08) மத்ஹபு மாற்றம்
மத்ஹபு மாற்றம்
الشـافـعي فـصرت الـحنبلي بـلا
هـجر لـتحتاط بـالخـيرين مـعتدلا
இதுவும் யாகுத்பா’ கவிதையின் ஒரு அடியாகும்…
நீங்கள் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்தவராக இருந்தீர்கள். இரண்டு நல்ல வழிகளையும் பேணுவதற்காக ஷாபி மத்ஹபில் எவ்வித வெறுப்புமின்றியே ஹம்பலியாக மத்ஹபு மாறினீர்.!
அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டுள்ள ஏனைய பொய்களைப் போன்றே இதுவும் ஒரு பொய் என்பதைச் சிந்தனையாளர்கள் உணரலாம்.
பணியாற்றும் இடத்திற்கேற்ப ஷாஃபி மவ்லவி ஹனபியாகவும், ஹனபி மவ்லவி ஷாஃபியாகவும் மாறுவதை இன்று சகஜமாகக் காண்கிறோம். மத்ஹபு என்பது பிழைப்பிற்கு ஒரு வழியாகிவிட்டதை இந்த நிகழ்ச்சிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் போடக் கூடிய இரட்டை வேடத்தை நியாயப்படுத்த வேண்டுமல்லவா அதற்காகத் தான் இந்தப் பாடல் வரிகள்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களே ஷாஃபி மத்ஹபிலிருந்து ஹம்பலீ மத்ஹபுக்கு மாறி இருக்கும் போது நாங்கள் மாறுவதில் என்ன தவறு? என்று சமாளிக்கவே இந்த வரிகளைப் புனைந்துள்ளனர். இந்த வரிகள் பல்வேறு கோணங்களில் அலசப்பட வேண்டியவையாகும்.
அப்துல் காதிர் ஜீலானி ஷாஃபி மத்ஹபில் இருந்ததற்கு என்ன ஆதாரம்? தான் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்தவர் என்று சொல்லியிருக்கிறாரா? அல்லது ஆரம்ப காலத்தில் ஷாஃபி மத்ஹபின் சட்ட நூல் எதுவும் எழுதியுள்ளாரா? தனது நூற்களில் கூறும் சட்டங்களுக்கு ஷாஃபி இமாமுடைய கூற்றுக்களை ஆதாரமாகச் சமர்ப்பித்துள்ளாரா? இவற்றில் எதுவுமே இல்லை. அவர்கள் ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றினார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
ஷாஃபியாகவே இருந்தார் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பினாலும் வேறு விதமான கேள்விகள் அங்கே பிறக்கின்றன. ஷாஃபி மத்ஹபின் சட்டங்கள் அதற்குரிய ஆதாரங்கள் சரியானவை என்று வைத்துக் கொண்டால், ஹம்பலி மத்ஹபின் சட்டங்கள், ஆதாரங்கள் சரியில்லை என்று ஆகும்.
ஷாஃபி மத்ஹபின் சட்டங்களை விடுத்து, ஹம்பலி மத்ஹபுக்கு மாறினார்கள் என்றால் அதன் சட்டங்கள், ஆதாரங்கள் சரியில்லை என்று ஆகும்.
ஷாஃபி மத்ஹபின் சட்டங்கள் சரியானவையாக இருக்கும் போதே மாறினால் சரியான வழியை விட்டு விட்டு தவறான வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள் என்று ஆகும்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களே ஷாஃபி மத்ஹபை விட்டு விலகி இருக்கும் போது, அவர்களை மதிப்பவர்கள் ஷாஃபி மத்ஹபிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியது தானே? இப்படியெல்லாம் எவராது கேட்டு விடக் கூடாது அல்லவா? அதற்காகத் தான் ‘இரண்டு நல்லவற்றையும் பேணுவதற்காக ஷாபி மத்ஹபின் மேல் எவ்வித வெறுப்புமின்றி மத்ஹபு மாறினார்கள்’ என்று புனைந்து உள்ளனர்.
ஷாஃபியிலிருந்து ஹம்பலி மத்ஹபுக்கு எப்போது மாறினார்கள்?
தான் அவ்வாறு மாறிவிட்டதாக எந்த நூலில் குறிப்பிடுகிறார்கள்?
ஹம்பலி மத்ஹபின் சட்ட நூல் எதுவும் எழுதியிருக்கிறார்களா?
தான் கூறும் சட்டங்களுக்கு ஹம்பலி இமாமை ஆதாரமாகக் காட்டுகிறார்களா?
இவற்றில் எதுவுமே இல்லை. வெறும் கற்பனையைத் தவிர வேறில்லை.
மத்ஹபை நியாயப்படுத்துவதிலும் கூட ஓர வஞ்சனையைப் பாருங்கள்! ஹனஃபி, மாலிகி மத்ஹபுகளை விட்டு விட்டார்கள். ஷாஃபி, ஹம்பலி இரண்டு மத்ஹபுகளையும் நல்லவை என்பதற்காக அவ்விரண்டிலும் மாறி மாறி இருந்தார்கள் என்றால் ஹனஃபியும், மாலிகியும் என்ன பாவம் செய்தன? அவற்றிலும் கொஞ்ச காலம் இருக்க வேண்டியது தானே!
