09. அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்தவர்
8. அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்தவர்
முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெறும் மற்றொரு நச்சுக் கருத்து இது. இதன் பொருள் பின் வருமாறு.
اذ قال يوما مخبرا بالنعم *عن وارد من ربه ذي الكرم
على رقاب الاولياء قدمي * فسلموا لذاك كل السلم
قد قلت بالاذن من مولاك مؤتمرا *قدمي على رقبات الاولياء طرا
فكلهم قد رضوا وضعا لها بشرا
அருள் நிறைந்த தம் இறைவனின் அனுமதியுடன் தமக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை ஒரு நாள் (முஹ்யித்தீன்) கூறினார். அதில் என் பாதங்கள் அவ்லியாக்களின் பிடரிகள் மீது உள்ளன என்றார். அனைத்து அவ்லியாக்களும் இதைப் பூரணமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த நச்சுக்கருத்துக்கு விளக்கவுரையாக ஹிகாயத்தில் கூறப்படுவதையும் பார்த்துவிட்டு இதில் உள்ள தவறுகளை ஆராய்வோம்.
அப்துல் காதிர் ஜீலானி பிறப்பதற்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன் அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வுடைய அவ்லியாக்கள் ஒவ்வொருவரின் கழுத்திலும் தமது பாதம் உள்ளது என்று கூறுமாறு கட்டளையிடப்படுவார் என்று ஒரு பெரியார் இல்ஹாமில் தெரிந்து கூறினார். அவர் கூறியது போலவே அப்துல் காதிர் ஜீலானி இவ்வுலகில் அதிகாரம் செலுத்திய காலத்தில் ஐம்பத்திரண்டு அவ்லியாக்கள் அடங்கிய அவையில் அப்துல் காதிர் ஜீலானி பிரகடனம் செய்தார். அங்கே இருந்த அவ்லியாக்கள் அவ்விடத்தில் இல்லாத அவ்லியாக்கள் அனைவரும் இதற்குக் கட்டுப்பட்டுத் தம் கழுத்துக்களைத் தாழ்த்தினார்கள். ஆனால் இஸ்பஹான் ஊரைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் மறுத்தார். இதனால் இவரது விலாயத் பறிக்கப்பட்டது.
ஏகத்துவக் கொள்கையைக் கால்களால் மிதித்துத் தள்ளக்கூடிய இந்தக் கதையில் உள்ள நச்சுக் கருத்துக்களைப் பார்ப்போம்.
ஒருவர் இறைநேசராக அவ்லியாக்களில் ஒருவராக எப்போது ஆக முடியும்? அல்லாஹ்வின் அனைத்துக் கட்டளைகளையும் பின்பற்றி நடந்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்வதன் மூலம் தான் ஒருவர் இறைநேசராக முடியும்.
ஆணவம், பெருமை, மக்களைத் துச்சமாக மதித்தல் போன்ற பண்புகள் ஷைத்தானின் பண்புகள் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.
(அல்குர்ஆன்: 17:37) ➚,38)
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
‘நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்குவீர்கள். ‘ (என்று கூறப்படும்) பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
வானங்களிலும், பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.
அவர்களில் பல்வேறு கூட்டத்தினர் அனுபவிப்பதற்காக நாம் வழங்கியுள்ளதை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக!
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ‘ஸலாம் ‘ எனக் கூறுவார்கள்.
பெருமையடிப்பதும் ஆணவம் கொள்வதும் இறைவனுக்குப் பிடிக்காது. இவை நரகத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை இவ்வசனங்கள் விளக்குகின்றன.
என் காலை இன்னொருவனின் தலையில் வைக்கிறேன் என்று கூறுவதை விட ஆணவம் வேறெதிலும் இருக்க முடியாது. சாதாரண மனிதனின் தலையில் வைப்பதே இந்த நிலை என்றால் இறைவனின் நேசர்கள் தலையில் காலை வைப்பேன் எனக் கூறுவது ஆணவத்தின் உச்சகட்டமல்லவா?
ஒருவர் தம் சகோதர முஸ்லிமை மட்டமாகக் கருதுவது அவர் தீயவர் என்பதற்குப் போதிய சான்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பபவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்:: முஸ்லிம்
நீங்கள் பணிவுடன் நடங்கள். ஒருவர் மற்றவரிடம் வரம்பு மீற வேண்டாம். ஒருவர் மற்றவரிடம் பெருமையடிக்க வேண்டாம் என்று அல்லாஹ் எனக்கு அறிவித்துள்ளான் என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர்: இயாள் பின் ஹிமார் (ரலி)
யாருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது,
பெருமை எனது மேலாடை. கண்ணியம் எனது கீழாடை. இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றுக்கு யாராவது என்னிடம் போட்டியிட்டால் அவனை நரகில் நுழைப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
இறைவனுக்கு மாத்திரமே சொந்தமான இந்தத் தன்மைக்குத் தான் அப்துல் காதிர் ஜீலானி போட்டியிடுவதாக இந்தக் கதை கூறுகிறது.
அல்லாஹ்வின் அனுமதியுடன் தானே இதை அவர் கூறியதாகக் கதையில் உள்ளது என்று சிலர் சமாளிக்கலாம். அல்லாஹ் எவற்றையெல்லாம் நாடினானோ அவை அனைத்தையும் தன்னுடைய வேதத்தின் மூலமும் தனது தூதரின் மூலமும் அனுமதித்து விட்டான். எவற்றையெல்லாம் தடை செய்ய நாடினானோ அவற்றையெல்லாம் தன் வேதத்தின் மூலமாகவும், தூதர் மூலமாகவும் தடுத்து விட்டான்.
