08) முரண்பட்ட இரண்டு சட்டங்கள்

நூல்கள்: குர்ஆன் மட்டும் போதுமா?

8) முரண்பட்ட இரண்டு சட்டங்கள்

சந்ததிகளைப் பெறாமல் மரணிப்பவர் கலாலா எனக் குறிப்பிடப்படுவார். சந்ததி இல்லாமல் ஒருவர் மரணித்து விட்டால் அவரது சொத்தை எப்படிப் பங்கீடு செய்ய வேண்டும் என்பது பற்றி திருக்குர்ஆனில் முரண்பட்ட இரு சட்டங்கள் கூறப்படுகின்றன.

இறந்த ஆணோ, பெண்ணோ பிள்ளை இல்லாதவராக இருந்து அவர்களுக்கு ஒரு சகோதரனோ, ஒரு சகோதரியோ இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உள்ளது. அதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு பங்கில் அவர்கள் அனைவரும் கூட்டாளிகள்.

(அல்குர்ஆன்: 4:12)

வாரிசு இல்லாமல் மரணிப்பவரின் சகோதரிக்கு ஆறில் ஒரு பாகம் என்று இவ்வசனம் கூறுகிறது. ஆனால் பின் வரும் வசனம் வாரிசு இல்லாமல் மரணித்தவரின் சகோதரிக்கு பாதிச் சொத்து சேரும் எனக் கூறுகிறது.

கலாலா பற்றி (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். அல்லாஹ் இது குறித்து தீர்ப்பளிக்கிறான்எனக் கூறுவீராக! பிள்ளை இல்லாத ஒரு மனிதன் இறக்கும் போது அவனுக்குச் சகோதரி இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் பாதி அவளுக்கு உண்டு. அவளுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (அவள் இறக்கும் போது) அவ(ளது சகோதர)ன் அவளுக்கு வாரிசாவான்.

இரண்டு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவர்களுக்கு உண்டு. ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு. நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 4:176)

இவ்விரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகும். ஆறில் ஒன்று கொடுக்க வேண்டுமா? சரி பாதி கொடுக்க வேண்டுமா? எதைக் கொடுத்தாலும் ஒரு வசனத்தை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டில் ஒரு வசனம் முதலில் அருளப்பட்டதாகவும், மற்றொன்று பின்னர் அருளப்பட்ட வசனமாகவும் இருந்தால் தான் இந்த முரண்பாடு நீங்கும். முதலில் அருளப்பட்ட சட்டத்தை பின்னர் அருளப்பட்ட சட்டம் மாற்றி விட்டது என்று முடிவு செய்தால் எந்த வசனத்தையும் மறுக்கும் நிலை ஏற்படாது.

ஒரு வசனம் முதலில் அருளப்பட்டதா பின்னர் அருளப்பட்டதா என்பதைக் குர்ஆனிலிருந்து அறிய முடியாது. ஹதீஸில் இருந்து தான் அறிய முடியும்.

திருக்குர்ஆனில் கடைசியாக அருளப்பட்ட வசனம் 4:176 வசனம் தான் என்று பரா பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி: 4605)

ஹதீஸ்கள் மார்க்க ஆதாரங்கள் என்ற கொள்கையுடையவர்கள் 4:176 வசனத்தில் இறுதியாகக் கூறப்பட்ட சட்டம் 4:12 வசனத்தில் கூறப்பட்ட சட்டத்தை மாற்றி விட்டது என்று தெளிவான விடையைக் கண்டறிந்து கொள்வார்கள். ஹதீஸ்கள் தேவை இல்லை என்போர் இதற்குப் பொருத்தமான எந்த விடையயும் கூற முடியாது.

பேரீச்சை மரங்களை வெட்டியது

நீங்கள் (அவர்களுடைய) பேரீச்சை மரங்களை வெட்டியதும், அதன் வேர்களுடன் வெட்டாது விட்டதும் அல்லாஹ்வின் விருப்பப்படியே நடந்தது. குற்றம் புரிந்தோரை அவன் இழிவுபடுத்துவான்.

