அல்லாஹ்வை நேசிப்போம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 2

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இந்த உலகத்தில் வாழும் போது, ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது.

  • அவனது உள்ளம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உணருவது ஒரு நிலை.
  • அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தைத் தர வேண்டும் என்று இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது இன்னொரு நிலை.
  • அல்லாஹ்வை நேசிப்பது மற்றொரு நிலை.

இந்த மூன்று நிலைகளில், நாம் இறந்து, சொர்க்கத்தை அடைந்து விட்டால் அல்லாஹ்வை அஞ்சுவது மற்றும் அவனது சொர்க்கத்தை எதிர்பார்ப்பது ஆகிய இரு நிலைகள் நமது உள்ளத்தை விட்டு அகன்று விடும். ஏனென்றால் சொர்க்கவாசியான பிறகு இறைவனுக்குப் பயப்படும் சூழ்நிலை இருக்காது.

சொர்க்கத்தை அடைந்த பின்னர், சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசையும் பூர்த்தியாகி விடுகின்றது. ஆனால் இந்த உலகத்தில் வாழும் போதும் சரி! மறு உலகத்தில் சொர்க்கத்திற்குச் சென்ற பிறகும் சரி! எப்போதும் நம் உள்ளத்தை விட்டு நீங்காமல் என்றும் நிலைத்திருக்கக் கூடியது அல்லாஹ்வின் நேசம் மட்டும் தான். இதைப் பற்றி இந்தக் உரையில் பார்க்கவிருக்கிறோம்.

தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் ஏராளமானோர் அல்லாஹ்வை நேசிப்பதன் அவசியத்தை உணராதவர்களாகத் தான் இருக்கிறார்கள். எனவே தான், தன் தாய், தந்தை, நண்பர்கள், இன்ன பிற உறவினர்களை விரும்புவது போல் கூட அல்லாஹ்வை அவர்கள் நேசிப்பதில்லை.

தொழுகைக்கு வருபவர்களில் உண்மையில் அல்லாஹ்வின் மீது உள்ள நேசத்தால் தொழக்கூடியவர்கள் எத்தனை பேர்? அல்லாஹ்வை விரும்பியதால் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுள்ளவர்கள் எத்தனை பேர்? இந்த நேசத்தை நம் மனம், சுவைக்காத காரணத்தினால் தான் மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் சுமையாகத் தெரிகிறது. இறைவனை வழிபடுவது மலையாகத் தெரிகிறது. அவனுடைய நேசத்திற்கு ஒரு பெரும் பகுதியை நம் உள்ளத்தில் ஒதுக்கியிருந்தால் தொழுவதே நமக்கு இன்பமாக மாறியிருக்கும். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேசித்தக் காரணத்தினால் தொழுவது அவர்களுக்கு இன்பத்தைத் தரக் கூடியதாக இருந்தது.

وَجُعِلَ قُرَّةُ عَيْنِي فِي الصَّلَاةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது.

நூல்: (நஸாயீ: 3939) (3879)

அல்லாஹ்வின் நேசம் ஒருவரை நல்ல காரியங்களைச் செய்யத் தூண்டும் என்று பின்வரும் வசனம் கூறுகின்றது.

وَيُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰى حُبِّهٖ مِسْكِيْنًا وَّيَتِيْمًا وَّاَسِيْرًا‏

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.

(அல்குர்ஆன்: 76:8)

அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய பாசத்தை உள்ளத்தில் வைக்காமல் விட்டுவிட்டவர்கள் இணைவைக்கக் கூடியவர்களாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்வை நேசிப்பவன் மட்டும் தான் முஸ்லிமாக இருக்க முடியும். நபி (ஸல்) அவர்களை நேசிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு மவ்லூத் என்றப் பெயரில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழும் இணை வைப்பாளர்கள், வார்த்தைக்கு வார்த்தை யா ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதரே) என்றும், யா முஹ்யித்தீன் (முஹ்யித்தீனே) என்றும் அழைப்பார்களே தவிர அல்லாஹ்வை மறந்து விடுகிறார்கள்.

