தூங்கும் மாணவர்களை கண்டுபிடிக்கும் சாதனம்
கெடுபிடிகளுக்கு பேர் போன சீனாவில், கல்லுாரி வகுப்பறைகளில், பின் வரிசையில் அமர்ந்து துாங்குவது இனிமேல் சாத்தியமில்லாமல் போகலாம்.
சீனாவிலுள்ள சிசுவான் பல்கலைக்கழகத்தின் கணினி துறை பேராசிரியரான வெய் சியாவோயாங், தன் மாணவர்களுக்கு போரடிக்கிறதா என்பதை கண்டுபிடிக்க, முக பாவங்களை அடையாளம் காணும் மென்பொருளையும், முகத்தைப் படிக்கும் கருவியையும் உருவாக்கி இருக்கிறார்.
இந்த மென்பொருள், வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களின் முகங்களை முகப் படிப்பான் மூலம் கண்காணிக்கிறது. வகுப்பு நடக்கும்போது மாணவர்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து, குறிப்பிட்ட மாணவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா, போரடிக்கிறதா, இல்லை வருத்தமாக இருக்கிறாரா என்பதை அந்த மென்பொருளே கண்டுபிடித்து விடுகிறது. பேராசிரியர் சியாவோயாங், இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியது துாங்கும் மாணவர்களை வெளியேற்றுவதற்காக அல்ல. தன் பாடம் நடத்தும் திறனை மேம்படுத்திக் கொள்ளத்தான். வகுப்பில் பாடம் நடத்தும் போது எந்த இடத்தில், எத்தனை மாணவர்களுக்கு போரடிக்கிறது, எந்த இடத்தில் ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை துல்லியமாக தெரிந்துகொண்டால், பேராசிரியர்கள் பாடம் நடத்தும் விதத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பது தான் இந்த கண்டுபிடிப்பின் நோக்கம்.