09) கஃபா இடம் பெயர்ந்ததா?

நூல்கள்: இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

8. கஃபா இடம் பெயர்ந்ததா?

ஹஸன் பஸரீ அவர்கள் ஹஜ்ஜுச் செய்யச் சென்ற போது கஃபதுல்லாஹ்வை அதன் இடத்தில் காணவில்லையாம்! “கஃபா எங்கே?” என்று விசாரித்த போது ராபியா பஸரிய்யா அவர்களை வரவேற்கச் சென்று விட்டதாகத் தெரிந்ததாம். இந்தக் கதை பல வகைகளில் விரிவுபடுத்தப்பட்டு பலவிதமாகச் சொல்லப்படுகின்றது. “இந்தக் கதை சரியானது தானா? என்று நாம் ஆராய்வோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுச் செய்வதற்காக ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு மக்காவுக்குத் தம் தோழர்களுடன் புறப்பட்டனர். ஹுதைபிய்யா என்ற இடத்தில் வைத்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள். கஃபதுல்லாவைச் சந்திக்க வேண்டும் என்ற பேராசையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வந்திருந்தனர். அந்த நேரத்தில் மக்கத்துக் காபிர்கள் தடுத்து விட்டனர்.

பார்க்க(புகாரி: 4191, 4252, 4251, 1844, 2698, 2700, 3184), கஃபத்துல்லா எவருக்காகவும் நடந்து வரக்கூடியதாக இருந்தால் இந்த இக்கட்டான நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுக்கப்பட்ட போது அவர்களை நோக்கி வந்திருக்க வேண்டும். அல்லாஹ்வின் திருத்தூதருக்காக நடந்து வராத கஃபத்துல்லா ராபிஆ பஸரியாவுக்காக, அதுவும் எவ்வித அவசியம் இல்லாமல் அவர்களை வரவேற்பதற்காகச் சென்றதென்றால் இதை எவராவது ஏற்க இயலுமா?

அதன் பின் இறுதி ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் ஆருயிர்த் தோழர்களும் மக்காவுக்குச் சென்ற போது மக்காவின் எல்லையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் வரவேற்க கஃபதுல்லா மக்காவின் எல்லைக்கு இடம் பெயர்ந்து வரவில்லை! ஒருவரை வரவேற்பதற்காக கஃபதுல்லா இடம் பெயர்ந்து வருமென்றால் அல்லாஹ்வின் தூதர் அல்லவா வரவேற்கப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்!

இதன் பின் நாற்பெரும் கலீபாக்கள் ஸஹாபாக்கள், தாபியீன்கள் பெரும் இமாம்களெல்லாம் ஹஜ்ஜுச் செய்ய வந்திருக்கின்றார்கள்! அவர்களை எல்லாம் வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்து வரவில்லையே! ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்பதற்காகச் சென்றதென்றால் இதை எப்படி ஏற்க இயலும்?

திருக்குர்ஆன் வசனங்களும் இந்தக் கதை பொய்யானது என்பதை மிகவும் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

புனித ஆலயமான கஅபாவையும், புனித மாதத்தையும், குர்பானிப் பிராணியையும், (அதற்கு அணிவிக்கப்படும்) மாலைகளையும் மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.(அல்குர்ஆன்: 5:97)

கஅபாவை மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆணி அடித்தாற்போல் இந்த வசனத்தில் சொல்லி விடுகிறான். மனிதர்களுக்காக அது ஒரு இடத்தில் நிலையாகவே இருக்கும். இடையில் இடம் பெயர்ந்து செல்லாது என்பதை மிகவும் தெளிவாகவே அல்லாஹ் சொல்லி விடுகிறான். “ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்ததாகக் கூறுவதை ஒரு முஸ்லிம் நம்பக் கூடாது” என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.

(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.

(அல்குர்ஆன்: 22:25)கஃபா மக்கள் அனைவருக்கும் பொதுவானது; எந்தத் தனி நபருக்கும் விசேஷ மரியாதை செய்ய நடந்து வராது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

கஅபாவை அனைவருக்கும் சமமாக ஆக்கியதாக அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான். ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்ததாகக் கூறுவது இதற்கும் முரணானதாகும்.

அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! “தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!” என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

(அல்குர்ஆன்:)

தவாபு செய்பவர்கள் அங்கே தொழ வருபவர்கள், தியானிப்பவர்கள் ஆகியோருக்காகவே கஃபதுல்லா நிர்மாணிக்கப்பட்டது என்று அதன் நோக்கத்தையும் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.

ஆனால் இந்தக் கதையின்படி திக்ரு செய்வதற்காகவும், தவாபு செய்வதற்காகவும், தொழுவதற்காகவும் அங்கே சென்ற ஹஸன் பஸரீ அவர்களுக்காகவும், அவர்களைப் போன்ற பல்லாயிரம் மக்களுக்காகவும் கஃபதுல்லா அங்கே இருக்கவில்லை.

எந்த நோக்கத்திற்காக கஃபாவை அல்லாஹ் நிர்மாணிக்கச் செய்தானோ அந்த நோக்கத்திற்காக கஃபா’ அங்கே இல்லை என்று இந்தக் கதை உணர்த்துகின்றதே! இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

(அல்குர்ஆன்: 3:96)

மனிதர்கள் இறைவனை வணங்குவதற்கென ஒரு இடத்தில் கஃபதுல்லா வைக்கப்பட்டிருப்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.

மக்கள் அனைவருக்கும் நேர்வழியாகவும், மக்கள் அனைவருக்கும் பரக்கத்து நிறைந்ததாகவும் இருக்கின்ற கஃபதுல்லாவைத் தான் மக்கள் தேடிச் செல்ல வேண்டும் என்பதையும் இந்த வசனம் நமக்கு விளக்குகின்றது.

இந்தக் கதையின்படி, பரக்கத்தைப் பெருவதற்காக அதைத் தேடிச் சென்றுள்ள மக்களுக்காக காட்சி தரவில்லை என்றால் குர்ஆனின் உத்திரவாதம் இங்கே பொய்யாக்கப்படுகின்றது.

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

(அல்குர்ஆன்:)

பயணம் செய்யச் சக்தி பெற்றிருக்கின்ற மக்கள் அவ்வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக ஆக்கிவிட்டு, அந்தக் கடமையை நிறைவேற்ற அவ்வீட்டைத் தேடி வருகின்ற மக்களுக்காக அந்த இடத்தில் கஃபாவை அல்லாஹ் வைக்காமலிருப்பானா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவ்வீடு எவரையும் தேடி வராது என்பதையும் இந்தத் திருவசனம் உணர்த்துவதை நாம் காணலாம்.

இந்தக் கதை திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுகின்றது. அல்லாஹ்வின் நோக்கத்தையும் அவனது உத்தரவாதத்தையும் பொய்ப்படுத்துகின்றது.

அல்லாஹ்வின் கூற்றுக்கு முரணாக இருக்கும் இந்தக் கதை எப்படி உண்மையாக இருக்க முடியும்?

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பின்வரும் இறைவசனம் மிகவும் தெளிவாகவே இந்தக் கதையைப் பொய்யாக்கி விடுகின்றது.

மனிதர்களை உயர்த்துவதற்காக அவர்களின் மரணத்திற்குப் பின் பல கதைகளைக் கட்டி விடுவது வாடிக்கையாகவே நடந்து வருவதாகும்.

வர்கள் வாழ்ந்திருந்த காலத்திலேயே இது போன்று கதைகள் கட்டி விடப்பட்டன. இதைச் செவியுற்ற ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்கள் இதைத் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.

ஷைத்தான் மக்களுடன் விளையாடுவதன் விளைவே இது என்று கூறி விட்டார்கள். இந்தக் கதையின் நாயகியாகிய அவர்களே மறுத்துள்ளது இந்த கதை பொய் என்பதற்கு போதுமான சான்றாகத் திகழ்கின்றது.

ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்கள் இப்படி மறுத்துள்ளதை இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் தனது தல்பீஸு இப்லீஸ்’ என்ற நூலில் 383 ஆம் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

திருக்குர்ஆனுடன் மோதும் இது போன்ற கதைகளை நம்புவதும், பேசுவதும் குர்ஆனையே மறுப்பதாகும். இது போன்ற பொய்களை நம்புவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காத்தருள்வானாக! ஆமீன்!