நயவஞ்சகன் தான் அல்லாஹ்வை நேசிக்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் விளங்கியிருந்தார்கள். ஒருவரை ஏசும் போது அல்லாஹ்வை விரும்பாத நயவஞ்சகன் இவன் என்று நபித் தோழர்கள் கூறியிருக்கிறார்கள்.

நூல்: (புகாரி: 425) 

ஈமானின் சுவையை உணர்ந்தவர்

நாக்கிற்கு சுவைக்கக் கூடிய பண்பை அல்லாஹ் வழங்கியிருப்பதால் அது சுவைத்துப் பார்த்து உடலுக்குத் தேவையான பொருட்களை வாய்க்குள் செல்ல அனுமதிக்கிறது. மோசமான சுவையுடையதாக இருந்தால் வெளியே துப்பிவிடுகிறது. இப்பண்பு அதற்கு இருப்பதால் தான் கல்லையும் கற்கண்டையும் பிரித்தரிந்து கற்கண்டை உள்ளேயும் கல்லை வெளியேயும் அனுப்புகிறது. நாக்கு ருசியை உணர்வது போல நல்ல, கெட்ட விஷயங்களை சுவைக்கும் பண்பு உள்ளத்திற்கும் உண்டு.

இக்குணம் மனிதனின் உள்ளத்திற்கு வந்து விட்டால் அவன் உள்ளம் நல்ல கருத்துக்களை உள்ளே வைத்துக் கொண்டு கெட்டக் கருத்துக்களை வெளியே அனுப்பி விடுகிறது. ஆனால் நம் உள்ளம் இந்த பாக்கியத்தை அடைய வேண்டுமென்றால் மூன்று விஷயங்கள் நம்மிடத்தில் வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم :
لاَ يَجِدُ أَحَدٌ حَلاَوَةَ الإِيمَانِ حَتَّى يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ وَحَتَّى أَنْ يُقْذَفَ فِي النَّارِ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ إِلَى الْكُفْرِ بَعْدَ إِذْ أَنْقَذَهُ اللَّهُ وَحَتَّى يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மூன்று தன்மைகள் அமையப் பெறாத) எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார். (அவை)

1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.

2. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.

3. மற்ற எதையும் விட அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு நேசத்திற்குரியோராவது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: (புகாரி: 6041) 

எல்லாருடைய நேசத்தையும் விட அல்லாஹ்வையே நாம் அதிகம் நேசிக்க வேண்டும் என்ற விஷயம் மூன்றாவதாகக் கூறப்பட்டாலும் நன்கு கவனித்துப் பார்க்கும் போது முதலிரண்டு விஷயங்களும் அல்லாஹ்வை நேசிப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகள் தான் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

ஈமானுக்குத் தேவையான எத்தனையோ விஷயங்களை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் வேண்டியுள்ளார்கள். அல்லாஹ்வை நேசிப்பது ஈமானுக்கு மிக முக்கியமான அம்சம் என்பதால் இத்தன்மை தன்னிடத்தில் இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

நபியின் பிரார்த்தனை
أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ، وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ

(இறைவா) உன்னை நேசிப்பதையும், உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி: முஆத் பின் ஜபல் (ரலி),
நூல்: (திர்மிதீ: 3235) (3159)

சிலர் அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய பாசத்தை அடியார்கள் மேல் வைத்து விட்ட காரணத்தினால் தான் இணை வைப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களை நேசிக்கக் கூடாது என்று சொல்லவரவில்லை. நபி (ஸல்) அவர்களை நேசிக்காதவன் இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அல்லாஹ்வை நேசிப்பதற்கு என்று ஒவ்வொரு முஃமினுடைய உள்ளத்திலும் ஒரு தனி இடம் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களை நேசிப்பதற்கு என்று ஒரு தனி இடத்தை உள்ளத்தில் ஒதுக்க வேண்டும். அல்லாஹ்விற்குக் கொடுக்க வேண்டிய அந்தஸ்தை நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் கொடுத்து விடக் கூடாது. அல்லாஹ்வை நாம் கடுமையாக நேசிக்க வேண்டும் என்றும் அவனை நேசிப்பது போல் யாரை நேசித்தாலும் அது இணைவைப்பு என்றும் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்கிறான்.

