14) கருப்புக் கல் வழிபாடு?

நூல்கள்: குற்றச்சாட்டுகளும் பதில்களும்

”மக்காவில் உள்ள ஆலயமாகிய கஃபாவின் சுவற்றில் ஒரு மூளையில் பதிக்கப்பட்டுள்ள “ஹஜ்ருல் அஸ்வத்” எனும் கருப்புக் கல்லை முஸ்லிம்கள் ஒரு புறம் வழபட்டுக் கொண்டு இன்னொரு புறம் ஏக இறைவனை மட்டும் வணங்க வேண்டும் என்று கூறுவது முரணாக அமைந்துள்ளது. இஸ்லாத்தின் கடவுட் கொள்கையில் தெளிவின்மையை இது காட்டுகிறது.” என்பதும் மாற்றாரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.

நாங்களும் கல்லை வணங்குகிறோம், நீங்களும் கல்லை வணங்ககிறீர்கள், எனவே உங்களின் கடவுட் கொள்கை தனித் தன்மை கொண்டதோ, சிறந்ததோ அல்ல என்ற அடிப்படையிலேயே இவர்களின் விமர்சனம் அமைந்துள்ளது.

இவர்களின் இந்த விமர்சனம் ஒரு செய்தியைத் தவறாகப் புரிந்து கொண்டதால் எழுந்ததாகும். ஏனெனில் முஸ்லிம்கள் எவரும் கருப்புக் கல்லை வணங்குவதுமில்லை. வணங்குமாறு இஸ்லாம் கூறவுமில்லை. ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் கஃபாவில் பதிக்கப்பட்டுள்ள கறுப்புக் கல்லைத் தொட்டு முத்தமிடுகிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறு செய்துள்ளனர். இதைத் தான் இவர்கள் வணங்குவதாகக் கருதிக் கொண்டார்கள்.

ஒரு கல்லை வணங்குவது என்றால் அக்கல்லின் முன்னே நின்றவுடன் அதைப் பற்றி மரியாதை கலந்த பயம் தோன்ற வேண்டும். துன்பங்களை நீக்கவும், இன்பங்களை வழங்கவும் அதற்குச் சக்தி இருப்பதாக நம்ப வேண்டும். அதற்குரிய மரியாதையைத் தராவிட்டால் அந்தக் கல் நமக்கு ஏதேனும் தீங்கு செய்து விடும் என்று அச்சமிருக்க வேண்டும். நமது பிரார்த்தனை அதற்கு விளங்கும், விளங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றெல்லாம் நம்ப வேண்டும். இத்தகைய நம்பிக்கையுடன் செய்யும் மரியாதையே வணக்கம் எனப்படும்.

கற்சிலைகளையோ இன்ன பிற பொருட்களையோ வழிபடுவோர் இந்த நம்பிக்கையிலேயே வழிபட்டு வருகின்றனர்.

”ஹஜ்ருல் அஸ்வத்” பற்றி இஸ்லாம் இப்படியெல்லாம் கூறுகிறதா? நிச்சயமாக இல்லை.

அந்தக் கருப்புக்கல் நாம் பேசுவதைக் கேட்கும், நமது பிரார்த்தனையை நிறைவேற்றும். அதற்குரிய மரியாதையைச் செய்யத் தவறினால் அந்தக் கல் நம்மைத் தண்டிக்கும் என்றெல்லாம் இஸ்லாம் கூறவில்லை.

அது தெயவீக அம்சம் எதுவுமில்லாத சாதாரணக் கல் என்பதை இஸ்லாம் தெளிவாக் கூறுகின்றது.

س203 : من الصحابي الجليل الذي قبّل الحجر الأسود وقال : والله إني لأقبلك وإني أعلم أنك حجر وأنك لا تضر ولا تنفع ولولا أني رأيت رسول الله صلى الله عليه وسلم قبّلك ما قبّلتك .

ج203 : عمر بن الخطاب رضي الله عنه .

”இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஆட்சியாளரும், நபிகள் நாயகத்தின் உற்ற தோழருமான உமர் (ரலி) அவர்கள் அந்தக் கல்லை முத்தமிட்டு விட்டு அதை நோக்கி நிச்சயமாக நி ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், தீமையும் செய்ய முடியாது என்பதையும் நான் அறிவேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் பார்த்திராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.

இந்த வரலாற்றுச் செய்தி ஆதாரப்பூர்வமான நூல்களில் இடம் பெற்றுள்ளது.

அந்தக் கல் மீது தெய்வீக நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) ஊட்டியிருந்தால் அவர்களிடம் பாடம் பெற்ற நபித்தோழர் இவ்வாறு கூறியிருக்க மாட்டார்.

