09) பவுல் கண்ட புது மார்க்கம்

நூல்கள்: இது தான் பைபிள்

யுh) பவுல் கண்ட புது மார்க்கம்

கர்த்தரின் பிரமாணம் உத்தமமானது. அது புது உயிர் கொடுக்கிறது. கர்த்தரின் சாட்சியம் நம்பப்படத்தக்கது. அது பேதையை ஞானியாக்குகிறது. கர்த்தரின் கட்டளைகள் நேர்மையானவை. அவை இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கும். கர்த்தரின் கற்பனை தூயது. அது கண்களைத் தெளிவிக்கிறது.

சங்கீதம் 19:7,8

பழைய ஏற்பாட்டில் காணப்படும் இந்த வசனங்கள் கர்த்தரின் வார்த்தைகளும், பிரமாணங்களும் மனிதனுக்கு நேர்வழி காட்டும் என்று போதிக்கின்றன. கர்த்தரின் இந்தப் போதனைக்கு முரணாகப் பவுல் கருத்துத் தெரிவிக்கிறார். அது பைபிளிலும் இடம்பெற்றுள்ளது.

முந்தின கட்டளை பலவீனமுள்ளதும் பயனற்றதுமாய் இருந்ததினிமித்தம் அது தள்ளப்படுகின்றது. நியாயப் பிரமாணம் ஒன்றையும் பூரணப்படுத்தியதில்லை.

எபிரேயர் 7:18

முந்தைய நியாயப் பிரமாணத்தை இயேசு தள்ளினால் அதில் ஓரளவாவது நியாயம் இருக்கும். இயேசுவுக்குப் பின்னால் வந்த பவுல் கர்த்தரின் நியாயப் பிரமாணம் பரிபபூரணமானதன்று; பலவீனமானது என்கிறார். கர்த்தரையே அலட்சியம் செய்யும் பவுலடிகளைக் கிறித்தவ உலகம் நம்புவது தான் வேதனைக்குரியது.

கர்த்தரின் உத்தரவாதத்தைக் கிறித்தவ உலகம் நம்பப் போகிறதா? அதைத் தள்ளுபடி செய்யும் பவுல் போதனையை ஏற்கப் போகிறதா? எதை நம்பினாலும் பைபிள் இறை வேதமாக இருக்க முடியாது என்பது தெளிவு. இனி பழைய ஏற்பாட்டின் சில வசனங்கள் மற்றும் சில வசனங்களுடன் எவ்வாறு முரண்படுகின்றன என்பதைக் காண்போம்.

யுi) புனித நாளின் கடமைகள்

இஸ்ரவேலர்களின் புனித நாட்களைப் பற்றியும், அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் பைபிளின் எசக்கியேல், எண்ணாகமம் என்ற இரண்டு ஆகமங்கள் கூறுகின்றன. இரண்டு ஆகமங்களிலும் இந்த விஷயத்தில் அனேக முரண்பாடுகள்!

முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கும் ஏழு நாள் உற்சவமாகிய  பஸ்கா ஆரம்பமாகும். அந்நாளிலே அதிபதி தனக்காகவும், தேசத்து ஜனம் அனைத்துக்காகவும் பாவ நிவாரணப் பலியாக ஒரு காளையைப் படைக்க வேண்டும். உற்சவ நாட்கள் ஏழிலும் அவன் கர்த்தருக்குத் தகனப் பலியாக பழுதற்ற ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கடாக்களையும் அந்த ஏழு நாளும் தினந்தோறும் படைக்க வேண்டும். பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் தினந்தோறும் படைக்க வேண்டும்.

போஜனப் பலியாக ஒரு காளையோடே ஒரு மரக்கால் மாவையும் ஒரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும் ஒரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்க வேண்டும். ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதியில் ஆரம்பமாகிற உற்சவத்திலும் அவன் அது போலவே ஏழு நாளும் பாவ நிவாரணப் பலிகளையும் தகனப் பலிகளையும் போஜனப் பலிகளையும் எண்ணெயையும் படைக்க வேண்டும்.

எசக்கியேல் 45:21-25

பழுதில்லாத ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தகனப் பலியாக செலுத்த வேண்டும் என்று இங்கே கூறப்படுவதற்கு மாற்றமாக  இரண்டு இளங்காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் பலியிட வேண்டும் என்று எண்ணாகமம் 28:19 கூறுகின்றது.

ஒரே இனத்துக்கு ஒரே காலத்தில் இடப்பட்ட கட்டளையில் இந்த முரண்பாடு ஏன்?

பாவ நிவாரணப் பலியாக ஒரு காளைமாட்டைப் படைக்க வேண்டும் என்று இங்கே கூறப்பட்டதற்கு மாற்றமாக பாவ நிவாரணப் பலிக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் செலுத்த வேண்டும் என்று எண்ணாகமம் 28:20 கூறுகிறது.

