08) உயிர்ப்பித்தலும் குணப்படுத்தலும்

நூல்கள்: இது தான் பைபிள்

வு) உயிர்ப்பித்தலும் குணப்படுத்தலும்

இயேசு இறந்தவர்களை உயிர்ப்பித்த நிகழச்சிகளை புதிய ஏற்பாடு பல இடங்களில் குறிப்பிடுகிறது. தலைவருடைய மகளை அவர் உயிர்ப்பித்ததாக மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று சவிசேஷக்காரர்களும் கூறுகின்றனர். நாயீன் என்ற ஊரில் ஒலு வாலிபனை அவர் உயிர்ப்பித்தாக லூக்கா (7:11-15) கூறுகிறார்.

அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களுக்குப் பிறகு லாசலு என்பனை அவர் உயிர்ப்பித்ததாக யோவான் (11:11-25) கூறுகிறார்.

ஆக மரணமடைந்த மூன்று நபர்களை இயேசு உயிர்ப்பித்திருக்கிறார் என்று சுவிசேஷங்களிலிருந்து நாம் அறிந்து கொள்கின்றோம்.

ஆனால் பவுலோ இம்மூன்று நிகழச்சிகளையும் பொய் என்கிறார். இயேசுவுக்கு முன்னர் எவருமே மரித்தோரிலிருந்து உயிர் பெற்றதில்லை என்று சாதிக்கிறார்.

அவரே திருச்சபை ஆகிய சரீரத்திற்குத் தலை. எல்லாவற்றிலும் முதல்வராகும் படி அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

கொலோசேயர் 1:18

அவனவன் தன் விரிசையில் உயிர்ப்பிக்கப்படுவான் முதற்பலனானவர் கிறிஸ்து.

முதலாம் கொரிந்தியர் 15:23

தீர்க்கதரிசிகளும் மோசேயுவும் முன்னமே சொல்லியிருந்தபடி கிறிஸ்து பாடுபட வேண்டியதென்றும் மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி…

அப்போஸ்தலர் 26:23

பவுல் கூறுவதை ஏற்றுக் கொண்டால் மூன்று சுவிசேஷக்காரர்கள் குறிப்பிடுகின்ற மூவரை உயிர்ப்பித்த நிகழ்ச்சிகள் பொய்யாகின்றன. அவை இறைவேதமாக இருக்க முடியாது? மூன்று சுவிசேஷக்காரர்கள் குறிப்பிடும் நிகழ்ச்சிகள் உண்மை என்றால் பவுலின் நிரூபங்கள் இறை வேதமாக இருக்க முடியாது. இயேசு உயிர்த்தெழுந்ததும் கட்டுக் கதையாகின்றது. இரண்டில் எதை ஏற்றுக் கொண்டாலும் புதிய ஏற்பாட்டில் சரிபாதி அளவு இறை வேதமான இருக்கும் தகுதியை இழந்து விடுகின்றது.

ரு) காது கேட்கும் செவிடர்கள்

இயேசு கொன்னை வாயான ஒரு செவிடனைக் குணப்படுத்தியிருக்கிறார் என்று மாற்கு (7:31) கூறுகிறார். யோவானும், லூக்காவும் இதைப் பற்றிக் கூறவில்லை.

மத்தேயு இதைப் பற்றிக் கூறும் போது அப்பொழுது சப்பாணிகள், ஊனர், குருடர், ஊமையர் முதலிய அனேகரைத் திரளான ஜனங்கள் அவர் பாதத்தில் கொண்டு வந்து விட்டார்கள். அவர்களை அவர் குணமாக்கினார். (மத்தேயு 15:30) என்று கூறுகிறார்.

இந்த நோயாளிகளும் இவர்களை அழைத்து வந்தவர்களும் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

ஸ்திரீகள், பிள்ளைகள் தவிர நாலாயிரம் புருஷர்கள்

மத்தேயு 15:39

பெண்களையும், பிள்ளைகளையும் தவிர நாலாயிரம் பேர் என்று மத்தேயு கூறுகிறார். ஏறத்தாழ பெண்களும் அதேயளவுக்கு இருந்திருந்தால் எட்டாயிரம் பேர் என்று ஆகின்றது. சிறுவர்களும் ஏறத்தாழ அதேயளவு என்று வைத்துக் கொண்டால் மொத்தம் பன்னிரண்டாயிரம் பேர் என்று ஆகின்றது.

