09) தலைகளில் பாதம்
அந்தப் பெரியாரை மேலும் இழிவுபடுத்தும் விதமாக இந்தக் கவிஞன் பாடியுள்ள மற்றொரு அடியைக் கேளுங்கள்
தலைகளில் பாதம்
قـد قـلت بالإذن مـن مولاك مؤتمرا
قـدمي عـلى رقـبات الأولياء طـرا
فـكلهـم قـد رضوا وضعا لها بشرى
يـا من سـما اسما عليهم محيي الديـن
எனது பாதங்கள் எல்லா அவுலியாக்களின் பிடரி மீதும் உள்ளன’ என்று தங்களின் எஜமானனாகிய அல்லாஹ்விடம் அனுமதி பெற்று தாங்கள் கூறினீர்கள். அவ்வாறு தங்கள் பாதத்தை அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். எல்லா அவ்லியாக்களையும் விட உயர்ந்து விட்ட முஹ்யித்தீனே! என்பது இதன் பொருளாகும்.
திருக்குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் ஓரளவுக்கு அறிந்து வைத்துள்ள முஸ்லிம் கூட இது பிதற்றல் எனப் புரிந்து கொள்ள முடியும். அதைக் கூட புரிந்து கொள்ளாதவர்களும் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளதால் இந்தக் கவிதையையும் அலசுவோம்.
இந்தக் கவிதை வரிகளில் மூன்று விஷயங்களைக் கவிஞன் கூறுகிறான்.
* எல்லா அவ்லியாக்களின் தலையின் மீதும் தான் காலைத் தூக்கி வைத்ததாக அப்துல் காதிர் ஜீலானி கூறினார்களாம்!
* இதை அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்துவிட்டு, அவனது அனுமதியுடனே மக்களுக்கும் அறிவித்தார்களாம்.
* காலால் மிதிக்கப்பட்ட அந்த அவ்லியாக்களும் இதை மகிழ்வுடனே ஏற்றுக் கொண்டார்களாம்.
பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
என்று வல்ல அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான். இந்தக் கட்டளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது.
பெருமையையும், ஆணவத்தையும் வல்ல இறைவன் கண்டித்து இருக்கும் போது தன்னுடைய நேசம் இத்தகையோருக்குக் கிடைக்காது என்று பிரகடனம் செய்திருக்கும் போது ஒரு இறை நேசர் தன் காலை வலிமார்களின் தலையில் வைத்தேன் என்று கூறியிருப்பார்களா? உண்மையிலேயே அப்படிக் கூறி இருந்தால், இத்தகையோரை நேசிக்க மாட்டேன் என்று இறைவன் கூறியிருக்கும் போது அவர் எப்படி இறை நேசராக இருக்க முடியும்?
அப்துல் காதிர் ஜீலானியை இறை நேசர் அல்ல என்றும் இழிவு படுத்தும் விதமாக இக்கவிதை அமைந்துள்ளதை இதிலிருந்து விளங்கலாம்.
முஆத் பின் ஜபல்(ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கும் சென்ற போது, அங்குள்ள மக்கள் தம் தலைவர்களின் கால்களில் விழுந்து மரியாதை செய்வதைக் காண்கிறார்கள். இதைக் கண்டதும், இந்தத் தலைவர்களையெல்லாம் விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயர்ந்தவர்களாயிற்றே! எனவே இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு காலில் விழுந்து மரியாதை செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டார். பின்னர் மதீனா வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இதைக் கூறினார். அப்போது ‘ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணிய அனுமதி இல்லை. அவ்வாறு அனுமதி இருந்திருக்குமானால் ஒரு பெண் தன் கணவனுக்கு அந்த மரியாதையைச் செய்யுமாறு கூறியிருப்பேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இப்னுமாஜா 1843
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கால்களிலேயே தலையை வைப்பதற்கு அனுமதி இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக அறிவித்து விட்ட பின், அதற்கு மாற்றமாக அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சொல்லி இருப்பார்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விடவும் இந்தக் கவிதை நாயகர் உயர்ந்தவர் என்று இந்தக் கவிதையைப் பக்தி சொட்ட சொட்டப் பாடுவோர் நம்புகின்றார்களா?
