மாதவிடாய் பெண்கள், பயானுக்காக பள்ளியின் ஓரத்தில் இருக்கலாமா?
கேள்வி பதில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாமா? பயான் நடக்கும் போது பள்ளியில் ஓரமாக இருந்து கொள்ளலாமா?
கூடாது
1. மாதவிடாய் ஏற்பட்டுள்ள, குளிப்பு கடமையான எவருக்கும் பள்ளிவாசலை நான் அனுமதிக்க மாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), நூல்கள் : அபூதாவூத் (201), இப்னுமாஜா (637)
2. மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் எங்களில் ஒருவரின் மடியில் தலையை வைத்து திருக்குர்ஆனை ஓதுவார்கள். ,எங்களில் ஒருவர் அவர்களில் தொழுகை விரிப்பை பள்ளிவாசலில் விரிப்பார், அவரே மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி), நூல்கள் : நஸயீ (382), அஹ்மத் (25582)
3. நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றேன். அப்போது அவர்கள் அதை எடுத்துவா மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக் கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : முஸ்லிம் (503)
4. நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது ஆயிஷா! அந்த துணியை எடுத்துத் தா! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் உனது கையிலில்லை என்று கூறினார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ரலி), நூல்கள் : முஸ்லிம் (504)
மாதவிடாய் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லாமா? என்பது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்கள் இவை. இவற்றை அடிப்படையாக கொண்டு தங்கள் கேள்விக்குரிய பதிலை நாம் காண முடியும்.
இவற்றில் முதலாவது ஹதீஸ் நேரடியாக மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்க செல்லக்கூடாது என்று தெரிவிக்கிறது. என்றாலும் இந்த ஹதீஸ் தொடர்பாக ஹதீஸ் கலை வல்லுநர்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளார்கள். சிலர் ஆதாரப்பூர்வமானது என்றும் சிலர் பலவீனமானது என்றும் கூறியுள்ளனர்.
மாதவிடாய் ஏற்பட்டுள்ள, குளிப்பு கடமையான எவருக்கும் பள்ளிவாசலை நான் அனுமதிக்க மாட்டேன் என்ற இந்த செய்தி பல நூல்களில் இரு வேறு அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது.
சில நூல்களில் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. சில நூல்களில் ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுகிறது. இதில் ஆயிஷா (ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படுவதே சரியானதாகும் என்று அபூஹாத்திம் அவர்கள் இலல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக வரும் நூல்களில் அஃப்லத் பின கலீஃபா என்பவர் இடம் பெறுகிறார்.
“அப்லத் பின் கலீஃபா என்பவர் அவரிக்கும் இந்த செய்தியை (ஹதீஸ் கலை அறிஞர்கள்) பலவீனம் என்று கூறியுள்ளார்கள். மேலும் அஃப்லத் என்பவர் மஜ்ஹþல் (யார் என அறியப்படாதவரின்) அறிவிப்பு என்றும் கூறுகிறார்கள்” என கத்தாபி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். “பிரபலியமானவர் என்றாலும் நம்பகமானவர் என்று அறியப்படாதவர், இந்த செய்தி பெய்யானதாகும்” என்று இப்னு ஹஸ்ம் அவர்கள் கூறியுள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப்)
மேலும் இச்செய்தில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் ஜஸ்ரா பின்த் திஜாஜா என்பவரைப் பற்றி இமாம் புகாரி அவர்கள் “இவரிடம் புதுமையான செய்திகள் உள்ளன” என்றும் “இவர் விசயத்தில் ஆட்சேபனை உள்ளது” என்று இமாம் பைஹகீ அவர்களும் குறை கூறியுள்ளார்கள். சிலர் இவரை நம்பகமானவர் என்றும் கூறியுள்ளனர்.
நேரடியாக தடை செய்யும் செய்தியில் சில விமர்சனங்கள் உள்ளதை மேற்கூறப்பட்ட செய்திகள் மூலம் காணமுடிகிறது. அதே நேரத்தில் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாது என்று மறை முகமாக தெரிக்கும் ஆதாரப்பூர்மான ஹதீஸ்களும் நாம் குறிப்பிட்ட 2,3 வது செய்தியில் உள்ளன.