போஜனப் பலியாக ஒரு காளை, ஒரு மரக்கால் மாவு, ஒரு ஆட்டுக்கடா, ஒரு மரக்கால் மாவு, ஒருபடி எண்ணெய் ஆகியவற்றைப் படைக்க வேண்டும் என்று இங்கே கூறப்பட்டதற்கு மாற்றமாக  போஜன பலியாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக பத்தில் இரண்டு பங்கையும் ஏழு ஆட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் ஒரு பங்கையும் படைக்க வேண்டும் என்று எண்ணாகமம் 28:20 வசனம் கூறுகிறது.

முதலாம் மாதம் பதினாலாந்தேதி செய்தது போலவே ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதியிலும் பலியிட வேண்டும் என எசக்கியேலில் கூறப்படுகின்றது. ஆனால் எண்ணாகமத்தில் ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி பலியிட வேண்டியது பற்றி வேறு விதமாகக் கூறப்படுகின்றது.

ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்கு பரிசுத்த மகா சங்கம். அன்று சாதாரண வேலை எதையும் செய்யலாகாது. ஏழு நாள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும். நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான நிவேதனமாகப் பதின் மூன்று இளங்காளைகளையும் இரண்டு ஆட்டுக் கடாக்களையும் ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக் குட்டிகளையும் தகன பலியிட வேண்டும் என்று எண்ணாகமம் 29:12 கூறுகிறது. இரண்டுக்கும் அனேக வித்தியாசங்கள் உள்ளன. இவை தவிர இந்த விஷயத்தில் இன்னும் பல தகவல்கள் முரண்பட்டுக் காணப்படுகின்றன.

எண்ணாமம் 28,29 அதிகாரங்களையும் எசக்கியேல் 45,46 அதிகாரங்களையும் முழுமையாகப் படிப்போர், அவற்றைக் காணலாம்.

இரண்டுமே கடவுளின் வார்த்தைகள் என்றால் இவ்வளவு முரண்பாடுகள் இருப்பது ஏன்? அது மட்டுமின்றி, அந்த அதிகாரங்களில் கூறப்படுபவற்றைச் செய்வதென்றால் ஒவ்வொருவருக்கும் ஐந்தாறு ஆட்டுப் பண்ணைகளும், ஐந்தாறு மாட்டுப் பண்ணைகளும் இருக்க வேண்டும். சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு இது கட்டுபடியாகாது என்பதையும் கிறித்தவர்கள் சிந்திக்கட்டும்.

 யுத) பாதியும் மீதியும்

காத் என்பவனின் புத்திரருக்குக் கடவுள் கொடுத்த நிலப்பரப்பைக் கூறும் போது பைபிள் தடுமாறுகிறது.

கர்த்தர் என்னிடம் சொன்னதாவது, இன்று நீ மோவாபின் எல்லையிலுள்ள ஆர் நகரத்தைக் கடந்து போவாய். அம்மோனியரை நெருங்கும் போது நீ அவர்களை வருத்தப்படுத்த வேண்டாம். அவர்களோடு போர் செய்யவும் வேண்டாம். அம்மோனியரின் தேசத்தில் எதையும் உனக்குக் கொடேன். அதை லோத்தின் புத்திரருக்குச் சொந்தமாகக் கொடுத்து விட்டேனே.

உபாகமம் 2:17-19

அம்மோனியர் தேசத்தில் எதையும் இவர்களுக்குக் கொடுக்கவில்லை. அது லோத்தின் குமாரருக்கு உரியது என்று இங்கே கூறியதற்கு மாற்றமாக

காத் புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே, அவர்கள் வம்சங்களின் படி கொடுத்தவை இவைகளே. யாசேரும் கிலியாத்தின் சகல பட்டணங்களும் ரபாவுக்கு எதிரே இருக்கிற அரோவர் மட்டுமுள்ள அம்மோனியரின் பாதித் தேசமும்… என்று யோசுவா  (13:24,25) கூறுகிறது.

அம்மோனியரின் தேசத்தில் எதையும் தொடக் கூடாது என்று கூறியது கர்த்தரின் கட்டளையா? அதில் பாதித் தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்பது கர்த்தரின் வார்த்தையா? முரண்பட்ட இந்த இரண்டில் எது உண்மை என்றாலும் பைபிள் எப்படி இறை வேதமாக இருக்கமுடியும்?

 யும) குழப்பக் கணக்கு

பென்யமீன்களுடைய குமாரர்களைப் பற்றி பைபிள் கூறுகின்றது. அவனுடைய குமாரர்களின் எண்ணிக்கை, அவர்களின் பெயர்கள் ஆகியவற்றைக் கூறும் போதும் அனேக முரண்பாடுகள் உள்ளன.

பென்யமீன் குமாரர் பேலா, பேகேர், யெதீகவேல் எனும் மூவர்.

