94) அல்லாஹ்வுக்கு இடைத் தரகர் கிடையாது என்பதால்..
95) அல்லாஹ்வுக்கு இடைத் தரகர் கிடையாது என்பதால்
இணை கற்பிக்க நியாயம் இல்லை
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள் (என்பதைக் கூறுவீராக!)
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். பூமியில் சீர்திருத்தம் செய்யப்பட்ட பின் அதில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.
என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.
இணை கற்பிக்கச் சான்று இல்லாததால் இணை கற்பிக்க நியாயம் இல்லை (நம்மை) மறுத்தோரின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்துவோம். அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் அருளாமலிருந்தும் அவனுக்கு இணை கற்பித்ததே இதற்குக் காரணம். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோர் சென்றடையும் இடம் மிகவும் கெட்டது.
அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சான்றையும் வழங்காதவற்றை அவனுக்கு இணையாக்குவதற்கு நீங்கள் அஞ்சாத போது நீங்கள் இணை கற்பித்தவைகளுக்கு எவ்வாறு நான் அஞ்சுவேன்? நீங்கள் அறிந்தால் இரு கூட்டத்தினரில் அச்சமற்றிருக்க அதிகத் தகுதி படைத்தவர் யார்? (என்றும் அவர் கூறினார்.)
வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும்,நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான் எனக் கூறுவீராக!
உங்கள் இறைவனிடமிருந்து வேதனையும், கோபமும் உங்கள் மீது ஏற்பட்டு விட்டன. நீங்களும், உங்கள் முன்னோர்களும் சூட்டிக் கொண்ட வெறும் பெயர்களைப் பற்றி (கற்பனைப் பாத்திரங்களைப் பற்றி) என்னிடம் தர்க்கம் செய்கிறீர்களா? அது பற்றி அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. எதிர் பாருங்கள்! உங்களுடன் சேர்ந்து நானும் எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.
அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர்கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.
அவனையன்றி கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்களா? உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்! இதுவே என்னுடனிருப்போரின் அறிவுரையும், எனக்கு முன் சென்றோரின் அறிவுரையுமாகும் என்று (முஹம்மதே!) கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிய மாட்டார்கள். அவர்கள் புறக்கணிப்பவர்கள்.
அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் இதற்குக் காரணம்.
அல்லாஹ்வை விட்டு விட்டு எதைக் குறித்து எந்தச் சான்றையும் அவன் அருளவில்லையோ அதையும், எதைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லையோ அதையும் அவர்கள் வணங்குகின்றனர். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளனும் இல்லை.
அல்லாஹ்வுடன் வேறு கடவுளை யாரேனும் அழைத்தால் அவனிடம் அது குறித்து எந்தச் சான்றும் இல்லை. அவனை விசாரிப்பது அவனது இறைவனிடமே உள்ளது. (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்.
(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்! என்று கேட்பீராக!
அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடு தான் மிகவும் பலவீனமானது. (அதை) அவர்கள் அறியக் கூடாதா?
அவர்கள் எதை இணை கற்பிக்கிறார்களோ அது குறித்துப் பேசுகின்ற சான்றை அவர்களுக்கு நாம் அருளியுள்ளோமா?