38) கடவுள் அறியாமைக்கு அப்பாற்பட்டவர்
கடவுளுக்கு எதைப் பற்றியும் அறியாமை இருக்கக் கூடாது. அனைத்தும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்களின் உள்ளத்தில் மறைத்து வைத்திருப்பதும் கூட அவருக்குத் தெரிய வேண்டும். இவ்வாறு பைபிள் கூறுகிறது.
தேவரீர் ஒருவரே எல்லா மனுப்புத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால்…
(முதலாம் ராஜாக்கள் 8:40)
மனிதர்களின் இருதயங்களில் உள்ளதை அறிவது ஒருபுறமிருக்கட்டும்! வெளிப்படையான பல விஷயங்கள் கூட இயேசுவுக்குத் தெரியாமல் இருந்திருக்கின்றன.
அப்பொழுது இயேசு, என்னைத் தொட்டது யார் என்று கேட்டார்.
(லூக்கா 8:45)
காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பி வருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது வழியருகே ஒரு அத்தி மரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல், இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக் கடவது என்றார்; உடனே அத்தி மரம் பட்டுப் போயிற்று.
(மத்தேயு 21:18-19)
இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின் மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
(மத்தேயு 19:28) என்று இயேசு கூறினார்.
அந்தப் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவன் அவரைக் காட்டிக் கொடுப்பான் என்பதை அப்போது இயேசு அறியவில்லை.
அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான். பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார். குமாரனும் அறியார்.
(மார்க்கு 13:32)
இப்படி ஏராளமான விஷயங்களை இயேசு அறிந்திருக்கவில்லை. பக்தர்களைக் காப்பது என்றால் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம் இல்லையா? தன்னைத் தொட்டது யார் என்பதைக் கூட அறியாத ஒருவர் தங்களை இரட்சிப்பார் என்று கிறித்தவர்கள் நம்புவது முறை தானா? சிந்திக்கட்டும்.