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு (வெளியே உள்ள) தொழுகை விரிப்பை எடுத்து வருமாறு என்னிடம் கூறினார்கள். அதற்கு நான் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றேன். அப்போது அவர்கள் அதை எடுத்துவா மாதவிடாய் என்பது உனது கையில் (ஒட்டிக் கொண்டிருப்பது) இல்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்கள் : முஸ்லிம் (503)
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது ஆயிஷா! அந்த துணியை எடுத்துத் தா! என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் உனது கையிலில்லை என்று கூறினார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ரலி), நூல்கள் : முஸ்லிம் (504)
இந்த ஹதீஸில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிவாசலுக்கு தான் நுழைய தடையாக இருந்ததாக மாதவிடாய் குறிப்பிட்ட போது, பள்ளிவாசலுக்கு மாதவிடாய் பெண்கள் வருவது தடை இல்லை என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக, “மாதவிடாய் பள்ளிவாசலுக்கு வருவதை விட்டும் தடை செய்யாது” என்று கூறியிருப்பார்கள்.ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை. மாறாக”உன் கையில் மாதவிடாய் இல்லை எனவே கையை நீட்டி பள்ளியில் நீ வைக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.( நபி (ஸல்) அவர்கள் வீடு பள்ளியை ஒட்டியே இருந்தது) எனவே மாதவிடாய் பெண்கள் பள்ளியில் வரக்கூடாது என்பதை இதிலிருந்து விளங்கலாம். அடுத்து நாம் குறிப்பிட்ட 4 வது ஹதீஸிலும் இதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும் மாதவிடாய் பெண்களையும் (தொழும் திடலுக்குப்) புறப்படச் செய்யும்படி ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பவர்கள்.
அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி), நூல் : புகாரீ (974),
பெருநாள் திடலுக்கு மாதவிடாய் பெண்களை வரச் சொன்ன நபிகளார், அவர்கள் தொழுமிடத்தைவிட்டும் விலகியிருக்கவேண்டும் என்பதை உணர்த்தியுள்ளார்கள். தொழுமிடங்களில் முதன்மையான இடம் பள்ளிவாசல். சாதரணமாக உள்ள தொழும் இடத்திலேயே மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் விலகி இருக்க வேண்டுமானால் பள்ளிவாசலில் கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறலாம்.
அவசியமான நேரத்தில் பள்ளிவாசலில் மாதவிடாய் பெண்கள் சென்று வரலாம். என்பதற்கு பின்வரும் செய்தியை சிலர் ஆதாரம் காட்டுகின்றனர்.
மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் எங்களில் ஒருவரின் மடியில் தலையை வைத்து திருக்குர்ஆனை ஓதுவார்கள். ,எங்களில் ஒருவர் அவர்களில் தொழுகை விரிப்பை பள்ளிவாசலில் விரிப்பார், அவரே மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில்.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி), நூல்கள் : நஸயீ (382), அஹ்மத் (25582)
இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் பள்ளிவாசலில் அவசியத் தேவை இருக்கும் போது செல்லாலாம் என்று கூறுகின்றனர். ஆனால் மற்ற ஹதீஸ்களில் பள்ளிவாசலுக்கு செல்லத் தடை இருப்பதால் இந்த ஹதீஸை அதற்கு முரண்படாவதவாறு புரிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் மனைவியர் தொழுகை விரிப்பை பள்ளியின் வெளியில் இருந்து கொண்டு பள்ளிவாசலுக்குள் விரிப்பார்கள் என்று கருத்துக் கொண்டால் இரண்டு விதமான ஹதீஸ்களும் முரண்படாமல் இருக்கும். இதைப் போன்றுதான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் ஹதீஸýம் உள்ளது என்பதை கவனிக்க.
எனவே மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக்கூடாது. பயான் போன்றவைகளில் அவர்கள் பங்கெடுக்க வேண்டுமானால் பள்ளிவாசல் அல்லாத இடங்களிலேயே ஏற்பாடு செய்து கொள்ளவேண்டும்.