கலாலா – சந்ததி இல்லாதவர்
சந்ததி இல்லாதவர் கலாலா எனப்படுவர். இத்தகையோர் சகோதர, சகோதரிகளை விட்டுச் சென்றால் சொத்துக்களை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று இவ்வசனம் (4:12) கூறுகிறது.
இறந்தவருக்குப் பிள்ளைகள் இல்லாத நிலையில் ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள் என்று இவ்வசனம் கூறுகிறது.
ஆனால் இதே அத்தியாயத்தின் 176வது வசனத்தில் சகோதர சகோதரிகளுக்குக் கிடைக்கும் பாகம் வேறு விதமாகக் கூறப்படுகிறது.
பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும்போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழிதவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன் (4:176) என்று கூறப்படுகிறது
ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் சகோதரிக்கு ஆறில் ஒரு பங்கு என்று 4:12 வசனம் கூறுகிறது.
ஒரு சகோதரி இருந்தால் மொத்தச் சொத்தில் பாதி என்று 4:176 வசனம் கூறுகிறது.
இரண்டும் முரண்படுவதால் பலரும் பலவிதமான விளக்கங்களைக் கூறியுள்ளனர்.
சிலர் கலாலா என்ற சொல்லுக்கு இந்த வசனத்தில் ஒரு விளக்கமும், 176வது வசனத்தில் வேறு விளக்கமும் கூறியுள்ளனர். இது தவறாகும்.
கலாலா என்ற சொல்லுக்கு சந்ததியில்லாமல் சகோதர சகோதரிகளை விட்டுச் செல்பவர் என்று 176வது வசனத்தில் அல்லாஹ்வே விளக்கம் கூறி விட்டதால் மற்றவர்கள் கூறும் விளக்கத்தை நாம் ஏற்கக் கூடாது.
சந்ததிகள் இல்லாமல் சகோதர சகோதரிகளை விட்டுச் செல்பவரைப் பற்றித்தான் இரண்டு வசனங்களும் கூறுகின்றன. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அப்படியானால் இரண்டு வசனங்களிலும் வெவ்வேறு அளவுகள் ஏன் கூறப்படுகின்றன? இதற்கு புகாரீயில் இடம் பெற்ற ஹதீஸ் விடையளிக்கிறது.
திருக்குர்ஆனில் கடைசியாக அருளப்பட்ட வசனம் 4:176 வசனம் தான் என்று பரா பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரீ: 4605)
எனவே 4:176 வசனத்தில் இறுதியாகக் கூறப்பட்ட சட்டம் 4:12 வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை மாற்றி விட்டது என்பதே சரியாகும்.