பன்னிரண்டாயிரம் பேரில் ஒரு நோயாளிக்குத் துணையாக இரண்டு பேர் வந்ததாக வைத்துக் கொண்டால் கூட நோயாளிகள் மட்டும் நாலாயிரம் பேர் இருந்துள்ளனர். இப்போது கிறித்தவ உலகம் ஆராய நாம் சில கேள்விகளைக் கேட்கின்றோம்:-

சப்பாணிகள், ஊனர்கள், குருடர்கள், ஊமையர்கள் ஆகியோர் மிகவும் அரிதாகவே இருப்பார்கள். மிகப் பெரிய நகரங்களில் கூட இந்தக் குறைபாடு உடையவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் இருக்க மாட்டார்கள். மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்த இரண்டயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் இத்தகையவர்கள் இருந்திருப்பார்களா?

இயேசு பல்லாயிரக்கணக்கான குருடர்களையும், செவிடர்களையும் குணமாக்கி இதே வேளையாகவே இருந்திருக்கும் போது ஒரு கொன்னை வாயுடைய செவிடனைக் குணப்படுத்தியதை பெரிய அற்புதமாக மாற்கு ஏன் குறிப்பிட வேண்டும்? ஒரு செவிடனைக் குணப்படுத்திய நிகழ்ச்சியைக் கூறிய மாற்கு பல்லாயிரம் செவிடர்களைக் குணப்படுத்திய அதி அற்புத நிகழ்ச்சியை ஏன் குறிப்பிடவில்லை?

இவ்வளவு அற்புதமான நிகழ்ச்சி மற்ற சுவிசேஷக்கார்களுக்குத் தெரியாமல் போனது ஏன்?

இயேசுவை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்தேயு இஸ்டத்திற்குப் புகுந்து விளையாடியிருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது. இதன் காரணமாகவும் பைபிள் இறைவேதம் என்ற தகுதியை இழந்து விடுகின்றது என்கிறோம்.

ஏ) நாடு கடந்த பேய்

பேய் பிடித்த பெண்ணொருத்தியை இயேசு குணப்படுத்திய நிகழ்ச்சியை மத்தேயுவும், மாற்கும் கூறுகின்றனர். இவள் கிரேக்க ஸ்திரீ, சீரோபேனிக்கியா நாட்டாள் என்று மாற்கு (7:25) கூறுகிறார். ஆனால் மத்தேயு  அந்தத் திசைகளில் குடியிருந்த கானா நாட்டு ஸ்திரீ ஒருத்தி அவரிடம் வந்து என்று மத்தேயு (15:12) கூறுகிறார். இறைவனுடைய வேதத்தில் இந்தச் சின்ன விஷயத்திலும் கூட முரண்பாடிருக்குமா?

று) சிஷ்ய கோடிகள்

இயேசுவுக்கு பன்னிரண்டு சீடர்கள் இருந்ததை அனைவரும் அறிவார்கள். அவர்களில் சீமோன், அந்திரேயா என்ற இரண்டு சகோதரர்களும் உள்ளனர். அவ்விருவரும் எப்படிச் சீடர்களானார்கள் என்பதைக் கூறும் போது பைபிள் தடுமாறுகிறது.

அவர் கலிலேயாக் கடலோரமாய்ப் போகையில் சீயோனையும், அவன் சகோதரன் அந்திரேயாவையும் கண்டார். இவர்கள் மீன் பிடிக்கிறவர்கள். கடலில் வலை வீசிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து என் பின்னே வாருங்கள்! உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

மாற்கு 1:16

மத்தேயுவும் (4:18) இதே கருத்தில் எழுதியுள்ளார். இயேசுவின் அழைப்புக்குப் பின் அவ்விருவரும் அவருக்குச் சீடர்களானதாக மத்தேயுவும் மாற்கும் கூறுவதை, யோவான் மறுக்கிறார். சீடர்களானதற்கு வேறொரு கதை விடுகிறார்.

மறு நாள் யோவானும் அவன் சீஷரில் இருவரும் நின்று கொண்டிருக்கும் போது நடந்து போகிற இயேசுவை அவன் உற்றுப் பார்த்து இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றான். அவன் சொன்னதை அவ்விரண்டு சீஷரும் கேட்டு இயேசுவுக்குப் பின் சென்றார்கள். இயேசு திரும்பி அவர்கள் பின்னே வருகிறதைக் கண்டு அவர்களிடம் என்ன தேடுகிறீர்கள் என்றார்.

அதற்கு அவர்கள் ரபீ நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள். ரபீ என்பதற்கு குரு என்று அர்த்தம். அவர், வாருங்கள் காண்பீர்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு அன்றைய தினம் அவரோடு தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறைய பத்தாம் மணி வேளை. யோவான் சொன்னதைக் கேட்டு அவருக்குப் பின் சென்ற இருவரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரன் அந்திரேயா.

அவன் முதலாவது தனது சகோதரன் சீமோனைக் கண்டுபிடித்து அவனிடம், மேசியாவைக் கண்டு கொண்டோம் என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம். அவனை இயேசுவிடம் கூட்டிக் கொண்டு வந்தான். இயேசு அவனை உற்றுப் பார்த்து நீ யோவானின் மகன் சீமோன். நீ கேபா எனப்படுவாய் என்றார். கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தம்.

யோவான் 1:35-42

அந்திரேயாவையும், அவன் சகோதரன் சீமோனையும் இயேசுவே அழைத்ததாகவும் இருவரும் ஒரே நேரத்தில் இயேசுவின் சீடர்களானதாகவும் மத்தேயுவும், மாற்கும் கூறுகின்றனர். அந்திரேயா மட்டும் இயேசு அழைக்காமலேயே அவரைப் பின் தொடர்ந்ததாகவும் அதன் பிறகு அவன் சகோதரன் சீமோனை அழைத்து வந்து இயேசுவுக்குச் சீடராக்கியதாகவும் யோவான் கூறுகிறார்.

பைபிள் இறைவனின் வார்த்தையென்றால், அதில் இத்தகைய முரண்பாடுகள் நிச்சயம் இருக்கமுடியாது.

ஓ) கழுதைச் சவாரி

இயேசு கழுதையில் சவாரி செய்த ஒரு நிகழ்ச்சியை நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன. அதிலும் முரண்பாடு.

தம்முடைய சீஷரில் இருவரை அனுப்பி உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள். அதனுட் செல்லும் போது ஒரு மனுஷனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக் குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். அதை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று யாராவது உங்களிடம் கேட்டால் அது ஆண்டவருக்குத் தேவை என்று சொல்லுங்கள் என்றார்.

லூக்கா 19:30

லூக்காவின் கருத்திலேயே மாற்கும், யோவானும் கூறுகின்றனர். ஆனால் மத்தேயு இதை வேறு விதமாகக் கூறுகிறார்.

இயேசு சீஷரில் இரண்டு பேரை அனுப்பி, உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள். போனவுடனே அங்கே ஒரு கழுதையையும், அதனோடு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள். அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.

மத்தேயு 21:1-2

சீஷர் போய் இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து கழுதையையும், குட்டியையும் கொண்டு வந்து அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போடவே அவர் அவைகளின் மேல் உட்கார்ந்தார்.

மத்தேயு 21:7

கழுதைக் குட்டியின் மீது சவாரி செய்ய முடியுமா? கழுதையின் மீதும் குட்டியின் மீதும் ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியுமா? யார் வீட்டுக் கழுதையையோ அவிழ்த்துக் கொண்டு வருமாறு இயேசு போதனை செய்திருப்பாரா? கழுதையில் ஏறவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது? என்பது போன்ற கேள்விகள் ஒரு புறமிருக்கட்டும்.

அவர் அவிழ்த்துக் கொண்டு வரச் சொன்னது கழுதையையா? கழுதையையும் அதன் குட்டியையுமா? அவர் ஏறியது ஒரு கழுதையிலா? அல்லது இரண்டு கழுதைகளிலா? இறை வேதத்தில் ஏன் இந்தத் தகவல் முரண்பட்டு அமைந்துள்ளது என்பதை மட்டும் சிந்தியுங்கள் நண்பர்களே!

லு) கடலில் விழுந்த பேய்கள்

இயேசு பேய்களை விரட்டியடித்த சம்பவத்தை மத்தேயுவும், லூக்காவும் கூறுகின்றனர். அந்த நிகழ்ச்சிகளிலும் முரண்பாடுகள்!

அவர் அக்கரையில் கதரேனர் நாட்டுக்கு வந்த போது பேய் பிடித்திருந்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்தார்கள். அவர்கள் மிகக் கொடியவராய் இருந்தபடியால் எவனும் அந்த வழியாகச் செல்ல இயலாதிருந்தது. சத்தமிட்டுக் கூப்பிட்டு, தேவ குமாரனே எங்களுக்கும், உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்தவா இங்கே வந்தீர் என்றார்கள்.

அவர்களுக்குத் தூரத்தில் ஒரு பெரிய பன்றிக் கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது. அப்பொழுது பேய்கள் நீர் எங்களைத் துரத்துவீரானால் அந்தப் பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக் கொள்கின்றனர். அதற்கவர் போங்கள் என்றார். அவைகள் வெளியேறிப் பன்றிக்குள் போகவே, அப்பன்றிக் கூட்டம் முழுவதும் மேட்டிலிருந்து கடலில் பாய்ந்து தண்ணீரில் மாண்டது.

மத்தேயு 8:28

பின்பு கலிலேயாவுக்கு கெரசேனர் நாட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அவர் கரை இறங்கவும் பேய்கள் பிடித்த அந்த ஊரான் ஒருவன் அவருக்கு எதிர்ப்பட்டான். அவன் நெடுநாளை வஸ்திரந்தரியாதவன். வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவன். அவன் இயேசுவைக் கண்ட போது கூக்குரலிட்டு அவருக்கு முன்பாக விழுந்து, இயேசு! உன்னதமான கடவுளின் குமாரனே எனக்கும், உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதிருக்க உம்மை வேண்டிக் கொள்கின்றேன் என்று மிகவும் சத்தமிட்டுச் சொன்னான்.

அசுத்த ஆவி அந்த மனுஷனை விட்டுப் போகும்படி அவர் கட்டளையிட்டிருந்தார். பல முறை அது அவனைப் பிடித்து வந்தது. அவன் சங்கிலிகளினாலும், விலங்குகளினாலும் கட்டுண்டு காவல் பண்ணப்பட்டிருந்ததும் கட்டுகளை முறித்துப் போட்டிருந்தான். பேய் அவனை வனாந்திரத்துக்குத் துரத்தியிருந்தது.

லூக்கா 8:26

பேய்கள் இருக்கின்றனவா என்பதையும் இருக்கின்றன என்றால் மனிதனல்லாதவர்களிடம் அவை ஊடுருவுமா என்பதையும் பன்றிகள் கடலில் விழுந்து சாவதால் பேய்களும் செத்துவிடுமா என்பதையும் பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டோம். நாம் கேட்பது இயேசு விரட்டியது இரண்டு மனிதர்களிடமிருந்த பேய்களையா? அல்லது ஒரு மனிதரிடமிருந்த பேய்களையா? இந்த விஷயத்தில் மத்தேயுவும், லூக்காவும் முரண்படுகின்றனர்.

ணு) பிசாசின் சோதனை

இயேசுவை நாற்பது நாட்கள் பிசாசு சோதித்ததாக மத்தேயுவும், லூக்காவும் கூறுகின்றனர்.

வனாந்தரத்திலிருந்து மலை உச்சிக்கு இயேசுவைக் கொண்டு சென்று அதன் பிறகு தேவாலயத்துக்குக் கொண்டு சென்றதாக லூக்கா கூறுகிறார்.

(லூக்கா 4:1-14)

முதலில் தேவாலயத்துக்கும் அதன் பிறகு மலையுச்சிக்கும் கொண்டு சென்றதாக மத்தேயு கூறுகிறார்.

(மத்தேயு 4:1-12)

கர்த்தர் இயேசுவைச் சோதனை செய்து பார்த்த இந்த நிகழ்ச்சியைக் கர்த்தரே கூறும் போது தடுமாற்றம் ஏற்படலாமா?

யுய) திமிர்வாதம் பிடித்தவன்

திமிர்வாதம் பிடித்த வேலைக்காரனைக் குணப்படுத்திய அற்புத நிகழ்ச்சியைக் கூறும் போது லூக்காவும், மத்தேயுவும் முரண்படுகின்றனர்.

அவர் கப்பர் நகூமுக்குச் சென்ற போது நூற்றுக்கதிபதி ஒருவன் அவரிடம் வந்து ஆண்டவனே! வீட்டில் என் வேலைக்காரன் திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக் கொண்டான். அவர் நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்று அவனிடம் சொன்னார். நூற்றுக்கதிபதியோ ஆண்டவனே நீ என் வீட்டினுட் பிரவேசிக்க நான் தகுந்தவனல்ல. வார்த்தை மாத்திரம் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.

மத்தேயு 8:5-9

அங்கே நூற்றுக்கதிபதி ஒருவனுடைய வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையிலிருந்தான். எஜமானுக்கு அவன் அருமையானவன். அவன் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட போது அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரை வேண்டிக் கொள்ளும்படி யூதரின் மூப்பரில் சிலரை அவரிடம் அனுப்பினான். அவர்கள் இயேசுவினிடம் வந்து, நீர் இந்தத் தயவு செய்கிறதற்கு அவன் ஏற்றவன். அவன் நமது ஜனத்தை நேசிக்கிறான். ஒரு ஜெபாலயத்தையும் கட்டினான் என்று சொல்லி அவரை வருந்தி அழைத்தார்கள்.

 லூக்கா 7:2-6

வேலைக்காரனின் எஜமானனே இயேசுவிடம் வந்து முறையிட்டதாக மத்தேயு கூறுகிறார். யூதரின் முக்கியப் பிரமுகர்களை இயேசுவிடம் அனுப்பி வைத்ததாக லூக்கா கூறுகிறார். அவர்கள் அழைத்தவுடன் இயேசு புறப்பட்டு வீடு வரை சென்றதாகவும் அதன் பின் இயேசு அவர்களுடன் புறப்பட்டுச் சென்றதாகவும் வீட்டை அடைந்தததும் வீட்டுக்காரர் வேண்டாம் என்று கூறியதாகவும் லூக்கா (7:7) கூறுகிறார்.

ஆனால் மத்தேயுவோ இயேசு இடத்தை விட்டே புறப்படவில்லை என்று கூறுகிறார். இப்படி அனேக முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகள் பைபிள் இறை வேதமேயில்லை என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

யுடி) யோவானுக்குப் பயந்த மன்னன்!

ஏனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுள்ளவனென்று ஏரோது அறிந்து அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் பேசுவதைக் கேட்டு மிகவும் மனங்கலங்கியும் அவன் சொல்லை விருப்பத்தோடே கேட்டு வந்தான்.

மாற்கு 6:20

ஏரோது மன்னன் யோவானைக் கண்டு பயந்து, மதிப்பளித்து வந்ததாக இங்கே கூறப்படுகின்றது. இதற்கு நேர்முரணாக லூக்கா கூறுவதைக் கேளுங்கள்!

ஏரோது சிற்றரசன் தன் சகோதரன் மனைவி ஏரோளியாவினிமித்தமாகவும் தான் செய்த மற்ற பொல்லாங்குனிமித்தமாகவும் யோவானாலே கண்டிக்கப்பட்ட போது தான் செய்த மற்றப் பொல்லாங்குகளோடும் கூட யோவானையும் காவலில் அடைத்து வைத்தான்.