தனக்கு மரியாதை செலுத்தும் விதமாக மற்றவர்கள் எழுந்து நிற்பதைக் கூட வெறுத்தொதுக்கிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கு மாற்றமாக இந்த மாபாதகமான சொல்லை அந்தப் பெரியவர் கூறி இருப்பார்களா?
وفي خـزانـة أسـرار روى سـنـدا
عـن كـل من وضعت في عنقه عددا
إلا أبـا بـكر مـنهم فـتاب فــدا
حـزت الـمعالي جـما محيي الدين
இதுவும் யாகுத்பா என்ற கவிதையின் வரிகளாகும்.
தமது பாதம் எல்லா இறை நேசர்களின் கழுத்தின் மீதும் உள்ளதாக அப்துல் காதிர் ஜீலானி கூறியதாக இந்தக் கவிதையாசிரியர் காதில் பூச்சுற்றியதைக் கண்டோம். அதைத் தொடர்ந்து மேற்கண்ட வரிகளைக் கவிஞர் கூறுகிறார். இதன் பொருளைக் கேளுங்கள்.
‘யார் யாருடைய பிடரிகள் மீது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் தமது பாதத்தை வைத்தார்களோ அவர்கள் அனைவர் பற்றியும் அறிவிப்பாளர் வரிசையுடன் கிஸானதுல் அஸ்ரார்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. அபூபக்ரு என்பவர் (சுயமரியாதையின் காரணத்தினாலோ என்னவோ) தமது பிடரியைத் தர மறுத்து விட்டார். பின்பு அவரும் (மகிமை உணர்ந்து) தவ்பாச் செய்து விட்டார். முஹ்யித்தீன் அவர்களே எல்லா உயர்வுகளையும் தாங்கள் சேர்த்துப் பெற்று விட்டீர்கள்!
இது இந்தக் கவிதை வரிகளின் பொருள். எல்லா அவ்லியாக்களின் பிடரியின் மீதும் தனது பாதத்தை அப்துல் காதிர் ஜீலானி வைத்தார்கள் என்பதற்கு இங்கே ஆதாரம் சமர்ப்பிக்கிறான் இந்தப் புலவன்.
அதாவது யார் யாருடைய பிடரிகள் மீது மிதிக்கப்பட்டது என்ற பட்டியல் கைவசம் உண்டாம். கிஸானதுல் அஸ்ராரில் இது பதிவு செய்யப்பட்டுள்ளதாம். கேட்பவர்களுக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கும் என்று கருதியிருந்தால் இப்படிக் கதை விடுவானா? இவன் உளறிக் கொட்டியிருந்தாலும் ஒரு வகையில் இந்தக் கவிதையினால் சில நன்மைகளும் ஏற்பட வழியுண்டு.
யாகுத்பா’ பக்தர்களிடமும், அதை ஆதரிக்கும் மவ்லவிமார்களிடமும் அந்த கிஸானதுல் அஸ்ராரை வெளியிடுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம். முடியாவிட்டால் குறைந்த பட்சம் மிதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியலையாவது பகிரங்கமாக வெளியிடுமாறு கேட்கிறோம்.
எல்லா இறை நேசர்களின் பிடரியின் மேலும் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மிதித்தார்கள். அவர்களால் மிதிபடாதவர் அவ்லியா இல்லை’ என்று கவிஞர் கூறியுள்ளதால் அந்தப் பட்டியலை வெளியிடும் போது உலகில் உள்ள அவ்லியாக்கள் யார் யார் என்று அறிந்து கொள்ள முடியும். இப்பட்டியலை அவர்கள் வெளியிடும் போது குறைந்த பட்சம் பல கப்ருகளில் அடங்கப்பட்டுள்ளவர்கள் அவ்லியாக்களே இல்லை என நிரூபிக்க முடியும்.
இதனால் தர்ஹாக்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழி உண்டு. ஏனெனில் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் காலத்திற்குப் பின் வந்தவர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. அந்தப் பட்டியலையே ஆதாரமாக வைத்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா தர்ஹாக்களையும் அங்கே இருப்பவர்களையும் மிதி வாங்கவில்லை என்பதால் இடித்துத் தள்ளலாம்.
யாகுத்பா பக்தர்கள் இதைச் செய்ய முன் வராவிட்டால், கிஸானதுல் அஸ்ரார் என்பதெல்லாம் புருடா தான் என்று ஒப்புக் கொண்டால் அப்போதும் நன்மை ஏற்பட வழி இருக்கிறது.
