08) மலம் ஜலம் கழிப்பதன் ஒழுங்குகள்
மலம் ஜலம் கழிப்பதன் ஒழுங்குகள்
மறைவான இடம்..
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றால் (மக்களை விட்டும்) மிகவும் தூரமாக உள்ள இடத்திற்குச் செல்வார்கள்.
அறி : முகீரா பின் ஷுஃபா (ரலி)
நூல் : அபூதாவூத் (1)
மறைக்காததன் விளைவு
‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது ’இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள்.
அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்?’ என கேட்கப்பட்டபோது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது
மற்றவர்கள் மறை உறுப்புகளைப் பார்க்கலாமா..?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் ஆண் மற்றோர் ஆணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றோர் பெண்ணின் மறைக்க வேண்டிய உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரே ஆடைக்குள் இரு ஆண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்; ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் சேர்ந்து படுக்க வேண்டாம்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 3. மாதவிடாய்
எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும் ? எதை மறைக்க வேண்டாம் ? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உன் மனைவி அடிமைப் பெண்கள் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புகளை பாதுகாத்துக் கொள் என்று விடையளித்தார்கள்.
ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பைக் காத்துக் கொள்ள வேண்டுமா ? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் எவரும் பார்க்க முடியாதவாறு உம்மால் மறைத்துக்கொள்ள முடியுமானால் மறைத்துக் கொள் என்று கூறினார்கள். ஒரு மனிதர் தனிமையில் இருக்கும் போது (மறை உறுப்பை வெளிப்படுத்தலாமா?) என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் அல்லாஹ் வெட்கப்படுவதற்கு மிகத் தகுதியானவன் என்று பதிலளித்தார்கள்.
அறி : முஆவியா பின் ஹைதா (ரலி)
நூல் : திர்மிதி
கிப்லாவை முன்னோக்குதல்..
நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்’ என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது
கழிப்பையில் நுழையும் முன் ஓத வேண்டியவை..
‘கழிப்பிடத்திற்குச் சென்றபோது, (அல்லாஹும்ம இன்னி அவூதுபிக்க மினல் குபுஸி வல் கபாயிஸி)
’இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’ என்று கூறும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 4. உளூச் செய்வது
கழிவறைக்குள் ஸலாம் & பதில் ஸலாம்..
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்துசென்ற மனிதர் ஒருவர் சலாம் சொன்னார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 3. மாதவிடாய்
கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓத வேண்டியவை..
நபி (ஸல்) அவர்கள் கழிப்பறையிலிருந்து வெளியேறும் போது ”குஃப்ரானக்க” என்று கூறுவார்கள்..
அறி : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதி