62) நபிகள் நாயகமும் மனிதரே
62) நபிகள் நாயகமும் மனிதரே
முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.
இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா? என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக!
நபிமார்களின் அற்புதங்கள் (முஹம்மதே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்குப் பெரிதாகத் தெரிந்தால் உமக்கு முடியுமானால் பூமியில் சுரங்கத்தை ஏற்படுத்தி, அல்லது வானத்தில் ஏணியை அமைத்து அவர்களிடம் அற்புதத்தைக் கொண்டு வாரும்! அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை நேர் வழியில் ஒன்று சேர்த்திருப்பான். அறியாதவராக நீர் ஆகி விடாதீர்!
இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா? என்று அவர்கள் கேட்கின்றனர். மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!
இவரது இறைவனிடமிருந்து இவருக்கு ஏதேனும் சான்று அருளப்பட வேண்டாமா? என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். நீர் எச்சரிப்பவரே. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழி காட்டி உண்டு.
இவருக்கு, இவரது இறைவனிடமிருந்து சான்று அருளப்பட வேண்டாமா? என்று (ஏக இறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். திருந்தியோருக்கு, தன் பக்கம் வழி காட்டுகிறான் என்று கூறுவீராக!
இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று கூறுகின்றனர். அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும். அல்லது நீர் நினைப்பது போல் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும். வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும். அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும்,தூதராகவுமே இருக்கிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக!