07) நேரடி தரிசனம்
நேரடி தரிசனம்
شـرفت جـيلان بالـميلاد ساكنـه
عـظمت بـالقبر بـغدادا أمـاكنـه
يـزوره كـل مـشتاق ولـكنــه
في بـيـتـه قـد يـلاقي محيي الدين
நீங்கள் ஜீலான் எனும் ஊரில் பிறந்ததன் மூலம் அவ்வூருக்குச் சிறப்பளித்தீர்கள். பாக்தாத் நகரில் உங்கள் கப்ரை அமைத்துக் கொண்டதன் மூலம் அவ்வூரை மகத்துவப்படுத்தி விட்டீர்கள். அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை ஆசிக்கும் அனைவரும் ஸியாரத் செய்கின்றனர். எனினும் சில சமயங்களில் அவர்களை ஆசிப்பவர்கள் தமது வீட்டிலேயே முஹ்யித்தீனை நேரடியாகத் தரிசனம் செய்கின்றனர்.
இறந்தவர்களின் ஆவிகள் இவ்வுலகுக்கு வர முடியாது என்பது இஸ்லாத்தின் கொள்கை. இந்தக் கவிஞனோ அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் பூத உடலுடன் சிலரது வீடுகளுக்கு எழுந்தருளுவதாகக் கதை விடுகிறான். திருக்குர்ஆனும், நபிமொழிகளும் இது பற்றி என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்.
மனித இனத்திலேயே இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உயர்வான பதவிகளைப் பெற்றவர்கள் நபிமார்கள். அவர்களின் நிலையை வேறு எவரும் எப்போதும் அடையவே முடியாது. இந்த நிலையை ஒரு மனிதன் தன்னுடைய அமல்கள் மூலம் அடைந்து விட முடியுமா என்றால் அது முடியாது. இறைவனாகப் பார்த்து யாரைத் தேர்ந்தெடுக்கிறானோ அவர்கள் தான் அந்த நிலையை அடைய முடியும். அதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ் முழுமைப்படுத்தி முத்திரையிட்டு விட்டான்
ஒரு மனிதன் தனது அமல்கள் மூலம் அடையும் பதவிகளிலேயே மிகவும் உயர்வான பதவி பெறுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த உத்தமர்களாவர். அல்லாஹ்வுக்காக உயிரையே தியாகம் செய்யும் நிலையை வேறு எந்த அமல் மூலமும் அடைய முடியாது. இத்தகைய ஷஹீத்களின் (உயிர்த்தியாகிகளின்) உயிர்கள் கைப்பற்றப்பட்டு இறைவனிடம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கே அவர்களுக்குக் கிடைத்து விட்ட மகத்தான வாழ்வைக் கண்டு அவர்கள் பிரமிக்கிறார்கள். பெருமகிழ்வு கொள்கிறார்கள். ‘தங்களுக்குக் கிடைத்துள்ள இந்த மகத்தான பாக்கியங்களை, உலகில் உயிருடன் வாழ்பவர்கள் அறிந்தால், அவர்களும் தங்கள் உயிர்களை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்து இந்தப் பதவிகளைப் பெறுவார்களே என்று அவர்கள் எண்ணுகிறார்கள். ‘இறைவா! எங்களுக்குக் கிடைத்துள்ள இந்த உயர்ந்த அந்தஸ்தைப் பற்றி உலகில் வாழ்பவர்களிடம் நாங்கள் சொல்லி விட்டு வந்து விடுகிறோம். இதனால் அவர்களும் தம் உயிரை அர்ப்பணிக்கத் துணிவார்கள்’ என்று இறைவனிடம் அவர்கள் விண்ணப்பிக்கின்றார்கள். அப்போது இறைவன் திரும்பவும் உலகுக்குச் செல்ல முடியாது என்பதால் உங்களுக்குக் கிடைத்துள்ள பாக்கியங்கள் யாவை என்பதையும் உலகில் வாழ்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுவதையும் நானே உங்கள் சார்பாக உலகில் உள்ளவர்களுக்கு அறிவிக்கின்றேன்’ என்று கூறிவிட்டு பின்வரும் வசனங்களை இறக்கியருளினான்.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இது வரை) சேராமல் பின்னால் (உயிர்த் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். அல்லாஹ்விடமிருந்து கிடைத்த பாக்கியம் மற்றும் அருள் பற்றியும், நம்பிக்கை கொண்டோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான் என்பது பற்றியும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். தங்களுக்கு (போரில்) காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் பதிலளித்தார்கள். அவர்களில் நன்மை செய்து (இறைவனை) அஞ்சியோருக்கு மகத்தான கூலி உள்ளது. (3:169, 170, 171, 172) என்று இறைவன் கூறுகிறான். (நபிமொழியின் கருத்து)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த உயிர் தியாகிகள் நல்ல எண்ணத்துடன் தங்களுக்குக் கிடைத்த பதவிகளைப் பற்றிச் சொல்வதற்காக உலகுக்கு வர அனுமதி கேட்கிறார்கள். இவ்வுலகுக்குத் திரும்பி வருவதற்கு யாருக்கேனும் அனுமதி, அளிப்பதென்றால் இவர்கள் அதற்கு மிகவும் தகுதியானவர்கள். மேலும் இவர்கள் இவ்வுலகுக்குத் திரும்ப வருவதற்குக் கூட சுய நலம் எதுவும் காரணம் அல்ல. மாறாக மற்றவர்களையும் ஆர்வமூட்டி அவர்களையும் உயர் பதவிக்குரியவர்களாக ஆக்குவதே இவர்களின் நோக்கம்.
