80) மறைவானவை மூஸா நபிக்குத் தெரியாது
80) மறைவானவை மூஸா நபிக்குத் தெரியாது
கவலையும், கோபமும் கொண்டு மூஸா தமது சமுதாயத்திடம் திரும்பிய போது எனக்குப் பின்னர் நீங்கள் செய்தது மிகவும் கெட்டது. உங்கள் இறைவனின் கட்டளைக்கு (தண்டனைக்கு) அவசரப்படுகிறீர்களா? என்றார். பலகைகளைப் போட்டார். தமது சகோதரரின் தலையைப் பிடித்து தம்மை நோக்கி இழுத்தார். (அதற்கு அவரது சகோதரர்) என் தாயின் மகனே! இந்தச் சமுதாயத்தினர் என்னைப் பலவீனனாகக் கருதி விட்டனர். என்னைக் கொல்லவும் முயன்றனர். எனவே எதிரிகள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்! அநீதி இழைத்த சமுதாயத்தில் என்னையும் ஆக்கி விடாதீர்! என்றார்.
இல்லை! நீங்களே போடுங்கள்! என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார். அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர் என்று கூறினோம்.
மூஸாவே! உமது சமுதாயத்தை விட்டு விட்டு அவசரமாக வந்தது ஏன்? (என்று இறைவன் கேட்டான்.) அவர்கள் இதோ எனக்குப் பின்னால் வருகின்றனர். என் இறைவா! நீ திருப்திப்படுவதற்காக உன்னிடம் விரைந்து வந்தேன் என்று அவர் கூறினார். உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்து விட்டான் என்று (இறைவன்) கூறினான். உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார். என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகான வாக்குறுதியை அளிக்கவில்லையா? அல்லது (நான் புறப்பட்டுப் போய்) அதிக காலம் ஆகி விட்டதா? அல்லது உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது கோபம் இறங்க வேண்டும் என விரும்பி என்னிடம் கொடுத்த வாக்கை மீறினீர்களா? என்று கேட்டார்.
அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி என்றார். என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக! என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். என் இறைவா! நீ எனக்கு அருள் புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன் என்றார்.