(அல்குர்ஆன்: 4:176)

பனூ குரைலா கூட்டத்தினரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெற்றி கொண்ட போது அங்கிருந்த பேரீச்சை மரங்களில் சிலவற்றை வெட்டினார்கள். மற்றும் சிலவற்றை வெட்டாது விட்டனர். இதை யூதர்கள் விமர்சனம் செய்த போது மேற்கண்ட வசனத்தை அல்லாஹ் அருளினான்.

பேரீச்சை மரங்களை வெட்டியதும், வெட்டாது விட்டதும் எனது அனுமதியின் படி தான் நடந்தது என்று இவ்வசனத்தில் அல்லாஹ் பதிலளிக்கிறான். குர்ஆன் தவிர வேறு வஹீ இல்லை என்ற கருத்துப்படி இந்த அனுமதி குர்ஆனில் இருக்க வேண்டும். ஆனால் பேரீச்சை மரங்களை வெட்டுங்கள்! அல்லது வெட்டாது விட்டு விடுங்கள்என்று குர்ஆனில் கூறப்படவில்லை. அப்படியானால் குர்ஆன் அல்லாத வஹீ மூலம் தான் அல்லாஹ் அனுமதி அளித்திருக்க முடியும். குர்ஆன் மட்டும் தான் மார்க்க ஆதாரம் என்ற வாதம் தவறு என்பது இதன் மூலமும் தெரிகிறது.

இரண்டு நாட்களில் புறப்படுதல்

குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் எந்தக் குற்றமுமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றம் இல்லை. (இது இறைவனை) அஞ்சுவோருக்கு உரியது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடம் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்: 2:203)

ஹதீஸ்களின் துணையின்றி இவ்வசனத்தில் கூறப்படும் இரண்டு விஷயங்களை விளங்க முடியாது. குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். குறிப்பிட்ட நாட்கள் எவை என்பதைக் குர்ஆன் முழுவதும் தேடினாலும் அந்தக் குறிப்பிட்ட நாட்கள் எவை என்பது குர்ஆனில் கிடைக்காது. குறிப்பிட்ட நாட்கள் எவை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளில் தான் அறிய முடியும்.

அல்லாஹ்வை எப்போதும் நினைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அவனை நினைத்து விட்டு மற்ற நாட்களில் நினைக்காமல் இருக்கலாம் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது. எனவே இதன் பொருள் பொதுவாக அல்லாஹ்வை நினைப்பது அல்ல. மாறாக குறிப்பிட்ட ஒரு வணக்கத்தை குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டும் என்பது தான் இதன் பொருள்.

குறிப்பிட்ட நாட்களில் செய்ய வேண்டிய அந்தக் குட்றிப்பிட்ட வணக்கம் என்ன என்பது குர்ஆனில் கூறப்படவில்லை. குறிப்பிட்ட இடத்தில் கல் எறிதல் என்ற வணக்கத்தைத் தான் இந்த வசனம் குறிக்கிறது என்று ஹதீஸ் அடிப்படையில் நாம் விளங்கிக் கொள்ள முடியும்.

ஹதீஸ்கள் தேவை இல்லை என்போர் குறிப்பிட்ட நாட்களையும் குர்ஆனிலிருந்து காட்ட முடியாது. குறிப்பிட்ட வணக்கத்தையும் குர்ஆனிலிருந்து காட்ட முடியாது. மொத்தத்தில் ஹதீஸ்கள் தேவை இல்லை என்று கூறுவதன் மூலம் குர்ஆன் தெளிவானது அல்ல என்று இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.

அடுத்ததாக இரண்டு நாட்களில் விரைவோர் மீது குற்றம் இல்லை என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. இரண்டு நாட்களில் எங்கே விரைவது? எதற்கு விரைவது? இக்கேள்விக்கு குர்ஆனில் விடை இல்லை.

கல் எறிதல் என்ற வணக்கத்தை மூன்று நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய இயலாமல் அவசர வேலை உள்ளவர்கள் இரண்டு நாட்கள் மட்டும் கல் எறிந்து விட்டு புறப்பட்டால் அது குற்றம் இல்லை என்று ஹதீஸ்கள் விளக்குகின்றன.

ஹதீஸ்கள் தேவை இல்லை என்போர் இரண்டு நாட்களில் விரைதல் என்பதற்கு ஆதாரமின்றி எதையாவது உளற முடியுமே தவிர குர்ஆனிலிருந்து அதைக் காட்ட முடியாது. குர்ஆனைச் சரியாகப் புரிந்து கொள்ள நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்பதை இதிலிருந்தும் அறியலாம்.