وَمِنَ النَّاسِ مَنْ يَّتَّخِذُ مِنْ دُوْنِ اللّٰهِ اَنْدَادًا يُّحِبُّوْنَهُمْ كَحُبِّ اللّٰهِؕ وَالَّذِيْنَ اٰمَنُوْٓا اَشَدُّ حُبًّا لِّلّٰهِ ؕ وَلَوْ يَرَى الَّذِيْنَ ظَلَمُوْٓا اِذْ يَرَوْنَ الْعَذَابَۙ اَنَّ الْقُوَّةَ لِلّٰهِ جَمِيْعًا ۙ وَّاَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعَذَابِ‏

அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள்.

அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.

(அல்குர்ஆன்: 2:165)

ஒருவன் அல்லாஹ்வை நேசிக்காமல் நபி (ஸல்) அவர்களை மட்டும் நேசிப்பான் என்றால் அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. அவன் நபி (ஸல்) அவர்களை நேசித்தவனாகவும் ஆக முடியாது. ஏனென்றால் அல்லாஹ்வை நேசிப்பவன் கண்டிப்பாக நபி (ஸல்) அவர்களை நேசிப்பான். நபி (ஸல்) அவர்களை நேசிப்பவன் கண்டிப்பாக அல்லாஹ்வை நேசிப்பான்.

நபி (ஸல்) அவர்களைக் கூட நாம் எதற்காக நேசிக்கிறோம் என்பதை விளங்கிக் கொண்டால் அல்லாஹ்வை நேசிப்பது எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர். வாழ்க்கை வழிகாட்டி என்பதற்காக அவர்களை நேசிக்கிறோம். இந்தத் தூதுப் பணியை இறைவன் அவர்களுக்கு வழங்கியிருக்காவிட்டால் நபி (ஸல்) அவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாமல் போயிருக்கும்.

ஆனால் இன்றைக்கு கோடான கோடி மக்களுடைய மனதில் பெரும் இடத்தை அவர்கள் பிடித்திருப்பது அவர்கள் இறைவனின் தூதர் என்பதால் தான். எவ்வாறு நேசிப்பது? ஒவ்வொரு நாட்டிலிருந்து வரும் தூதுவர்களை மற்ற நாடுகள் மதித்து நடக்கின்றன. ஏனென்றால் அவ்வாறு நடந்தால் தான் அத்தூதரை அனுப்பிய மன்னரைக் கண்ணியப்படுத்தியதாக அமையும். தூதரைக் கேவலப்படுத்தினால் அரசனையும் கேவலப்படுத்தியதாக அமையும்.

ஒரு மன்னரின் சார்பாக அனுப்பப்பட்ட தூதரை நேசிப்பவர்கள் அந்த மன்னரை அதை விடவும் அதிகமாக நேசிப்பார்கள். எனவே அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதரை நேசிக்கக்கூடிய நாம் அல்லாஹ்வை அதை விடவும் கடுமையாக நேசிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் வழிப்படி நடப்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதை விடவும் அல்லாஹ்வை நேசிப்பது முக்கியமானது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதின் அவசியத்தை உணர்த்தும் போது அல்லாஹ்வை நேசிப்பதை நிபந்தனையாக வைத்து அல்லாஹ் கூறுகிறான்.

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 3:31)

நம் நேசத்திற்குரியவர்களுக்கு எதிராக யார் நடந்தாலும் அவரை நாம் விரும்ப மாட்டோம். நம்மால் நேசிக்கப்படுபவர்கள் யாரை வெறுக்கிறார்களோ அவர்களை நாமும் வெறுப்போம்.