லூக்கா 3:19

ஏரோது மன்னன் ஏவானுக்குப் பயந்து அவரைப் பாதுகாத்து வந்தது உண்மையா? யோவானுக்குப் பயப்படாமல் அவனைச் சிறையில் அடைத்து வைத்தது உண்மையா? சிந்தியுங்கள் கிறித்தவர்களே!

யுஉ) இயேசு கூறிய உவமை

இயேசு பல சமயங்களில் உவமைகள் கூறி மக்களுக்குப் போதித்ததாக புதிய ஏற்பாடு கூறுகின்றது.

ஒரு எஜமான் ஒரு தோட்டத்தைச் சிலரிடம் குத்தகைக்கு விட்டுவிட்டு, கனிகள் உற்பத்தியானதும் அதை வாங்கி வருமாறு தன் ஊழியரை அனுப்பினான். குத்தகைக்காரர்களோ ஊழியரைக் கொன்று விட்டனர். இந்த உவமையைக் கூறிவிட்டு இயேசு தன் சீடர்களிடம்,

அப்படியிருக்க, திராட்சை தோட்டத்து எஜமான் வரும் போது குடியானவர்களை என்ன செய்வான் என்று கேட்க, அவர்கள் அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்துவிட்டு ஏற்ற காலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கும் வேறு குடியானவர்களிடம் தோட்டத்தை விடுவான் என்றார்கள்.

மத்தேயு 21:40

இப்படியிருக்க திராட்சைத் தோட்டத்து எஜமான் அவர்களை என்ன செய்வான்? அவன் வந்து இந்தக் குடியானவர்களை அழித்து மற்றவர்களிடம் தோட்டத்தை விடுவான் என்றார். அவர்கள் அதைக் கேட்டு ஐயோ, அப்படி வேண்டாம் என்றார்கள்.

லூக்கா 20:15

எஜமான் வந்து குடியானவர்களை அழிப்பான் என்று இயேசுவின் சீடர்கள் கூறியதாக மத்தேயு கூறுவதும் இயேசு கூறி சீடர்கள் ஆட்சேபித்ததாக லூக்கா கூறுவதும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டுள்ளதை உணரலாம். பைபிள் இறை வேதமில்லை என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.

யுன) இயேசுவின் சிலுவைப் பலி

உலக மக்களின் பாவங்களைச் சுமப்பதற்காக இயேசு தம்மையே பலியாக்கிக் கொண்டதாகக் கிறித்தவ உலகம் நம்புகின்றது. இந்த நம்பிக்கை பின்வரும் வசனத்திலிருந்து பெறப்படுகின்றது.

அப்பொழுது இயேசு, பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சப்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்.

லூக்கா 23:46

லூக்காவின் இந்த வசனம் கிறித்தவ நம்பிக்கையை வலுப்படுத்துகின்றது. ஆனால் லூக்கா கூறுவது பொய் என்று மத்தேயுவும், மாற்கும் அடித்துச் சொல்கின்றனர். இயேசு தாமாகப் பலியாகவில்லை என்று கூறிக் குட்டை உடைக்கின்றனர்.

ஏறக்குறைய ஒன்பதாம் மணிநேரத்தில் இயேசு ஏலீ ஏலீ லமா சபக்தானி என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தம்.

மத்தேயு 27:46

ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று மிகுந்த சப்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கை விட்டீர் என்று அர்த்தமாம்.

மாற்கு 15:34

இயேசு பலியாக விரும்பவில்லை என்பதாகவும், எப்படியாவது தான் காப்பாற்றப்பட வேண்டும் என்று அவர் விரும்பியதாகவும் இந்த வசனங்கள் கூறுகின்றன. கிறித்தவக் கோட்பாடு, சிலுவைப் பலி யாவுமே கட்டுக் கதை என்பதையும் இவ்வசனங்கள் உறுதி செய்கின்றன.

இப்போது நாம் கேட்க விரும்புவது இயேசு விரும்பிப் பலியானாரா? அல்லது பலிகடாவாக இழுத்துச் செல்லப்பட்டாரா? என்பதைத் தான். இரண்டில் எது சரி என்பதை கிறித்தவ உலகம் விளக்குமா?