இறைவனைத் தவிர எவரையும் எதனையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது என்று மிகத் தெளிவாக திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறிவிட்ட பின், தமது மூதாதையார்களான இப்றாஹீம் (ஆப்ரஹாம்) இஸ்மாயீல் (இஸ்மவேல்) ஆகியோரின் சிலைகள் உட்பட அத்தனை சிலைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) உடைத்து எறிந்த பின் சாதாரணக் கல்லுக்கு தெய்வீக அம்சம் உண்டென்று எப்படிக் கூறியிருக்க முடியும்?

ஹஜருல் அஸ்வத் எனும் கல்லுக்கு எந்த விதமான ஆற்றலோ கடவுள் தன்மையோ இல்லையென்றால் பிறகு ஏன் அதைத் தொட்டு முத்தமிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டால் அது நியாயமான கேள்வியே.

கடவுள் தன்மை அக்கல்லுக்கு உள்ளது என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை கிடையாது என்றாலும் அக்கல்லுக்கு வேறொரு சிறப்பு இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அச்சிறப்பு காரணமாகவே அக்கல்லை முஸ்லிம்கள் முத்தமிடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

ஹஜருல் அஸ்வத் எனும் கல் சொர்க்கத்தின் கற்களில் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

மனிதர்கள் எந்தச் சொர்க்கத்தை அடைவதை இறுதி இலக்காகக் கொள்ள வேண்டுமோ அந்த சொர்க்கத்தின் பொருள் இவ்வுலகிலேயே காணக் கிடைக்கிறது என்றால் அதைக் காண்பதற்கும் தொடுவதற்கும் ஆவல் பிறக்கும்.

இக்கல்லைத் தவிர சொர்க்கத்து பொருள் எதுவும் இவ்வுலகில் கிடையாது.

இவ்வுலகில் காணக் கிடைக்கும் ஒரே சொர்க்கத்துப் பொருள் என்ற அடிப்படையில் தான் முஸ்லிம்கள் அதைத் தொட்டு முத்தமிடுகின்றனர். கடவுள் தன்மை அதற்கு உண்டு என்பதற்காக இல்லை. இத்தகைய நம்பிக்கை எள்ளளவும் எந்த முஸ்லிமுக்கும் கிடையாது.

இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கிற ஒரு நிகழ்ச்சியை முன்னுதாரணமாகக் கூறலாம்.

சந்திரனிலிருந்து ஆம்ஸ்ட்ராங் தலைமையில் சென்ற குழுவினர் அங்கிருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வந்தனர். அது சாதாரண மண் தான் என்றாலும் அயல் கிரகத்திலிருந்து அது கொண்டு வரப்பட்டதால் பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னைக்கும் கூட அம்மண் வந்து சேர்ந்தது.

அது மண் என்று தெரிந்தும் அதைப் போய் பார்த்தவர்கள், தொட்டு முகர்ந்தவர்கள் அனேகம் பேர், இவ்வாறு செய்ததால் அம்மண்ணை வணங்கினார்கள் என்று கருத முடியாது.

அது போலவே தான் அந்தக் கல் சொர்க்கத்திலிருந்து வந்ததாகும் என்ற நம்பிக்கையினடிப்படையில் அதை முஸ்லிம்கள் தொட்டுப் பார்க்கின்றனர். இதைத் தவிர வேறு எந்த விதமான நம்பிக்கையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் இல்லை.

மேலும் ஹஜ்ஜுக்குப் பயணம் செல்பவர்கள் அந்த கல்லைத் தொட வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. அதைத் தொடாமலே ஹஜ் நிறைவேறிவிடும். அது வழிபாட்டுக்குரியதாக இருந்தால் ஹஜ்ஜின் விதிகளில் ஒன்றாக அதுவும் ஆக்கப்பட்டிருக்கும்.

எனவே கருப்புக் கல்லை இஸ்லாம் வழிபடச் சொல்கிறது என்பது அறியாமையில் எழுந்ததாகும்.

எந்த முஸ்லிமாவது அந்தக் கருப்புக் கல்லிடம் பிரார்த்னை செய்தால் அது நன்மை, தீமை செய்ய சக்தி பெற்றது என்று கருதினால், நமது பிரார்தனையை அது செவியுறும், நமது வருகையை அறிந்து கொள்ளும் என்று நம்பினால் அவன் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறி விடுவான்.

இவ்வளவு தெளிவாக இஸ்லாம் தனது நிலைபாட்டை அறிவித்த பின் கறுப்புக் கல்லை முஸ்லிம்கள் வழிபடுகிறார்கள் எனக் கூறுவது தவறு என்பதில் சந்தேகமில்லை.