படுத்தினார்கள். அவர்கள் அவ்வாறு செய்திருக்காவிட்டால் அது வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : (புகாரி: 3364) 

அந்தக் கிணறு இறைவன் கட்டளைப்படி உருவாக்கப்பட்டது என்பதையும் வற்றாத நதியாக ஓடும் அளவுக்கு அதன் நீரோட்டம் அமைந்துள்ளது என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்ததற்கு ஏற்ப இன்று வரை இலட்சக்கணக்கான மக்களுக்கு தினசரி தண்ணீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.

 

17 தனது எஜமானியைத் தானே பெற்றெடுக்கும் பெண்கள் பற்றிய முன்னறிவிப்புகள்

யுக முடிவு நாள் நெருங்கும் போது ஏற்படும் மாற்றங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல முன்னறிவிப்புகளைச் செய்துள்ளனர். அவற்றுள் முக்கியமான அடையாளங்களைத் தனி நுலாக ஏற்கனவே நாம் வெளியிட்டுள்ளோம்.

ஒரு பெண் தனது எஜமானியைத் பெற்றெருப்பாள் என்பதும் அவற்றுள் ஒன்றாகும்.

நூல் : (புகாரி: 4777) 

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்பதன் கருத்து என்ன?

பொதுவாகப் பெண்கள் தங்கள் முதுமையில் தங்கள் புதல்வர்களால் கவனிக்கப்படுபவார்கள். இது தான் ஆரம்ப முதல் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் பெற்ற தாயைக் கவனிப்பாரற்று விடும் ஆண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து அவள் வீட்டில் அடைக்கலமாவது அதிகரித்து வருகிறது.

அந்த வீட்டின் எஜமானியாக மகள் இருப்பாள்; அந்த எஜமானியின் கீழ் அவளைப் பெற்ற தாய் அண்டி வாழும் நிலை ஏற்படுகிறது.

பெற்ற தாயை ஆண்பிள்ளைகள் கவனிக்க மாட்டார்கள். பெண் பிள்ளைகள் தான் அவர்களைச் சுமப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டிய இந்தச் சீரழிவு இன்று அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.

 

18 ஆடு மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவர்

கறுப்பு ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவார்கள்

நூல் : (புகாரி: 50) ,

ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயர்ந்த கட்டடங்களை எழுப்புவார்கள்

நூல் : (முஸ்லிம்: 5) (9)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உயரமான கட்டடங்களைக் கட்டுவது எளிதானதாக இருக்கவில்லை. அரசாங்கம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்ற அளவுக்கு இது சிரமமானதாக இருந்தது.

இந்த நிலை மாறும்; சர்வ சாதாரணமாக உயரமான கட்டடங்கள் கட்டும் தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்படும் என்ற கருத்து மேற்கண்ட சொற்றொடரில் அடங்கியுள்ளது. இதற்கேற்ப எளிதாக உயரமான கட்டடங்களைக் கட்டும் தொழில் நுட்பம் இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஏழைகள் தீடீர் பணக்காரர்களாக ஆவதற்கான வழிகள் கடந்த காலங்களில் இல்லை. இன்றோ புதிய வகையான தொழில் முறைகளால் அடித்தட்டு மக்கள் கூட திடீரென்று வசதி மக்கவர்களாக ஆக முடிகின்றது.

இந்த இரண்டு மாறுதலையும் மேற்கண்ட சொற்கள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கிறார்கள்.

 

19 ஆடை அணிந்தும் நிர்வாணம்

‘எதிர் காலத்தில் இரண்டு சாரார் தோன்றுவார்கள். இவர்களை இன்னும் நான் காணவில்லை. ஒரு சாரார் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகளை வைத்துக் கொண்டு மக்களைச் சித்திரவதை செய்வார்கள். இன்னொரு சாரார் சில பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : (முஸ்லிம்: 4316) (3971)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் மக்களை அடக்கி ஒடுக்கும் சர்வாதிகாரிகள் தோன்றினார்கள்.

இன்று நாம் வாழ்கின்ற காலத்தில் பெண்கள் மெல்லிய சருகுகள் போன்ற ஆடைகளை அணிகின்றனர். இதனால் ஆடை அணிந்தும் நிர்வாணமாக அவர்கள் காட்சி தருகின்றனர்.

மேலும் பலர் அரை குறை ஆடைகள் அணிந்து மறைக்க வேண்டிய பகுதிகளை வெளிப்படுத்திக் காட்டுகின்றனர்.

‘ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள்’ என்ற நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

 

பொதுவான முன்னறிவிப்புகள்

விபச்சாரம் பெருகும்

கொலைகள் அதிகரிக்கும்

நாணயமும், நேர்மையும் அரிதாகி விடும்

பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்

பூகம்பங்கள் அதிகமாகும்

செல்வம் பெருகும்

என்றெல்லாம் பொதுப்படையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.

இவையனைத்தும் இன்று நிறைவேறி வருவதை நாம் காண்கிறோம்.

இதுவரை நாம் எடுத்துக் காட்டியவை நம்முடைய சிற்றறிவில் பட்டவை மட்டும் தான். சிந்தனையாளர்களும், அறிஞர்களும் திருக்குர்ஆனை ஆழமாகச் சிந்தித்தால் இன்னும் எண்ணற்ற அதிசயங்களைத் திருக்குர்ஆனில் நிச்சயம் காண்பார். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறும் வசனங்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்களும் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட மார்க்கம் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.