இறந்தவர்கள் நினைவாக நினைவுத்தூண் எழுப்பலாமா?

கேள்வி-பதில்: பித்அத்

இறந்தவர்கள் நினைவாக நினைவுத்தூண் எழுப்பலாமா?

கேள்வி:

1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி இரவு இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளையில் பாசிசப் புலிப் பயங்கரவாதிகளால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட சகோதரர்களின் ஞாபகார்த்தமாக எமது ஊரின் ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒரு நினைவுத்தூபி எழுப்பப்பட்டு வருகின்றது. இவ்வாறு மரணித்தவர்களின் ஞாபகார்த்தமாக நினைவுத் தூபிகளைக் கட்டியெழுப்புவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா?

– முஹம்மது ஃபஹ்மி, இலங்கை

பதில்:

இறந்தவர்களின் நினைவாக நினைவுத்தூண் எழுப்புவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழர்கள் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்களது தியாகத்தை நினைவுகூர்வதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த சஹாபிக்கும் இத்தகைய நினைவுத்தூண்களை எழுப்பவில்லை.

கீழ்க்கண்ட நபிகளாரின் எச்சரிக்கைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யூத கிறித்தவர்களை அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஆக்கி விட்டனர்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 436, 437, 1390, 3454, 4441, 4444, 5816),

உங்கள் வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! மேலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(அபூதாவூத்: 1746),

அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தை எழுப்பிக் கொண்டனர். அவர்களது உருவங்களையும் அதில் செதுக்கிக் கொண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிலேயே இவர்கள் தான் மிகவும் கெட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(புகாரி: 427, 434, 1341, 3873)

சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவதையும், அது பூசப்படுவதையும், அதன் மீது உட்கார்வதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

(முஸ்லிம்: 1610)

தர்கா வழிபாட்டின் ஆரம்பமே இறந்தவர்களது நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஷைத்தானின் தூண்டுதல் தான்.

இத்தகைய செயல்பாடுகளில் இருந்து அல்லாஹ் நம்மை காப்பாற்ற வேண்டும்.