குறிப்பிட்ட நாட்கள்

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால் நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

(அல்குர்ஆன்: 22:28)

இந்த வனத்திலும் குறிப்பிட்ட நாட்களில்என்று அல்லாஹ் கூறுகிறான். அந்தக் குறிப்பிட்ட நாட்கள் எவை என்பதை ஹதீஸ்களின் துணையில்லாமல் விளங்க முடியாது. ஏனெனில் அந்த நாட்கள் யாவை என குர்ஆனில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறப்படவில்லை.

ஹஜ் உம்ரா

அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்ராவையும் முழுமைப்படுத்துங்கள்!

(அல்குர்ஆன்: 2:196)

ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுங்கள் என இவ்வசனம் கூறுகிறது.

ஹஜ் என்பது என்ன? என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? உம்ரா என்பது என்ன? அதற்குச் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன? இக்கேள்விகளுக்கான விடையைக் குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்ட முடியுமா என்றால் முடியாது. ஊகமாக எதையாவது உளற முடியுமே தவிர குர்ஆன் ஆதாரத்துடன் விடை கூற இயலாது.

குர்ஆனை முழுமையாக விளங்க ஹதீஸ்கள் அவசியம் என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.

பத்து இரவுகள்

முக்கியமான பத்து இரவுகள் மீது சத்தியம் செய்து இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சத்தியம் என பின் வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக! கடந்து செல்லும் இரவின் மீது சத்தியமாக! அறிவுடையோருக்கு (போதிய) சத்தியம் இதில் இருக்கிறதா?

(அல்குர்ஆன்: 89:1-5)

அப்படியானால் அந்தப் பத்து இரவுகள் யாவை? அந்த இரவுகளின் முக்கியத்துவம் என்ன என்பதை அறியும் அவசியம் நமக்கு உண்டு. குர்ஆன் தவிர வேறு வஹீ இல்லை என்ற கருத்துப் படி அந்தப் பத்து இரவுகள் யாவை என்பது பற்றியும், அவற்றின் சிறப்பு பற்றியும் குர்ஆனில் கூறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தப் பத்து இரவுகள் யாவை என்பது குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. அப்படியானால் இவ்வசனத்தை விளங்க இன்னொரு வஹீ அவசியமாகும் என்பது நிரூபணமாகிறது.

மாற்றப்பட்ட வசனங்கள்

ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் நீர் இட்டுக் கட்டுபவர் எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 16:101)

குர்ஆனுடைய சில வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன என்றும் அதை மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நீர் இட்டுக்கட்டுபவர் என்று நபி (ஸல்) அவர்களைச் சிலர் பழித்தார்கள் என்றும் இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

இப்போது நாம் குர்ஆனைப் பின்பற்ற வேண்டும் என்றால் அதிலுள்ள மாற்றப்பட்ட வசனங்கள் எவை என்ற விபரம் தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் எந்த வசனத்தை எடுத்துக் கொண்டாலும் இது மாற்றப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற்பட்டு ஒட்டு மொத்த குர்ஆனும் சந்தேகத்திற்கு உரியதாக ஆகிவிடும். எனவே குர்ஆன் மட்டும் போதும் என்று வாதிடக்கூடியவர்கள் குர்ஆனில் எந்தெந்த வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன? என்ற கேள்விக்கு குர்ஆனிலிருந்தே பதில் கூற வேண்டும்.

உதாரணமாக தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று ஒரு வசனம் கூறுகின்றது என்றால் அந்த வசனம் கூறக் கூடிய கட்டளை அப்படியே தான் உள்ளதா? அல்லது மாற்றப்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இப்படி எல்லா வசனங்களிலும் இல்லாவிட்டாலும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்ட வசனங்களில் மாற்றப்பட்ட வசனம் எது என்ற கேள்வி எழவே செய்யும்.