அதாவது இப்படி புருடா விட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாட்டைத் தீயிலிட்டுப் பொசுக்கச் சொல்லலாம். இந்தக் கப்ஸாக்களால் பயனில்லை என்று ஒப்புக் கொள்ளச் செய்யலாம்.
மவ்லவிமார்களிடம் நாம் கேட்பது இது தான். இந்த யாகுத்பாவை நீங்கள் உண்மை என்று நம்புகிறீர்களா? உண்மை என்று நீங்கள் நம்பினால் அந்த அவ்லியாக்களின் பட்டியலை அறிவிப்பாளர் வரிசையுடன் வெளியிடுங்கள் பார்ப்போம்.
வெளியிட முடியாது. இதில் கூறப்படுவது பொய் என்று நீங்கள் கருதினால் அதையாவது பகிரங்கமாக அறிவியுங்கள்! மக்கள் இந்த யாகுத்பா எனும் குப்பையைத் தூக்கி எறிவார்கள். மவ்லவிமார்கள் இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்.
وقـلت مـن لا لـه شيـخ فإني لـه
شيـخ ومـرشـده حتى كـأني لـه
جـليسه خـلوة ومـن لــدني لـه
وصـل فـكن هـكذا لي محيي الدين
யாருக்கு ஷைகு கிடையாதோ அவருக்கு நான் ஷைகாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறேன். எந்த அளவுக்கு என்றால் அவன் தனிமையில் இருக்கும் போது நான் உற்ற நண்பனாக இருக்கிறேன். எனக்கும் அவனுக்குமிடையே ஒரு தொடர்பு இருக்கின்றது என்று நீங்கள் கூறினீர்கள். எனக்கும் அவ்வாறே நீங்கள் ஆகிவிடுங்கள் முஹ்யித்தீனே!
இந்த இந்த வரிகளின் நேரடிப் பொருள்.
இதைப் பல வகைகளிலும் நாம் அலச வேண்டியுள்ளது. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இவ்வாறு கூறியதாக இந்தக் கவிஞன் பாடியிருக்கிறான். அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் இவ்வாறு கூறியிருந்தால் அவர்கள் தமது எந்த நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்? அல்லது அவர்களின் காலத்திலோ, அதற்கு அடுத்த காலத்திலோ எழுதப்பட்ட எந்த நூலில் இந்த விபரம் இடம் பெற்றுள்ளது? இந்த யாகுத்பாவை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் உஞ்சவிருத்தி மவ்லவிகள் எடுத்துக் காட்டுவார்களா?
இதை எழுதியவன் யாரென்று திட்டவட்டமாகத் தெரிந்தால், அவன் இன்று வரை உயிருடனிருந்தால் அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம். இதை எழுதியவர் யாரென்பது நிரூபிக்கப்படவுமில்லை. நிரூபிக்கப்பட்டாலும் நிச்சயம் அவன் இப்போது உயிருடனில்லை. இந்த யாகுத்பா கச்சேரியை யார் முன்னின்று நடத்துகிறார்களோ அந்த மவ்லவிமார்கள் தான் இதை எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எடுத்துக் காட்டுவார்களா?
ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெரியார் இப்படிச் சொல்லியிருந்தால் அவர்களது காலத்திலோ, அதை அடுத்த காலத்திலோ யாரும் இது பற்றிக் குறிப்பிடாத போது ஹிஜ்ரி பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கவிஞருக்கு எப்படி இந்த விபரம் தெரிய வந்தது? கிஸானதுல் அஸ்ரார் என்ற நூலில் இதற்கு ஸனதுடன் குறிப்பு உண்டு என்று இந்த மவ்லவிகள் சொல்லப் போகிறார்களா?
அடுத்து இந்தக் கவிஞனின் கருத்தை அலசுவோம். யாருக்கு ஷைய்கு கிடையாதோ அவருக்குத் தானே ஷைகாக ஆகிவிட்டதாக அப்துல் காதிர் ஜீலானி கூறியிருக்கிறார்கள் அல்லவா?
