60) இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா?
கேள்வி : என்னுடைய கிறித்தவ நண்பரிடம் ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட வில்லை. அவரை இறைவன் தன் பால் உயர்த்திக் கொண்டான் என்பதைக் குர்ஆன் ஆதாரத்துடன் காண்பித்தேன். மேலும் ஈஸா நபி அவர்கள் டமாஸ்கஸ் (திமிஷ்க்) நகரில் இறங்குவார்கள் என்றும் சொன்னேன். இதற்கு இயேசு இறங்கும் போது கிறித்தவர்கள் அனைவரும் அவர் தான் ஈஸா நபி என்று அடையாளம் தெரிந்து கொள்ள முடியுமா? அவரை ஏற்றுக் கொண்ட கிறித்தவ மதம் அப்போது இருக்காதா? அவர் இறங்குவதை உலக மக்கள் அனைவரும் பார்ப்பார்களா? என்றும் கேட்கிறார். என்ன விளக்கம் அளிக்கலாம்?
எஸ்.ஏ. ஜம்ஸாத் அலி, திருப்பத்தூர்
பதில் : நாம் எந்த யுகத்தில் இருக்கிறோம் என்பதைக் கவனித்தால் இக்கேள்விக்கு நீங்களே பதில் கூற முடியும்.
ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைக் கூட கண்டுபிடிக்கும் ரேடார் கருவிகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நூற்றுக்கணக்கான செயற்கைக் கோள்கள் விண்ணில் நிறுத்தப்பட்டு பூமியைப் படம் பிடித்து அனுப்பிக் கொண்டே இருக்கின்றன.
இத்தகைய யுகத்தில் ஒரு மனிதர் எவ்வித கருவிகளின் துணையுமின்றி பூமியை நோக்கி வருகின்றார் என்றால் அந்த வினாடியே அது உலகுக்குத் தெரிந்து விடும்.
அதிசயமான முறையில் இறங்கும் அவரை நோக்கி உலகத்தின் அனைத்துத் தொலைக்காட்சி கேமராக்களும் திரும்பி விடும். வீட்டிலிருந்தபடியே அவர் இறங்கி வருவதை உலகின் ஒவ்வொரு மனிதனும் காண்பான்.
அதிசயமான முறையில் இறங்கி வருவதே பெரிய சான்றாக இருப்பதால் நான் தான் ஈஸா’ என்று அவர் கூறினால், அதற்கு உலகத்தில் யாருமே சான்று கேட்காமல் நம்புவார்கள். ‘இறைவனுக்கு மகன் இருக்க முடியாது. நானும் இறைவனின் மகன் அல்ல’ என்று அவர் கூறும் போது இதை உலகமே ஏற்கும் நிலை உருவாகும்.
முழு உலகும் அவரது தலைமையை ஏற்கும் என்ற நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு குறித்து நூறு வருடத்திற்கு முன் வாழ்ந்தவர்கள் இது எப்படி சாத்தியம் என்று நினைக்கலாம். இன்றைக்கு அத்தகைய கேள்விக்கே இடமில்லை.
(இதற்கு முந்தைய இதழ்களை நீங்கள் வாசிக்காதவராக இருந்தால் ஈஸா நபி மரணிக்கவில்லை’ என்ற தொடர் கட்டுரையில் இதை நாம் நிரூபித்திருப்பதைப் பார்வையிடுக.)