நபிகளாரின் நற்குணங்கள்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

நான்கு எழுத்து படித்து, பணமும் அதிகாரமும் வந்து விட்டால் அவர்களிடம் இருக்கும் பெருமையும் ஆணவமும் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வுலகத்தில் சிறப்புமிக்க இறைத்தூதராக இருந்த நபிகளார் எந்தக் கட்டத்திலும் பெருமை கொண்டதில்லை. பணிவும் தன்னடக்கமுமே அவர்களிடம் வெளிப்பட்டது.

தன்னடக்கம்
اسْتَبَّ رَجُلاَنِ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ الْيَهُودِ قَالَ الْمُسْلِمُ وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا عَلَى الْعَالَمِينَ فَقَالَ الْيَهُودِيُّ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْعَالَمِينَ فَرَفَعَ الْمُسْلِمُ يَدَهُ عِنْدَ ذَلِكَ فَلَطَمَ وَجْهَ الْيَهُودِيِّ فَذَهَبَ الْيَهُودِيُّ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ بِمَا كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِ الْمُسْلِمِ فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُسْلِمَ فَسَأَلَهُ عَنْ ذَلِكَ فَأَخْبَرَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ فَأَصْعَقُ مَعَهُمْ فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ فَإِذَا مُوسَى بَاطِشٌ جَانِبَ الْعَرْشِ فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي ، أَوْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللَّه

ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அந்த யூதர், உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார்.

அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்ததையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெளிந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் விதி விலக்கு அளித்திருப்பானா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார்கள்.

அறி: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 2411) 

لَنْ يُدْخِلَ أَحَدًا عَمَلُهُ الْجَنَّةَ قَالُوا ، وَلاَ أَنْتَ يَا رَسُولَ اللهِ قَالَ : لاََ ، وَلاَ أَنَا إِلاَّ أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِفَضْلٍ وَرَحْمَةٍ فَسَدِّدُوا وَقَارِبُوا ، وَلاَ يَتَمَنَّيَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ أَنْ يَزْدَادَ خَيْرًا وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ أَنْ يَسْتَعْتِبَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவரையும் அவரது நற்செயல் (மட்டும்) சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்) என்று கூறினார்கள்.

மக்கள், தங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், என்னையும் தான்; அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர என்று கூறிவிட்டு, எனவே, நீங்கள் நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்களில் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும் என்று கூறினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (புகாரி: 5673) 

நன்மையில் முந்திச் செல்லுதல்

நபிகளார் எந்தக் காரியத்தை ஆர்வமூட்டினாலும் அதை, தாம் முதலில் செய்பவர்களாக இருப்பார்கள். கட்சித் தலைவர்களாக இருக்கும் பலர் பத்திரிக்கைகளில் படம் வரவேண்டும் என்பதற்காகக் கேமரா முன் வந்து நின்று விட்டு மாயமாகி விடுவார்கள். ஆனால் எந்தக் காரியத்தை செய்யத் தூண்டினாலும் அதைச் செய்யும் முதல் நபராகவும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் நபிகளார் திகழ்வார்கள்.

 عَنِ ابْنِ مَسْعُودٍ ، قَالَ
كَانُوا يَوْمَ بَدْرٍ بَيْنَ كُلِّ ثَلاَثَةِ نَفَرٍ بَعِيرٌ ، وَكَانَ زَمِيلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيٌّ وَأَبُو لُبَابَةَ ، قَالَ : وَكَانَ إِذَا كَانَتْ عُقْبَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالاَ لَهُ : ارْكَبْ حَتَّى نَمْشِيَ عَنْكَ ، فَيَقُولُ : مَا أَنْتُمَا بِأَقْوَى مِنِّي ، وَمَا أَنَا بِأَغْنَى عَنِ الأَجْرِ مِنْكُمَا

பத்ர் போர் நடந்த நாட்களில் நாங்கள் மூன்று பேர் ஒரு ஒட்டகத்தில் செல்லும் நிலைமையில் இருந்தோம். அபூலுபாபா (ரலி), அலீ (ரலி) ஆகியோர் நபிகளாருடன் சேர்ந்திருந்தார்கள். (இருவர் பயணம் செய்ய, மூன்றாம் நபர் நடந்து வருவார். இவ்வாறு பயணத்தை வைத்திருந்தனர்)

நபிகளார் நடந்து வரும் முறை வந்த போது இரு நபித்தோழரும், நாங்கள் உங்களுக்காக நடக்கிறோம் (நீங்கள் ஒட்டகத்தில் அமர்ந்து வாருங்கள்) என்று கூறிய போது நீங்கள் இருவரும் என்னை விட வலிமை வாய்ந்தவர்கள் இல்லை. மேலும் உங்களை விட நன்மையில் தேவையற்றவனாகவும் இல்லை என்று பதிலளித்தார்கள்.

நூல்: (அஹ்மத்: 3901) (3706)

أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ مِنَ اللَّيْلِ حَتَّى تَتَفَطَّرَ قَدَمَاهُ، فَقَالَتْ عَائِشَةُ: لِمَ تَصْنَعُ هَذَا يَا رَسُولَ اللَّهِ، وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: «أَفَلاَ أُحِبُّ أَنْ أَكُونَ عَبْدًا شَكُورًا فَلَمَّا كَثُرَ لَحْمُهُ صَلَّى جَالِسًا، فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَقَرَأَ ثُمَّ رَكَعَ

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான், ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே? என்று கேட்டேன். அவர்கள், நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா? என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்ட போது அமர்ந்து தொழுதார்கள். ருகூஉ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ருகூஉ செய்வார்கள்.

அறி: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 4837) 

பாதுகாவலர்

தம் தோழர்களைப் பாதுகாக்கும் கேடயமாக நபிகளார் திகழ்ந்துள்ளார்கள். பிரச்சனைகள், சிக்கல்கள் தம் தோழர்களுக்கு வந்து விட்டால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக முதலில் களத்தில் ஈடுபடும் மாபெரும் வீரராகவும் நபிகளார் திகழ்ந்துள்ளார்கள்.

 عَنْ أَنَسٍ قَالَ
كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَحْسَنَ النَّاسِ وَأَجْوَدَ النَّاسِ وَأَشْجَعَ النَّاسِ ، وَلَقَدْ فَزِعَ أَهْلُ الْمَدِينَةِ ذَاتَ لَيْلَةٍ فَانْطَلَقَ النَّاسُ قِبَلَ الصَّوْتِ فَاسْتَقْبَلَهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَدْ سَبَقَ النَّاسَ إِلَى الصَّوْتِ وَهْوَ يَقُولُ لَنْ تُرَاعُوا لَنْ تُرَاعُوا وَهْوَ عَلَى فَرَسٍ لأَبِي طَلْحَةَ عُرْىٍ مَا عَلَيْهِ سَرْجٌ فِي عُنُقِهِ سَيْفٌ فَقَالَ لَقَدْ وَجَدْتُهُ بَحْرًا ، أَوْ إِنَّهُ لَبَحْرٌ

நபி (ஸல்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்களிலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்களிலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்களிலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

(ஒரு முறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியடைந்தார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் நடந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களை எதிர் கொண்டார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களுக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டிருந்தார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ரலி) அவர்களது சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையின் மீது அமர்ந்த வண்ணம், பீதியடையாதீர்கள். பீதியடையாதீர்கள் என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள். பிறகு, (தங்கு தடையின்றி) ஓடும் கடலாக இந்தக் குதிரையை நாம் கண்டோம் அல்லது இந்தக் குதிரை (தங்கு தடையின்றி) ஓடும் கடல் என்று கூறினார்கள்.

அறி: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 6033) 

நல்ல வார்த்தைகள்

அடுத்தவரைக் கண்டிக்கும் போதோ அல்லது சாதாரணமாகப் பேசும் போதோ அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசும் வழக்கமுள்ள தலைவர்கள் ஏராளம். பல கட்சிகளில் அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவர்களை மாநிலப் பேச்சாளர்களாகவும் நியமித்துள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பேச்சில் கண்ணியமும் மரியாதையும் நிறைந்திருக்கும்.

 عَنْ مَسْرُوقٍ قَالَ
كُنَّا جُلُوسًا مَعَ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو يُحَدِّثُنَا إِذْ قَالَ لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَاحِشًا ، وَلاَ مُتَفَحِّشًا وَإِنَّهُ كَانَ يَقُولُ : إِنَّ خِيَارَكُمْ أَحَاسِنُكُمْ أَخْلاَقًا

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்களிடம் பேசினார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள், நற்குணமுடையவரே உங்களில் சிறந்தவர் என்று கூறுவார்கள் என்று சொன்னார்கள்.

அறி; மஸ்ரூக்
நூல்: (புகாரி: 6035) 

عَنْ أَنَسٍ قَالَ
لَمْ يَكُنْ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَاحِشًا ، وَلاَ لَعَّانًا ، وَلاَ سَبَّابًا كَانَ يَقُولُ عِنْدَ الْمَعْتَبَةِ مَا لَهُ تَرِبَ جَبِينُه

கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ, ஏசுபவராகவோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும் போது கூட அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும் என்றே கூறுவார்கள்.

அறி: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 6046) 

பெரியவர்களுக்கு மரியாதை

தம்மை விட வயதில் மூத்தவர்களுக்கு நபிகளார் மரியாதை தருபவர்களாக இருந்தார்கள். இவ்வுலகின் இறுதி நாள் வரை உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறுதி நபி என்ற ஆணவம் அவர்களிடம் இருக்கவில்லை. தம்மை, சிறு வயதில் எடுத்து வளர்த்த உம்மு ஐமன் (ரலி) அவர்களை மரியாதை நிமித்தம் அவர்களின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்து வருவார்கள். அவர்கள் கோபப்படும் போது அமைதியாக இருப்பார்கள்.