திருக்குர்ஆனில் அவன் தடை செய்த ஆணவத்தை வேறு எவருக்காகவும் அனுமதிக்க மாட்டான். நபிகள் நாயகத்துக்கே இறைவன் தடை செய்தவைகளை அப்துல் காதிருக்கு அனுமதித்தான் என்பது இன்னொரு மார்க்கத்தை உருவாக்குவதாகும். அப்துல் காதிரை நபியாக ஆக்குவதாகும். இந்த உண்மை கூட இவர்களுக்குத் தெரியவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பாதம் எல்லா நபிமார்களின் தலை மேல் உள்ளது என்றோ நபித்தோழர்களின் கழுத்துக்களில் என் பாதம் உள்ளது என்றோ கூறவில்லை. தம் தோழர்களிடம் நல்ல நண்பராகவே அவர்கள் நடந்து கொண்டார்கள்.
இஸ்லாத்தின் உண்மை வடிவத்தைச் சிதைக்கும் எண்ணத்தில் தான் யூதர்களால் யூதக் கைக்கூலிகளால் இந்த மவ்லிதும் இந்தக் கதையும் புனையப்பட்டிருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் நிலைக்கு அப்துல் காதிரை உயர்த்தி நபியவர்களை விட அவர்களைச் சிறந்தவராகக் காட்டும் இந்தக் குப்பையைத் தான் பக்திப் பரவசத்துடன் மார்க்கம் அறியாத முஸ்லிம்கள் ஓதி வருகின்றனர்.
அப்துல் காதிர் ஜீலானி இப்படிச் சொன்னார் என்று நாம் நம்பவில்லை. இப்படி அவர் சொல்லியிருந்தால் அவரது காலத்திலோ, அவருக்கு அடுத்த காலத்திலோ எழுதப்பட்ட நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படி எந்த ஆதாரமும் இல்லை..
மார்க்க அறிவும் மார்க்கத்தில் பேணுதலும் உள்ள மக்கள் வாழ்ந்த காலத்தில் அப்துல் காதிர் இவ்வாறு கூறியிருந்தால் அவரை அன்றைய நன்மக்கள் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். மனிதனைக் கடவுளாக்கும் சித்தாந்தத்துக்கு இன்றைய முஸ்லிம்கள் பழக்கப்பட்டுப் போயிருக்கலாம். அன்றைய முஸ்லிம்கள் இதை ஜீரணித்திருக்க மாட்டார்கள்.
எல்லா அவ்லியாக்களும் அப்துல் காதிரின் கால்களில் மதி வாங்கத் தலையைக் கொடுத்தார்களாம். ஒருவர் மட்டும் மறுத்தாராம். இதனால் அவரது விலாயத் (வலிப்பட்டம்) பறிக்கப்பட்டது என்றும் மேற்கண்ட கதையில் கூறப்படுகிறது
வலிப்பட்டம் என்பது ஏதோ மதராஸாக்களில் வழங்கப்படும் ஸனது என்று நினைத்துக் கொண்டார்கள். யாரெல்லாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் நேசர்கள் தாம். தனிப்பட்ட முறையில் யார் யார் இறைநேசர் என்பது மறுமையில் இறைவன் தீர்ப்பு வழங்கும் போது தான் தெரிய வரும்.
இறையச்சம் உள்ளத்தின்பால் பட்டதாகும். எவரது உள்ளத்தில் இறையச்சம் உள்ளது என்பதை இறைவன் மட்டுமே அறிவான். அப்துல் காதிர் அவர்களின் புறச் செயல்களைப் பார்த்து அவர்கள் நல்லடியாராக இருந்திருக்கலாம் என்று நம்புகிறோம். அவரது நோக்கம் தவறாக இருந்தால் அது மறுமையில் தான் தெரியவரும்.
இறை நேசர்கள் என்று மக்களால் முடிவு செய்யப்பட்ட எத்தனையோ பேர் ஷைத்தானின் நேசர்கள் வரிசையில் நிற்பார்கள். இறைவனின் எதிரிகள் என்று மக்களால் முடிவு செய்யப்பட்ட எத்தனையோ பேர் இறை நேசர்கள் வரிசையில் நிற்பார்கள்.
உலகில் எத்தனை அவ்லியாக்கள் இருந்தார்கள். அவர்கள் யார்? என்ற பட்டியலே அப்துல் காதிரின் கையில் இருந்தது என்ற கருத்தையும் அந்தக் கதை கூறுகிறது. அப்துல் காதிரை அல்லாஹ்வாக்கும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியே மவ்லிது என்பதற்கு இந்தக் கதை ஒன்றே போதிய சான்றாகும்.
அப்துல் காதிருக்கு முன் அவ்லியாக்களே வாழவில்லையா? அப்படி வாழ்ந்திருந்த அவ்லியாக்களை மிதித்தது யார்? அவர்களையும் இவரே மிதித்ததாகச் சொன்னால் உத்தம ஸஹாபாக்களையும் கண்ணியத்திற்குரிய நான்கு இமாம்களையும் இவர் மிதித்தார் என்று சொல்கிறார்களா? இவர் காலத்திற்குப் பின் கியாம நாள் வரை அவ்லியாக்கள் வர மாட்டார்களா? வருவார்கள் என்றால் அவர்களை மிதிப்பவர் யார்? அவர்களையும் இவரே மிதிப்பார் என்றால் இவர் சாகாவரம் பெற்றவரா? அப்படியானால் சாகாவரம் பெற்றவருக்கு பாக்தாதில் கப்ரு ஏன்? இத்தனைக் கேள்விகளையும் சிந்தித்தால் முஹ்யித்தீன் மவ்லிது கூறும் இக்கதை பச்சைப் பொய்யாகும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வராது.