76) மறைவானவை லூத் நபிக்குத் தெரியாது
76) மறைவானவை லூத் நபிக்குத் தெரியாது
நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். இது மிகவும் கடினமான நாள் எனவும் கூறினார். அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்குத் தூய்மையானவர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் மகன் கூட இல்லையா? என்று கேட்டார். உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர் என்றனர். உங்கள் விஷயத்தில் எனக்குச் சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா? என்று அவர் கூறினார். லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப்படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா? என்றனர்.
அத்தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்த போது நீங்கள் அறிமுகமற்ற சமுதாயமாக இருக்கிறீர்களே என்று அவர் கூறினார். (அதற்கவர்கள்) அவ்வாறில்லை! அவர்கள் சந்தேகம் எழுப்பியதை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்;உண்மையையே உம்மிடம் கொண்டு வந்தோம்; நாங்கள் உண்மை கூறுபவர்கள்; இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்! என்று கூறினார்கள்.