60) மனத் தூய்மை

நூல்கள்: நபிகளாரின் நற்போதனைகள்

மனத் தூய்மை

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ ، وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ»

யார் விளம்பரத்திற்காக (நற்செயல்) புரிகிறாரோ அவரைப் பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி)

(புகாரி: 6499)

விளக்கம்:

இறைவனுக்குச் செய்யும் எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும். மனத் தூய்மை இல்லாத எந்த அமலும், அது பெரியதாக இருந்தாலும் சரி! சிறியதாக இருந்தாலும் சரி அது ஏற்றுக் கொள்ளப்படாது. இந்த அடிப்படை உண்மையை விளங்காத பலர் அரசியல்வாதிகளைப் போல் விளம்பரத்திற்காகச் செயல்படுவதைப் பார்க்கிறோம்.

அடுத்தவர்கள் தர்மம் செய்யும் போது கூட அதை விளம்பரப்படுத்தி, அதில் தம் பெயரையும் இணைத்து, நான் தான் வழங்கினேன் என்று கூறுவதையும் அடுத்தவர்கள் புகழ வேண்டுமென்பதற்காக வணக்கங்களில் ஈடுபடுவதையும் பார்க்கிறோம்.

இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றான ஹஜ் என்ற கடமையைக் கூட இன்று, நாங்கள் ஹஜ் செய்யச் செல்கிறோம் என்று போஸ்டர்கள், பேனர்கள், மாலைகள், விருந்துகள் என விளம்பரம் செய்வது தங்கள் நன்மைகளைத் தாங்களே அழித்துக் கொள்ளும் காரியமாகும் இவ்வாறு செய்யும் மக்களை மறுமை நாளில் அல்லாஹ் அம்பலப்படுத்தி அவர்களின் நன்மைகளை இல்லாமல் ஆக்கி விடுவான். எனவே வணக்க வழிபாடுகளில் மனத் தூய்மையுடன் செயல்பட முயல வேண்டும்.