عَنْ أَنَسٍ قَالَ
انْطَلَقَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- إِلَى أُمِّ أَيْمَنَ فَانْطَلَقْتُ مَعَهُ فَنَاوَلَتْهُ إِنَاءً فِيهِ شَرَابٌ – قَالَ – فَلاَ أَدْرِى أَصَادَفَتْهُ صَائِمًا أَوْ لَمْ يُرِدْهُ فَجَعَلَتْ تَصْخَبُ عَلَيْهِ وَتَذَمَّرُ عَلَيْه

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். உம்மு ஐமன் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்தார்கள். அதில் ஏதோ குடிபானம் இருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருந்தார்களோ, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ந்தப் பானத்)தை விரும்பவில்லையோ தெரியவில்லை. (அதை அவர்கள் பருக மறுத்து விட்டார்கள்.) அதற்காக உம்மு ஐமன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உரத்த குரலில் கோபமாகக் கடிந்து கொண்டார்கள்.

அறி: அனஸ் (ரலி)
நூல்: (புகாரி: 4848) 

عَنْ أَنَسٍ قَالَ
قَالَ أَبُو بَكْرٍ رضى الله عنه بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- لِعُمَرَ انْطَلِقْ بِنَا إِلَى أُمِّ أَيْمَنَ نَزُورُهَا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَزُورُهَا. فَلَمَّا انْتَهَيْنَا إِلَيْهَا بَكَتْ فَقَالاَ لَهَا مَا يُبْكِيكِ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ -صلى الله عليه وسلم-. فَقَالَتْ مَا أَبْكِى أَنْ لاَ أَكُونَ أَعْلَمُ أَنَّ مَا عِنْدَ اللَّهِ خَيْرٌ لِرَسُولِهِ -صلى الله عليه وسلم- وَلَكِنْ أَبْكِى أَنَّ الْوَحْىَ قَدِ انْقَطَعَ مِنَ السَّمَاءِ. فَهَيَّجَتْهُمَا عَلَى الْبُكَاءِ فَجَعَلاَ يَبْكِيَانِ مَعَهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், நம்மை (அம்மையார்) உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம் என்று கூறினார்கள்.

அவ்வாறே உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்ற போது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே? என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு ஐமன் (ரலி) அவர்கள், அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்) என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச் செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.

அறி : அனஸ் (ரலி)
நூல் : (முஸ்லிம்: 4849) 

உணர்வுக்கு மதிப்பளித்தல்

சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் அவர்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அது மார்க்கத்திற்கு முரணாக இல்லாத போது அதை நிறைவேற்றி வைப்பது சிறந்த பண்பாகும். இதை நபிகளார் அவர்கள் செய்து சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

عَنْ عَائِشَةَ قَالَتْ
دَخَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَعِنْدِى جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثٍ فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ فَدَخَلَ أَبُو بَكْرٍ فَانْتَهَرَنِى وَقَالَ مِزْمَارُ الشَّيْطَانِ عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ « دَعْهُمَا » فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ فَإِمَّا سَأَلْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- وَإِمَّا قَالَ « تَشْتَهِينَ تَنْظُرِينَ ». فَقُلْتُ نَعَمْ فَأَقَامَنِى وَرَاءَهُ خَدِّى عَلَى خَدِّهِ وَهُوَ يَقُولُ « دُونَكُمْ يَا بَنِى أَرْفَدَةَ ». حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ « حَسْبُكِ ». قُلْتُ نَعَمْ. قَالَ « فَاذْهَبِى

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.

(பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, உனக்கு போதுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ! என்று கூறினார்கள்.

அறி: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 950) 

 قَالَتْ عَائِشَةُ
وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُومُ عَلَى بَابِ حُجْرَتِى – وَالْحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ فِى مَسْجِدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- – يَسْتُرُنِى بِرِدَائِهِ لِكَىْ أَنْظُرَ إِلَى لَعِبِهِمْ ثُمَّ يَقُومُ مِنْ أَجْلِى حَتَّى أَكُونَ أَنَا الَّتِى أَنْصَرِفُ. فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ حَرِيصَةً عَلَى اللَّهْوِ

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க, பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்!

அறி: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 5236) 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை. மாறாக ஆயிஷா (ரலி) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தோள் கொடுத்து நின்று, பார்க்கச் செய்துள்ளார்கள். இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.

 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي، «فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ، فَيُسَرِّبُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنَ مَعِي

நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

அறி: ஆயிஷா (ரலி)
நூல்: (புகாரி: 6130)(முஸ்லிம்: 4827)

ஆசையோடு தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைக் கடிந்து கொள்ளவும் இல்லை, தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர்களைத் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.

இவ்வாறு நபியவர்கள் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தன்னடக்கத்தோடு வாழ்ந்து, அதையே நமக்கு போதித்திருக்கிறார்கள். அந்தகைய தன்னடக்கத்தை நாமும் நம்முடைய வாழ்வில் கொண்டு வந்து, ஈருலக நன்மை பெற, நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக!

அப்படி ஒரு வாய்ப்பினை வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவானாக.!