இதை எழுதியவரும், இன்று வரை பக்திப் பரவசத்துடன் பாடிக் கொண்டிருப்போரும் ‘ஹனஃபியும், மாலிகியும், அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் ராஜினாமா செய்த ஷாஃபியும் சரியானவை அல்ல’ என்று வாக்குமூலம் தருகின்றனர். மத்ஹபுகளை யாகுத்பா பித்தர்கள் முழுமையாக எதிர்க்காவிட்டாலும் மூன்று மத்ஹபுகள் தவறானவை என்று ஒப்புக் கொள்கின்றனர்.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களை இவர்கள் மதிப்பது உண்மையானால் ஷாஃபிகளும், ஹனஃபிகளும் அவ்விரு மத்ஹபுகளிலிருந்து விலக வேண்டும்; ஹம்பலிகளாக மாற வேண்டும். இக்கவிதையில் கூறப்படுவது பொய் என்று அவர்கள் கருதினால் இந்த யாகுத்பா’வையாவது விட்டுத் தொலைக்க வேண்டும். இரண்டில் எதைச் செய்யப் போகிறார்கள்?
மத்ஹபுவாதிகளுக்கு இது ஒரு வாடிக்கை. காலம் சென்ற எவரைப் பற்றிக் கூறுவதென்றாலும், அவருக்கு ஏதேனும் மத்ஹபு முத்திரை குத்தாமல் விட்டதில்லை. புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ்கலை மேதைகளாகட்டும்! அப்துல் காதிர் ஜீலானி போன்ற அறிஞர்களாகட்டும்! யாருமே இதிலிருந்து தப்பியதில்லை. மத்ஹபை எதிர்த்துப் போராடிய இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களுக்கும் இதே முத்திரையைக் குத்தத் தவறவில்லை. அவரது மாணவர்களாம் இப்னுல் கையிமுக்கும், இப்னு கஸீருக்கும் கூட குத்தினார்கள்.
சான்றுகள் வழியாக மத்ஹபுகளை நிலைநாட்ட வழியில்லாமல் இறந்து போன பெரியார்களுக்கு இந்த முத்திரையைக் குத்துவதன் மூலம் மத்ஹபுகளை நியாயப்படுத்தி விடலாம் என்று திட்டமிட்டுச் செய்து வருகின்றனர். அதன் விளைவு தான் இந்த வரிகள்.
உண்மையில் அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்கும் மத்ஹபுகளுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா என்பதை அவர்களின் நூல்களிலிருந்தும், அவர்களின் சொற்பொழிவுகளிலிருந்தும் அறிய முடியும்.
يا غلام العمل بالقرآن يوقفك على منزله والعمل يالسنة يوقفك على الرسول
என்பது அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் பதினாறாவது சொற்பொழிவு.
(அல்ஃபத்ஹுர்ரப்பானி)
திருக்குர்ஆனின் அடிப்படையில் செயல்படுவது அல்லாஹ்வின் அருகாமையில் உன்னை நிறுத்தும்! நபிவழியின் பிரகாரம் செயல்படுவது நபியின் அருகே உன்னை நிறுத்தும்!
تحفظ القرآن ولا تعمل به تحفظ سنة رسول الله صلى الله عليه وسلم ولا تعمل بها فلأي شيئ تفعل ذلك
(அல்ஃபத்ஹுர்ரப்பானி எனும் நூலில் அவர்களின் பத்தாவது சொற்பொழிவு)
குர்ஆனை மனனம் செய்கிறாய். அதன்படி செயல்பட மாட்டேன் என்கிறாய். நபியின் சுன்னத்தை மனனம் செய்கிறாய். அதன்படி செயல்படுகிறாய் இல்லை! ஏன் இவ்வாறு செய்கிறாய்?
இதுவும் அதே நூலில் இடம் பெறும் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் மூன்றாவது சொற்பொழிவு.
يا مسكين دع الكلام فيما لا ينفعك أترك التعصب في المذهب
ஏழையே! பயனற்ற பேச்சுக்களை விட்டுவிடு! மேலும் மத்ஹபு வெறியையும் விட்டு விடு!
என்பதும் அவர் எழுதியது. (குன்யதுத் தாலிபீன்)
إجعل الكتاب والسنة أمامك واعمل بهما ولا تغتر بالقال والقيل والهوس
குர்ஆனையும், நபிவழியையும் உனக்கு முன்னால் வைத்துக் கொள்! அதன்படி செயல்படு. அவர் சொன்னார்; அதில் சொல்லப்பட்டுள்ளது என்பது போன்ற கூற்றில் நீ மிரண்டு ஏமாந்துவிடாதே!
இவ்வளவு தெளிவாக மத்ஹபுகளை எதிர்த்த அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் முதலில் ஷாஃபி மத்ஹபில் சேர்ந்தார்களாம். பின்னர் ஹம்பலிக்கு மாறினார்களாம்!
அப்துல் காதிர் ஜீலானி அவர்களே நேரடியாகச் சொல்வதை நம்புவதா? அல்லது அவர்கள் பெயரால் அவிழ்த்து விடப்பட்ட பொய்யை நம்புவதா?