எனவே குர்ஆனை விளங்கிடவும், குர்ஆனைப் பின்பற்றவும் ஹதீஸ் தேவை இல்லை என்ற கருத்துடையோர் குர்ஆனில் மாற்றப்பட்ட வசனங்களையும், எந்த வசனம் மூலம் மாற்றப்பட்டது என்ற விபரத்தையும் குர்ஆனிலிருந்து பட்டியல் போட்டுக் காட்ட வேண்டும். அவர்களால் காட்ட முடியாவிட்டால் குர்ஆன் மட்டும் போதும் என்ற தங்களின் கருத்து தவறானது என்பதையாவது ஒப்புக் கொள்ள வேண்டும்.

விதியை நம்புவதில் முரண்பாடு

எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்று திருக்குர்ஆனின் பலவேறு வசனங்கள் கூறுகின்றன. மனிதனின் நடவடிக்கைகளுக்கு அவனே பொறுப்பாளி எனக் கூறி விதியை மறுக்கும் வசனங்களும் குர்ஆனில் உள்ளன.

மனிதனின் செயல்களில் மனிதனுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை; எல்லாம் விதிப்படியே நடக்கிறதுஎன்ற கருத்தைப் பின் வரும் வசனங்கள் கூறுகின்றன.

(அல்குர்ஆன்: 2:7, 2:142, 2:213, 2:253, 2:272, 3:176, 4:94, 4:88, 4:143, 5:41-48, 6:25, 6:35, 6:39, 6:107, 6:111-112, 6:125, 6:137, 6:149, 7:30, 7:101, 7:155, 7:176-178, 7:186, 9:55, 9:85-87, 9:93, 10:74, 10:99, 11:18, 11:34, 13:27, 13:31, 13:33, 14:4, 16:9, 16:19, 16:36, 16:37, 16:93, 16:108, 17:46, 17:97, 18:17, 18:57, 22:16, 24:21, 24:35, 24:46, 28:56, 30:29, 30:59, 32:13, 35:8, 36:9, 39:23, 39:36, 40:33-35, 42:8, 42:24, 42:44-46, 42:52, 45:23, 47:16, 63:3, 74:31)

மனிதனின் செயலுக்கு மனிதன் தான் பொறுப்பாளி. விதியின் மீது பழி போட்டு தப்பிக்க முடியாதுஎன்று கீழ்க்காணும் வசனங்கள் கூறுகின்றன.

(அல்குர்ஆன்: 2:57, 2:79, 2:90, 2:134, 2:141, 2:225, 2:281-286, 3:25, 3:108, 3:117, 3:161, 3:182, 4:62, 5:80, 5:105, 6:70, 6:116, 6:119-120, 6:129, 7:96, 8:51, 9:70, 9:82, 9:95, 10:8, 10:44, 10:108, 11:101, 13:11, 14:27, 14:51, 15:84, 16:33, 16:118, 17:15, 17:19, 17:18, 18:29, 18:57, 22:10, 27:92, 28:47, 29:40, 30:9, 30:36, 30:41, 31:6, 34:50, 39:7, 39:41, 39:50-51, 40:17, 40:31, 41:17, 42:20-30, 42:48, 43:76, 45:14, 45:22, 59:18, 62:7, 73:19, 74:37-38, 74:55, 76:29, 78:39-40, 80:12, 81:28, 83:14, 89:24)

ஒரு கோணத்தில் பார்க்கும் போது விதி இருப்பது போலவும், இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது விதி இல்லாதது போலவும் ஒரு மயக்கம் மனிதனுக்கு ஏற்படும். விதி என்று ஒன்று இருந்தால் நல்லவனாக, கெட்டவனாக நடப்பதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?என்ற கேள்வி அதில் எழும்.

விதி என்று ஒன்று இல்லாவிட்டால் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது இறைவனுக்குத் தெரியாது என்று ஆகி விடும். நாளை நான் என்ன செய்யப் போகிறேன் என்பது தெரியாத ஒருவன் எப்படி இறைவனாக இருக்க முடியும்?என்ற கேள்வி வரும். இவ்விரு வகையான வசனங்களில் ஒரு வகை வசனங்களை ஏற்றால் மற்றொரு வகை வசனங்களை மருக்கும் நிலை ஏற்படும். இரண்டையும் ஒரு சேர ஏற்றுக் கொள்ள முடியாது.

குர்ஆன் மட்டும் போதும் என்போர் இந்த முரண்பாட்டை நீக்கும் எந்த விளக்கத்தையும் தர முடியது.