முதலாம் நாளாகமம் 7:6

பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பேல் எனும் இரண்டாம் குமாரனையும், அகராகு என்னும் மூன்றாம் குமாரனையும், நோகா என்னும் நாலாம் குமாரனையும், ராபா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான்.

முதலாம் நாளாகமம் 8:1,2

ஒரே ஆகமத்துக்குள்ளேயே இரண்டு முரண்கள். ஒரு இடத்தில் மூன்று குமாரர்கள் என்றும் இன்னொரு இடத்தில் ஐந்து குமாரர்கள் என்றும் கூறப்படுகின்றது. ஐந்து குமாரர்கள் என்று குறிப்பிடும் இடத்தில் முதலில் கூறிய மூவருடன் வேறு இரண்டு பேர்களை சேர்த்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. பேலா என்ற பெயர் மட்டுமே இரண்டு இடங்களிலும் கூறப்பட்டுள்ளது. மற்ற பெயர்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாமல் உள்ளன. கடவுளின் வேதம் இப்படிக் குழப்பலாமா?

மூன்று குமாரர்கள் என்றும், ஐந்து குமாரர்கள் என்றும் ஒரு ஆகமத்துக்குள்ளேயே முரண்படும் பைபிள் இன்னொரு ஆகமத்தில் மேலும் முரண்படுகிறது.

பென்யமீனின் குமாரர் பேலா, பேகர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பீம், குப்பீம், ஆர்து என்பவர்கள்.

ஆதியாகமம் 46:21

இங்கே பென்யமீனுக்கு பத்துக் குமாரர்கள் இருந்ததாகக் கூறுவதுடன் பேலா எனும் பெயரைத் தவிர மற்ற பெயர்கள் யாவும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தமில்லாததாக உள்ளது. இந்தப் பரம்பரைப் பட்டியல் அவசியம் தானா? இதைத் தெரிந்து ஆகப் போவது என்ன என்ற கேள்வி ஒரு புறமிருக்கட்டும்.

இந்தச் சிறிய எண்ணிக்கையை எண்ணிச் சொல்வதில் கர்த்தருக்கு – அல்லது கர்த்தரின் ஆவியால் உந்தப்பட்டவருக்கு இவ்வளவு குழப்பம் வர வேண்டுமா? அது போல் சிலரது பரம்பரைப் பட்டியலை பைபிள் கூறுகின்றது. இரண்டு இடங்களில் ஏராளமான பெயர்கள் கூறப்படுகின்றன.

முதலாம் நாளாகமம் 8:29-38 வரை கூறப்படும் பெயர்களையும்

முதலாம் நாளாகமம் 9:35-44 வரை கூறப்படும் பெயர்களையும்

பார்வையிடுவோர் இரண்டு இடங்களிலும் அனேகம் முரண்பாடுகள் மலிந்து கிடப்பதைக் காணமுடியும்.

இத்தனைக்குப் பிறகும் அது இறை வேதம் என்று எப்படி நம்ப முடியும்? சாதாரணத் தகவல்களிலேயே குழப்பக் கூடிய புத்தகம், மனித வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்று எப்படி நம்ப முடியும்? கிறித்தவ உலகம் சிந்திக்குமா?

 யுi) செத்துப் பிழைத்த மிருகங்கள்

மறுநாளிலே கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார். எகிப்தியரின் மிருகங்கள் எல்லாம் செத்துப் போயின. இஸ்ரவேலரின் மிருகங்களில் ஒன்றாகிலும் சாகவில்லை.

யாத்திராகமம் 9:6

மோசேயின் எதிரிகளான பார்வோனின் கூட்டத்தினரைத் தண்டிக்கும் விதமாக அவர்களின் மிருகங்கள் அனைத்தையும் கர்த்தர் சாகடித்ததாக இவ்வசனம் கூறுகின்றது.

இதே யாத்திராகமம் இதே அதிகாரத்தில் இதற்கு முரணாகவும் கூறுகின்றது.

பார்வோனின் ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகங்களையும் வீட்டுக்கு ஓடி வரச் செய்தான். எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற் போனானோ அவன் தன் வேலைக்காரரையும், தன் மிருகங்களையும் வெளியிலே விட்டு விட்டான்.

யாத்திராகமம் 9:20,21

பார்வோன் கூட்டத்தினரின் எல்லா மிருகங்களும் கர்த்தரின் கட்டளைப்படி சாகடிக்கப்பட்ட பின், எப்படி மிருகங்களை வீட்டுக்கு ஓடிவரச் செய்திருக்க முடியும்? அல்லது அவற்றை எப்படி வெளியில் விட்டுவிட முடியும்? அம்மிருகங்களைக் கர்த்தர் அழித்து விட்டதாகக் கூறுவது சரியா? கர்த்தரின் கட்டளைக்குப் பின்பும் அழியவில்லை என்பது சரியா?