இவ்வளவு உயர்ந்த நோக்கத்திற்காக இவ்வுலகுக்குத் திரும்பி வர அனுமதி கேட்ட பிறகும் இறைவன் மறுக்கிறான். அவர்களின் விருப்பம் தகாத விருப்பம் என்பதனால் இறைவன் இதை மறுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் இவ்வுலகுக்குத் தெரிவிக்க விரும்பிய விஷயத்தை அவர்களின் சார்பாக இறைவனே மேற்கண்ட வசனத்தில் நமக்குத் தெரிவிக்கவும் செய்கிறான். ‘இறந்தவர்கள் திரும்பவும் உலகுக்கு வர முடியாது’ என்று தான் வகுத்த நியதியை எவருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டான் என்பதனாலேயே இவ்வாறு மறுக்கிறான்.
உயிர் தியாகிகள் அனுமதி கேட்ட பிறகும் இவ்வுலகுக்கு வர இறைவன் அனுமதி மறுக்கிறான் என்றால் அப்துல் காதிர் ஜீலானி ஒவ்வொரு வீடுகளுக்கும் எழுந்தருளுகிறார்கள் என்று இந்தக் கவிஞன் கூறுவதை ஒரு முஸ்லிம் நம்ப முடியுமா? அவ்வாறு நம்பினால் அவன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தப் பொன்னுரையை மறுத்தவனாக அல்லவா ஆக நேரும்?
இறைவன் அனுமதி மறுத்தாலும் கூட அதை மீறிக் கொண்டு அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் வீடு வீடாக வருவார்கள் என்று இதற்கு விளக்கம் சொல்லப் போகிறார்களா? போகிற போக்கைப் பார்த்தால் இப்படியும் சிலர் சொன்னாலும் அதில் ஆச்சயரிப்படுவதற்கில்லை.
அல்லாஹ்வின் தூதரைப் பொய்யாக்கும் இந்த நச்சுக் கவிதை தீயிட்டுக் கொளுத்தப்பட வேண்டாமா? அரபியில் எழுதப்பட்டு விட்டது என்ற காரணத்துக்காகவும், சிலரது வயிற்றுப் பிழைப்புக்கு வழி செய்கிறது என்ற காரணத்துக்காகவும், சில ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகின்றது என்ற காரணத்துக்காகவும் இந்தக் குப்பையை அங்கீகரிக்க வேண்டுமா? அல்லாஹ்வின் தூதருடன் போர்ப் பிரகடனம் செய்யும் இதை ஆதரிக்க வேண்டுமா?
நல்லடியார்களின் உடல்கள் கப்ரில் வைக்கப்பட்டு., கேள்விகள் கேட்கப்பட்டு தக்க பதில் கூறியதும் அவரது கப்ரு’க்கு சுவனத்தின் சுகந்தங்கள் திறந்து விடப்படுகின்றன. இதைக் கண்டு மகிழ்ச்சியடையும் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த அந்தஸ்து பற்றி தம் உறவினர்களிடம் கூறி வருவதற்கு அனுமதி கேட்கிறார்கள். புதுமணமகனைப் போல் நீ உறங்கு’ என்று வானவர்களால் அவர்களுக்குக் கூறப்படும் என்பது நபிமொழி.
இந்த நபிமொழியைக் கொஞ்சம் கவனியுங்கள். நல்லடியார்கள் இவ்வுலகுக்கு வருவதற்கு அதுவும் அன்றாடம் வீடு வீடாக அலைவதற்கு அல்ல. ஒரே ஒரு தடவை மட்டும் தங்களின் சொந்த இல்லத்திற்கு மட்டும் வருவதற்கு அனுமதி கேட்கின்றனர். அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றது. தனது கோரிக்கையைத் திசை அவர் வற்புறுத்திக் கொண்டே இருந்து விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ அல்லாஹ் திரும்பவும் உயிர் கொடுத்து அவர் எழுப்பும் வரை உறங்குமாறு அவரிடம் கூறப்படுகின்றது. புதுமாப்பிள்ளை போல் உறங்குமாறும் கூறப்படுகின்றது.
ஒரே ஒரு தடவை தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பி வரக் கூட நல்லடியார்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நம்புவதா? இந்த மூடக் கவிஞனின் கற்பனையை நம்புவதா? எண்ணிப் பாருங்கள்!
எந்த நல்லடியாரும் கியாமத் நாள் வரை உறக்க நிலையிலேயே உள்ளார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்து விட்டனர். அதற்கு மாற்றமாக வீடு வீடாக அலைந்து கொண்டிருப்பதாக அப்துல் காதிர் ஜீலானி அவர்களைச் சித்தரித்ததன் மூலம் அவர்களை நல்லடியார்கள் அல்ல என்று தானே நம்பச் சொல்கிறது இந்தக் கவிதை.