விதி என்பது முரண் போல் தோன்றினாலும் அதில் சர்ச்சை செய்யக் கூடாது; அதில் சர்ச்சை செய்து தான் முன் சென்றவர்கள் அழிந்தார்கள்என்று நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளும் போது குழப்பம் நீங்கி விடுகிறது.

மேலும் நடந்து முடிந்தவைகளை விதியின் மீது போடுமாறும், நடக்கவிருப்பவைகளில் விதியைக் கவனத்தில் கொள்ளாமல் செயல்படுமாறும் நபிகள் நாயகம் (ஸல்) அளித்த விளக்கம் தான் முரண்பாடு இல்லாமல் விதியைப் புரிந்து கொள்ள உதவுகிறது.

ஹதீஸ் துணையுடன் மட்டும் விளங்கும் வசனங்கள்

இன்னும் பல வசனங்கள் உள்ளன. அந்த வசனங்களுக்கான அர்த்தம் தான் நமக்குத் தெரியுமே தவிர அதன் முழு விளக்கம் தெரியாது. குர்ஆன் முழுவதும் தேடினாலும் கிடைக்காது. அத்தகைய சில வசனங்களை உதாரணத்துக்காகச் சுட்டிக் காட்டுகிறோம்

மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்.

(அல்குர்ஆன்: 32:23)

மூஸாவை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தது எப்போது? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்!

(அல்குர்ஆன்: 62:9)

இந்த வசனத்தில் கூறப்படும் அழைப்பு என்பதன் பொருள் என்ன? ஜமுஆ தினத்தில் காலையில் யாராவது வந்து தொழுகைக்கு அழைத்தால் வியாபாரத்தை விட்டு விட்டுச் செல்ல வேண்டுமா? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் (புனிதச்) சின்னங்கள், புனித மாதம் பலிப்பிராணி, (பலிப் பிராணியின் கழுத்தில் அடையாளத்திற்காகப் போடப்பட்ட) மாலைகள், மற்றும் தமது இறைவனின் அருளையும், திருப்தியையும் தேடி இப்புனித ஆலயத்தை நாடிச் செல்வோர் ஆகியவற்றின் புனிதங்களுக்குப் பங்கம் விளைவித்து விடாதீர்கள்!

(அல்குர்ஆன்: 5:2)

அல்லாஹ்வின் சின்னங்கள் என்றால் என்ன? அவற்றை ஹலாலாக்காமல் இருப்பது எப்படி? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது.

(அல்குர்ஆன்: 5:33)

அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் செய்வது என்றால் என்ன? மேற்கண்ட வசனத்தில் எந்தக் குற்றங்களுக்கான தண்டனைகள் கூறப்படுகின்றன? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

நம்பிக்கை கொண்டவர் இன்னொரு நம்பிக்கை கொண்டவரைத் தவறுதலாகவே தவிர கொலை செய்தல் தகாது. நம்பிக்கை கொண்டவரை யாரேனும் தவறுதலாகக் கொன்று விட்டால் நம்பிக்கை கொண்ட அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவனது (கொல்லப்பட்டவனது) குடும்பத்தார் தர்மமாக விட்டுக் கொடுத்தால் தவிர அவர்களுக்கு நஷ்ட ஈடு ஒப்படைக்கப்பட வேண்டும்.

(அல்குர்ஆன்: 4:92)

நஷ்டஈடு என்பதன் அளவுகோல் என்ன? நஷ்டஈடு கொடுக்க முடியாத ஏழை கொலை செய்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.

(அல்குர்ஆன்: 4:101)

சாதாரணமாகத் தொழுகையை எப்படித் தொழ வேண்டும்? சுருக்கித் தொழுவது எப்படி? என்பதைத் திருக்குர்ஆனிலிருந்து இவர்கள் எடுத்துக் காட்டுவார்களா?

உதாரணத்துக்காகச் சில வசனங்களை எடுத்துக் காட்டி உள்ளோம்.

இது போல் இன்னும் ஏராளமான வசனங்கள் உள்ளன. திருக்குர்ஆனுக்கு நபிகள் நயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நிரூபிக்கும் கூடுதல் சான்றுகளாக இவை அமைந்துள்ளன.