யுந) பாவச் சுமை

பாவஞ் செய்கிறவனே சாவான். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. நீதிமான் தன் நீதியை அனுபவிப்பான். துஷ்டன் தன் துஷ்டத்தனத்தை அனுபவிப்பான்.

எசக்கியேல் 18:20

ஒருவனது பாவச் சுமையை இன்னொருவன் சுமக்க முடியாது என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகிறது.

இந்தத் தத்துவம் அறிவுக்குப் பொருத்தமானதாகவும் இருக்கின்றது. இதை ஏற்றுக் கொண்டால்  அனைவரும் பாவிகளாகப் பிறக்கின்றனர்; இயேசு வந்து அனைவரின் பாவங்களையும் சுமந்து கொண்டார் என்ற கிறித்தவக் கோட்பாடு அடிபட்டுப் போய்விடும். இதற்காகக் கிறித்தவ உலகம் வேதத்தில் கை வரிசையைக் காட்டியுள்ளது.

பிதாக்களின் அக்கிரமத்தை பிள்ளைகளிடத்திலும், மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர் என்று (கர்த்தர்) கூறினார்.

யாத்திராகமம் 34:6

இங்கே நான்கு தலைமுறை வரையிலும் கர்த்தர் விசாரணை செய்வார் என்று கூறப்படுகின்றது. நான்கு தலைமுறை மட்டும் தான் கர்த்தர் விசாரிப்பது என்பது கிறித்தவக் கோட்பாட்டை நிலை நிறுத்த உதவாது என்பதால் மேலும் ஒரு படி ஏறி, லூக்கா புதிய தத்துவம் கூறுகிறார்.

இப்படிச் செய்வதினால் ஆபேலின் இரத்தம் முதல் பலிபீடத்துக்கும், தேவாலயத்துக்கும் நடுவில் கொலையுண்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும் உலகத் தோற்றம் முதல் சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளின் இரத்தமும் இந்தச் சந்ததியிடம் கேட்கப்படும் என்று தேவ ஞானம் சொல்லியிருக்கிறது. நிச்சயமாகவே இந்தச் சந்ததியிடம் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 11:50,51

ஆதாமின் மகன் ஆபேல் கொலையுண்டது பற்றி, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த சந்ததியினர் விசாரிக்கப்படுவர் என்று இங்கே கூறப்படுகின்றது. இயேசு பாவங்களைச் சுமக்க வந்தார் என்பதை நிலைநாட்ட இவ்வாறு லூக்கா கூறினாலும் உண்மையில் அதற்கு முரணாகவே இவ்வசனம் அமைந்துள்ளது. இயேசு வந்த பின்பும் கூட ஆபேலின் கொலை பற்றி விசாரிக்கப்படும் என்றால் இயேசு எவரது பாவத்தையும் சுமக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

  • நாம் இங்கே கேட்க விரும்புவது என்னவென்றால், எவரது பாவத்தையும் எவரும் எப்போதும் சுமக்க முடியாது என்று எசக்கியேல் கூறுவது சரியா?
  • அல்லது ஒருவர் செய்த பாவத்தை அவரது சந்ததிகள் நான்கு தலைமுறை வரை சுமக்க வேண்டும் என்று யாத்திராகமம் கூறுவது சரியா?
  • அல்லது ஒருவன் செய்த பாவத்தை அவனது சந்ததிகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சுமந்தாக வேண்டும் என்று லூக்கா கூறுவது சரியா?
  • அல்லது இம்மூன்றுக்கும் மாற்றமாக இயேசு எல்லோரின் பாவத்தையும் சுமந்து கொண்டார் என்று பவுல் உருவாக்கிய தத்துவம் சரியா?

இந்த ஒரு விஷயத்தில் இப்படி நான்கு முரண்பட்ட போதனைகள் இறை வேதத்தில் இருக்கலாமா? கிறித்தவ உலகில் இதற்கும் விடையில்லை.

யுக) தப்புக் கணக்கு

எகிப்திலே யோசேப்புக்குப் பிறந்த குமாரர் இரண்டு பேர். ஆக எகிப்துக்கு வந்த யாகோபின் குடும்பத்தார் எழுபது பேர்.