இதனடிப்படையில் பார்க்கும் போது ஒரு ஷைகைப் பிடித்து முரீது வாங்குபவரை விட, முரீது வாங்காதவரே சிறந்தவர் என்று ஆகின்றது. சாதாரணமானவரைப் பிடித்துக் கொண்டால் அவர் தான் நமக்கு ஷைகாக ஆகின்றார். ஆனால் எவரிடமும் முரீது வாங்காமல் எவரையும் ஷைகாக ஏற்றுக் கொள்ளாமல் இருப்பவருக்கோ அவ்லியாக்களின் தலைவர் என்று இவர்கள் நம்புகின்ற அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ஷைகாக ஆகி விடுகின்றார்கள்.
இதை அரங்கேற்றும் மவ்லவிமார்களுக்கு இதில் உண்மையிலேயே நம்பிக்கை இருக்குமானால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? எவரிடமும் முரீது வாங்குவதை விட முரீது வாங்காமல் இருப்பதே சிறந்தது எனக் கூற வேண்டும். அப்போது தான் அப்துல் காதிர் ஜீலானி அவர்களே நமக்கு ஷைகாக ஆவார்கள். இந்தப் பொய்யை இப்படிச் சொல்லித் தொலைத்தாலாவது கேடு கெட்ட தரீக்காக்கள் பல ஒழிந்து போகும்.
இந்த வரிகளில் கூறப்படுவதைப் பொய் என்று கூறி யாகுத்பாவை ஒழிக்கப் போகின்றார்களா? அல்லது இதை உண்மை என்று நம்பி, முரீது வாங்கக் கூடாது எனப் பிரச்சாரம் செய்யப் போகின்றார்களா? இரண்டில் எதைச் செய்தாலும் ஏதோ ஒரு விதத்தில் நன்மையே ஏற்படும்.
ஆனால் இந்த மவ்லவிமார்கள் இரண்டில் எதனையும் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு இதன் அர்த்தம் பற்றியோ, விளைவு பற்றியோ கவலை எதுவும் கிடையாது. கொடுக்கப்படும் சில்லரைக்கு ஏற்ப நீட்டி முழங்குவதைத் தொழிலாகத் தானே இவர்கள் நடத்தி வருகின்றார்கள்.
முரீது வாங்காதவருக்குத் தானே ஷைகாக ஆகிவிடுவதாக மட்டும் அப்துல் காதிர் ஜீலானி கூறவில்லை. தனித்து இருக்கும் போது உற்ற நண்பராகவும் அவர் ஆகி விடுகின்றாராம். அவருக்கும் இவனுக்குமிடையே கனெக்ஷன் வேறு இருக்குமாம். கதை விடுகிறான் இந்தக் கவிஞன்.
இறந்து போன ஒருவர் எப்படி மனிதனிடம் கனெக்ஷன் வைத்துக் கொள்ள முடியும்? என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும். உயிருடன் உள்ள அவர் இவ்வுலகில் வாழும் சமயத்தில் கூட இப்படிச் செய்வது சாத்தியமாகுமா?
ஒரு மனிதன் பலகோடி மக்களுக்கருகில் தனிமையில் உள்ள நண்பனாக போய் உட்கார முடியுமா? ஒரு மனிதன் ஒரு இடத்திற்கு மேற்பட்டு, ஒரு நேரத்தில் இருக்க முடியுமா? உயிருடன் இருக்கும் போதே சாத்தியப்படாதது எப்படி மரணத்தின் பின் சாத்தியமாகும்?
ஒரு மனிதன் இன்னொரு மனிதன் உள்ளத்துடன் கனெக்ஷன் வைத்துக் கொள்ள முடியுமா? உயிருடனிருக்கும் போதே செய்ய முடியாத ஒன்று அவர் இறந்த பின் எப்படிச் சாத்தியமாகும்?
முரீது வாங்காத அனைவருடனும் அவர் கனெக்ஷன் வைத்துக் கொள்வதாக இந்தக் கவிஞன் கூறுகிறானே? அப்படியானால் எவரிடமும் முரீது வாங்காமல், விபச்சாரத்திலும், திருட்டிலும், வட்டியிலும் மூழ்கி பலர் இருக்கிறார்களே? இது கூட அந்தக் கனெக்ஷன்களின் வெளிப்பாடு தானா?
‘நானே அவருக்கு வழிகாட்டியாவேன்’ என்று அவர்கள் சொன்னதாகக் கூறப்படுகிறதே? இந்தத் தப்பான காரியங்களெல்லாம் கூட அவர்களின் வழிகாட்டுதலில் அடங்கியது தானா? யாகுத்பா பக்தர்கள் பதில் சொல்லட்டும்!