74) மறைவானவை இப்ராஹீம் நபிக்குத் தெரியாது
74) மறைவானவை இப்ராஹீம் நபிக்குத் தெரியாது
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்.
நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம் என்று அவர்கள் கூறினர்.
நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம் என்று அவர்கள் கூறினர். எனக்கு முதுமை ஏற்பட்ட நிலையில் எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? எதனடிப்படையில் நற்செய்தி கூறுகிறீர்கள்? என்று அவர் கேட்டார். உண்மையின் அடிப்படையிலேயே உமக்கு நற்செய்தி கூறுகிறோம். நம்பிக்கை இழந்தவராக நீர் ஆகி விடாதீர்! என்று அவர்கள் கூறினர்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம் என்று அவரை அழைத்துக் கூறினோம்.
இப்ராஹீமின் மரியாதைக்குரிய விருந்தினர்கள் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?அவரிடம் அவர்கள் வந்து ஸலாம் கூறிய போது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் அறிமுகமில்லாத சமுதாயம்! தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார். அதை அவர்களின் அருகில் வைத்து சாப்பிட மாட்டீர்களா? என்றார். அவர்களைப் பற்றிப் பயந்தார். பயப்படாதீர்! என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர். உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, நான் மலட்டுக் கிழவியாயிற்றே என்றார். அதற்கவர்கள் அப்படித் தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன். அறிந்தவன் என்றனர். தூதர்களே! உங்கள் விஷயம் என்ன? என்று கேட்டார். வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம் என்று அவர்கள் கூறினர்.