ஆதியாகமம் 46:27

யோசேப் எகிப்திலே வாசம் புரிந்து கொண்டிருந்த போது தந்தையையும், சகோதரர்களையும், அவர்களின் பிள்ளைகளையும் எகிப்துக்கு வரவழைத்தார். யாக்கோப்பு, யோசேப்பு, அவரது இரண்டு குமாரர்கள், யோசேப்பின் சகோதரர்கள், அவர்களின் புதல்வர்கள் அனைவருமே எழு பேர் தாம் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இது பற்றிப் பவுல் கூறுவதைக் கேளுங்கள்!

யோசேப்பு தன் தகப்பன் யாக்கோப்பையும் அவன் குடும்பத்தார் அனைவரையும் அழைத்து வரச் சொல்லி அனுப்பினான். அவர்கள் எழுபத்தைந்து பேர்.

அப்போஸ்தலர் 7:14

யோசேப்பையும், அவரது இரண்டு மகன்களையும் சேர்த்து மொத்தம் எழுபது பேர் என்று ஆதியாகமம் கூறுகின்றது. பவுலோ யோசேப்பையும் அவரது இரண்டு குமாரரையும் நீக்கிவிட்டு எழுப்பத்தைந்து என்கிறார். ஆதியாகமம் கூறுகிற படி பார்த்தால் யோசேப்பும் அவனது இரு குமாரர்களையும் சேர்க்காவிட்டால் அவர்கள் அறுபத்தி ஏழு பேர் தான். ஆனால் எட்டுப் பேர்களை அதிகப்படியாக பவுல் கூறுகிறார்.

வந்தவர்கள் எழுபதா? எழுபத்து ஐந்தா? எழுபதில் மூன்றை நீக்கினால் அது எழுபத்தைந்தாகுமா? அறிவுக்குப் பொருந்தாத இந்தத் தப்பான கணக்கு இறை வேதத்தில் இடம் பெறலாமா? அப்படி இடம்பெற்ற பின்பும் அது இறை வேதமாக இருக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் எந்த விடையுமில்லை.

முரண்பாடுகள் இத்தோடு நிற்கவில்லை; இன்னமும் தொடர்கின்றன.

யுப) இயேசு நீதிமான் இல்லையா?

பாவிகளாகப் பிறக்கும் எல்லா மனிதர்களின் பாவங்களையும் சுமப்பதற்காக இயேசு தம்மையே சிலுவையில் பலியிட்டுக் கொண்டார் என்பது கிறித்துவத்தின் அடிப்படைக் கொள்கைளில் ஒன்று. இந்தக் கோட்பாடு பின்வரும் வசனத்திலிருந்து பெறப்படுகின்றது.

நமது பாவங்களுக்கு மாத்திரமல்ல; சர்வலோகத்தின் பாவங்களுக்கும் கிருபாதார பலி அவரே!

யோவானின் முதலாம் நிரூபம் 2:2

புதிய ஏற்பாட்டில் காணப்படும் இந்த அடிப்படைக் கொள்கையைப் பழைய ஏற்பாடு முற்றிலும் நிராகரிக்கின்றது.

துஷ்டன் நீதிமானை மீட்கும் பொருளாவான். நேர்மையானவனுக்குத் துரோகி பதிலாவான்.

நீதி மொழிகள் 21:18

மனிதர்களில் யாரேனும் பலியிடப்பட வேண்டுமானால் துஷ்டனும், துரோகியுமே பலியிடப்பட வேண்டியவர்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது.

இயேசு, எல்லா மக்களுக்கும் பலியிடப்பட்டதாக நம்பினால் அவர் நீதிமான் அல்லவென்று ஏற்படும். இயேசுவை நீதிமான் என்று நம்பினால் அவர் பலியிடப்பட்டதை நம்ப முடியாமல் போகும். இரண்டில் எதை நம்பினாலும் பைபிளின் ஒரு வசனம் பொய்யாகி விடும். பைபிள் இறை வேதமாக இருக்க முடியாது என்பதற்கு இதுவும் சரியான சான்றாகும்.