இந்த அடிப்படையில் அல்லாஹ்விற்கு மாற்றமான காரியங்களை நமது தாயோ, தந்தையோ, சகோதர, சகோதரிகளோ, மனைவியோ, பிள்ளைகளோ யார் செய்தாலும் அவர்கள் அல்லாஹ்விற்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வதால் அவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது.

அப்படியானால் தாய், தந்தை, மற்ற உடன்பிறப்புகளை நேசிப்பதை விட அல்லாஹ்வை நேசிப்பதன் அவசியத்தை இதிலிருந்து உணர முடிகிறது. அல்லாஹ்வின் மீது நாம் இத்தகைய நேசத்தைக் காட்டுகிறோமா என்று நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஒருவர் இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்தள்ளி விட்டு, தனது உறவுகளின் மேல் உள்ள பாசத்தால் உறவினர்களுடன் ஒத்துப் போவாரேயானால் அவர் உண்மையான நம்பிக்கையாளராக இருக்க முடியாது.

لَا تَجِدُ قَوْمًا يُّؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ يُوَآدُّوْنَ مَنْ حَآدَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَوْ كَانُوْۤا اٰبَآءَهُمْ اَوْ اَبْنَآءَهُمْ اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِيْرَتَهُمْ‌ؕ اُولٰٓٮِٕكَ كَتَبَ فِىْ قُلُوْبِهِمُ الْاِيْمَانَ وَاَيَّدَهُمْ بِرُوْحٍ مِّنْهُ‌ ؕ وَيُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ‌ ؕ اُولٰٓٮِٕكَ حِزْبُ اللّٰهِ‌ ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْمُفْلِحُوْنَ

”அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர்.

அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.”

(அல்குர்ஆன்: 58:22)

செல்வங்களையும் சொத்துக்களையும் மனிதன் கடுமையாக நேசிக்கிறான். அல்லாஹ் வேண்டுமா? அல்லது செல்வம் வேண்டுமா? என்ற கேள்வி எழும் போது செல்வங்களை ஒருவன் தேர்வு செய்தால் அவன் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்றான். அப்படியானால் அல்லாஹ்வை நேசிப்பதற்கு நிகராக எதையும் நேசிக்கக்கூடாது என்ற அளவிற்கு இறைவனை நேசிப்பது மார்க்கத்தில் வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது.

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ

”உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான் என்று கூறுவீராக!”

(அல்குர்ஆன்: 9:24)

அல்லாஹ்வை நேசிப்பதே வெற்றிக்கு உதவும்

அல்லாஹ்வை நேசிப்பதை சாதாரண ஒரு விஷயமாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. தொழுகை, நோன்பு, தர்மம் இவற்றையெல்லாம் விட மறுவுலக வெற்றிக்கு மிக அவசியமானதாக அது இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இது இருந்தால் தான் முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் மனிதன் வருகிறான். இத்தன்மை எப்போது அவனை விட்டு நீங்கி விடுகிறதோ அப்போது இஸ்லாத்தை விட்டும் அவன் வெளியேறி விடுகிறான்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم مَتَّى السَّاعَةُ يَا رَسُولَ اللهِ قَالَ مَا أَعْدَدْتَ لَهَا قَالَ مَا أَعْدَدْتُ لَهَا مِنْ كَثِيرِ صَلاَةٍ ، وَلاَ صَوْمٍ ، وَلاَ صَدَقَةٍ وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ قَالَ : أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ, தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை.

ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய் என்று கூறினார்கள்.

அறி: அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல்: (புகாரி: 6171)

ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ حُرِّمَ عَلَى النَّارِ ، وَحُرِّمَتِ النَّارُ عَلَيْهِ : إِيمَانٌ بِاللَّهِ ، وَحُبُّ اللهِ ، وَأَنْ يُلْقَى فِي النَّارِ فَيُحْرَقَ أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَرْجِعَ فِي الْكُفْرِ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று விஷயங்கள் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர் நரகத்தை விட்டும் தடுக்கப்படுவார். நரகம் அவரை விட்டும் தடுக்கப்படும். (அவை)

  • அல்லாஹ்வை நம்புதல்,
  • அல்லாஹ்வை நேசிதல்,
  • இணை வைப்பிற்குத் திரும்பிச் செல்வதை விட நெருப்பில் போடப்பட்டு கருக்கப்படுவது அவருக்கு விருப்பமானதாக இருத்தல்.

நூல்: (அஹ்மத்: 12122) (11679)

மறுமையில் மட்டுமல்லாது இவ்வுலகில் அல்லாஹ்வின் கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அவனை நேசிக்காமல் அவனை மறந்து வாழ்ந்தால் நம்மை அழித்து விட்டு அவனை நேசிக்கும் நல்ல கூட்டத்தாரை அல்லாஹ் படைப்பான்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا مَنْ يَّرْتَدَّ مِنْكُمْ عَنْ دِيْـنِهٖ فَسَوْفَ يَاْتِى اللّٰهُ بِقَوْمٍ يُّحِبُّهُمْ وَيُحِبُّوْنَهٗۤ ۙ اَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِيْنَ اَعِزَّةٍ عَلَى الْكٰفِرِيْنَ يُجَاهِدُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلَا يَخَافُوْنَ لَوْمَةَ لَاۤٮِٕمٍ‌ ؕ ذٰ لِكَ فَضْلُ اللّٰهِ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள்.

அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 5:54)

பல காரணங்களால் நாம் ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கிறோம். எந்த விதமான தகுதியும் இல்லாமல் தன்னை நேசிக்க வேண்டும் என்று அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. மற்ற அனைவரையும் விட எல்லா விதமான தகுதியையும் பெற்றுக் கொண்டு தான் நம்மிடத்தில் உரிமை கொண்டாடுகிறான்.

அள்ளித்தருவதில் அல்லாஹ் குறைந்தவனா?

மனிதன் பிறர் செய்யும் உபகாரத்திற்கு அடிமையாவான் என்று அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள். நமக்கு நன்மை செய்பவர்களை நாம் நேசிப்பதும் அவர்களுக்காக உயிரையும் கொடுப்பது மனித இயல்பு. ஒரு டீயை வாங்கிக் கொடுத்ததற்காக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவருக்குப் பின்னால் அலைந்து கொண்டிருப்பவர்களும் உண்டு.

அன்னை தெரஸா நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் உதவியதால், அவரது சேவையால் பலனடையாதவர்களும் அவர்களை நேசிக்கிறார்கள்; புகழ்கிறார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் பெரும் பெரும் உதவியை ஒவ்வொரு நேரத்திலும் நாம் அனுபவித்துக் கொண்டு அவனை நேசிக்காமல் இருப்பது நன்றி கெட்டத்தனமில்லையா? இறைவன் நமக்குக் கொடுத்துள்ள ஆரோக்கியம், உடல் உறுப்புகள், அவற்றின் இயக்கம், தன்மை இவையனைத்தையும் விட பெரிய உதவி வேறு என்ன இருக்க முடியும்?. மனிதனுக்கு இறைவன் தந்திருக்கக் கூடிய பாக்கியங்களைப் பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَاؕ اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏

அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் உங்களால் எண்ண முடியாது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன்: 16:18)

وَمَا بِكُمْ مِّنْ نّـِعْمَةٍ فَمِنَ اللّٰهِ‌ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَيْهِ تَجْئَرُوْنَ‌ۚ‏

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள்.

(அல்குர்ஆன்: 16:53)

اَللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّـكُمْ‌ ۚ وَسَخَّرَ لَـكُمُ الْـفُلْكَ لِتَجْرِىَ فِى الْبَحْرِ بِاَمْرِهٖ‌ۚ وَسَخَّرَ لَـكُمُ الْاَنْهٰرَ‌ۚ‏

அல்லாஹ் தான், வானங்களையும், பூமியையும் படைத்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப்படுத்தினான். அவனது கட்டளைப்படி கடலில் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

(அல்குர்ஆன்: 14:32)

எனவே, நாம் இறைவனை அதிகம் நேசிக்கும் மக்களாக மாற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக! வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.